Friday, 30 September 2016

அறியாமை.!

"பேரின்பத்தில் கருவுற்று ,கொடுந்துயரத்தில்தான் ,நமது பிறப்பே நடந்தது.அதுப் போலவே .நாம் வாழும் நாட்களில் இன்பத்தை மட்டுமே,நாம் எதிர்பார்த்தால்,அது நமது அறியாமையே."

Thursday, 22 September 2016

சில சிந்தனைகள்..!

"உன் கண்களை நீ திறக்காதவரை,எத்தனை சூரியன் உதித்தாலும்,உனக்கு வெளிச்சம் கிடைக்கப் போவதில்லை ."
-----------------------------
"பூந்தோட்டம் என்பதால்,முட்கள் இருக்காது என நம்பி விடாதே."
------------------------------
ஓய்வெடு!

ஓய்ந்து விடாதே!!
------------------------
உறவுகளுக்கு உதவாமல் "பிழைக்கத் தெரிந்தவன்"எனும் பட்டம் பெறுவதை விட,உறவுகளுக்கு  உதவி "ஏமாளி"எனும் பட்டம் பெறுவது எவ்வளவோ மேல்."
----------------------------------
"பிறரது கண்ணீரைத் துடைக்க நம் விரல்கள் தயாராகவில்லையென்றால்,ஒரு நாள் நமது கதறல்களை கேட்கக்கூட செவிகள் இல்லாது போய்விடும்."
------------------------------
"போர்வீரர்கள் வாட்களை மட்டும் எடுத்துச் செல்வதில்லை,கவசங்களையும் சுமந்து செல்வதின்,சூட்சமத்தை புரிந்துக் கொள்ளுங்கள்."
-------------------------------

Monday, 19 September 2016

கக்கூஸ்..!

"டேய் மாப்ள.!இனி இந்த மார்க்கெட்ல,எனக்கு தெரியாம ஒரு பய கக்கூஸ் போக முடியாது..."

 "ஏன்டா..!"

"இந்த வருசம் இங்கே இருக்குற ,கக்கூசை நாந்தான் டென்டருக்கு எடுக்க போறேன்..,,!

Thursday, 15 September 2016

பாதி கத்தி.!

பாதகத்தி
பாதி பாதியாய்
என்னைப் பார்த்துதான்.!

பாதி கத்தியாய்
என் நெஞ்சில் குத்தி நிற்கிறாய்..!

   

Saturday, 10 September 2016

கவிதை !

மின்னலைத் தொடர்ந்து வரும்
இடி சத்தத்தைப் போல்
உன் முகத்தைப் பார்த்தபின்
தொடர்ந்து வருகிறது எனக்கு கவிதை!

Thursday, 8 September 2016

வாழ்த்துகிறேன் !

மழைத்துளியோ
பனித்துளியோ!

இளங்காற்றோ
நதி ஊற்றோ!

தேசம் பார்த்து தழுவுவதில்லை
அதுப் போலவேதான் காதலும்!

கவிதைகளால்
உங்கள் காதலை வாழ்த்த நினைத்தேன்!

காதலும் கவிதையும் வெவ்வேறல்ல என்பதால்!

காதல்கவிதையாய் உங்களை  வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .
Tuesday, 6 September 2016

சருகு!

"விதியெனும் நதியில் விழுந்த
சருகுகள்தான் நாம்."

Saturday, 3 September 2016

ஈரம்..!! (சிறு கதை) (5)


        சிறிது நேரத்திற்கு பிறகு ,டீயை குடித்து விட்டு,ஆர்.கே.எஸ் மாமாவிடம் காசைக் கொடுத்து விட்டு,வெளியேறிய இப்ராகீம்.கடைக்குப் பின்னால் மறைவான இடத்தில் நின்றுக் கொண்டு,ஆசிப்பைக் கூப்பிட்டான்.

    "இன்னைக்கு இவனோட சண்ட போட,மூட் இல்ல..இப்ப போயி கூப்புடுறானே.."என மனதில் எண்ணியவாறு ஆசிப் எழுந்துப் போகையில் ,அவனுடன் பேசிக்கொண்டிருந்த நண்பன் அலிபுல்லா சொல்லி அனுப்பினான்."காலைல இருந்து ஒன்னை தேடுனான் ..அவன் ,எச்சரிக்கையா அவன்ட பேசு..."என சொல்லி விட்டான்.

     இப்ராகீம் அருகில் ஆசிப் வந்ததும்,இப்ராகீம் கேட்டான்.

   "உம்மாவுக்கு என்ன பிரச்சனை ..."என கேட்டான் .

இதை அவன் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் பதில் சொன்னான்."இல்ல..ஆஸ்த்துமா மாதிரி ஒரே எளப்பு அதான்..."என்றான்.

"நீ அன்னைக்கு நடந்த பிரச்சனையில இருந்து மொறச்சிகிட்டு தெரியுறேன்னு எனக்கு தெரியும்,அதான் இன்னைக்கு காலையில தேடுனேன் ஒன்ன..ஆனால் ஒம்மாவுக்கு ஒடம்பு சரியில்லனு கேள்விப்பட்டதும் மனசு கேக்கல...என சொன்னவன்..."தன் சட்டைப் பையினுள் இருந்த,இரண்டாயிரம் ரூபாயை ,ஆசிப்பிடம் கொடுத்தான்.அவனுக்கு தேவையென்றாலும்,வாங்கிக்கொள்ள தன்மானம் தடுத்தது.இதை புரிந்துக்கொண்ட இப்ராகீம்,ஆசிப்பின்
சட்டைப்பையில் திணித்து விட்டு சொன்னான்.

   "வெக்கப்படாதே...நம்ம வாப்பாமார்களெல்லாம்,பங்காளிக தான்,என் வாப்பா சொல்லுவாக..நானும் ஒனக்கு சொந்தக்காரன்தான்டா,அன்னைக்கு கோவத்துல அடிக்க வந்தேன்..கோவிச்சிக்காதே...உம்மாவ
பாத்துக்க.."என சொல்லி விட்டு கிளம்பி விட்டான் இப்ராகீம்.

    ஆசிப்போ,அவன் மறையும்வரை நெகிழ்ச்சியுடன் பாரத்துக் கொண்டிருந்தான்.

(முற்றும்)

   

Thursday, 1 September 2016

ஈரம்..!! (சிறு கதை) (4)


        அப்பொழுது சிறுபிள்ளைகள் அத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அக்குழந்தைகளில்,இப்ராகீமின் அக்கா பிள்ளைகளும் அடக்கம்.குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ,மிக வேகமாக சென்ற ஆசிப்பை பார்த்து,இப்றாகீமின் அம்மா திட்ட ஆரம்பித்தாள்...

     "மண்ணுல இருப்பானுவ ...இப்படி ஆடுறானுவ...சின்ன புள்ள இருக்குனு பாக்காம இப்படி போறான்...ஏதாவது புள்ளைய மேல பட்டுடா வரவா ..போகுது..!?என திட்டிக்கொண்டே ,தன் பேரனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்,உள்ளே இருந்த இப்ராகீம்,காரணம் கேட்க,அவன் அம்மா விவரம் சொல்ல,கடுப்பானவன்,காலையில் அவன்கிட்ட "என்னனு கேட்டு முடிச்சா தான்" சரி வரும் என்று எண்ணியவனாக இருந்தான்.

     விடிந்ததும் ஆசிபைத் தேடினான்,அவன் கண்ணில் படவே இல்லை.விசாரித்ததில் ஆசிப் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரி போயிருப்பதாக கேள்விப்பட்டான்.

     மலை நேரமானது ,ஆர்.கே.எஸ்.என்றழைக்கப் படும் ஆர்.கே.சம்சுகனி மாமா ,டீக்கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்.சம்சுக்கனி மாமா,பண்பாளர்,கவிஞரும் ஆவார்.கம்யூனிசக் கட்சியைச் சார்ந்தவர்,தன்மையான மனிதர்.அவருக்கு துணையாக அவரது மகன் நபி இஸ்மத் உதவி செய்துக் கொண்டிருந்தார்.சிலர் கடைக்குள் டீ குடித்தார்கள்,அதிலொருவன் இப்ராகீம்.கடைக்கு பின்னால்தான்,ஆசிப் தன் கூட்டாளியுடன் பேசிக் கொண்டிருந்தது,உள்ளே இருந்த இவனுக்கு நன்றாகவே கேட்டது.

 (தொடரும்...)