Saturday, 27 August 2016

ஒரு வேப்பமரத்தின் கதை.!


     கண்மாய் கரையோரம் நிற்கும் வேப்பமரம் அது.அதனுடைய வயது பதினைந்து இருக்கலாம்,தடித்த தண்டு கொண்டு,கொப்புகள் பரப்பி கிளைகள் விரித்து பசுமையான மரம் அது.அடர்ந்த நிழல் தரும் மரம்.அம்மரத்தின் கீழ் வழிபோக்காக போவோர்,வருவோர் சில நாழித்துளிகள் இருந்து விட்டுச் செல்வதும் உண்டு.சிறியவர்கள் அம்மரத்தில் ஏறி விளையாடுவதற்கும்,மரத்தின் நிழலில் "கோலி"விளையாடுவதற்குமென்று , இப்படியாக பலவற்றிற்கு இவ்வேப்பமரம் பயன்பாடாய் இருந்தது.

      இவ்வேப்பமரத்திற்கு ஒரு கர்வம் இருந்தது.தன்னால் தான் எல்லோரும் பயன்படுகிறார்களெனவும்,தன் நிழலில் கிடக்கும் சருகுகளை ,இன்னும் கீழ்த்தரமாக நினைத்தது.ஒரு காலத்தில் தன்னில் இலைகளாக இருந்து அழகுபடுத்திய இலைகள்தான்,இன்றைக்கு உதிர்ந்து சருகுகளானது என்பதனை மறந்து.சருகுகளுக்கு மரத்தின் எண்ணம் தெரிந்தும்,எதிர்த்துப் பேச துணிவில்லை,கிடைத்திடும் நிழலும் கிடைக்காது போய் விடுமோ எனும் எண்ணத்தில்.

       ஒரு நாள் கோடைமழையோடு ,பலத்த காற்றும் வீசியது.மழையும் காற்றும் சில நாட்கள் நீடித்ததால்,சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்மாய்களின் தண்ணீரை திறந்துவிட்டார்கள்.திரண்டு வந்த தண்ணீர்,இவ்வேப்பமரத்தின் வேரில் தொடர்ந்து பயணித்ததால்,அம்மரம் சாய்ந்து தண்ணீரில் விழுந்தது.தண்ணீரின் ஓட்டத்தில் ,மரத்தின் வேரும்,கொப்புகளும்,தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல்,மண்ணிலும் சிக்கி கொண்டு சித்திரவதை அடைந்தது.ஆனால் அம்மரத்தால் கேவலமாக எண்ணப்பட்ட,சருகுகளோ தண்ணீரில் ,மிதந்து மிதந்து ஆனந்தமாக சென்றுக் கொண்டிருந்தது .

2 comments: