சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 30 June 2015
மூக்கு குத்தனும்..!!(நகைச்சுவை)
(நகைக்கடைக்காரரிடம் ஒரு பெண் வாடிக்கையாளர் வந்துக் கேட்டார் )
"சார்! இங்கே,எங்கே மூக்குத்தி குத்துறது..!?
"நீங்க, எங்கேப் போனாலும் "மூக்குல"தாம்மா குத்துவாங்க.!!
Monday, 29 June 2015
அமாவாசை நிலவு..!!
அமாவாசைத் தினத்தன்று
நிலா வருவதில்லை எனும் சொல்லாடல்
பொய்யாய் போனது!
ஓர் அமாவாசைத் தினத்தன்று
எனது தெருவை நிலவாய்
நீ கடந்துச் சென்ற போது!
Saturday, 27 June 2015
முக்கால் நிலவு!
முக்காட்டில் உன் முகம்!
எனக்கோ
முக்கால் நிலவின் தரிசனம்!
Friday, 26 June 2015
விந்தை உலகம்..!!
குழந்தைகளில்லாமல்
கண்ணீர் வடிப்பவர்களையும் பார்க்கிறேன் !
குழந்தைகளால்
கண்ணீர் வடிப்பவர்களையும் பார்க்கிறேன் !
தூக்கத்தைத் தொலைத்து
பணத்தைத் தேடுபவர்களையும் பார்க்கிறேன்!
பணத்தைச் சேர்த்தால்
தூக்கத்தைத் தொலைத்தவர்களையும் பார்க்கிறேன் !
குடும்பம் தன்னுடன் இல்லையே என கலங்கும்
வெளிநாட்டு ஊழியர்களையும் பார்த்திருக்கிறேன் !
குடும்பத்துடன் இருந்தும்
வீட்டை விட்டு வெளிநடப்பு செய்பவர்களையும் பார்க்கிறேன் !
லட்சியங்கொண்டவர்களை அலட்சியப்படுத்தும்
சமூகத்தையும் பார்த்திருக்கிறேன் !
அலட்சியமாக வாழ்பவர்களை
சமூக அக்கறையற்றவர்கள் என
தூற்றுபவர்களையும் பார்த்திருக்கிறேன் !
இந்த வினோதமான உலகத்தில்
விந்தையானவற்றை பார்த்து வளர்வதால்தான் என்னவோ..!!
கிடைத்தவற்றை நினைத்து
திருப்திப்பட்டுக்கொள்ளவும்!
கிடைக்காதவற்றை நினைத்து
சந்தோசப்பட்டுக்கொள்ளவும் பழகிக்கொண்டேன்!
Wednesday, 24 June 2015
கண்ணாடி குடுவை..!!
தட்டு விட்டு
ஓடுகிறாய்!
ஓடி வந்து
தட்டுகிறாய்!
பரவாயில்லை!
விளையாடு!
ஆனால்
உடைத்திடாதே!
அது
என் இதயமெனும்
கண்ணாடி குடுவை..!!
Saturday, 20 June 2015
"நில அபகரிப்பு சட்டம்"!
அந்நியப்படை
நம் மண்ணை அபகரித்தால்
சர்வாதிகாரம்!
சரி!
நாமே சட்டமியற்றி
அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்தால்
வளர்ச்சித் திட்டமா .!?
தன் கோவணத்தை
அடுத்தவன் உருவி விடுவதற்கு முன்
நாமே உருவி கொடுப்பதுப் போலுள்ளது !
"நில அபகரிப்பு சட்டம்"!
Wednesday, 17 June 2015
கவிதையே..!!(46-50)
46)
கவிநிலவே!
எத்தனையோ கண்கள்
உன்னைக் காண்பதில்
என்ன அதிசயம் இருக்கிறது..!?
உன் கண்கள்
என்னைத் தேடுகிறதல்லவா.!?
அதுவல்லவோ பேரதிசயம்..!!
--------------------------------
கவிதையே..!!(47)
------------------
உனது பார்வைகளால்
என்னை உழுதுவிட்டு
புன்னகையை
விதைத்துச் சென்றதை!
நான்
அறுவடைச் செய்தால்
அது "கவிதையே "!
-------------------------
கவிதையே..!!(48)
-------------------
காதல் கொண்டதையெல்லாம்
கவிதையில் சொல்லும்
நான்!
கவிதையே
உன்மேல் கொண்ட காதலை
எதை வைத்து சொல்வேன் !?
--------------------------------
கவிதையே..!!(49)
------------------
கவிதையோடு வாழும் என்னை
கற்பனையோடு வாழ்வதாகச் சொல்பவர்களிடத்தில்
எப்படி நான் விளங்க வைப்பேன் !?
நான் கொண்டது காதல்தான்
காமம் அல்ல என்பதனை!
------------------------------
கவிதையே..!!(50)
-----------------
என்னுள் புதைந்த நினைவுகளை
நோண்டி எடுத்து!
உனக்குள்தான் புதைக்கிறேன்!
"கவிதையே"!
---------------------------
Sunday, 14 June 2015
கவிதையே.!(41-45)
41)
சித்திரவதைச் செய்யும்
சிந்தனைகளை அழித்திடவே
எழுதுகிறேன் !
அழிக்கப்பட்டதிலிருந்து
உயிர்ப்பெறுகிறாயே..!!
"கவிதையே" !
-----------------------------
கவிதையே.!(42)
------------------
உச்சந்தலையில் விழும்
அருவியும்!
உள்ளங்காலில் சுடும்
தீக்கங்கும் !
நீதான்
கவிதையே..!
-------------------------
கவிதையே.!(43)
------------------
என்னைத்தேடி வரும்
யாரிடமும் சொல்லிவிடாதே
கவிதையே !
உனக்குப் பின்னால்
நான் ஒளிந்திருப்பதை..!!
--------------------------
கவிதையே.!(44)
-----------------
நான்
யாரிடமும் பேசாமல்
உன்னுடன்தான் உறவாடுகிறேனாம்
முணுமுணுப்புகள் கேட்கிறது!
நீயே சொல்லு
கவிதையே!
என்னைப் புரிந்துக் கொள்ளாத
இவ்வுலகத்தை விட!
எனக்குப் புரிந்த
உன்னோடு உறவாடுவது தவறில்லைத்தானே.!!?
--/-----------------------
கவிதையே.!(45)
------------------
நான் பட்ட காயங்களுக்கு
களும்பாகப் பூசிக்கொள்வது!
உன்னைத் தான்
"கவிதையே"!
-----------------------
Monday, 8 June 2015
கவிதையே.!(36-40)
36)
முத்தத்தால்
யுத்தம் செய்வதும்!
யுத்தத்தில்
முத்தமாவதும்!
கவிதையே !
--------------------
கவிதையே.!(37)
-----------------
எதை எதையோ மறப்பதற்காக
எதை எதையோ தொட்டுப் பார்த்திருக்கிறேன்!
ஆனால்
உன்னைத் தொட்டப் பிறகோ
என்னையே நான் மறக்கிறேன்!
"கவிதையே"!
-----------------------
கவிதையே.!(38)
----------------
எதைக் கண்டாலும்
அதில் நான் உன்னை காண்கிறேன்!
என்னைக் காண
நீ எதைப் பார்க்கிறாய் !?
"கவிதையே"!
-------------------------
கவிதையே.!(39)
----------------
உன்னால் மிதிப்பட்டிட
சருகாகிடத் துடிக்கும்
கிளையில் ஆடிக் கொண்டிருக்கும்
இலை நான்!
"கவிதையே"!
----------------------
கவிதையே.!(40)
-----------------
நீ
காதலுமில்லை!
காமமுமில்லை!
அவ்விரண்டையும் வெறுத்திடாத
வாலிபமே நீ!
"கவிதையே"!
--------------------------
Thursday, 4 June 2015
கவிதையே.!(31-35)
31)
உன்னை எல்லோரும்
அமைதி நதியில் தேடிக்கொண்டிருக்கையில்!
நீயோ
அடுப்படியில் கிடக்கும்
என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாய்..!!
----------------------------
கவிதையே.!(32)
-----------------
நீயாக
நான் வாழ ஆசைக்கொண்டதால்!
ஒரு நாளும்
என்னைப்போல் நீ வாழ
ஆசைக் கொண்டிராதே.!
------------------------------
கவிதையே.!(33)
------------------
உன்னுள் எரிந்து
என்னைப் புதுப்பிக்கிறேன்!
நெருப்பிலிட்ட வெண்சங்கைப் போல்!
----------------------------------------
கவிதையே.!(34)
-----------------
சருகுகளாக
சாலையோரத்தில் மிதிப்பட இருந்த
எனது சிந்தனைகளை!
கவிதையெனும்
காகித மடிப்பில் வைத்துப் பார்த்தால்
காட்சியளிக்கிறது பூங்கொத்தாக..!!
--------------------------------------
கவிதையே.!(35)
-----------------
ஓர் புள்ளியில் தொடங்கிய
நீள்கோடு நாம்!
ஓர் முனை நீ!
எதிர்முனை நான்!
--------------------
Monday, 1 June 2015
கவிதையே.!(26-30)
26)
கொஞ்சம் மடி கொடு!
உனது பேனா விரல்களால்
தலைமுடியை கோதி விடு!
ஏனென்றால் எனக்கு
கவிதை கனவுகள் வந்து
நெடுநாட்களாகி விட்டது !
--------------------------
கவிதையே.!(27)
----------------
கொதிக்கும்
எனது பாலைவனத்தை
கொஞ்சம் ஈரப்பதமாக்குவது!
நீ தந்துச் செல்லும்
முத்தங்கள்தான்!
"கவிதையே"!
--------------------
கவிதையே.!(28)
-----------------
தீராத ஆசைகளும்
தீர்ந்திடாத ஏக்கங்களும் கொண்ட
நாம்!
சேர்ந்தே வாழ்திடுவோம்
வா !
வாழ்க்கைத் தீரும் வரைக்கும் !
------------------------------
கவிதையே.!(29)
-----------------
தங்கப் பேனாக்களெல்லாம்
உனக்காக தவம் இருக்கையில் !
தனக்கென எதுவும் இல்லாத
என்னை நீ கரம்பிடித்தது ஆச்சரியம்தான்!
"கவிதையே"!
--------------------
கவிதையே.!(30)
-----------------
புரியாத புதிர்களிரண்டு
புரிந்துக் கொண்ட அதிசயம்தான் !
நீயும்
நானும்
இணைந்தது !
-------------------------
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)