Wednesday 26 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (7)


        அதன் பிறகு நான் குடிப்பதில்லை ,காஜா மச்சானிடம் அடிப்பட்டது,போலீஸ் ஸ்டேசனில் இருந்தப்போது,உறவென்று சொல்பவர்கள் உதவிடாதது ,இச்சம்பவங்கள் என்னை சிந்திக்க வைத்தது.குடியினால்தான் இந்த நிலையென்று,வெறுத்து ஒதுக்கினேன் குடியை.எனக்கு மைதீன் உதவிட வந்த நன்றியுணர்வால்,அவன் சார்ந்திருந்த எஸ் டி பி ஐ கட்சியின் செயல்பாடுகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தேன்.டெங்கு காய்ச்சல் தடுக்க "நிலவேம்பு கசாயம் "கொடுப்பதற்கு,சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் நானும் கலந்துக் கொள்வதென.


    இப்படியான எனது செயல்பாடுகள் ,நானும் அக்கட்சியில் இணைந்து விட்டதாக ஊருக்குள் பேச்சு அடிப்பட்டது.அன்றிலிருந்து எனது உற்றார்,உறவுகள் எல்லாம் என்னை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்று சொல்ல முடியாது.குடிகாரனாக அலைந்தப்போது ,ஒரு அலட்சியமாக ,ஏளனமாக மட்டும் கடந்துச் சென்றவர்கள்,நான் கொள்கையாளர்களுடன் சுற்றுவது,ஏதோ ஓர் கலக்கம் ஏற்படுத்தி விட்டது,அக்கலக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்,இனி நான் காசுக்காக,போதைக்காக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்கு கொடி பிடிக்கப்போக மாட்டேன் என்பதும் அதிலொரு காரணமாக கூட இருக்கலாம்.அதனால் என்னிடம் அவர்களது ,அத்துமீறல்கள் தொடர்ந்தது,வார்த்தைகளாகவும்,பார்வைகளாகவும்.."


   ஆம்.!இன்றைய சூழலில் ஒழுக்கங்கெட்டு வாழ்வதை விட,ஒழுங்கோட வாழ முயல்வதென்பது,அவ்வளவு எளிதானதல்ல.

(முற்றும்)

     

Monday 24 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (6)


     இன்ஸ்பெக்டர் தன் இருக்கையில் அமர்ந்தவுடன்,காண்ஸ்டபிள் என் விவகாரத்தை சொன்னார்.இன்ஸ்பெக்டர் என்னைப் முறைத்துப் பார்த்து விட்டு,சக்தி வகையறாக்களை ,தன் கை சைகைகளால் அழைத்தார்.அவர்களுடன் சேர்ந்தே ஷாஜஹானும் வந்தார்.இன்ஸ்பெக்டர் சக்தியை பார்த்துக் கேட்டார்.

    "என்ன...நடந்ததுனு சொல்லு..எப் ஐ ஆர் போடனும்னு ..."சொன்னார்,அதற்கு சக்தி வாயைத் திறக்கும் முன் ஷாஜஹான்,சமாதானமாக போவதாக சொன்னார்.அதற்கு இன்ஸ்பெக்டர்,"நீ யார்யா..."னு கேட்டார்.அதற்கு ஷாஜஹான் ...

"நான் ஷாஜஹான் ,வக்கீலாக இருக்கேன்..பரமக்குடியில.."என சொன்னதும்,வக்கீல் என்று தெரிந்த பிறகு,இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மரியாதையாக பேச ஆரம்பித்தார்.அதன் பிறகு ,சிறிது தயக்கத்திற்கு பிறகு,"சரி...சமாதானமா போறோம்னு..எழுதி கொடுத்துட்டுப் போங்க.."னு சொன்னார்.

   காண்ஸ்டபிள் எழுதி தர,நானும்,சக்தியும் கையெழுத்துப் போட்டு விட்டு கிளம்பினோம்.ஷாஜஹான் எந்த "பிரதிபலனை"யும் என்னிடம் எதிர்பாராமல் ,"சரிப்பா...இனி ஒழுங்கா இரு.."என சொல்லி விட்டு பரமக்குடி பஸ்ஸில் ஏறி சென்று விட்டார்.நானும்,மைதீனும் எங்கள் ஊருக்கு செல்ல,ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.நான் மைதீனிடம் பேச வெட்கமாக இருந்தது. யாருமே எனக்கு உதவ வராத நிலையில்,அவன் வந்தது,நன்றி கலந்த மரியாதையால்,என் கண்கள் கலங்கிற்று.

(தொடரும்...)

   

Sunday 23 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (5)


     பைக்,சாயல்குடி காவல்நிலையம் வந்தடைந்தது.அங்கு நான் இறங்கியதும்,காண்ஸ்டபிள் என் முதுகில் பலமாக அடித்து சட்டையைக் கழற்றி,தரையில் உட்காரச் சொன்னார்.நானும் சட்டையை கழற்றி விட்டு ,பக்கத்தில் வைத்துக்கொண்டு ,முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் .உறவினர் யாராவது எனக்காக வந்து,போலீசாரிடம் பேசி கூட்டி போவார்கள் என எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது .திரைப்படங்களில் போலீசார் அடிக்கும் காட்சிகள் என் நினைவுக்கு வந்து ,போதாக்குறைக்கு என்னுள் அச்சத்தை உற்பத்தி செய்தது.

        நேரம் கடந்துக் கொண்டிருந்தது,என் கவலை இருளுக்கு வெளிச்சமாக,மைதீனும்,வழக்கறிஞர் ஷாஜஹானும் வந்தார்கள்.அவ்விருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள்.என்னைப் பார்வையால்,நலம் விசாரித்து விட்டு ,கான்ஸ்டபிளிடம் என் வழக்கு விசயமாக கேட்டார்கள்.

   "இன்னும் எஃப் ஐ ஆர் போடல..அடிபட்ட சக்திய வர சொல்லி இருக்கு ..அஞ்சு மணிப்போல,இன்ஸ்பெக்டரும் வருவாரு..அவர் வந்த பிறகு பேசிக்கங்க..."என்று கான்ஸ்டபிள் சொல்லி முடித்தார்.

     சிறிது நேரத்திற்குள்,ஐந்து மணிக்கு மேல்,சக்தி தலையில் கட்டுடன்,அவனது உறவினருடன் வந்திருந்தான்.இவர்கள் தான் என்மேல் புகார் அளித்தவர்கள் என மைதீன் சொன்னதும்,ஷாஜஹான் அவர்களிடம் பேசினார்,எனது நிலைமையையும்,வறுமையையும் சொல்லி,வழக்கு பதியாமல் இருக்கச் சொல்லியும்,மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி சமரசமாக போகச் சொன்னார்.சக்தி தரப்பு முடியாது என முறுக்கினார்கள்.ஷாஜஹான் தொடர்ப்பேச்சால் கொஞ்சம் மனம் இளகி,சரி...இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லி விட்டு சென்றிடுவோம் என்று ஒத்துக்கொண்டார்கள்.

      அந்த வேளையில் தன் பல்சரில் வந்த இறங்கினார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

(தொடரும்.....)

   
    

Friday 21 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (4)


        நிர்வாக அறையின் வாசலில் நின்றுக் கொண்டு ,உள்ளே இருந்த நிர்வாகிகளைப் பார்த்தேன்.என்னைக் கவனித்த காஜா மச்சான் சொன்னார்.

   "டேய்.... ஒன்னத் தேடி போலீஸ் வந்துச்சி.."என அவர் சொல்லி முடிப்பதற்குள்..

 "போலீஸ் வந்தா எனக்கென்ன...!?என நான் திமிறாக பதிலளித்து,காஜா மச்சானை ஏளனமாக நான் பார்த்தது,அவருக்கு கோபமூட்டியது.

   "ஏண்டா..."......."நீங்க போதய போட்டுட்டு சண்ட மயிரு போடுவீங்க...இதுக்கு நாங்க பஞ்சாயத்துக்கு அலையனுமோ...!?என எகிறினார்.

  "ஒங்கள யாருங்க...பஞ்சாயம் பண்ண கூப்பிட்டா...!?பொத்துங்க .."என நான் சொன்னதும்..

 "என்னடா மயிரு சொல்ல சொல்ல எதுத்து எதுத்துப் பேசுறா..."னு ,செருப்பையெடுத்து அடிக்க ஆரம்பித்து,சராமரியாக குத்தும் விட்டார்.நிலைக்குலைந்துப் போனேன்.அங்கிருந்த சிலர் விலக்கி விட்டார்கள்.அதே வேளையில் ,வேறொரு கேஸ் விசயமாக ,எதார்த்தமாக வந்த காண்டபிள்கள் என்னை பிடித்து,அவர்கள் வந்த பைக்கில் நடுவில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார்கள்.பைக் சாயல்குடியை நோக்கி சென்றது...

(தொடரும்....)

   

Thursday 20 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (3)



     ஆடல் பாடல் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் நடைப்பெறும் என ,அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் இறங்கியப் போதையை,ஏற்றிக் கொள்ள ,பனை மரக்காட்டிற்குள் பதுங்கினோம்.நான்,உமர்,மற்றும்,முந்தல் சக்தி எல்லோருமாக,கேலியும்,கிண்டலுமாக பேசிக்கொண்டு இருந்தப் போது,வயிற்றை நிரப்பிய போதைத்திரவகம்,மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பித்தது.சாதாரணமாக பேசப்பட்ட வார்த்தைகளும்,விஷமாக மாற ஆரம்பித்தது.

    "ஏண்டா...காசிம்....இப்படி ஓசியில ,குடிக்கிறீயே...எங்காவது வேலைக்கு போவலாம்ல..."என்றான் சக்தி என்னைப் பார்த்து.

  "ஆமா.."......"இவரு கலெக்டர் வேலை பாக்குறாரு... "........."வட்டிக்குத் தானே வுட்டு பொழைக்கிறே.....!?"என கெட்ட வார்த்தைகளை சேர்த்து பேசினேன்.

   சக்தியும் தடித்த வார்த்தைகளைப் பேச,வார்த்தை முற்றி ,அடியில் ஆரம்பித்து,மண்டை ஒடைந்தது சக்திக்கு.பந்தோபஸ்துக்கு வந்த போலீசார் கையில் சிக்காமல் இருந்திட,ஆளுக்கொரு பக்கமாக ஓடி விட்டோம்.ரத்தக்காயத்துடன் இருந்த சக்தி சாயல்குடி போலிசிடம் புகார் செய்து விட்டான்.போலீசார் எனது ஊருக்கு வந்து,ஜமாத் பெரியவர்களிடம் ,என்னை சாயங்காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என சொல்லி விட்டு போயிருந்தார்கள்.


    மறுநாள்  காலையிலேயே கொஞ்சம் போதையில் இருந்த என்னை ,ஜாமாத் பெரியவர்களில் ஒருவரான காஜா மச்சான் கூப்பிடுவதாக ,அஜ்மீர் வந்து சொன்னான்.என்னவென்று கேட்டு விட்டு வருவோம் என நானும் சென்றேன்.நான் போன வேளையில்,நிர்வாக கூட்டம் நடந்துக் கொண்டிருந்து.

(தொடரும்....)

   

Wednesday 19 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (2)


    படிப்பு எட்டாம் வகுப்போடு நின்று விட்டது.அதன் பிறகு முழு நேரமும் ,பனைமரக்காடு,கடற்கரை,என நாயாய்,பேயாய் அலைவதுதான்.கூடா நட்பு கேடாய் அமைந்தது.சிகரட்டின் புகையில் இருந்த ஆர்வம்,அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திற்று.அது ஊருக்குள் போதையுடன் அலைபவர்கள்,ஏதோ சாதித்தவர்கள்போல் பார்க்க வைத்தது.மதுப்பாட்டில்களை தொட்டுப் பார்த்திட ஆவல் தோன்றியது.அந்த காலகட்டத்தில்தான் ,கூடவே சுத்திக் கொண்டிருந்த சலாம் ,"ஊத்தி" தந்தான்.
முதலில் தயங்கிய என்னை..

"இல்லடா காசிம்....குடி..பயப்படாத .."என ஆறுதல் படுத்தி,ஆர்வப்படுத்தினான்.கொஞ்சங்கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன்.குடிப்போதை என்னை சில நாழிகைகள் ,ஒரு வித மிதப்பில் என்னை ஆழ்த்தியது .அந்த சுகம் ,மீண்டும்,மீண்டும் போதையைத் தேட வைத்தது.என் தேடல் வீணாகவில்லை.பயணப்பார்ட்டி,கல்யாணப்பார்ட்டி"என்று தொடர்ச்சியாக "பார்ட்டி"வந்துக் கொண்டே இருந்தது.நாட்டில் பசிக்கு உணவளிப்பவர்களை விட,"பார்ட்டி"என்ற பெயரைச் சொல்லி வாங்கி "ஊற்று"பவர்களே அதிகம்.குடியாய் குடித்தேன்,குடியும்
என்னை குடித்தது.

     ஊருக்குள் "குடிகாரப் பய" பட்டம் இலகுவாக கிடைத்தது.போட்டுக் கொண்டப் போதையை ,அப்ப அப்ப ஊருக்கு உணர்த்த,சில சலம்பல்கள் செய்ய வேண்டி வந்தது.போதையோட போய் படுத்து விட்டால்,குடிகாரன்களுக்கு என்ன மரியாதை இருக்கு..!?"என ,எனக்கு முன்னாள் இருந்த குடிமகன்களால்,பாடம் நடத்தப்பட்டிருந்தேன்.ஆதலால் சின்ன,சின்ன பிரச்சனைகளை செய்து வந்தேன்.ஜமாத் பெரியவர்கள்,பலமுறை எச்சரித்தும்,அபராதங்கள் விதித்தார்கள்.எதற்கும் நான் அடங்குவதாக இல்லை .

     ஒருநாள் பக்கத்து ஊரான "செட்டிய மாரியூரில்"கோவில் திருவிழா நடந்தது.அவ்விழாவின் ஒரு பகுதியாக "மதுரை நடனக்குழுவினரின்"ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற இருந்தது.அப்பொழுது....

(தொடரும்...)

    

Tuesday 18 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (1)


      "தண்ணியில்லாத காட்டுக்கு ஒன்ன மாத்திருவேன்"னு என ,தனக்கு கட்டுப்படாத போலீஸ்காரர்களை ,அடாவடி அரசியல்வாதிகளாக வரும் வில்லன்கள் பேசும் வசனமாக சில பல திரைப்படங்களில் வைத்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் அப்படியொரு ஊரு வேறு எங்கோ இருக்கும் என எண்ணியதுண்டு.ஆனால் அது நான் பிறந்து வாழ்ந்த இராமநாதபுரம் மாவட்டம்தான் என்பதினை பிற்காலத்தில்தான் அறிந்தேன்.ஆம்,வறண்ட பூமியின் சொந்தக்காரன்தான் நான்,கடற்கரைக்காற்றின் காதலன்தான் நான் ,தார்ச்சாலை வெயிலின் வெப்பம் தாளாமல்,சாலையின் மேல் படர்ந்திருக்கும் கானல் நீரில் கவிதையைத் தேடியவன்தான் நான்,எனக்கு சிறுவயதில் சில பள்ளிக்கூட நண்பர்கள் இருந்தார்கள்,அதிலொருவன் அன்வர்,அவன் கையில் எப்போதும் பணம் புரளும் ,அப்பணத்தை வைத்துதான்,எங்களது நட்பு வட்டாரத்திற்கு,குச்சி ஐஸ்,மிட்டாய்,முறுக்கு எல்லாம் வாங்கித் தருவான்.அதோட சிகரட் பாக்கெட்டும் வாங்கி வருவான்.

         பத்து வயதிலேயே சிகரட் அடிக்க பழகி விட்டோம்,யாருக்கும் தெரியாமல் ,கண்மாயை மறைத்து வளர்ந்திருக்கும் ,கருவமரங்கள்தான் நாங்கள் மறைந்திருந்த சத்தியமங்கலக்காடு.ஒரு சிகரட் அடித்து விட்டு,ரோஜா பாக்கு ,மூன்று ,நான்கு என தின்று விட்டு,மாற்றி மாற்றி ஊதி பார்த்துக் கொள்வோம்,சிகரட் வாடை வருகிறதா என்று.இப்படி ஆரம்பித்த  எங்களது கெட்ட பழக்கம்,எப்படியெல்லாம் எங்களை அழைத்துச் சென்றது என்பதை ,கொஞ்சம் சொல்கிறேன் ...


   (தொடரும்....)

Thursday 6 October 2016

சிங்கம்.!

"ஏங்க..என் தோழியோட மாமானாரு,மூனாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்...!!"

   "அப்படியா..!?அவரு போட்டோ கெடச்சா,அனுப்பு, அவன் அவன் ,ஒன்ன கட்டிக்கிட்டே முழிக்கிறான்...மூனு கட்டுன அந்த சிங்கத்த நான் பாக்கனும்..!!"