Thursday, 7 February 2013

ஹபீப் -குர்சியத்(9)

சூரியன்-
ஓய்வுக்கு-
செல்லும்!

எங்களுக்கோ -
இமைகள்-
மூட மறுக்கும்!

முருகேசன் அண்ணன்!
ஹரிதாஸ் அண்ணன்!
காதர் மைதீன் மச்சான்!
மளிகை கடை-
உறவுகள்!

எந்நேரத்திலும்-
சரக்கு தரும்-
புண்ணியவான்கள்!

உருவாகும்-
ஒரே அணியிலிருந்து-
சில அணிகள்!

விறகு-
தண்ணீர் -
எடுக்க!-
சிலர்!

காய்கறி வெட்ட-
சிலர்!

சமைக்க-
சிலர்!

சுத்தம் செய்ய-
சிலர்!

கூடி சேர்ந்து-
சோறு ஆக்குவோம்!

ஒண்ணா இருந்தே-
சாப்பிடுவோம்!

இந்த நட்பு -எனும்
மரத்தில்!

நானும்-
ஹபீபும்-
இரு கிளைகள்!

வீடு இருந்தும்-
தெருவில் -
தூங்குவோம்!

தெருவில் இருந்தாலும்-
குடும்பம் போல-
இருந்தோம்!

குவித்து கிடக்கும்-
ஆற்று மணல்!

முற்றங்கள்!

நாங்கள்-
படுத்து உருண்ட-
இடங்கள்!

என்ன பேசுவது-என
பேசி கொண்டே இருப்பது-
காதலர்கள் மட்டுமல்ல!

இதில் நண்பர்களும்-
விதிவிலக்கல்ல!

ஊரே-
தூங்கி கிடக்கும்!

ஊரெல்லாம்-
நாங்கள் நடக்கும்-
சப்தம் கேட்கும்!

திட்டுவார்கள்!
தடுப்பார்கள்!

விட்டு பிடிப்பார்கள்!
பெற்றோர்கள்!

நல்ல பயலுக-என
சொல்றவங்களும் -
உண்டு!

நல்ல பயலுகளா...!!?-
இவனுங்களா...!?-என
அரண்டவர்களும் உண்டு!

எதை பற்றியும்-
கவலை இன்றி-
அலைந்தோம்!

சிலர் வீட்டில்-
கல்யாண பேச்சி-
அடிபட்டதை -
அறிந்தோம்!!

(நினைவுகள் சுழலும்....)






Wednesday, 6 February 2013

ஹபீப்-குர்சியத்(8)

வாலிபம்-
வேகமானது!

கைபந்து விளையாட்டு-
எங்களுக்கு-
விருந்தானது!

ஊரில் இருந்த-
முன்னாள்-
அணிகள்!

மருதநாயகம் அணி!
தீன் தென்றல் அணி!
பத்ருல் இஸ்லாம் அணி!

போட்டி நடக்கும்-
தினம் தினம்!

பந்தயங்கள்-
குளிர்பானம்!

பல நேரங்கள்-
கல கலப்பு!

சில வேலைகள்-
கைகலப்பு!

வலை (நெட்) கட்டிய-
கம்புகள்-
உடைபடும்!

வலை(நெட்)-
கிழிபடும்!

பந்தும்-
பிஞ்சிவிடும்!

பஞ்சாயத்து-
கூட்டப்படும்!

சண்டை -
போட்டவர்களை-
வைத்து-
பெரியவங்க-
திட்டி தீர்ப்பார்கள்!

அறிவுரை -
சொல்வார்கள்!

அபராதம்-
விதிப்பார்கள்!

மறக்க முடியாத-
மறக்க கூடாத-
ஜமாஅத் தலைவர்கள்!

மச்சான் யாசீன் அவர்கள்!
அண்ணன் சீனி முசாபர் அவர்கள்!

மச்சான் காஜா அவர்கள்!
மாமா சீனி மைதீன் அவர்கள்!

ஊடலும்-
கூடலும்-
எல்லா நிலையிலும்-
உண்டு!

கைபந்து அணிகளிடமும்-
இருந்ததுண்டு!

பல வெளியூர்களில்-
போட்டிகள்!

பல தோல்விகள்!
சில வெற்றிகள்!

இன்று-
ஜாலி பாய்ஸ் அணி-
மாவட்ட அளவில் மோதுவது-
மகிழ்ச்சியான -
விஷயங்கள்!

பகலில்-
இந்த -
மாதிரி!

அப்போ-
ராத்திரி ....!!?

(நினைவுகள் சுழலும்......)

// ஜாமத்-அரபி சொல்லிற்கு குழு அல்லது கூட்டம் என்பார்கள்.
ஜமாஅத் தலைவர் என்பது-
நாட்டாமை/ அம்பலத்தார் என்பார்கள் இல்லையா அப்படியும்-
பொருள் கொள்ளலாம்////

Tuesday, 5 February 2013

ஹபீப்-குர்சியத்(7)

வெட்டியாக-
அலைந்தோம்!

வெயிலோடு-
உறவாடினோம்!

புழுதியோடு-
புரண்டோம்!

காடுகரை!
கம்மாகரை!

கடற்கரை!
இவைகள்-
ஒதுக்கிடாத-
உறவின் முறை!

ஆலமர கிளைகள்!
ஊஞ்சல் ஆடிய-
விழுதுகள்!

கருவேல-
மரங்கள்!

"ஒட" மர-
நிழல்கள்!

நிழலாடுது-
அந்நாட்கள்!

"கல்லாதது!"
"இல்லாதது"!

சில சொந்தங்கள்-
உதாசினபடுத்தியது!

உழைக்க-
உந்தி தள்ளியது!

பணம் சேர்க்க-
வேகம்!

பிறந்த மண்ணை-
பிரியும் சோகம்!

புது-
இடங்கள்!

புது-
மனிதர்கள்!

புரட்டி அடித்த-
வேலைகள்!

சில மாதங்கள்-
உழைப்பது!

பல மாதங்கள்-
சொந்த ஊருக்கு வந்து -
சுற்றுவது!

வந்துவிட்டது-
பருவ வயசு!

பாழாய் போன-
மனசு!

(நினைவுகள் சுழலும்.....)

//ஒட மரம்- கருவேல மரங்கள்
போன்றே பெரிய அடர்த்தியான-
மரம்/////




Monday, 4 February 2013

ஹபீப் -குர்சியத்(6)

கல்வி நிலை!

தொடக்க நிலை!
நடு நிலை!

உயர் நிலை!
பட்ட நிலை!

என்றெல்லாம்-
அடுக்கிட -
தேவை இல்லை!

பெரும்பாலோர்-
"நடுநிலையை"-
தாண்டவே-
இல்லை!

எட்டாம் வகுப்பு!

அதுவே-
பட்டய படிப்பு!

சொல்வாங்க-
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பு ஆனதாக!

பல கோடிகள்-
ஒதுக்க பட்டவைகள்-
நலதிட்டதிற்கு வருவதற்குள்-
கை மாறி கை மாறி-
சில ஆயிரங்கள் -
ஆவதுபோலாக!

கல்வி -
இடை நிறுத்தம்!

இருக்கு-
பல காரணம்!

வறுமையினால்!
பருவமடைந்ததினால்!
அறியாமையினால்!

"அறிந்தே-"
இச்சமூகத்தை-
முன்னேற்ற வழி செய்ய-
அரசுகள்-
மௌனிக்கையிலே!

அறியாத -
அம்மக்களும்-
என்ன செய்வாக!?

மிக ஒரு-
சிலரே-
உயர் நிலை பள்ளிக்கு-
சென்றவர்களே!

எத்தனை பேருக்கு-
சாதிக்க கனவுகள்-
இருந்தது-
தெரியல!

கனவுகள்-
கைவச படுத்திட-
வசதி வாய்ப்புகளுக்கு-
வாய்ப்பே இல்ல!

மாவட்ட ஆட்சியராக-
கனவுடன்-
ஒருவன இருந்தான்!

இப்போ-
அவன் ஆனது-
மாவடித்து சுட்டெடுக்கும்-
ரொட்டி (புரோட்டா)காரன்தான்!

யார் இவன்-
"பில்டப்பு "(பந்தா)-
வேணாம்!
நானே தான்!

படிக்கும் வரை-
நதியில்-
துடுப்புள்ள-
படகானோம்!

படிப்பு-
தடைப்பட்டபோது-
பிஞ்சி போன-
செருப்பானோம்!

வரும் தலைமுறை-
செருப்பாகாமல்-
இருக்க-
சிறப்பாகவே-
இடஒதுக்கீடு-
கேட்கிறோம்!

தேன்கூட்டில்-
கல் பட்டதுபோல்-
சிதறினோம்!

சூளையில்-
செய்யப்பட்ட செங்கற்கள்-
விற்பனைக்கு ஏற்றபட்டதுபோல்-
பல வழிகளில்-
பிரிந்தோம்!

அப்புறம்-
என்ன ஆனோம்!?

(நினைவுகள் சுழலும்....)





Sunday, 3 February 2013

ஹபீப்-குர்சியத்(5)

பள்ளிகூடங்கள்!
எதிர் எதிராக-
இரு கட்டிடங்கள்!

சுற்றி-
கட்டு கம்பிகளால்-
மட்டைகள் கட்டப்பட்ட-
வேலிகள்!

வெளிக்குள்-
இரு பனைமரங்கள்!

எப்போதாவது-
விழும்-
பணங்காய்கள்!

எப்போதும்-
தரும்-
தலையில் விழுந்திடுமோ-என்ற
பயங்கள்!

இரு-
வேப்பமரங்கள்!

கொட்டிடும்-
வேப்பிலைகள்!

பாகுபாடில்லாமல்-
கடித்திடும்-
"ஸ்சுவை" எறும்புகள்!

தண்ணீர் தொட்டி-
ஒன்னு!

சமையல்கட்டு-
ஒன்னு!

பார்க்கும்போதெல்லாம்-
சந்தோசபடலாம்-
நாம படித்த -
பள்ளிகூடம்னு!

கோடுகள்-
கிழிப்பார்கள்!

வரிசையில்-
நிற்ப்பார்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்து-
பாடுவார்கள்!

உறுதி மொழி-
எடுப்பார்கள்!

வரிசையாக-
மாணவர்கள்-
வகுப்பறை-
செல்வார்கள்!

பின் தொடர்வார்கள்-
ஆசிரியர்கள்!

தலைமை ஆசிரியர்-
இக்னேசியஸ் செல்வராஜ் அவர்கள்!
ஆசிரியர்-
டேவிட் அவர்கள்!

ஆசிரியைகள்-
ஆபிதா அவர்கள்!
மாரீஸ்வரி அவர்கள்!
பேபி அவர்கள்!

அசரத்-
அகக்கண் திறந்தார்கள்!

ஆசிரியர்கள்-
அறிவுக்கண் திறந்தார்கள்!

அகக்கண்ணை-
குருடாக்கிவிட்டு-
அறிவு அறிவுனு-
அலைவதால்தான்-
உலகில்இன்று-
எத்தனை எத்தனை-
சீர்கேடுகள்!

சிறுவர்கள்-
காக்கி நிற-
அரைக்கால் சட்டை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

சிறுமிகள்-
முக்கால் கால்-
நீல நிற பாவாடை!
வெள்ளை நிற-
மேல் சட்டை!

பள்ளி பாடங்கள்-
படிக்க சென்றோம்!

கடைசி வரை-
எத்தனைபேர் சென்றோம்!?

(நினைவுகள் சுழலும்.....)

//ஸ்சுவை எறும்பு-
கட்டெறும்பை  விட சிறியது!
சித்தெறும்பை விட பெரியது!////


Saturday, 2 February 2013

ஹபீப்-குர்சியத் (4)

வந்தார்கள்-
"வெள்ளை அசரத்"-என
அழைக்கப்பட்ட-
மாலிக் அசரத் அவர்கள்!

வெள்ளை அசரத்-
மார்க்கம் சொல்லி தந்து-
மனதில் குப்பை அடையாமல்-
சுத்தம் செய்தவர்கள்!

அவதூறுகள்-
குவிக்கபட்டாலும்-
முகலாயர்கள் மீது!

தாஜ் மகாலும்-
செங்கோட்டையும்-
பொய் என்று-
பறைசாட்டுகிறது-
அம்முகலாயர்கள்  மீது!

ஒப்பிலான்-
அடைந்த -
சீர்திருத்தங்கள்!

வெள்ளை அசரத்தை-
நினைவூட்டுபவைகள்!

சீர்திருத்தவாதிகளும்-
நல்லவர்களும்-
மறக்க முடியாத-
மறைக்க முடியாத-
வரலாறுகள்!

"வணக்கத்திற்கு உரியவன்-
ஒருவன்!

அவனை-
யாரும் பெறவுமில்லை!
அவனால்-
யாரும் பெறப்படவும் இல்லை!
அவனே இறைவன்!

தொழுகையில்-
படைத்தவனுக்கு-
நன்றி செலுத்திடு!

பிறகு-
அவன் உனக்கு வைத்துள்ள-
உணவை உலகில்-
தேடி எடுத்திடு!

பதினோருமாதம்-
அனுமதித்ததை-
பூரணமாக-
சாப்பிடு!

ஒருமாதம்-
பகலில்-
இறைவனுக்காக-
பசித்திரு!

அளவுக்கு மேல்-
இருப்பதை-
கணக்கிட்டு எடுத்து-
ஏழைக்கு கொடுத்திடு!

பசித்தவர்கள்-
பசியை போக்கிடு!

வசதியும் -
வாய்ப்பும் -
இருந்தால்-
புனித காபாவுக்கு-
சென்று விடு!

அதன் வழி-
மனித புனிதர்கள்-
தியாகங்கள்-
அறிந்திடு!

மூடதனம்!
முட்டாள் தனம்!

படைப்புகளை-
நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!""

எத்தனை எத்தனை-
சொல்லித்தந்தார்கள்-
குர் ஆன்- மற்றும்-
நபிகளார் மொழிகளின்-
வழியிலே!

நேரம்-
கடந்தது!

காலை நேர-
மதரசா-
முடிந்தது!

இன்றைக்கும்-
நினைவில் வருகிறது-
சிட்டாக பறந்தது!

புல் வீசும்போது-
பறந்து விட்டு-
திரும்பும்-
புறாக்கள் கூட்டம்போல!

கல்லெறிந்தால்-
குளத்திலிருந்து-
பறந்து விட்டு வரும்-
கொக்குகள் கூட்டம்போல!

மார்க்கம் படித்து விட்டு-
பள்ளிகூடத்தில்-
இணைவோம்-
அப்பறவைகள் கூட்டம்போல!

(நினைவுகள் சுழலும்....)

///புனித காபா-முஸ்லிம்களின் இறுதி கடமைஹஜ்.மக்காவில் உள்ள
முதல் இறை ஆலயமாகும்.///





Friday, 1 February 2013

ஹபீப்-குர்சியத்!(3)

அல்லாஹு அக்பர்-
அல்லாஹு அக்பர்-என்று
பாங்கின் சப்தம்-
கேட்கும்!

நாளின் தொடக்கத்தில்-
கேட்கும் முதல்-
சப்தம் அதுவாகவே-
இருக்கும்!

அக்குரலுக்கு-
சொந்தகாரர்-
மோதினார் மாமா -
அப்துல் ஜப்பார்-
அவர்கள்!

நேரங்கடந்து-
தூங்கினாலும்-
நேரத்தோடு-
எழும்பணும்-என
பழக்கிட்ட-
தத்துவங்கள்!

பெரியவர்கள்-
சிறியவர்கள்-
ஏழைகள்-
பணக்காரர்கள்-
நிற்கும்-
வேறுபாடில்லாத-
வரிசைகள்!

ஆச்சாவின்-
முந்தானையில்-
"முடிந்து" வைத்த-
காசும்!

உம்மாவின்-
சட்டைப்பையில்-
இருக்கும்-
காசும்!

தின்பண்டங்களாக-
மாறும்!

நூஹ் மாமா-
தேநீர் கடையும்!

புஷ்பம்-
முக்குழியும்!

"கஞ்சிக்கார அப்பா"-
சேமியா கஞ்சியும்!

இப்போது நினைத்தாலும்-
நெஞ்சு குழி-
இனிக்கும்!

சிகப்பு-
கொண்டை கொண்ட-
சேவல் குஞ்சிகள் போல-
வெள்ளை தொப்பிகள்-
அணிந்து-
சிறார்கள்-
ஒருபக்கம்!

பச்சை கிளிகள்-
கூட்டம் போல-
கருப்பு ஆடை(பர்தா)-
அணிந்து-
சிறுமிகள்-
மறுபுறம்!

மதரசாவில்-
சல சல வென-
கேட்கும்-
பேச்சின்  சப்தம்!

சப்தங்கள்-
கொஞ்ச கொஞ்சமாக-
குறையும்-
காரணம்-
தூரத்தில்-
கேட்கும்-
ஹசரத்தின் -
காலடி சப்தம்!

(நினைவுகள் சுழலும்.....)

//அல்லாஹு அக்பர்- இறைவன் மிகபெரியவன் என்ற பொருள் கொண்ட-
தொழுகைக்கான அழைப்பு!

மோதினார்- பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பவர்!

மதரசா-இஸ்லாமிய மார்க்கம்
சொல்லி கொடுக்கப்படும்
இடம்.

முக்குழி-குழிபணியாரம் .

ஆச்சா-பாட்டி.
உம்மா-அம்மா. //////////