Sunday, 23 April 2017

நிஸாவின் கையெழுத்து 3 (1800 வது பதிவு)



      பள்ளிக்கூடம் நாலே கால் மணிக்கு விடுவாங்க.சேக்கோட சைக்கிள்ல தான்,நானும் அவனும் போவோம்.நானும் அவனும்,நல்லா ஒடம்பு போட்டுருப்போம்,எங்கள சொமக்க முடியாம,அந்த சைக்கிளு ,முக்கி மொணங்கும்.ரோடு கொஞ்சம் நல்லாவும்,ரொம்ப மோசமாவும் இருக்கும்.மாரியூர்ல இருந்து அண்ணா நகர் வரை ,பனைமரங்களாவும்.அண்ணா நகர்ல இருந்து ,ஒப்பிலான் சித்திக் அண்ண தோப்பு வரை ஒட மரமாக இருக்கும்.காலை சுடு வெயிலும்,சாயங்கால மஞ்ச வெயிலும்,நாங்க பயணிக்கைல கூடவே கத சொல்லி வரும் .எங்களோட இந்த பயணத்துல,ராஜ்கிரண் சேந்துக்குவாப்ல.யார்ந்த ராஜ்கிரண்னா.!?சாயல்குடியில இருந்து ஐஸ் விக்க வாரவரு.அவரோட பேரு எங்களுக்கு தெரியாது.அவர பாக்கயில,"ராசாவின் மனசில" ராஜ்கிரண் மாதிரி ,மொரடா இருப்பாப்ல.அதனால நாங்களா வச்ச பேரு அது.

    சில நேரங்கள்ல ,அவரோட ஐஸ் பொட்டி மேல என்னைய ஒக்கார வச்சி சைக்கிள் மிதிப்பாப்ல.என்னமோ யான மேல வார மாதிரி இருக்கும்.இதுல சேக்கு அவர எதாவது சொல்லி உசுப்பேத்துனா,ரெண்டு கைய விட்டு பந்தா காட்டுவாப்ல,எனக்கோ பயமா இருக்கும்.நான் இருக்குற "வைட்"ல சைக்கிளோட,முன் ரோதை தூக்குச்சோ,மூஞ்சு மொகற எல்லாம் பிஞ்சிரும்.இப்படியா கொஞ்ச காலம் போயிக்கிட்டு இருக்கைல,நானும் சேக்கும் வந்த சைக்கிள் ,மாடுமேல பிரேக்கு புடிக்காம மோதி,முன் ரோதை வளஞ்சி போச்சி.அதுக்கு மேல அந்த சைக்கிள பாவிக்க முடியல.அதோட சேக்கு படிப்ப விட்டுட்டான்.இன்னும் கொஞ்ச நாள்ல ஒமரும் நின்னுட்டான்,பள்ளிக்கூடத்த விட்டு...

(தொடரும்..)


Saturday, 22 April 2017

நிஸாவின் கையெழுத்து 2



    எங்களுக்கு தமிழ்பாடம்,தமிழய்யா எடுப்பாக.தமிழய்யா பாக்க நல்ல வளத்தியா ,அதுக்கேத்த ஒடம்புமா இருப்பாக.தல முடிய "சோத்தங்கை" பக்கமா வாங்கெடுத்து சீவி,ஒரு சின்ன தூக்கனாங்குருவி கூடு மாதிரி,கும்மள் வச்சி இருப்பாப்ல.முரட்டு மீசையோட.அவரோட முடிக்கு காலம் வெள்ளை அடிச்சி இருந்துச்சி.இவரு "கருப்படிக்காம" விட்டுருந்தாப்ல.இங்லீஸ் பாடம் ஹெட்மாஸ்டர் எடுப்பாரு,அவருக்கு ரிடையர் ஆகுற வயசு.அப்புறம் கணக்கு வாத்தியாரு.இவர பத்தி கடைசியில சொல்லுறேன்.ஏன்னா ரொம்ப சொல்ல வேண்டி இருக்கு.அப்புறமா அறிவியல் பாடத்துக்கும்,வரலாறு பாடத்துக்கும் வாத்தியார் போடல கவர்மென்டு.இந்த ரெண்டு வாத்தியாருக்கும்,படிக்கிற பசங்கள்ட ,காசு பிரிச்சி சம்பளம் கொடுத்தாங்க.அறிவியல் வாத்தியாரு ,கொஞ்ச நாள்தான் வந்தாரு.வரலாறு வாத்தியாரு பேரு ஶ்ரீராம்.நல்லா சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவாப்ல.தளபதி,உழப்பாளி பட ரஜினி மாதிரி முடி வச்சிருப்பாரு.

      இப்ப கணக்கு வாத்தியார பத்தி சொல்லுறேன்.இவுக ஊரு முதுகுளத்தூர் பக்கத்துல இருக்குற "எளஞ்சம்பூரு".அதான் காமடி நடிகர் செந்திலு இருக்காப்லைல.!?அவரோட ஊரு.பேரு சக்கரபாணி னு சொல்லுவாங்க.சாரு ரொம்ப ஸ்ரிக்ட்,அடினா அடி பிரிச்சி மேஞ்சிருவாரு.மாரியூர் பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சவங்களுக்கும்,பாதியில ஓடுனவங்களுக்கும் ,சாரோட அடிதான் காரணம்னா பாத்துக்கங்களேன்.கணக்கு பாடம் நல்லா நடத்துவாக.எனக்கு கணக்கு பாடந்தான் புடிச்சாமான பாடம்.

      ஒரே வகுப்புல படிச்சாலும்,பொம்பள புள்ளைங்க கிட்ட பேச முடியாது.பக்கத்துல இருந்தாலும்,வெவ்வேற தீவுல இருக்குற மாதிரிதான்.அட்டெண்டன்ஸ்ல பேர வாசிக்கைலதான்,இது இந்த பொண்ணோட பேருனு தெரிஞ்சிக்கலாம்.இந்த சரிபு நிஸாவால எனக்கு ஒரு பிரச்சனை.அது என்னனா,என்னோட கையெழுத்து நல்லா இருக்காது.பரீட்சை பேப்பர  வாத்தியாருங்க திருத்தினா,நான் பதில் எழுதி இருந்தாலும்,கையெழுத்து சரியில்லனு திட்டுதான் விழும்.எனக்கு நேர் எதிரா,அந்தபுள்ள நிஸாவோட கையெழுத்து,ரொம்ப அழகா இருக்கும்.அதை காட்டியே,என்னை தமிழய்யா திட்டுவாரு.இல்லனா நிஸாவ பாராட்டும்போதெல்லாம்,என்னய ஒரு மாதிரியா பாப்பாரு.அப்போதெல்லாம் யாரோ "கையெழுத்து எப்படி இருக்கோ,அப்படிதான் ஒருத்தவங்களோட தலயைழுத்து இருக்கும்னு"சொன்னது.நெனப்புல வந்து குத்தாட்டம் போடும்.

(தொடரும்...)


Wednesday, 19 April 2017

நிஸாவின் கையெழுத்து 1



    94-95ம் வருச காலகட்டம் அது.".மாரியூர் பஸ் ஸ்டாப்புல இருந்து கொஞ்ச தூரம் உள்ளே போனா வந்துரும்."அரசு உயர்நிலைப்பள்ளி .M மாரியூர்"னு ஆர்ச் நம்மள வரவேற்கும்.அப்போமெல்லாம் பள்ளிக்கூடம் பக்கத்துல நெறய வீடுக இல்ல.பக்ருதீனோட அண்ணன் ரகீமோட வீடு.அதுக்கு பக்கத்துல சேகு மாமா வீடு.எதுத்தாப்ல கக்கிம் வீடு இவ்வளவுதான்.பக்கத்துல கொஞ்சம் வீடுக கட்ட ஆரம்பிச்சிக்கிட்டு இருந்தாங்க.அந்த பள்ளிக்கூட ஆர்ச்சிக்குள்ள போனா எடது பக்கமா ஒரு கட்டடம்,அதுதான் ஒம்பதாம் வகுப்பு.அதுக்கு பக்கத்துல ஒரு தண்ணித்தொட்டி ,ஒரு வேப்ப மரமும் இருக்கும்.இந்த ஒம்பதாப்புக்கு நேர் எதுத்தாப்புல ,ஒரு கட்டடம் அதுலதான் ,"ஹெட் மாஸ்டர்"ரூம்பும்,பத்தாம் வகுப்பும் இருக்கும்.இந்த பள்ளிக்கூடத்திற்குதான்,ஒப்பிலான்,பெரியகுளம் ,முந்தல் வரை உள்ள பசங்கள்,ஒம்பது ,பத்து படிக்க வரனும்.

    ஒம்பதாம் வகுப்புலதான்,நானும்,சேக்கும் ஒப்பிலான்ல இருந்து சேந்துருந்தோம்.எங்களோடதான் முருகன்,சக்திவேல் ,கார்த்திக்கேயன்,சமது, ஒமர்,பிர்தௌஸ்னு படிச்சாங்க.பொம்பள புள்ளைங்கள்ள ,ஜெயா,விஜயலக்ஷ்மி ,சரிபு நிஸா"னு கொஞ்சப் பேரு படிச்சாங்க.என்னோட வந்த சேக்கு ,கொஞ்ச நாள்ல படிப்ப விட்டுறலாம்னு வந்துருந்தான்.நான் எத்தன நாள் படிப்பேன்னு தெரியாம போயிக்கிட்டு இருந்தேன்.எனக்கு நல்லா படிக்கனும்னு ஆச தான்.ஆனா என்ன செய்ய,ஆச இருக்குற எடத்துல காசு வேணும்ல.ஒப்பிலான்ல இருந்து மாரியூர் வர ,சேக்கோட பழய சைக்கிள்தான்,ஒதவுச்சி,அதுவும் கொஞ்ச நாள்ல புட்டுக்கிச்சி.

      (தொடரும்...)


Friday, 7 April 2017

சுல்தான் மாமா 6



      கடைக்குள்ள ரெண்டு "சுத்துற"சேரு இருந்துச்சி.ஒரு நீளமான உக்காருர கட்டல் ஒண்ணு கெடந்துச்சி.பழய கடயில இருந்த ,ஒரு நாக்காலி மட்டும்
இன்னமும் பழய நெனப்புகள தாங்கிக்கிட்டு ,மவுனமா இருந்துச்சி.அப்பதான் மாமா கிட்ட கேட்டேன்."ஏம்மாமா்இந்த நாக்காலி வாங்கி எத்தன வருசம் இருக்கும்னு,!? "ம்ம் ...ஒரு நாப்பது வருசமாவது இருக்கும்பா.."என சொல்லிட்டு,அவுகளுக்கு வந்துருந்த,"இஞ்சி சாயாவ"கொவளயில ஊத்தி குடிச்சாக.."குடிக்கிறியாபா னு ஒரு வார்த்த கேட்டுட்டு.,நான் அவுக மகன் மூத்தவன கேட்டேன்.அவன் எங்க இருக்கான்னு..!?அவன் அரபு நாட்டுக்கு போனதா சொன்னதும்,எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி..ஏன்னா..!?

        ஒரு ரெண்டரை வருசத்துக்கு முன்னால,நான் சிங்கபூர்ல வேலய வுட்டுட்டு,ஊர்ல ஏதாவது பொழப்பம்னு இருந்தேன்.அந்த நேரத்துல தான் சகுபரும் சவுதிய வுட்டுட்டு வந்திருந்தான்.அவன் என்னய போலதான் நெனப்புல இருந்தான்.ஆனா என்ன செய்ய நானும் மறுபடியும் சிங்கபூருக்கு வந்துட்டேன்.அவனும் அரபு நாட்டுக்கு போயிட்டான்.எரணமும்,மரணமும் இருக்குற எடத்த தேடி போயி தானே ஆகனும்...

    சாயாவ மாமா குடிச்சிட்டு,அடுத்து யாருப்பானு..!?கூப்புட்டாக.அங்க இருந்த பயலுவ மாமா கிட்ட முடி வெட்ட விரும்பல போல.,அப்புறம் என்னய கூப்டாக.நான் மறுப்பெதுவும் சொல்லாம,போயி உக்காந்து கிட்டேன்.தலயில தண்ணிய "புஸ்கு புஸ்கு"னு அடிச்சி விட்டு,முடிய கரீச்சி கரீச்சினு வெட்டயில,எத்தனயோ யாபகங்க செதறுச்சி...!!

(முற்றும்)


Tuesday, 4 April 2017

சுல்தான் மாமா 5



    எங்க ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு .அது என்னனா ,இப்ப எனக்கு சுல்தான் மாமா முடி வெட்டுறாகனு வச்சிக்கங்க.எனக்கு மச்சான் "மொற"உள்ள ஆளு,ஒரு பத்து ரூபாயோ,நூறு ரூபாயோ ,எனக்கு முடி  வெட்டக் கூடாதுனு போட்டுட்டா,எனக்கு முடி வெட்டுனது பாதியிலேயே நிறுத்திருவாக.நான் எதிராளி போட்ட பணத்த விட,கூட ஒரு ரூபாயாவது போட்டாகனும்.இல்லனா பாதி தல தான்.இப்படி ஒரு வெளயாட்டு இருக்கு.

    ஒரு நாள் ஆசாத்து மச்சானுக்கு ,சுல்தான் மாமா முடி வெட்டிக்கிட்டு இருந்தாக.நானும்,அமீனும் அந்தப்பக்கம் போக,அமீனுக்கும் ஆசாத்து மச்சான் "மொற"வேணும்ங்குறதால,பணத்தை போட்டுட்டான்.மாமா முடி வெட்ட மாட்டேங்குறாரு.ஆசாத்து கோவப்பட்டு,அவுக அப்பா காதர்கனி அப்பாவ கூட்டி வந்துட்டாப்ல.ஆளாளுக்கு பேச பெரிய வம்பா போச்சி.அதோட பள்ளிவாசல்ல இருந்தவங்க .சத்தம் போட்டு ஒடுக்கி விட்டாக.எங்களோட சேத்து மாமாவுக்கும் திட்டு.

     சில மாசங்களுக்கு முன்னாலதான் ஊருக்கு போயிருந்தேன்.அப்ப முடி வெட்டலாம்னு மாமா கடைக்கி தான் போனேன்.மாமா ஒரு அப்பாவுக்கு "ஷேவிங்"கு பண்ணிக்கிட்டு இருந்தாங்க.பக்கத்துல அவுக ரெண்டாவது மகன் அஜ்மீரு ஒரு பயலுக்கு முடி வெட்டிக்கிட்டு இருந்தான்.ரெண்டு மூனு பேரு உக்காந்து இருந்தாங்க.அதுல ஒருத்தன் தம்பிக்காரன் உஸ்மான்.என்னய பாத்ததும்.,"இங்கேயும் வந்துட்டுயா...இன்னக்கி பொழுது உருப்பட்ட மாதிரிதான்"னு சொல்லி சத்தமா சிரிச்சான். "செருப்படி வாங்கப்போறா பாரு "னு நான் சொன்னதும்,ரொம்ப சத்தமாக சிரிச்சான்.நான் அடிக்க மாட்டேங்குற தைரியத்துல...


Monday, 3 April 2017

சுல்தான் மாமா 4



     பதினேழு ,பதினெட்டு வயசு இருக்கும்போதே ,சகுபரு அவன் அத்தா கிட்ட தொழில ஓரளவு கத்துக்கிட்டான்.அதோட சுல்தான் மாமா சொந்தக்காரவுக,திருநெல்வேலி  பேட்டையில இருக்காங்க.அங்க இருந்தும் சில பசங்க முடி வெட்டி கத்துக்க இங்கே வருவாங்க.அந்த புதுப்பசங்களுக்கும்,சகுபருக்கும் எங்களப்போல ஆளுங்க தல தான்.ப்ளே க்ரௌண்ட்டு.ஒரு நாள் நான்,அமீனு,செய்யதுசேன்.மூனு பேருமா முடி வெட்ட போனோம். எனக்கு சகுபரு நல்ல வெட்டி விட்டான்.ஆனா செய்யதுசேன் தலயதான் ,பழக வந்தவன்,பதம் பாத்துட்டான்.குண்டும் குழியுமா முடிய வெட்டிட்டான்.அத பாத்து நானும்,அமீனும் ,கெடந்து சிரிக்க,கடுப்பான செய்யதுசேன்,கெட்ட கெட்ட வார்த்தையில திட்டி சண்டைக்கு போயிட்டான்.அதோட சமாதானப்படுத்தி சகுபரு .குண்டு குழியுமான அவந்தலய சரி செஞ்சி விட்டான்.இதுல மூக்கு முடிய வெட்ட வந்த ஆளோட,மூக்க வெட்டி விட்ட கதயெல்லாம் இருக்கு.

         குருதிப்புனல் கமலு ,தில்லு விக்ரமு,வெட்டுறதுக்கு முன்னாலயே,எங்க ஊர்ல நாங்க,போலீஸ் வெட்டுனு ,அந்த மாதிரி வெட்டிக்கிட்டு தெரிவோம்.ஒரு தடவ ,வண்ணாங்கம்மாயில சாராயம் வித்தவங்க,எந்தலய பாத்து ,போலீஸ்னு நெனச்சி,சாராயத்த மறச்சதும் உண்டு.

    அப்புறம் மாமாவ பத்தி சொல்லனும்னா,அவுக நாப்பது வருசத்து மேல,ஒப்பிலான் மாரியூருனு இந்த சுத்துவட்டாரத்துல பெரும்பாலான ஊர்ல மாமா தான் ,"சுன்னத்து"வச்சி விடுவாங்க.கொஞ்ச வருசத்துக்கு முன்னால,என்னோட வேல பாத்த இஸ்மாயில் மாமா,அவரோட மகனுக்கு ஊர்ல "சுன்னத்து"வச்சிட்டு வந்தாப்ல,அப்ப அவர்கிட்ட கேட்டேன்."ஏன் மாமா,சுல்தான் மாமா எத்தன பேருக்கு "சுன்னத்து"வச்சிருப்பாருனு."எப்படியும் ஆயிரக்கணக்குல வச்சிருப்பாருப்பா..எனக்கே நாப்பது வயசுக்கு மேல ஆச்சி..எனக்கும் "அறுத்துட்டு"என் மவனுக்கும் "அறுத்துட்டாருப்பா"னு சொல்லி அடக்க முடியாம சிரிச்சாப்ல.


Sunday, 2 April 2017

சுல்தான் மாமா 3



     மாமாவுக்கு கால சாப்பாடு,அவுக வீட்டு "இஞ்சி சாயா"வும்,செய்யது பீடியும் தான் போல.அதைதான் அதிகம் குடிப்பாக.சாயா தேவப்படும்போதெல்லாம்,"மவுமூதா..மவுமூதா"னு அவுக மனவிய கூப்புவாக.வீடு பக்கத்துல இருக்குறதால,அவுக வீட்ல உள்ள யாராவது,தூக்குச்சட்டியில சாயா கொண்டு வந்து கொடுப்பாக.அந்த சட்டிய தொறந்ததுமே ,இஞ்சி வாசம் ,நாம சாயா குடிச்சது மாதிரி இருக்கும்.முடிய பாதியிலயே விட்டுட்டு,கொவளயில சாயாவ ஊத்தி  குடிச்சிட்டு,பீடி ஒன்ன பத்த வச்சி இழுத்துட்டுதான்,பாதியில விட்ட தல சரி செய்வாக.

      ஒரு பொண்ணு,நாலு பயலுங்க சுல்தான் மாமா புள்ளைங்க.அதுல சகுபருதான் மூத்தவன்.அவனும் நானும் ஒரே வயசுதான்.அவன ஒரு தடவ ,பள்ளிக்கூடத்துல "பட்டப்பேர"சொன்னேனு,அவுக அத்தா கிட்ட சொல்லிட்டான்.அப்போ ஊர்ல IOB பேங்கு கட்டிக்கிட்டு இருந்தாங்க.கட்டடத்துக்கு அடிச்ச ஆத்துமண்ணுல வெளயாடிகிட்டு இருக்கையில.அவர் கிட்ட மாட்டிக்கிட்டேன்."ஏம்பா...!?சகுபர என்னவோ சொன்னியாம்..!?ஒனக்கு என்னமோ "கொரலு" வெங்கலக்கொரலா..!?எறும்பு கடிச்ச மாதிரி கரகர னு பேசிக்கிட்டு தெரியிறா..!?நீ அவன கேலி பண்ணுறீயோ..னு"திட்டி விட்டு போயிட்டாப்ல.பேசுன அவருகூட மறந்துருப்பாரு.ஆனா எங்கூட்டாளி செய்யது ,இத அடிக்கடி சொல்லி சிரிப்பான் இப்பகூட.

    பழய மதரசா ஒடச்சி கட்ட முடிவெடுத்தாங்க.அதோட அந்த முடி வெட்டுற எடமும் காலி.அப்புறம் மரத்தடியில கொஞ்ச காலம் ஓடுச்சி..


Saturday, 1 April 2017

சுல்தான் மாமா 2



     இருபத்தஞ்சி வருசத்துக்கு முன்னால,பள்ளிவாசல் பகத்துலதான் பழய மதரசா .அந்த மதரசாவின் பின்புறமும் ,மீராசா அப்பா வீட்டு காம்பவுண்டு சுவரும் ,நெருக்கமா இருக்கும்,ஒரு ஆளுதான் போகலாம்.அந்த பாதை முடியிற பக்கவாட்டுல,மூனு  வீடு கட்டி ஜமாத்துல ,பள்ளிவாசல்ல வேல பாக்குறவங்க தங்குறதுக்கு கொடுத்து இருந்தாக.மதரசாவோட,அந்த வீடுகளோட  மறுபக்கம்தான்,முடிவெட்டுற எடம் கொடுத்து இருந்தாங்க.அந்த எடம் பட்டியலால் மறச்சி இருக்கும்,ரெண்டு மர நாக்காலி கீழ கால் வைக்க பலகை.ரெண்டு மொகம் பாக்குற பெரிய கண்ணாடி,சுவத்துல மாட்டிய கம்பியில மாட்டி, தூக்குல தொங்குற மாதிரி தொங்கும்.அந்த கண்ணாடிக. அந்த கடைக்குள்ள சாக்பீசால,"பொறுமை கடலிலும் பெரிது"னு எழுதி இருக்கும்.கடைக்கு வெளியில நீளமான கட்டலு போட்டு இருக்கும்,அதுலதான் பெரிய ஆளுங்க உக்காந்து இருப்பாக.சுல்தான் மாமா வருகைக்காக .

     நாங்க சின்ன பயலுக முடி வெட்ட போனா,கடைக்கு பக்கத்துல கெடக்குற "சாந்தாக்கு"பக்கத்துல,வெளயாடிக் கிட்டு இருப்போம்.எப்படியும் லேட்டாதான் முடி வெட்டுவாக,பெரிய ஆளுங்க,வேல இருக்குனு சொல்லி முன்னாடி வெட்டுவாக.நமக்குதான் அத பத்தி கவல இல்லையே,லேட்டாச்சினா பள்ளிக்கூடம் போகாமா இருந்துறலாம்ல அதான். மாமாகிட்ட முடி வெட்ட பயமாவும் கோவமாவும் அழுகயாவும் வரும்,ஏன்னா முடிய "கரச்சி" வெட்டி விடுவாக.எங்கள போல சின்ன ஆளுங்கள,நாக்காலி மேல பலகய போட்டு,அதுமேல ஒக்கார வச்சி,தலயில தண்ணிய அள்ளி தடவி,"அதான் முடியில்லையில .!?எதுக்கு முடி வெட்ட வந்தா"னு திட்டி விட்டு,கரீச் கரீச்னு கத்தரிக்கோலு சத்ததுல,"கரச்சி"எடுத்துருவாரு. எனக்கு அழுகதான் வரும்,பள்ளிக்கூடத்துக்கு போனா,கூட படிக்கிறவனுக கேலி பண்ணுவானுகனு.இதுல மாமா வெட்டும்போது ,தலய அங்குட்டு,இங்குட்டு ஆட்டுனா போச்சி,காத புடிச்சி திருகுவாப்ல.அப்ப அழுக வந்துச்சி.இப்ப அத நெனைக்கைல சிரிப்பு வருது.

(தொடரும்...)