Sunday 31 October 2021

குழந்தைகள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் .!

 குழந்தைகள்

உலகிற்கு வந்த வெள்ளை காகிதங்கள்


அதில்

தகப்பன் ஒரு பக்கம்

தாய் ஒரு பக்கம்

உறவுகள் ஒரு பக்கம்

சுற்று சூழல்கள் ஒரு பக்கம்

சமூகம் ஒரு பக்கம்

இப்படி பக்கம் பக்கமாக 

தப்பும் தவறுமாக

அக்காகிதத்தில் எழுதி விட்டு


தப்பெல்லாம் குழந்தைகள் மேல்தான் என

குற்றஞ்சொல்லும் பைத்தியக்கார உலகை நினைத்து

குழந்தைகள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் .!

Saturday 30 October 2021

மழைக்காலம்..4

 



        வண்ணத்துப்பூச்சிகள் சாந்தமானவைகள்.அதில் பல வண்ணங்களில் பல வகைகளில் உண்டு.எனது ஊரில்அதிகம் காணப்படுவது,கருப்பு வண்ணத்தில்,வெள்ளை கோடுகளும்,சில புள்ளிகளுமாய்காட்சியளிப்பவைகள்தான்.இரவில் நட்சத்திரங்கள் சிதறி கிடப்பதுப்போல்,அதன் இறக்கைகளிலும் சிதறிகிடக்கும் புள்ளிகளும்,கோடுகளும் .செடிகளில் உள்ள பூக்களில் தேன் குடித்துக் கொண்டிருக்கும்,சிறகுகளைமெல்லியதாய்,அசைத்துக் கொண்டு.அப்போது   குளிப்பதற்காக பயன்படுத்தப்படும்,துண்டுகளை கொண்டுபொத்தினால் போதும்.மாட்டிக் கொள்ளும்.மெல்லிய இறக்கைகள் படபடத்து விட்டு,அடங்கி விடும்.


    ஊரில் இருக்கும் பறவைகள் காக்கைகளும்,சிட்டுக்குருவிகளும்தான்.ஒடைமரக் காட்டிற்குள்போனால்,பனைமரங்களில் கிளிகளையும்,மைனாக்களையும் ,மயில்களையும் பார்க்கலாம் எப்போதுமே.ஆனால்மழைக்காலத்தில்தான்,சிட்டு,கொண்டைக்கிளாத்தி,காஸ்கிராட்டி என பெயர்களில் அழைக்கப்படும் பறவைகள்வரும்.எங்களூரில் அழைக்கப்படும் இப்பெயர்கள் மற்ற ஊர்களில் வேறுபடலாம்.இதில் காஸ்கிராட்டிஎன்றழைக்கப்படும் பறவை.மிக அழகாக இருக்கும்.மைனாவை விட ,கொஞ்சம் தடிமனாக இருக்கும்.அதன்மேலுடல்,ஊதா வண்ணத்திலும்,வால்பகுதிக்கு கீழுள்ள அடிவயிற்றுப் பகுதி சிகப்பு வண்ணத்திலும்,அதன்கண்ணோரத்தில் மையிட்டதுப்போல்,கோடொன்றும் இருக்கும்.இப்பறவைகளெல்லாம் பருவநிலைமாற்றத்தினால்,எங்களூர் பக்கம் வரும்போல.


       அப்போது வில்லடித்து வேட்டையாட ஆரம்பிப்பார்கள்.பதின்ம வயதினர்.V வடிவினாலான கவட்டையாகப்பார்த்து,கருவ மரத்தை வெட்டி.அதன் தோல் பகுதியை உரித்து,நெருப்பிலிட்டு கொஞ்சம் காயவைப்பார்கள்.கவட்டையின் இரு முனைகளிலும்.சைக்கிள் டியூப்பை கத்தரித்து.இருப்பக்கமும்கட்டி,கல்லையோ,கோலியையோ வைத்து இழுக்க,தடிமனான வார் வைத்து கட்டி விட்டால்போதும்,வேட்டைக்கு கிளம்பிடலாம்.குறவர்கள் வில்லு வாரோடு,வந்து விற்பார்கள்.அதன் வார்கள்.,இன்னும்தடிமனாக இருக்கும்,பிடித்து இழுக்கவே சிரமமாக இருக்கும்.அதையும் சிலர் வாங்கி வில்லடிக்ககிளம்பிடுவார்கள்.


(ஞாபகங்கள் தொடரும்..)

Friday 29 October 2021

கண்களை தாண்டும் கனவுகள்.!

 


கனவுதான் உன் வானம்

கனவுதான் உன் சிறகு


கனவுதான் உன் விளக்கு

கனவுதான் உன் இலக்கு


கனவுதான் உன் உளி

கனவுதான் உன் வழி


கனவுதான் உன் சுயம்

கனவுதான் உன் தவம்


கனவுதான் உன் காதல்

கனவுதான் உன் தேடல்


கனவுகள் உன் கண்களை தாண்டும்போது

கடவுளின் கதவை தட்டும்.!

Thursday 28 October 2021

மழைக்காலம்..3

 



     மழை வரும் முன்னே,தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வரும் பின்னே..தும்பிகளில் பல பெயர்களைக்கொண்டு அடையாளம் வைத்திருப்போம் எங்களூரில்.கண்ணாடித்தும்பி இது சோம்பேறித் தும்பி ,காலையில்போனால் முள்ளு வேலிகளில் ,நன்றாக தூங்கி கொண்டிருக்கும்,பிடித்தாலும் தூக்கம் கலையாமல் கையில்இருக்கும்.ராஜா தும்பி பார்க்க அழகாக இருக்கும்.இன்னொன்று வயித்து முட்டித்தும்பி,அந்த தும்பியின் வாலின்  தொடக்கத்தில் கொஞ்சம் வயிறு வீக்கமாக இருக்கும்.அதனால் அந்த பெயர் வைத்திருப்பார்கள் போல.அந்ததும்பியை எப்படி பிடித்தாலும்,பிடிப்பதென்பது கடினம்.ஏமாற்றி ஏமாற்றி பறந்து விடும் ,அப்படியே பிடித்தாலும்கையை கடிக்காமல் இருக்காது.இதுவரை சொன்ன தும்பிகளெல்லாம்,ஊருக்குள் இருக்கின்ற முள்வேளிகளிலும்,கருவமரங்களிலும் சாதாரணமாக உலாவும்.


             அந்த தும்பிகளை விட இரண்டு ,மூன்று மடங்கு பெரிய தும்பிகளும் வருவதுண்டு.அவைகள்பெரும்பாலும் ஒடைமர காட்டில்தான்,உலாவும்.சில வேளைகளில் ,வீடுகளிலோ,பள்ளிவாசலிலோ,மாட்டியிருக்கும் டியூப் விளக்குகளில் முட்டிக் கொண்டு கிடக்கும்,அந்த பெரிய வகைதும்பிகளில் ஒன்று மோதிரம் தும்பி ,அதோட வாலின் தொடக்கத்தில் தங்க நிறத்தில் வளையம் போலஇருக்கும்.இன்னொன்று யானைத்தட்டான்,அது நல்ல கருப்பு நிறத்தில் இருக்கும்,அதோட நீளம்,ஆள் காட்டிவிரலில் இருந்து,நம்முடை உள்ளங்கை வரை நீளமாக இருக்கும்.இந்த தும்பிகளை பிடித்துவைத்திருந்தால்,ஏதோ பெரிய சாதனை செய்ததுப் போல,ஒரு மதமதப்பு இருக்கும்.


        மோதிர தும்பியையோ,யானைத்தட்டானையோ,பிடித்தால்,வீட்டிலுள்ள ஓலைக்கொட்டானில்அடைத்து,அது பசித்தால்,சாப்பிடும் என எண்

ணி சிறுவகையான தும்பிகளைப் போட்டு,அடைத்து வைப்போம்.காலையில் எழுந்து பார்த்தால்தான்தெரியும்.தும்பிகள் இறந்து தும்பிகளுக்கு இரையாகியிருக்கும்.


       அப்புறம் வண்ணத்து பூச்சி


(ஞாபகங்கள் தொடரும்…)

ஏணியை சுமக்கும் மின்தூக்கி.!

 நன்றியுள்ள மின்தூக்கிகள்தான்

ஏணியை சுமக்கும் 

நன்றி கெட்ட மின்தூக்கிகளோ

ஏணியை ஒப்படைக்க

முதியோர் இல்லங்களை தேடும்.!

Tuesday 26 October 2021

மழைக்காலம்…2

 


        இனிப்பு பலகாரம் சாப்பிட்டப் பிறகும்,விரல்களில் மிச்சமாய் ஒட்டியிருக்கும் இனிப்பைப்போலவே,மழைக்காலம் இலவச இணைப்பாய் குளிரையும் தந்து விடுகிறது.மதரசாவிற்கு காலையில்கிளம்பும்போது,வீட்டில் சில்லரைகளை வாங்கிச் சென்றுசேமியாக்காரப்பாவிடமும்,மோதினார் ஜப்பார்மாமாவின் மனைவியிடமும்,சேமியா வாங்கி,அதோடு அவித்த சக்கரை வள்ளிக் கிழங்கைதோலுரித்து,சேமியாவில் முக்கி,கொஞ்ச நேரம் ஊற வைத்து,சாப்பிட்டு விட்டு மதரசாவிற்கு செல்வதுண்டு.


            பள்ளிவாசல் முற்றம் மழையில் நனைந்து,குளிர்ந்திருக்கும் செருப்பில்லாத காலோடுநடக்கையில்.உள்ளங்கால் வழியேறி குளிர் உச்சிவரை இதமளிக்கும்.மதரசா விட்டதும் ,ஆடைமாற்றி,துண்டொன்றை எடுத்துச் சென்று கண்மாயில் குளிப்பதும் குதிப்பதுமாய் நேரம் ஓடும்,கண்மாய்க்குஅருகிலிருக்கும்,ஆலமரத்தில் ஏறி பல்டி அடிப்பதெல்லாம் சாகமாய் காணப்பட்ட காலமது.குளித்து குளித்துகண்ணெல்லாம் சிவந்தப்பிறகு கரையேறினால்,ஏதோ ஒரு நண்பன்,ஈர மண்ணை வீசி வம்புக்கு இழுத்த காலம்அது.


         பெரியவர்கள் குளித்து விட்டு செல்லும்வரை,உயரமான கரைமீது உட்கார்ந்து இருந்து விட்டு,அவர்கள்சென்றதும்,கரைமீது தண்ணீர் தெளித்து,வளவளப்பாக்கி,வழுக்கி வழுக்கி வந்து கண்மாயில் வந்து விழுவதும்ஒரு சுகம்.குளிக்கப் போவதற்கு முன்னாலேயே,பழனி அண்ணன் கடையில்,தோசையை வாங்கிசட்னி,சாம்பாரை ஊற்றி பிளாஸ்டிக் பையில் ஊற வைத்து,முன் பசிக்கு சாப்பிட்டு விட்டு,மறு பசி வரும்வரைகுளியல்தான்.கண்மாயோடு உரையாடல்தான்



(ஞாபகங்கள் தொடரும்..)

Sunday 24 October 2021

மழைக் காலம்..1

 


       அது ஒரு மழைக்காலம்.எப்போதுமே காய்ந்த பூமியும்,பிளவுப்பட்ட கரம்பைபளையும் பார்த்தே பழகிப் போனகண்களுக்கு,மழைக்காலமென்பது கனவுலக காலம்.எப்போதும்  வெயிலோடு உறவாடும் எங்களுக்குமழைக்காலம் எப்போதாவது வந்து கதைப்பேசும்.மழை என்று சொல்லும்போதும்,வாசிக்கும்போது உள்ளூரஏதோ ஒரு உணர்வு உந்துகிறது,மேகம் மறையும் நிலவாய்,நினைவுகள் பல வந்து வந்து போகிறது.


      அந்த மழை நாட்களில்தான்,தெருவோடு ஒடும் தண்ணீரில் காகித கப்பல் விட்டேன்.மாடி வீடுகளில்மேலிருந்து கொட்டும் நீரில் தலைக்குளிப்பேன்,தேங்கி நிற்கும் மழைத்தண்ணீரில் கால் நனைப்பேன்.இப்படிஎத்தனை கதைகளை சொல்லிருக்கும் இந்த மழை என்னிடம்..


        மழை நின்றால்,கண்மாய்கள் நிறைந்தால்,எத்தனை அழகாகிடும் என் ஊர்.காய்ந்த இடமெல்லாம்பசுமையாக,தும்பிகளும்,வண்ணத்துப்பூச்சிகளும்,எப்படியெல்லாம் பறந்தோடும்,என் மீதும் முட்டி விட்டுஓடும்,இத்தனைகாலம் காணாமல் போன தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்,எப்படி இப்போது வந்துசேர்ந்தது என் மண்ணில்..!?


(தொடரும் ஞாபகங்கள்…)

உண்பதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

 

இளமஞ்சள் வானமான

தேங்காய் சோற்றில்

சிதறிய நட்சத்திரத்திரங்களாய்

வெந்தயங்கள் கிடக்க

பிறைகளாய் வெள்ளை பூண்டு இருக்க.!


மணக்க மணக்க இருந்த கூனி குழம்பில்

முருங்கைக்காயும் கத்தரிக்காயும்

காதலும் கவிதையுமாய் காட்சி தந்தது.!


உணவில் ருசி இருந்தது!

அளவாக நீ கலந்த பொருட்களினால் அல்ல.!


அளவில்லாமல் நீ கலந்த நேசத்தினால்.!



Tuesday 19 October 2021

நட்பில் தொலைதல்.!



காதலில் தொலைந்தவன்

கவிஞன்


புத்தகத்தில் தொலைந்தவன் 

வாசகன்


புரட்சியில் தொலைந்தவன்

போராளி


காமத்தில் தொலைந்தவன்

நோயாளி


கோபத்தில் தொலைந்தவன்

கொலையாளி


அன்பில் தொலைந்தவன்

அதிர்ஷ்டசாலி


ஆணவத்தில் தொலைந்தவன்

நஷ்டவாளி


இரக்கத்தில் தொலைந்தவன்

மகாத்மா


நட்பில் தொலைபவன்

நல்ல ஆத்மா.!


Monday 18 October 2021

உன்னை விலகுவதில்லை.!



நீ செய்த தர்மம்

நீ விளைத்த கர்மம்


நீ சிந்தும் புன்னகை

நீ கொண்ட நம்பிக்கை


நீ வச்ச பாசம்

நீ போடும் வேசம்


நீ செய்த தியாகம் 

நீ புரிந்த வஞ்சகம்


நீ கற்ற கல்வி

நீ கொண்ட வேள்வி!


நீ வேண்டாமென்றாலும் அது

உன்னை விலகுவதில்லை.!

Sunday 17 October 2021

பாடலாய்..!

 தூரத்தில் கேட்கும்

பாடலொன்றிலும்

நீயே இருக்கிறாய்..!

தற்சார்பு வாழ்வே தனி.!



பிறக்க இருவர் 

அடக்க நால்வர் 


சிந்தனைக்கு அனுபவம் 

வார்த்தைக்கு எழுத்துக்கள் 


ஓவியத்திற்கு வண்ணம் 

மழைப் பொழிய குளிர் காற்று 


பார்வைக்கு ஒளி

பயணத்திற்கு வழி


ஒன்றிற்கு துணையாக

இன்னொன்று தேவை..


வாழவும் மடியவும்.


தற்சார்பு வாழ்வு தனியல்ல

அது சனி.!




Saturday 16 October 2021

கரங்களை தாங்கும் புத்தகங்கள்.!



புத்தகம்

ஆழ்கடல் மௌனம்

சிப்பியின் தவம்


புத்தகம்

குமரியின் முந்தாணை

குழந்தையின் குறுநகை


புத்தகம்

பசி நேர ருசி

ருசியான பசி


புத்தகம்

பிறப்பின் தாலாட்டு

இறப்பின் ஒப்பாரி


புத்தகம்

இளமை பருவம்

முதுமையின் அனுபவம்


கரங்களை தாங்கும்

புத்தகங்கள்

வாழ்வை மீட்டும்

ஸ்வரங்கள்.!

Wednesday 13 October 2021

கொரனோ.!

ஈராயிரத்து இருபதுடன் வந்த

இலவச இணைப்பு


கொரனோ

மருத்துவர்களுக்கு

அது கிருமி

மதவாதிகளுக்கு 

அது இன்னொரு மதம்


கொரனோ

திருமணங்களை

நிறுத்திய

வில்லன்


கொரனோ

விமானத்தின் 

சிறகுகளை கத்தரித்த

கத்தரிக்கோல்


கொரனோ

மனித ஓட்டத்திற்கு

காலம் போட்ட

வேகத்தடை


கொரனோ

விடியப் போகும்

அதிகாலை.!


   

Monday 11 October 2021

கடைசி புள்ளி..

          புள்ளியாய்

கோலமாய்

கிறுக்களாய்

கதையாய்

கவிதையாய்

காவியமாய்

எழுதிக் கொண்டிருக்கும்

பேனா அறிவதில்லை..

எந்த புள்ளி 

தனது கடைசி புள்ளி என்று...

Wednesday 6 October 2021

வாப்பமார்கள்..!

 எதெற்கெடுத்தாலும்

கோபப்படும்

வாப்பாமார்கள்

இப்போதெல்லாம்

பொறுமையாக இருப்பதின்

காரணமெல்லாம்

தன் கோபத்தால் தான் இழந்தவைகள்

நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!

Monday 4 October 2021

உன்னோடு நான் பேச..

 உன்னோடு பேச ஆரம்பித்ததோ

பேச்சை நிறுத்தியதோ

நினைவில் இல்லை...

எப்போது 

ஏன் தடைப்பட்டது

தெரியவில்லை..

திடீரென்ற உள்ளுணர்வில்

உன் எண்களை கைப்பேசியில்

தேடிப் பார்க்கிறேன்

அதிலும் இல்லை..

ஆனால்

நீ வாசித்ததாக பகிர்ந்த

கதைகளும் கவிதைகளும்

அலமாரியில் வைத்திருக்கிறேன்...

ஒருவேளை

அதனை மீண்டும்  நான் வாசிக்கையில்

உனக்காக அது என்னிடம்

உரையாடலாம்..

மலர்கள்.!

படுக்கைக்கென்றும்

பாடைக்கென்றும்

மலர்கள் தன் மணத்தை

மாற்றிக் கொள்வதில்லை..!