Saturday, 24 December 2016

எண்ணவில்லை வெண்ணிலவே..!


மூங்கில் காட்டினில் உனை காணுகையில்
தென்னைக்கீற்றுகளினிடையில் உனை தரிசிக்கையில்
கண்மாய் நீரில் நீ நீந்துகையில்
கடற்கரை மணலின்  படுத்திடுகையில் நீ எனை நனைத்திடுகையில்

எண்ணவில்லை
வெண்ணிலவே!

என்னவளாய் நீ என் கை கோர்த்திடுவாயென்று...!!

   

Friday, 16 December 2016

சின்ன சின்னதாய் ..!(7)

"வாழ்தலை அர்த்தமாக்கிக் கொண்டால்,சாவின் மீதும் ஒரு ஆசை வரும்."


காலப் பெருவெளிதனில்
முயற்சியெனும் தூரிகைகளால்
உனது பெயரையும் வண்ணமாக தீட்டிடு!

"கடமை என்பது வேறு.தியாகம் என்பது வேறு.ஆனால் கடமையை செய்து விட்டுதான் ,நம்மில் பலர் தியாகம் செய்ததாக நினைத்துக் கொள்கிறோம் ."


"உழைப்பெனும் அட்சயப்பாத்திரத்தை மறந்து விட்டு,சூதாட்டமெனும் பிச்சைப்பாத்திரத்தை கையில் ஏந்தி அலைகிறார்கள் .நம்மில் சிலர்."

Monday, 5 December 2016

சின்ன சின்னதாய் ..!(6)

"நாயை நடு வீட்டிலும்,பெற்ற தந்தை தாயை முதியோர் இல்லத்திலும் வைக்கும்,படித்த மேதாவிகள் வாழும் காலம் தான் இது.

"சம்பளப் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு ,சில்லறைக் காசுகளை தனக்கென வைத்துக் கொள்பவர்கள் தான் "வாப்பாமார்கள்."


"உங்களது பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறேன் என்ற பெயரில் ,செல்லாத காசுகளாக்கி விடாதீர்கள்."

"தோற்கிறோம் என்பதற்காக முயற்சியை கை விடாதே! முயற்சியை கைவிடுவோமென்றால் வாழ்க்கையே தோல்வியாகி விடும்."

Sunday, 4 December 2016

சின்ன சின்னதாய் ..!(5)

"பாறைக்குள்ளிருக்கும் சிற்பம் சிற்பியின் கண்களுக்கு தெரிவது போல்,வாழ்க்கையின் வெற்றி தன்னம்பிக்கை உள்ளவனுக்கே தெரிகிறது."


"வாழ்க்கைப் பயணத்தில் நல்ல வார்த்தைகளை சிந்தி விட்டு செல்லுங்கள்.ஒரு நாள் நாம் களைத்துப் போய் திரும்பிப் பார்க்கையில்,சிந்திய அவ்வார்த்தைகள்,நல்ல உறவுகளாக நம்மை பார்த்து புன்னகைக்கும் ."


"தூங்கி எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.ஏனென்றால் தூங்கிய எல்லோரும் எழுவதில்லை."


"உங்கள் குழந்தைகளை செதுக்குங்கள் தவறில்லை,அதற்காக செதுக்குகிறேன் என்ற பெயரில் ,சிதைத்து விடாதீர்கள்."

Thursday, 24 November 2016

சின்ன சின்னதாய் .!(4)

"காட்டில் ஓநாய்களின் ஊளைச் சப்தம் அதிகமாக கேட்கிறதென்றால்,அங்கே சிங்கங்கள் கர்ஜிக்க மறந்துவிட்டதென அர்த்தம்.இது காட்டுக்கு மட்டுமல்ல,நாட்டுக்கும் பொருந்தும்.""கடந்து வந்த பாதையை நெஞ்சில் வை,அடைய வேண்டிய இலக்கை கண்ணில் வை."


"வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் துறவறம் பூண்டவர்களின் உபதேசங்களை விட,தன்னை சார்ந்தவர்களின் பசியைப் போக்க,தன்னை வருத்தி உழைக்கும் "அன்றாட காய்ச்சி"யின் ஒரு வார்த்த்தை சிறந்தது.""அள்ளிக் கொடுத்துக் கொள்ளும் உறவுகளை விட,விட்டுக் கொடுத்துக் கொள்ளும் உறவுகளே நீடிக்கும் ."

Saturday, 19 November 2016

சின்ன சின்னதாய்..!(3)

"சின்ன சின்ன முயற்சிகள் என்ன செய்து விடும் என்று எண்ணாதே.நாம் அண்ணாந்து பார்க்கின்ற,கட்டிடங்கள்கூட சிறு சிறு கற்களின் கூட்டமைப்பு தான்."

 

"கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்கு ,தன் பாசத்தை சொல்லத் தெரியாதவர்கள் .தந்தைமார்கள்.""ஆயிரம் ரூபாய் செலவழிக்கும்போது தெரியாது,நூறு ரூபாய் சம்பாதிக்கும்போது தான் புரியும்.நம் தகப்பன்மார்கள் பட்டபாடு."

 

"இவ்வுலகம் தாயை எழுதியதைப் போல் ,தந்தையின் தியாகத்தை எழுதிடவில்லை.ஏனென்றால் தாயைப் போல் ,தகப்பன் தன் கண்ணீரை வெளிக்காட்டிடுவதில்லை.""எல்லோருக்கும் முதன் முதலாக அறிமுகமாகும் முதல் ஹீரோ "வாப்பா"தான்.ஆனால் அந்த "வாப்பாக்களோ"வில்லன்களாகவே,கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பார்கள் ."


Tuesday, 15 November 2016

சின்ன சின்னதாய் ..!(2)

"மண்ணில் விதைப்பது தான் முளைப்பதுப் போல்,நாம் பேசிடும் வார்த்தைகள்கள்,பிறரது மனதில் புதைந்து,நம்மைப் பற்றிய எண்ணங்களாக வளர்கிறது."

 ---------------------

"சொல்லெனும் கல்லால்,ஒருவரது மனக்கண்ணாடியை உடைப்போமென்றால்,அதில் சிதறுதுவது ,அம்மனக் கண்ணாடியில் பதிந்திருந்த ,உங்களது பிம்பமும் தான்."

  -----------------------

"தோற்க தோற்க துவளாமல் முயன்றுக் கொண்டே இரு.ஆம்! வலிக்க வலிக்கத் தான்,உடற்பயிற்சியில் உடம்பில் உரமேறுகிறது."

------------------------

"குழந்தைகளின் நெஞ்சில் பெருமைத் தனத்தை ஊட்டி வளர்க்காதீர்கள் .அது அவர்களது சோற்றில் நஞ்சைக் கலப்பதற்கு சமம்."

------------------------

"உன்னை முழுமைப்படுத்த முயற்சித்துக் கொண்டே இரு.முழுமையடைந்த சிசுவை கருவறை வெளியேற்றுவதுப் போல்,காலமும் ஒரு நாள் உன்னை,இவ்வுலகிற்கு அறிமுகம்படுத்தும்."

---------------------------

Friday, 11 November 2016

சின்ன சின்னதாய்..! (1)

"உன்னை அழ வைத்து பார்க்க விரும்புபவர்களுக்கு முன்னால்,நீ சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து போ,அதுதான் நீ அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை."

------------------------

"உலகம் நமக்கு பாதையைத் தான் காட்டும்,நம் கால்கள்தான் பயணிக்க முயற்சிக்க வேண்டும்."

  -----------------------

"ஒருவரது மனக்காயத்திற்கு ,உன் வார்த்தைகளால் மருந்திட முடியுமென்றால்,நீயும் மகான் தான்."

 ----------------------

"கல்லில் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன் ,கை கால் உள்ள நம்மை உழைத்து உண்ண சொன்னதை மறந்து விட்டு ,தன் நிலைக்கு படைத்தவன்தான் காரணம் என்று ,நாம் இறைவனைப் பழிப்போமென்றால் ,நாம் தான் முட்டாள்கள்."

  -------------------

"முணுமுணுப்புடன் தொடரும் உறவை விட,சிறு சிரிப்புடன் கைக்குலுக்கி பிரிதல் சிறந்தது."

 -----------------

"இன்றைய காலகட்டத்தில் நடமாடும் புலிகளை விட,சூடு போட்டுக் கொண்ட பூனைகளே அதிகம்."

---------------------

புகைந்தாலும்
 ஊதுபத்தியாய் புகைந்திடு!

 

Friday, 4 November 2016

கவிக்குழந்தை.!

என்னிடம் சமர்த்தாக இருக்கும்
கவிதைக் குழந்தை
உன்னைக் கண்டால் தான்
சிணுங்கிக் கொண்டே அழுகிறது!
உன்னிடம் வருவதற்காக..!

Wednesday, 26 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (7)


        அதன் பிறகு நான் குடிப்பதில்லை ,காஜா மச்சானிடம் அடிப்பட்டது,போலீஸ் ஸ்டேசனில் இருந்தப்போது,உறவென்று சொல்பவர்கள் உதவிடாதது ,இச்சம்பவங்கள் என்னை சிந்திக்க வைத்தது.குடியினால்தான் இந்த நிலையென்று,வெறுத்து ஒதுக்கினேன் குடியை.எனக்கு மைதீன் உதவிட வந்த நன்றியுணர்வால்,அவன் சார்ந்திருந்த எஸ் டி பி ஐ கட்சியின் செயல்பாடுகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தேன்.டெங்கு காய்ச்சல் தடுக்க "நிலவேம்பு கசாயம் "கொடுப்பதற்கு,சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் நானும் கலந்துக் கொள்வதென.


    இப்படியான எனது செயல்பாடுகள் ,நானும் அக்கட்சியில் இணைந்து விட்டதாக ஊருக்குள் பேச்சு அடிப்பட்டது.அன்றிலிருந்து எனது உற்றார்,உறவுகள் எல்லாம் என்னை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்று சொல்ல முடியாது.குடிகாரனாக அலைந்தப்போது ,ஒரு அலட்சியமாக ,ஏளனமாக மட்டும் கடந்துச் சென்றவர்கள்,நான் கொள்கையாளர்களுடன் சுற்றுவது,ஏதோ ஓர் கலக்கம் ஏற்படுத்தி விட்டது,அக்கலக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்,இனி நான் காசுக்காக,போதைக்காக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்கு கொடி பிடிக்கப்போக மாட்டேன் என்பதும் அதிலொரு காரணமாக கூட இருக்கலாம்.அதனால் என்னிடம் அவர்களது ,அத்துமீறல்கள் தொடர்ந்தது,வார்த்தைகளாகவும்,பார்வைகளாகவும்.."


   ஆம்.!இன்றைய சூழலில் ஒழுக்கங்கெட்டு வாழ்வதை விட,ஒழுங்கோட வாழ முயல்வதென்பது,அவ்வளவு எளிதானதல்ல.

(முற்றும்)

     

Monday, 24 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (6)


     இன்ஸ்பெக்டர் தன் இருக்கையில் அமர்ந்தவுடன்,காண்ஸ்டபிள் என் விவகாரத்தை சொன்னார்.இன்ஸ்பெக்டர் என்னைப் முறைத்துப் பார்த்து விட்டு,சக்தி வகையறாக்களை ,தன் கை சைகைகளால் அழைத்தார்.அவர்களுடன் சேர்ந்தே ஷாஜஹானும் வந்தார்.இன்ஸ்பெக்டர் சக்தியை பார்த்துக் கேட்டார்.

    "என்ன...நடந்ததுனு சொல்லு..எப் ஐ ஆர் போடனும்னு ..."சொன்னார்,அதற்கு சக்தி வாயைத் திறக்கும் முன் ஷாஜஹான்,சமாதானமாக போவதாக சொன்னார்.அதற்கு இன்ஸ்பெக்டர்,"நீ யார்யா..."னு கேட்டார்.அதற்கு ஷாஜஹான் ...

"நான் ஷாஜஹான் ,வக்கீலாக இருக்கேன்..பரமக்குடியில.."என சொன்னதும்,வக்கீல் என்று தெரிந்த பிறகு,இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மரியாதையாக பேச ஆரம்பித்தார்.அதன் பிறகு ,சிறிது தயக்கத்திற்கு பிறகு,"சரி...சமாதானமா போறோம்னு..எழுதி கொடுத்துட்டுப் போங்க.."னு சொன்னார்.

   காண்ஸ்டபிள் எழுதி தர,நானும்,சக்தியும் கையெழுத்துப் போட்டு விட்டு கிளம்பினோம்.ஷாஜஹான் எந்த "பிரதிபலனை"யும் என்னிடம் எதிர்பாராமல் ,"சரிப்பா...இனி ஒழுங்கா இரு.."என சொல்லி விட்டு பரமக்குடி பஸ்ஸில் ஏறி சென்று விட்டார்.நானும்,மைதீனும் எங்கள் ஊருக்கு செல்ல,ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.நான் மைதீனிடம் பேச வெட்கமாக இருந்தது. யாருமே எனக்கு உதவ வராத நிலையில்,அவன் வந்தது,நன்றி கலந்த மரியாதையால்,என் கண்கள் கலங்கிற்று.

(தொடரும்...)

   

Sunday, 23 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (5)


     பைக்,சாயல்குடி காவல்நிலையம் வந்தடைந்தது.அங்கு நான் இறங்கியதும்,காண்ஸ்டபிள் என் முதுகில் பலமாக அடித்து சட்டையைக் கழற்றி,தரையில் உட்காரச் சொன்னார்.நானும் சட்டையை கழற்றி விட்டு ,பக்கத்தில் வைத்துக்கொண்டு ,முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் .உறவினர் யாராவது எனக்காக வந்து,போலீசாரிடம் பேசி கூட்டி போவார்கள் என எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது .திரைப்படங்களில் போலீசார் அடிக்கும் காட்சிகள் என் நினைவுக்கு வந்து ,போதாக்குறைக்கு என்னுள் அச்சத்தை உற்பத்தி செய்தது.

        நேரம் கடந்துக் கொண்டிருந்தது,என் கவலை இருளுக்கு வெளிச்சமாக,மைதீனும்,வழக்கறிஞர் ஷாஜஹானும் வந்தார்கள்.அவ்விருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள்.என்னைப் பார்வையால்,நலம் விசாரித்து விட்டு ,கான்ஸ்டபிளிடம் என் வழக்கு விசயமாக கேட்டார்கள்.

   "இன்னும் எஃப் ஐ ஆர் போடல..அடிபட்ட சக்திய வர சொல்லி இருக்கு ..அஞ்சு மணிப்போல,இன்ஸ்பெக்டரும் வருவாரு..அவர் வந்த பிறகு பேசிக்கங்க..."என்று கான்ஸ்டபிள் சொல்லி முடித்தார்.

     சிறிது நேரத்திற்குள்,ஐந்து மணிக்கு மேல்,சக்தி தலையில் கட்டுடன்,அவனது உறவினருடன் வந்திருந்தான்.இவர்கள் தான் என்மேல் புகார் அளித்தவர்கள் என மைதீன் சொன்னதும்,ஷாஜஹான் அவர்களிடம் பேசினார்,எனது நிலைமையையும்,வறுமையையும் சொல்லி,வழக்கு பதியாமல் இருக்கச் சொல்லியும்,மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி சமரசமாக போகச் சொன்னார்.சக்தி தரப்பு முடியாது என முறுக்கினார்கள்.ஷாஜஹான் தொடர்ப்பேச்சால் கொஞ்சம் மனம் இளகி,சரி...இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லி விட்டு சென்றிடுவோம் என்று ஒத்துக்கொண்டார்கள்.

      அந்த வேளையில் தன் பல்சரில் வந்த இறங்கினார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

(தொடரும்.....)

   
    

Friday, 21 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (4)


        நிர்வாக அறையின் வாசலில் நின்றுக் கொண்டு ,உள்ளே இருந்த நிர்வாகிகளைப் பார்த்தேன்.என்னைக் கவனித்த காஜா மச்சான் சொன்னார்.

   "டேய்.... ஒன்னத் தேடி போலீஸ் வந்துச்சி.."என அவர் சொல்லி முடிப்பதற்குள்..

 "போலீஸ் வந்தா எனக்கென்ன...!?என நான் திமிறாக பதிலளித்து,காஜா மச்சானை ஏளனமாக நான் பார்த்தது,அவருக்கு கோபமூட்டியது.

   "ஏண்டா..."......."நீங்க போதய போட்டுட்டு சண்ட மயிரு போடுவீங்க...இதுக்கு நாங்க பஞ்சாயத்துக்கு அலையனுமோ...!?என எகிறினார்.

  "ஒங்கள யாருங்க...பஞ்சாயம் பண்ண கூப்பிட்டா...!?பொத்துங்க .."என நான் சொன்னதும்..

 "என்னடா மயிரு சொல்ல சொல்ல எதுத்து எதுத்துப் பேசுறா..."னு ,செருப்பையெடுத்து அடிக்க ஆரம்பித்து,சராமரியாக குத்தும் விட்டார்.நிலைக்குலைந்துப் போனேன்.அங்கிருந்த சிலர் விலக்கி விட்டார்கள்.அதே வேளையில் ,வேறொரு கேஸ் விசயமாக ,எதார்த்தமாக வந்த காண்டபிள்கள் என்னை பிடித்து,அவர்கள் வந்த பைக்கில் நடுவில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார்கள்.பைக் சாயல்குடியை நோக்கி சென்றது...

(தொடரும்....)

   

Thursday, 20 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (3)     ஆடல் பாடல் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் நடைப்பெறும் என ,அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் இறங்கியப் போதையை,ஏற்றிக் கொள்ள ,பனை மரக்காட்டிற்குள் பதுங்கினோம்.நான்,உமர்,மற்றும்,முந்தல் சக்தி எல்லோருமாக,கேலியும்,கிண்டலுமாக பேசிக்கொண்டு இருந்தப் போது,வயிற்றை நிரப்பிய போதைத்திரவகம்,மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பித்தது.சாதாரணமாக பேசப்பட்ட வார்த்தைகளும்,விஷமாக மாற ஆரம்பித்தது.

    "ஏண்டா...காசிம்....இப்படி ஓசியில ,குடிக்கிறீயே...எங்காவது வேலைக்கு போவலாம்ல..."என்றான் சக்தி என்னைப் பார்த்து.

  "ஆமா.."......"இவரு கலெக்டர் வேலை பாக்குறாரு... "........."வட்டிக்குத் தானே வுட்டு பொழைக்கிறே.....!?"என கெட்ட வார்த்தைகளை சேர்த்து பேசினேன்.

   சக்தியும் தடித்த வார்த்தைகளைப் பேச,வார்த்தை முற்றி ,அடியில் ஆரம்பித்து,மண்டை ஒடைந்தது சக்திக்கு.பந்தோபஸ்துக்கு வந்த போலீசார் கையில் சிக்காமல் இருந்திட,ஆளுக்கொரு பக்கமாக ஓடி விட்டோம்.ரத்தக்காயத்துடன் இருந்த சக்தி சாயல்குடி போலிசிடம் புகார் செய்து விட்டான்.போலீசார் எனது ஊருக்கு வந்து,ஜமாத் பெரியவர்களிடம் ,என்னை சாயங்காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என சொல்லி விட்டு போயிருந்தார்கள்.


    மறுநாள்  காலையிலேயே கொஞ்சம் போதையில் இருந்த என்னை ,ஜாமாத் பெரியவர்களில் ஒருவரான காஜா மச்சான் கூப்பிடுவதாக ,அஜ்மீர் வந்து சொன்னான்.என்னவென்று கேட்டு விட்டு வருவோம் என நானும் சென்றேன்.நான் போன வேளையில்,நிர்வாக கூட்டம் நடந்துக் கொண்டிருந்து.

(தொடரும்....)

   

Wednesday, 19 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (2)


    படிப்பு எட்டாம் வகுப்போடு நின்று விட்டது.அதன் பிறகு முழு நேரமும் ,பனைமரக்காடு,கடற்கரை,என நாயாய்,பேயாய் அலைவதுதான்.கூடா நட்பு கேடாய் அமைந்தது.சிகரட்டின் புகையில் இருந்த ஆர்வம்,அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திற்று.அது ஊருக்குள் போதையுடன் அலைபவர்கள்,ஏதோ சாதித்தவர்கள்போல் பார்க்க வைத்தது.மதுப்பாட்டில்களை தொட்டுப் பார்த்திட ஆவல் தோன்றியது.அந்த காலகட்டத்தில்தான் ,கூடவே சுத்திக் கொண்டிருந்த சலாம் ,"ஊத்தி" தந்தான்.
முதலில் தயங்கிய என்னை..

"இல்லடா காசிம்....குடி..பயப்படாத .."என ஆறுதல் படுத்தி,ஆர்வப்படுத்தினான்.கொஞ்சங்கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன்.குடிப்போதை என்னை சில நாழிகைகள் ,ஒரு வித மிதப்பில் என்னை ஆழ்த்தியது .அந்த சுகம் ,மீண்டும்,மீண்டும் போதையைத் தேட வைத்தது.என் தேடல் வீணாகவில்லை.பயணப்பார்ட்டி,கல்யாணப்பார்ட்டி"என்று தொடர்ச்சியாக "பார்ட்டி"வந்துக் கொண்டே இருந்தது.நாட்டில் பசிக்கு உணவளிப்பவர்களை விட,"பார்ட்டி"என்ற பெயரைச் சொல்லி வாங்கி "ஊற்று"பவர்களே அதிகம்.குடியாய் குடித்தேன்,குடியும்
என்னை குடித்தது.

     ஊருக்குள் "குடிகாரப் பய" பட்டம் இலகுவாக கிடைத்தது.போட்டுக் கொண்டப் போதையை ,அப்ப அப்ப ஊருக்கு உணர்த்த,சில சலம்பல்கள் செய்ய வேண்டி வந்தது.போதையோட போய் படுத்து விட்டால்,குடிகாரன்களுக்கு என்ன மரியாதை இருக்கு..!?"என ,எனக்கு முன்னாள் இருந்த குடிமகன்களால்,பாடம் நடத்தப்பட்டிருந்தேன்.ஆதலால் சின்ன,சின்ன பிரச்சனைகளை செய்து வந்தேன்.ஜமாத் பெரியவர்கள்,பலமுறை எச்சரித்தும்,அபராதங்கள் விதித்தார்கள்.எதற்கும் நான் அடங்குவதாக இல்லை .

     ஒருநாள் பக்கத்து ஊரான "செட்டிய மாரியூரில்"கோவில் திருவிழா நடந்தது.அவ்விழாவின் ஒரு பகுதியாக "மதுரை நடனக்குழுவினரின்"ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற இருந்தது.அப்பொழுது....

(தொடரும்...)

    

Tuesday, 18 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (1)


      "தண்ணியில்லாத காட்டுக்கு ஒன்ன மாத்திருவேன்"னு என ,தனக்கு கட்டுப்படாத போலீஸ்காரர்களை ,அடாவடி அரசியல்வாதிகளாக வரும் வில்லன்கள் பேசும் வசனமாக சில பல திரைப்படங்களில் வைத்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் அப்படியொரு ஊரு வேறு எங்கோ இருக்கும் என எண்ணியதுண்டு.ஆனால் அது நான் பிறந்து வாழ்ந்த இராமநாதபுரம் மாவட்டம்தான் என்பதினை பிற்காலத்தில்தான் அறிந்தேன்.ஆம்,வறண்ட பூமியின் சொந்தக்காரன்தான் நான்,கடற்கரைக்காற்றின் காதலன்தான் நான் ,தார்ச்சாலை வெயிலின் வெப்பம் தாளாமல்,சாலையின் மேல் படர்ந்திருக்கும் கானல் நீரில் கவிதையைத் தேடியவன்தான் நான்,எனக்கு சிறுவயதில் சில பள்ளிக்கூட நண்பர்கள் இருந்தார்கள்,அதிலொருவன் அன்வர்,அவன் கையில் எப்போதும் பணம் புரளும் ,அப்பணத்தை வைத்துதான்,எங்களது நட்பு வட்டாரத்திற்கு,குச்சி ஐஸ்,மிட்டாய்,முறுக்கு எல்லாம் வாங்கித் தருவான்.அதோட சிகரட் பாக்கெட்டும் வாங்கி வருவான்.

         பத்து வயதிலேயே சிகரட் அடிக்க பழகி விட்டோம்,யாருக்கும் தெரியாமல் ,கண்மாயை மறைத்து வளர்ந்திருக்கும் ,கருவமரங்கள்தான் நாங்கள் மறைந்திருந்த சத்தியமங்கலக்காடு.ஒரு சிகரட் அடித்து விட்டு,ரோஜா பாக்கு ,மூன்று ,நான்கு என தின்று விட்டு,மாற்றி மாற்றி ஊதி பார்த்துக் கொள்வோம்,சிகரட் வாடை வருகிறதா என்று.இப்படி ஆரம்பித்த  எங்களது கெட்ட பழக்கம்,எப்படியெல்லாம் எங்களை அழைத்துச் சென்றது என்பதை ,கொஞ்சம் சொல்கிறேன் ...


   (தொடரும்....)

Thursday, 6 October 2016

சிங்கம்.!

"ஏங்க..என் தோழியோட மாமானாரு,மூனாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்...!!"

   "அப்படியா..!?அவரு போட்டோ கெடச்சா,அனுப்பு, அவன் அவன் ,ஒன்ன கட்டிக்கிட்டே முழிக்கிறான்...மூனு கட்டுன அந்த சிங்கத்த நான் பாக்கனும்..!!"

Friday, 30 September 2016

அறியாமை.!

"பேரின்பத்தில் கருவுற்று ,கொடுந்துயரத்தில்தான் ,நமது பிறப்பே நடந்தது.அதுப் போலவே .நாம் வாழும் நாட்களில் இன்பத்தை மட்டுமே,நாம் எதிர்பார்த்தால்,அது நமது அறியாமையே."

Thursday, 22 September 2016

சில சிந்தனைகள்..!

"உன் கண்களை நீ திறக்காதவரை,எத்தனை சூரியன் உதித்தாலும்,உனக்கு வெளிச்சம் கிடைக்கப் போவதில்லை ."
-----------------------------
"பூந்தோட்டம் என்பதால்,முட்கள் இருக்காது என நம்பி விடாதே."
------------------------------
ஓய்வெடு!

ஓய்ந்து விடாதே!!
------------------------
உறவுகளுக்கு உதவாமல் "பிழைக்கத் தெரிந்தவன்"எனும் பட்டம் பெறுவதை விட,உறவுகளுக்கு  உதவி "ஏமாளி"எனும் பட்டம் பெறுவது எவ்வளவோ மேல்."
----------------------------------
"பிறரது கண்ணீரைத் துடைக்க நம் விரல்கள் தயாராகவில்லையென்றால்,ஒரு நாள் நமது கதறல்களை கேட்கக்கூட செவிகள் இல்லாது போய்விடும்."
------------------------------
"போர்வீரர்கள் வாட்களை மட்டும் எடுத்துச் செல்வதில்லை,கவசங்களையும் சுமந்து செல்வதின்,சூட்சமத்தை புரிந்துக் கொள்ளுங்கள்."
-------------------------------

Monday, 19 September 2016

கக்கூஸ்..!

"டேய் மாப்ள.!இனி இந்த மார்க்கெட்ல,எனக்கு தெரியாம ஒரு பய கக்கூஸ் போக முடியாது..."

 "ஏன்டா..!"

"இந்த வருசம் இங்கே இருக்குற ,கக்கூசை நாந்தான் டென்டருக்கு எடுக்க போறேன்..,,!

Thursday, 15 September 2016

பாதி கத்தி.!

பாதகத்தி
பாதி பாதியாய்
என்னைப் பார்த்துதான்.!

பாதி கத்தியாய்
என் நெஞ்சில் குத்தி நிற்கிறாய்..!

   

Saturday, 10 September 2016

கவிதை !

மின்னலைத் தொடர்ந்து வரும்
இடி சத்தத்தைப் போல்
உன் முகத்தைப் பார்த்தபின்
தொடர்ந்து வருகிறது எனக்கு கவிதை!

Thursday, 8 September 2016

வாழ்த்துகிறேன் !

மழைத்துளியோ
பனித்துளியோ!

இளங்காற்றோ
நதி ஊற்றோ!

தேசம் பார்த்து தழுவுவதில்லை
அதுப் போலவேதான் காதலும்!

கவிதைகளால்
உங்கள் காதலை வாழ்த்த நினைத்தேன்!

காதலும் கவிதையும் வெவ்வேறல்ல என்பதால்!

காதல்கவிதையாய் உங்களை  வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .
Tuesday, 6 September 2016

சருகு!

"விதியெனும் நதியில் விழுந்த
சருகுகள்தான் நாம்."

Saturday, 3 September 2016

ஈரம்..!! (சிறு கதை) (5)


        சிறிது நேரத்திற்கு பிறகு ,டீயை குடித்து விட்டு,ஆர்.கே.எஸ் மாமாவிடம் காசைக் கொடுத்து விட்டு,வெளியேறிய இப்ராகீம்.கடைக்குப் பின்னால் மறைவான இடத்தில் நின்றுக் கொண்டு,ஆசிப்பைக் கூப்பிட்டான்.

    "இன்னைக்கு இவனோட சண்ட போட,மூட் இல்ல..இப்ப போயி கூப்புடுறானே.."என மனதில் எண்ணியவாறு ஆசிப் எழுந்துப் போகையில் ,அவனுடன் பேசிக்கொண்டிருந்த நண்பன் அலிபுல்லா சொல்லி அனுப்பினான்."காலைல இருந்து ஒன்னை தேடுனான் ..அவன் ,எச்சரிக்கையா அவன்ட பேசு..."என சொல்லி விட்டான்.

     இப்ராகீம் அருகில் ஆசிப் வந்ததும்,இப்ராகீம் கேட்டான்.

   "உம்மாவுக்கு என்ன பிரச்சனை ..."என கேட்டான் .

இதை அவன் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் பதில் சொன்னான்."இல்ல..ஆஸ்த்துமா மாதிரி ஒரே எளப்பு அதான்..."என்றான்.

"நீ அன்னைக்கு நடந்த பிரச்சனையில இருந்து மொறச்சிகிட்டு தெரியுறேன்னு எனக்கு தெரியும்,அதான் இன்னைக்கு காலையில தேடுனேன் ஒன்ன..ஆனால் ஒம்மாவுக்கு ஒடம்பு சரியில்லனு கேள்விப்பட்டதும் மனசு கேக்கல...என சொன்னவன்..."தன் சட்டைப் பையினுள் இருந்த,இரண்டாயிரம் ரூபாயை ,ஆசிப்பிடம் கொடுத்தான்.அவனுக்கு தேவையென்றாலும்,வாங்கிக்கொள்ள தன்மானம் தடுத்தது.இதை புரிந்துக்கொண்ட இப்ராகீம்,ஆசிப்பின்
சட்டைப்பையில் திணித்து விட்டு சொன்னான்.

   "வெக்கப்படாதே...நம்ம வாப்பாமார்களெல்லாம்,பங்காளிக தான்,என் வாப்பா சொல்லுவாக..நானும் ஒனக்கு சொந்தக்காரன்தான்டா,அன்னைக்கு கோவத்துல அடிக்க வந்தேன்..கோவிச்சிக்காதே...உம்மாவ
பாத்துக்க.."என சொல்லி விட்டு கிளம்பி விட்டான் இப்ராகீம்.

    ஆசிப்போ,அவன் மறையும்வரை நெகிழ்ச்சியுடன் பாரத்துக் கொண்டிருந்தான்.

(முற்றும்)

   

Thursday, 1 September 2016

ஈரம்..!! (சிறு கதை) (4)


        அப்பொழுது சிறுபிள்ளைகள் அத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அக்குழந்தைகளில்,இப்ராகீமின் அக்கா பிள்ளைகளும் அடக்கம்.குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ,மிக வேகமாக சென்ற ஆசிப்பை பார்த்து,இப்றாகீமின் அம்மா திட்ட ஆரம்பித்தாள்...

     "மண்ணுல இருப்பானுவ ...இப்படி ஆடுறானுவ...சின்ன புள்ள இருக்குனு பாக்காம இப்படி போறான்...ஏதாவது புள்ளைய மேல பட்டுடா வரவா ..போகுது..!?என திட்டிக்கொண்டே ,தன் பேரனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்,உள்ளே இருந்த இப்ராகீம்,காரணம் கேட்க,அவன் அம்மா விவரம் சொல்ல,கடுப்பானவன்,காலையில் அவன்கிட்ட "என்னனு கேட்டு முடிச்சா தான்" சரி வரும் என்று எண்ணியவனாக இருந்தான்.

     விடிந்ததும் ஆசிபைத் தேடினான்,அவன் கண்ணில் படவே இல்லை.விசாரித்ததில் ஆசிப் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரி போயிருப்பதாக கேள்விப்பட்டான்.

     மலை நேரமானது ,ஆர்.கே.எஸ்.என்றழைக்கப் படும் ஆர்.கே.சம்சுகனி மாமா ,டீக்கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்.சம்சுக்கனி மாமா,பண்பாளர்,கவிஞரும் ஆவார்.கம்யூனிசக் கட்சியைச் சார்ந்தவர்,தன்மையான மனிதர்.அவருக்கு துணையாக அவரது மகன் நபி இஸ்மத் உதவி செய்துக் கொண்டிருந்தார்.சிலர் கடைக்குள் டீ குடித்தார்கள்,அதிலொருவன் இப்ராகீம்.கடைக்கு பின்னால்தான்,ஆசிப் தன் கூட்டாளியுடன் பேசிக் கொண்டிருந்தது,உள்ளே இருந்த இவனுக்கு நன்றாகவே கேட்டது.

 (தொடரும்...)

    

Wednesday, 31 August 2016

ஈரம்..!! (சிறு கதை) (3)


        ஆசிப் தன் கையிலிருந்த பந்தை,அமீர் பாட்சா அண்ணன் கடையில் வைக்கச் சொல்லி,வீசியபோது,அந்தப்பக்கம் வியர்வையுடன் சட்டையில்லாமல் சென்ற ,இப்ராகிமின் முதுகில் பந்து வேகமாக அடித்திட,அந்த வலியால் இப்ராகீம் கெட்ட வார்த்தையால்,திட்டிக் கொண்டே,ஆசிபை அடிக்க ஓடி வந்தான்.கலைந்து சென்றவர்களெல்லாம்,ஓடி வந்து இருவரையும் அடித்துக் கொள்ளாமல் இழுத்தார்கள்.இருவரும் விடுவதாக இல்லை.ஒரு வழியாக சமாதானப்படுத்தி விலக்கி விட்டார்கள்.மஃரிபிற்கு பாங்கு சொன்னதும்,அவரவர்கள் ,தொழுதிட சிலரும்,வீட்டுக்கு சிலரும் கலைந்துச் சென்று விட்டார்கள்.

     இரண்டு மூன்று நாட்கள் கழித்து,எந்த மனக்கசப்பும் இல்லாமல்,மருதநாயகம் அணியினரும்,தீன் தென்றல் அணியினரும்,பந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஆசிப்போ,இப்ராகீமை பார்க்கும் இடமெல்லாம் ,முறைத்து பார்ப்பதும்,நண்பனின் பைக்கில் செல்கையில் ,முறுக்கிக் கொண்டு செல்வதும்,சிகரட்டின் புகையை அவனது முகத்தில் ஊதுவதுப்போல் சைகை காட்டுவது என ,இப்ராகீமிற்கு கோபத்தை கிளறிக்கொண்டே இருந்தான்.இப்ராகீம் நினைத்தால்,ஆசிப்பை தாக்கிட முடியும்,"எதுக்கு நாய அடிப்பானே..பிய்ய சுமப்பானே..."என ஒதுங்கி போனான்.அப்படி இருந்தும் ஆசிப்பின் செயல்பாடுகள்,அவனது பொறுமையை சோதித்தது .

      ஆசீப் ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்தவன்.நோயாளி தாயார்,ஊரைச் சுற்றும் தகப்பன் என.இப்ராகீம் பணக்கார குடும்பம் என சொல்ல முடியாவிட்டாலும் ,ஓரளவிற்கு மரியாதையான குடும்பமாக ,ஊரில் பெயர் பெற்றவர்கள்.

     ஒரு நாள் இரவு நேரம்,மின்சாரம் தடைபட்டிருந்தது,அப்பொழுது ஆசிப் நண்பனின் பைக்கில் ,இப்ராகீம் தெருவில் வேகமாக வந்தான்.

    (தொடரும் ...)

   


ஈரம்..!! (சிறு கதை) (2)


     அதோடு விளையாட்டு நின்று விட்டு,வாய் சண்டை ஆரம்பித்து விட்டது.கோப வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மாறியது.இனிமேல் இவர்கள் அடித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் ,விளையாட்டை தன் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நூஹ் மாமா ,திடலை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    "ஏம்பா...சும்மா ஜாலிக்குத் தானே வெளயாடுறீங்க....ஏஞ்சண்ட போட்டுக்கப் பாக்குறீங்க...கலஞ்சி போங்கப்பா..அசிங்கப்படுத்தாம...டேய் சித்திக்கு கெளம்பி போ..காசிம் ஒம்பயலுவல கூட்டிட்டு போ...."என சத்தம் போட்டார்.மாமா மேலே எல்லோருக்கும் மரியாதை உண்டு .அதனால் அவர்களால் ஒன்றும் எதிர்த்து பேசவில்லை.கலைந்துச் சென்று கழட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொள்ள ,ஆளுக்கொரு திசையை நோக்கி சென்றார்கள்.

     இவ்விரு அணியைச் சேர்ந்தவர்களும்,ஒப்பிலான் ஊரைச் சேர்ந்த அத்தனைப் பேர்களுமே,உறவினர்கள்தான்.ஏனென்றால்,பொண்ணு ,மாப்பிள்ளை எடுப்பது ,தொன்னூற்றொன்பது சதவிகிதம்,உள்ளூரிலேயே தான் எடுப்பார்கள்.இம்மக்கள் வெளிநாடுகளில்,சிங்கபூர் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும்,தன் உறவுகளை மறக்காதவர்கள்.அதனடிப்படையில்தான்,இவ்விரு அணியினருமே,அண்ணன்,தம்பியாகவோ,மச்சான்,மாப்பிள்ளையாக, உறவுக்காரர்கள் தான்.ஆனாலும் இதுபோன்ற உரசல்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

     கலைந்துச் செல்கையில்தான்,முடிந்த பிரச்சனையை , ஆசிப்பின் செயல் மூட்டி விட்டது.

(தொடரும்..)

Tuesday, 30 August 2016

ஈரம்..!! (சிறு கதை) (1)


       மாலை நேர வெயில் கொஞ்சம் இதமாகவே இருந்தது,அவ்வேளையில் மருதநாயகம் திடல் கொஞ்சம் கொதிப்பாகத்தான் இருந்தது .அத்திடலில் மருத நாயகம் அணியும்,தீன் தென்றல் அணியும்,நட்பு முறை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த திடல் அது.கடலாடியில் கைப்பந்து போட்டி என அறிந்ததும்,பயிற்சிக்காக விளையாட ஆரம்பித்தார்கள் ,இவ்விரு அணிகளும்.இதில் மருத நாயக அணியில் முக்கிய விளையாட்டளர்களாக,காசிம்,மௌலல்,கபிருல்லா,சீனி காசிம்,இருந்தார்கள்.மேற்கொண்டு ஆட்கள் தேவைப்பட்டால்,அணியை சாராத மற்றவர்களை சேர்த்துக் கொள்வார்கள்.அன்றைக்கு சேர்த்திருந்த நபர் இப்றாகீம் .அதேப் போல் தீன் தென்றல் அணியில் முக்கிய விளையாட்டாளர்கள்,மரைக்கான்,சித்திக்,அப்தாகீர்,அமீன்,அலிபுல்லா இப்படியாக சிலர்.ஆள் பற்றாக்குறைக்கு ஆசிப்பை சேர்த்திருந்தார்கள்.

           விளையாட்டை அங்கொன்று,இங்கொன்றுமாய் சிலர் நின்றுக் கொண்டும் ,உட்கார்ந்துக் கொண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சாய்ந்தபடி,நூஹ் மாமாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.விளையாட்டில்,இரு அணிகளுமே ,ஒரு ஒரு பக்கம் ஜெயித்து,மூன்றாவதாக மோதினார்கள்.இதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கின்ற வேகம் ,இரு அணிக்குமே கூடுதலாக இருந்தது.பொழுதுப்போக்காக விளையாட ஆரம்பித்து.கூடுதல் கடுகடுப்புடன் மோதிக் கொண்டார்கள்.அப்போது தீன் தென்றல் அணியிலிருந்த ஆசிப்,"சர்வீஸ் பால்"ஐ அனுப்பினான்.அப்பந்தை சீனி காசிம்
எடுத்து கபிருல்லாவிற்கு அனுப்ப,கபிருல்லா காசிமிற்கு அனுப்ப காசிம் "கட்"அடித்தார்.அதை மரைக்கான்,சித்திக் வலைக்கு மேலெழும்பி தடுக்க,அப்பந்து காசிம்
பக்கமே விழுந்து விட்டது.அப்பொழுது கபிருல்லா..."சித்திக் நெட் டச்" நமக்கு தான் பாயிண்ட்"என்றார்."ஏய் இரு இரு...யார் நெட் டச்"அதெல்லாம் இல்ல..."சித்திக் சொல்ல,விளையாட்டு வில்லங்கமாக மாற ஆரம்பித்தது.

(தொடரும்....)


Monday, 29 August 2016

குத்து விளக்கு.!


    மாலை நேரம் அது,பகலின் வெளிச்சத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருந்தது.தன் உணவினை விழுங்கும் மலைப்பாம்பைப் போல்.இருட்டிடத் தொடங்கிய அவ்வேளையில் ,ஏழைகுடிலில் ஓர் ஏழைத்தாய்,தான் காலையில் விளக்கி வைத்திருந்த,குத்துவிளக்கை எடுத்து மண்ணெண்ணையூற்றி இறுக பூட்டி விட்டு,திரியினில் நெருப்பை பற்ற வைத்தாள்.அவ்விளக்குதான் அவளது ஏழைக்குடிலை அலங்கரிக்கும் ஒரே வெளிச்சம்.

     அவ்வெளிச்சத்தில் அத்தாய் தனது இரவுக்கான உணவு தயாரிப்பில் இருந்தாள்.அவளது குழந்தைகள் ,பள்ளிப்பாடங்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள்.இவ்விரவிலாவது ,வயிறு நிறைய உணவு கிடைக்குமா என்ற சந்தேகத்துடன்.ஒரு பூனைக்குட்டி முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு,பாடங்கள் எழுதிடும் பிள்ளைகளின் அருகே படுத்துக் கொண்டு,குத்து விளக்கின் கீழ் ஆடிக் கொண்டிருந்த நிழலை எகத்தாளமாக பார்த்துக் கொண்டிருந்தது இப்பூனை.தானும் அவ்விளக்கின் வெளிச்சத்தில் தான் பார்க்கிறோம் என்பதை மறந்து விட்டு.

       அப்பூனையின் எண்ண ஓட்டத்தை,அக்குத்துவிளக்கு அறிந்திருந்தாலும்,தன் இருள் நீங்காவிட்டால் என்ன ,!?,தன்னால் பிறர் வெளிச்சம் பெறட்டுமே எனும் நல்லெண்ணத்தில் தன்னை வருத்திக் கொண்டு,தன் மேல் நெருப்பை சுமந்துக் கொண்டும்,அணையாமல் எரிந்துக் கொண்டிருந்தது அக்குத்துவிளக்கு .

   

Saturday, 27 August 2016

ஒரு வேப்பமரத்தின் கதை.!


     கண்மாய் கரையோரம் நிற்கும் வேப்பமரம் அது.அதனுடைய வயது பதினைந்து இருக்கலாம்,தடித்த தண்டு கொண்டு,கொப்புகள் பரப்பி கிளைகள் விரித்து பசுமையான மரம் அது.அடர்ந்த நிழல் தரும் மரம்.அம்மரத்தின் கீழ் வழிபோக்காக போவோர்,வருவோர் சில நாழித்துளிகள் இருந்து விட்டுச் செல்வதும் உண்டு.சிறியவர்கள் அம்மரத்தில் ஏறி விளையாடுவதற்கும்,மரத்தின் நிழலில் "கோலி"விளையாடுவதற்குமென்று , இப்படியாக பலவற்றிற்கு இவ்வேப்பமரம் பயன்பாடாய் இருந்தது.

      இவ்வேப்பமரத்திற்கு ஒரு கர்வம் இருந்தது.தன்னால் தான் எல்லோரும் பயன்படுகிறார்களெனவும்,தன் நிழலில் கிடக்கும் சருகுகளை ,இன்னும் கீழ்த்தரமாக நினைத்தது.ஒரு காலத்தில் தன்னில் இலைகளாக இருந்து அழகுபடுத்திய இலைகள்தான்,இன்றைக்கு உதிர்ந்து சருகுகளானது என்பதனை மறந்து.சருகுகளுக்கு மரத்தின் எண்ணம் தெரிந்தும்,எதிர்த்துப் பேச துணிவில்லை,கிடைத்திடும் நிழலும் கிடைக்காது போய் விடுமோ எனும் எண்ணத்தில்.

       ஒரு நாள் கோடைமழையோடு ,பலத்த காற்றும் வீசியது.மழையும் காற்றும் சில நாட்கள் நீடித்ததால்,சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்மாய்களின் தண்ணீரை திறந்துவிட்டார்கள்.திரண்டு வந்த தண்ணீர்,இவ்வேப்பமரத்தின் வேரில் தொடர்ந்து பயணித்ததால்,அம்மரம் சாய்ந்து தண்ணீரில் விழுந்தது.தண்ணீரின் ஓட்டத்தில் ,மரத்தின் வேரும்,கொப்புகளும்,தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல்,மண்ணிலும் சிக்கி கொண்டு சித்திரவதை அடைந்தது.ஆனால் அம்மரத்தால் கேவலமாக எண்ணப்பட்ட,சருகுகளோ தண்ணீரில் ,மிதந்து மிதந்து ஆனந்தமாக சென்றுக் கொண்டிருந்தது .

Wednesday, 24 August 2016

குழந்தையதிகாரம்.!(16)


என் கவிதைகளெல்லாம்
உன்னைத்தான் கைகட்டி வேடிக்கைப் பார்க்குதடி!

உயிரோவியமே.!

    

Sunday, 21 August 2016

குழந்தையதிகாரம்.!(15)


உன் ஓரப் பார்வையை எழுதிட
ஓராயிரம் வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது !

    

Thursday, 18 August 2016

குழந்தையதிகாரம்.!(14)


உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
பாரமான நெஞ்சும் பஞ்சாகி விடுகிறது.!

     -சீனி ஷாஹ் .

Tuesday, 16 August 2016

குழந்தையதிகாரம்.!(13)


நானும் அதிர்ஷ்டக்காரன்தான்
கவிதைப்பூச்சிக்களும் என்மேல் ஒட்டுவதால்!

 

Sunday, 14 August 2016

குழந்தையதிகாரம்.!(12)


நானும் எழுதிடக் கூடாது என்றிருந்தாலும்
கவிதையும்
 என்னையும்
எட்டித்தான் பார்க்கிறது!

    

Saturday, 13 August 2016

குழந்தையதிகாரம்.!(11)


நீ
உயிரின் துளியா.!?
கவியின் ஊற்றா.!?

 

Tuesday, 9 August 2016

குழந்தையதிகாரம்.!(10)


உயிரின் வேரில் ஊற்றப்படும் நன்னீர் !
உன் முத்த எச்சில் !

    

Sunday, 7 August 2016

குழந்தையதிகாரம்.!(9)


எப்பூவிதழிலும் இல்லை
உன் பிஞ்சு விரலின் மென்மை.!

   

Friday, 5 August 2016

குழந்தையதிகாரம்.!(8)


எந்த பேனாவும் இன்னும் எழுதிடா கவிதை!
உன் புன்சிரிப்பு!

    

Monday, 1 August 2016

குழந்தையதிகாரம்.!(7)


தந்தையின் உயிர்த்துளிதான் நாமென்றாலும்
நம் உயிர்த்துளியிலும் நம் தந்தைகள் தெரிவதுமுண்டு!

  

Sunday, 31 July 2016

குழந்தையதிகாரம்.!(6)


ஆச்சர்யம்படும் பூவே
உன்னைத்தான் அதிசயமாய் பார்க்கிறது
பூக்கள் !

    

Friday, 29 July 2016

குழந்தையதிகாரம்.!(5)


ஆண்மைக்குள்ளும் தாய்மைச் சுரக்கும்
மார்போடு தன் பூமகள் சாய்கையில்!

  

Wednesday, 27 July 2016

குழந்தையதிகாரம்.!(4)


நிலவுகள்
பூமியிலும் உலாவுவதும் உண்டு!

 
     

Sunday, 24 July 2016

குழந்தையதிகாரம்.!(3)


கொதித்திடும் கோபமும் குளிர்ந்திடும்
உன் சேட்டைச் சாரலினால்!

   

Thursday, 21 July 2016

குழந்தையதிகாரம்.!(2)


முக்காடுத் துணிகளும்
புனிதம் அடைந்து விடுகிறது!

தேவதைகளை அலங்கரிப்பதினால்!

      

Sunday, 17 July 2016

குழந்தையதிகாரம்.!(1)


நீ சாப்பிட்டு சிந்திய பருக்கையில்
சிதறிக் கிடக்கிறது கவிதைகள்!

    

Monday, 11 July 2016

"ச்சும்மா...!"

வீட்டுவேலைச் சக்கரத்தினுள்
தன்னை சக்கையாக்கிக் கொள்ளும்
பெண்களைத்தான்!

சில ஆண்கள் சொல்வதுண்டு !

"என் பொண்டாட்டி வீட்ல "சும்மா"தான்
இருக்கிறாள்" என்று!

   

Thursday, 7 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 9!


   
      ஒடைமர நிழலில் தூங்கிக்கொண்டிருந்த சீனி மரைக்காரின் கையினை ஏதோவொன்று நக்கிடுவதை உணர்ந்து,கையை உதறி விட்டு எழுந்தார் சீனி மரைக்கார்.கண் விழித்தவர்,தன் கையை நக்கிய ,வெள்ளாட்டுக் குட்டியை விரட்டி விட்டுட்டு ,"என்ன திமிரு..இந்த......" பாத்துமாளுக்கு,இவ்வளவு நேரமாகியும் ,என்னைத் தேடி வராம, இருக்கா...."என கோபமாக யோசித்தவர்.திடீரென நினைவு வந்தவராக,தன் சட்டைப் பையினுள் இருந்த ,"செய்யது"பீடியை பற்ற வைத்தார்.இழுத்தார்..இழுத்தார்....தன்னையறியாமலேயே கண்ணீர் வடித்தார்.கதறியழ மனம் வெம்பியது அவருக்கு.

        ஆம்..!! நேற்று கண்மாய்க்கு குளிக்கச் சென்ற பாத்திமா,நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தவள் இறந்து விட்டாள்...!!

(முற்றும்)

    

Tuesday, 5 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 8


      சீனி போதையில் கிடந்தாலும் ,அவரைத் தேடி அலைவாள் பாத்திமா .முடிந்தளவு வீட்டிற்கு அழைத்து வந்து விடுவாள்.வரும் அவர் பேசும் கெட்ட வார்த்தைகள்தான்,அவளுக்கானது.ஆனாலும் அவரை இவள் பாதுகாக்காமல் இருந்ததில்லை .

     "இவளக் கண்டு ,அந்த பேதியில போவானோட வாழுறா..,இன்னேரம் மத்தவளா இருந்தா.."அத்துக்கிட்டு"போயிருப்பா..." எனவும்,"நல்ல வேள..இந்த புருசன் கெடச்சான்,இல்லனா...இவள புடிக்க முடியாது..."எனவும் ஊரில் பெண்கள் பேசுவதும் உண்டு.

சில ஆண்டுகள் ஓடியது.அதே நிலையில் தான் குடும்பமும் தள்ளாடியது,போதையில் ஆடும் சீனி மரைக்காரைப் போல.பக்கத்து வீட்டு சுபைதாவுடன்,பாத்திமா பேசிக்கொண்டே ,குளிக்க கண்மாயை நோக்கிச் சென்றார்கள்.சுபைதா பேச்சை ஆரம்பித்தாள்.

   "ஏண்டி .ஒம்மவன் பரக்கத்துல்லா போன் பண்ணுனானா..!?

"ஆமாம் அப்ப அப்ப பண்ணுவான்..."

"ஒம்மாப்ள ஏன் இப்படி ,ஒன்ன பாடாபடுத்துறான்..வீணாப் போனவன்..."

  "என்ன செய்ய..!?எந்தல விதி...ஒன்னுக்கு மூணு புள்ளாயாச்சி...அதுகளுக்கு கல்யாணம் காச்சி நடந்துருச்சினா..போதும்.."

"என்னமோமா..ஊரு ஒலகத்துல குடிச்சவனெல்லாம் திருந்தல..இவன்தான் இப்படி இருக்குறாம்மா..."

"சரி வேகமா குளிச்சிட்டு போகனும்..அந்தாளுக்கு போயி சோறு காச்சனும்...பசி தாங்க மாட்டாரு..."என பாத்திமா சொன்னதும்,சுபைதா திகைத்துதான் போனாள்.அவளது நல்ல மனதை நினைத்து.

இருவரும் கண்மாய்க்குள் இறங்கினார்கள்.கொண்டுப் போன அழுக்குத் துணி வாளியை இறக்கினார்கள்.அப்பொழுதுதான் யாரும் எதிர்ப்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது.

(தொடரும்..)Saturday, 2 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 7       "வேற என்னங்க...!? எம்மாவை எப்படிங்க ..நா வாரத்துக்குள்ள அடக்கம் பண்ணலாம்...!?"என குரலை உயர்த்தி கோபமாக கேட்டார் சீனி மரைக்கார்.

    "அதுக்கு...மயிரு நீ பேசுவே...நாங்க பொறுக்கனுமோ...."என கூட்டத்திலிருந்து சித்திக் குரல் கிளம்பியது.

பேசியவரை அடிக்க சீனி கிளம்ப,சித்திக்கும் கிளம்ப ,பிரச்சனை பெரிதானது.எல்லோருமாக சேர்ந்து இருவரையும் பிடித்து உட்கார வைத்தார்கள் .வைப்பாத்தான் அப்பா பேச ஆரம்பித்தார்.

    "ஏங்கடா..ஆளாளுக்கு சண்டைப் போடவா...இங்க வந்தீங்க..அப்ப எதுக்கு பஞ்சாயத்து கூடனும்...!?ஏம்பா சீனி ஒங்க உம்மா ,எல்லோரும் சேர்த்து அடிச்சி கொன்னா ,ஒனக்கு தெரியாம பொதச்சிட்டோம்..!?அதுக்கு ஆயுசு அவ்வளவுதான்..."என வைப்பத்தான் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே,சீனி கேட்டார்.

"அதுக்காக ,பெத்த புள்ள நான் இல்லாம...எப்படிங்க அடக்கம் பண்ணலாம்.." என்றார்.

  "ஒனக்கு ஆளு அனுப்பினோம்..நீ கடலுக்கு போனவன் ,எப்ப வருவேனு யாருக்கு தெரியும்...நீ வார வரைக்கும் "மய்யத்து"தாங்குமாடா...அதான் எல்லோரும் சேர்ந்து அடக்கம் பண்ணினோம்...இல்லனா..அழுகி போகும்டா....மத்த மத்த ஊருல "மவுத்து"னா,எனக்கென்னனு இருந்துருவானுங்க..நம்ம ஊரு புள்ளைங்க அதுல பெருமை படனும்,எல்லோரும் வந்துர்ராங்க..."என தொடர்ந்து பேசி முடித்தார்.சீனியிடம் பதிலில்லை ,மௌனமாக இருந்தார்.

"சரி ஊரை பேசுனதால,ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிரு..எல்லார் கிட்டயும் எந்திருச்சி..மன்னிப்பு கேட்டுரு..."என பஞ்சாயம் பேசி முடிக்கப்பட்டது.


         மாறாத தகப்பனின் போக்கும்,வறுமையும்,உள்ளூர்வாசிகளின் ஏளனப் பார்வையும்,தானும் எல்லோரைப் போலவும் ,தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வெளிநாடு செல்ல,சீனியின் மகன் பரக்கத்துல்லா முடிவெடுத்தான்.கடனை வாங்கி சவுதியில் வேலைப் பார்க்கச் சென்றான் பரக்கத்துல்லா.

(தொடரும்..)

   

Thursday, 30 June 2016

சீனி மரைக்கார்...!! (சிறுகதை) 6


       ஊரு வந்த சீனி மரைக்காருக்கு,தன் தாய் இறந்தச் செய்தி வேதனைத் தந்தாலும்,தான் வருவதற்கு முன்னே,அடக்கம் செய்து விட்டார்கள் என அறிந்ததும்,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.வீட்டில் இருந்தவற்றை அடித்து நொருக்கியவர்,இன்னும் வெறியேற்ற மதுவை நாடினார்.


      போதை தலைக்கேற ,ஊர் முக்கியஸ்தர்களை திட்ட ஆரம்பித்தார்.அது இன்னும் வம்பை விலைக் கொடுத்து வாங்கியது.மற்றவர்களையும் அச்செயல் சூடேற்றியது.மறு நாள் பஞ்சாயம் என ஊருக்குள் பேச்சாக இருந்தது.

      விடிந்ததும் ஆள் வந்து சொல்லிப் போனார்."இன்னைக்கு பஞ்சாயம் வச்சிருக்காங்க..சீனி மரைக்காரை வரச் சொன்னாக"என்று தகவலை ,பாத்திமாவிடம் சொல்லிச் சென்றார்.நேரம் கடந்தது எல்லோரும் பஞ்சாயத்திற்கு வந்து விட்டார்கள்.சீனி மரைக்காரும் பஞ்சாயத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

   "ஏம்பா...சீனி ...நீ எதுக்கு ஊர்ல உள்ளவங்கள பேசுனே...."என வைப்பத்தான் அப்பா ஆரம்பித்தார்.

       (தொடரும்)

    

Tuesday, 28 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 5


       மரியம்பு மரணச் செய்தியை சீனியிடம் சொல்ல,ராமேஸ்வரத்திற்கு ஆள் அனுப்பினார்கள் .அன்றைய காலகட்டத்தில் கைப்பேசியெல்லாம் இல்லை.மற்ற வேளைகளை ஜமாத்தார்கள் பார்த்தார்கள்.சட்டம் வாங்க,ஓலைப்பாய் வாங்க ,குழித்தோண்ட ,என அடக்கம் பண்ணுவதற்கான வேலை நடந்தது.தகவல் சொல்ல சென்றவன் ,வந்து சொன்னான்.

   "அவரு கடலுக்கு போயிட்டாகளாம்,எப்ப வருவாகனு தெரியலயாம்,விசயத்த சொல்லிட்டு வந்துருக்கேன்...!கரைக்கு வந்தா சொல்ல சொல்லிட்டு..!! என சொல்லி முடித்தான்.

பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

     "சரி...அவன் எப்ப வாரான்னு தெரியல...அது வரைக்கும் "பாடி"த்தாங்கது....என்ன செய்யலாம்...!?

    "நாம "அடக்கிட்டா" சீனி கிட்ட யாரு பதில் சொல்லுறது...அவன் ஒரு "கிறுக்குப்பய",வம்பு பண்ணுவாங்க..."

    "அதுக்காக ,பொணத்த நாற வைக்கவா முடியும்...!?என பேசிக் கொண்டேப் போய் முடிவுக்கு வந்தார்கள் அடக்கம் செய்திட.பரக்கத்துல்லா மற்ற வேலைகளைப் பார்த்தான்.எல்லோரும் சேர்ந்து மரியம்புவை அடக்கம் செய்து விட்டார்கள்.

     அடக்கம் செய்த மறுநாள் ,கரைக்கு வந்த சீனியிடம் தன் தாய் இறப்புச் செய்தியைச் சொன்னார்கள்.ஊருக்கு கிளம்பினார்.பேருந்து பயணத்தில் தன் தாயின் நினைவுகள் ,இதுவரைக்கும் செய்யாத சித்ரவதை இப்பொழுது செய்தது.தன்னையறியாமலே கண்ணீர் வடித்துக் கொண்டும்,அடக்கம் செய்ததுத் தெரியாமலும் ,ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார் சீனி மரைக்கார்.

 (தொடரும்...)


Saturday, 25 June 2016

சீனி மரைக்கார் .!(சிறுகதை) 4


          சுகமும் ,துக்கமும் கலந்ததுதான் வாழ்க்கை என்று ,யாராவது பாத்திமாவிடம் சொல்வேமேயானால்,"இல்ல ,அடியும்,மிதியும் கலந்ததுதான் வாழ்க்கை "என்றுதான் அவள் சொல்வாள்.ஆரம்பத்தில் சீனி மரைக்கார் அடி தாங்க முடியாமல்,அவள் அம்மா வீட்டிற்கு போய் விடுவாள்.இப்போதெல்லாம் போவதில்லை,இவரின் அடியை விட,அவள் அம்மா வீட்டு சொல்லடிகள் ,குரூரமாக காயப்படுத்துபவைகள்.

      காலங்கள் ஓடியது.கலவர வாழ்க்கையிலும் மூன்றுக் குழந்தைகளுக்கு தாயனாள் பாத்திமா.மூத்தவன் பரக்கத்துல்லா,இரண்டாவது பெண் கதிஜா,மூன்றாவது ஆண் ரபீக்.இப்படியான வேளையில் அவளது மாமியார் மரியம்பு ,படுத்த படுக்கையானாள்.இன்னைக்கோ ,நாளைக்கோ என சில மாதங்களாக கண்ணாமூச்சி ஆடினாள்.

         சீனி மரைக்கார் ராமேஸ்வரம் கிளம்பினார்.கையில் செலவுக்கு பணமில்லாததால் கிளம்ப வேண்டிய சூழல்.மீன் பிடிக்க சென்றால்,கரை வர மூன்று நாட்கள் கூட ஆகலாம்,அவர் கடலுக்குள் படகில் சென்ற இரண்டாம் நாள்,அவரது தாய் மரியம்பு இறந்து விட்டாள்.

    (தொடரும்)

   

Friday, 24 June 2016

சீனி மரைக்கார்..! (சிறுகதை) 3


        மாணிக்கத்தை அடித்த பிறகு,சீனி மரைக்காருக்கு பதக்கம் கிடைத்தது போல ,ஊருக்குள் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.அது இன்னும்,இன்னும் சாராயப் போதையைப் போல் மமதைப் போதையை கொடுத்தது.அதிலிருந்து உள்ளூரில் எங்கு அடிதடியென்றாலும்,அவர் பெயரும் அடிபடும்.வேலைக்குப் போக,போதையைப் போட,சண்டைப் போட,இப்படியாகப் போனது அவரது நாட்கள்.

      "ஏண்டி..இப்படியா...!?ஒம்மவன் அநியாயம் பண்ணுவான்....!?ஒரு கல்யாணம் காச்சிய முடிச்சி வச்சா...திருந்திருவான்ல....! என ஊரில் உள்ள பெண்கள் சொல்ல,ஏதாவது பொண்ணு கிடைக்குமான்னு ,அவர் அம்மா மரியம் தேடத் தொடங்கினாள்.அவள் தேடல் வீண் போகவில்லை .பக்கத்து ஊரில் பொண்ணும் கிடைத்தது.பெயர் பாத்திமா.அது அப்படியே மருவி "பாத்துமா"என மாறி விட்டது.

      கல்யாணம் நடந்தது.பாத்திமா வந்ததிலிருந்து ,சீனி மரைக்கார் குடிப்பதில்லை,யாரிடமும் வம்பு வளர்ப்பதில்லை."என்னமா மாறிட்டாரு தெரியுமா..!?"என்றெல்லாம் எழுதிட ஆசை தான்.

       ஆனால் அவர் மாறவில்லை,மாறுவதாகவும் இல்லை.....

   (தொடரும்...)

   

Sunday, 19 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 2


        சிறுவயதில் சீனி மரைக்கார் ,பயந்த சுபாவம் கொண்டவராகத் தான் இருந்தார்.காலப்போக்கில் முன் கோபக்காரராகவும்,முரட்டு குணக்காரராக மாறிப்போனார். அவரது பயந்த சுபவாத்தையறிந்து,சிலர் வன்முறையை அவர்மீது நடத்தியதால் ,கொடுமைக்கார இவ்வுலகத்தில் ,வாழ வேண்டுமென்றால் கோபங்கொண்டேயாக வேண்டும் என்று தன் பாதையை மாற்றிக்கொண்டார்."ஏய்...அவன் கோவக்காரன்பா.."என சிலர் அவர்முன் சொல்ல,சொல்ல ,அவருக்கு கோபம் ஒரு கேடயமாக தெரிந்தது.ஆனால் கொஞ்சம் ,கொஞ்சமாக கோபம் அவரது மனதை விழுங்க ஆரம்பித்து விட்டது.எதற்கெடுத்தாலும் கோபம்தான்.

       பருவ வயதில் வயிற்றுப் பிழைப்பிற்காக,கடல்தொழிலில்தான் ஈடுபட்டார்.ராமேஸ்வரம்,மண்டபம்,ஏர்வாடி என்று கடலுக்குப் போவதும் ,அதில் வரும் வருமானத்தில் வயிற்றைக் கழுவுவதுமாக ,ஏதேனும் மிச்சப்பட்டால்,அவர் அம்மா கையில் கொடுப்பதுமாக இருந்தார்.உடன் வேலைப்பார்த்தவர்கள் உபயமாக "கடல் காத்துக்கு..பீடி இழுத்தா தான் நல்லது"என்று அவர் வாயில் தீயைப் பற்ற வைத்தார்கள்."பாக்குற வேலைக்கு ,கொஞ்சம் "சரக்கு"அடிச்சாத் தான் ஒடம்பு அசதி மாறும்"என்று அவர் வயிற்றில் நெருப்பை ஊற்றினார்கள் .உருப்படத்தான் இங்கே வழி சொல்ல ஆட்கள் குறைவு.நாசமாக்க சொல்லவா வேண்டும்...!?

        ஒரு முறை தன் ஊருக்கு வந்த சீனி மரைக்கார்.கண்மாய்க்கரைக்குள் சாராயம் குடிக்கச் சென்றார்.சாரய வியாபாரி மாணிக்கமோ..

"இந்தா பாரு சீனி ..பழய காசு அம்பதஞ்சி ரூபாய வச்சிட்டு....குடி..அதுக்கு மேலயெல்லாம் கடங்கொடுக்க முடியாது....."என்று சொல்ல,

   "ஆமாம்.. "......"பெரிய கப்பல் யாவாரம் பாக்குறே..."ஊத்து..."......"என்று சீனி சொல்ல...

வார்த்தை தடித்து,மல்லுக்கட்டானது,தெரு நாயாவது கொஞ்சம் நல்லா சண்டைப் போடும்,அதை மிஞ்சி விட்டார்கள்.சீனியும்,மாணிக்கமும்....

  (தொடரும்...)

    

Saturday, 18 June 2016

சீனி மரைக்கார் ..!! (சிறுகதை) (1)


         முன்னொரு காலத்தில் ஒடைமரங்கள் அடர்த்திருந்த காடு அது.தற்போது கொஞ்சம் கூடுதலாகவே வழுக்கை விழுந்திருந்தது,அந்தக் காட்டிற்கு.ஆனாலும் காடு என்ற பெயரை மட்டும் இழக்காமல் இருந்தது.அக்காட்டில் ஒடைமரங்களுக்கு சமமாக பனை மரங்களும் ,தன் ஆக்கிரமிப்பை செய்திருந்தது.அப்பனை மரங்களில் ,சில மொட்டைப்பனை மரங்களும் உண்டு.அதில் மைனாக்களும்,கிளிகளும் குடும்பத்தோடு குடித்தனம் நடத்தும்,பாழாய்ப்போன பல மனிதனின் மனம்,ஒன்றாக இருப்பதை பிரிப்பதுதானே வழக்கம்.குடித்தனம் நடத்தும் இடத்தைத் தேடி ,அம்மரத்திலேறி குஞ்சுகளை எடுத்து வளர்க்கவும் செய்வார்கள்.அடுத்த உறவுகளைப் பிரித்த பாவமோ என்னவோ,பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊராக,உறவுகளைப் பிரிந்து வாழ்கிறான் போல மனிதன்.

          அக்காட்டினை இரண்டாகப் பிரிப்பதுப் போல்,கடற்கரைக்குச் செல்ல ,சாலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அச்சாலையோர ஒடைமரமொன்றின் கீழ்,சுத்தம் செய்யப்பட்டிருந்தது .அந்த இடத்தினைச் சுற்றி,சீட்டுக் கட்டுகள்,மதுப்பாட்டில்கள்,காலியான தண்ணீர் பாக்கெட்கள் சிதறிக் கிடந்தன.பலர் அவ்விடத்திற்கு வந்துப் போன அடையாளங்கள்,அதிக அளவில் காணப்பட்டது.அந்த இடத்தில் ஐம்பத்தைந்திலிருந்து அறுபதுக்குள் வயதிருக்கும் ஒருவர் படுத்து தூங்கி கிடந்தார்.செருப்பை தலைக்கு வைத்துக் கொண்டு ,தலையில் வெள்ளையடித்த முடியுடன்,முன்னாளில் இத்தலையில்,கருப்பு முடிகளும் இருந்தது என அடையாளத்திற்கு சில கருப்பு முடிகளும் இருந்தன.இவர் எழுந்திருப்பதற்குள்,இவரைப் பற்றி பார்த்திடுவோம்.இவர் பெயர்தான் "சீனி மரைக்கார்"...!!

      (தொடரும்...)

     

Saturday, 11 June 2016

ரமழானே வருக..!


உலகத் தேவையில் உலுத்துப் போன
உள்ளத்தினையும் ஆன்மீக ஒளி வீச செய்திடும் மாதமே!

கஞ்ச நெஞ்சத்திலும் தர்ம நீரூற்றினை ஊறச் செய்திடும் மாதமே!

மடமை இருளகற்ற மாமறை தந்த புனித மாதமே!

ஈமானின் வல்லமைதனை பாருலகம் உணர்ந்திட
பத்ருகளம் பாடம் நடத்திய மாதமே!

அருள் பொருந்திய மாதமே!

உன்னருளால் எங்களை நனைத்து
எங்கள் பாவக்கறைகளை கழுவிடு புண்ணிய மாதமே..!

 

Tuesday, 7 June 2016

கல்லறைப் பூக்கள்.!

நீ "லைக்"கிடாத என் கவிதைப்பூக்கள்
வெறும் கல்லறைப் பூக்களாகவே  காட்சியளிக்கின்றது !

     

Wednesday, 1 June 2016

இவ்வளவுதான் நான் .....!!


நானொன்றும்
பஞ்சுமெத்தையில்
துயில் கொண்டவனில்லை
வறுமையின் கோர நகங்களால் கிழிபட்டவன்!

நானொன்றும்
காதல்மடியில் தலை சாய்ந்தவனில்லை
காயங்களின் வலியில் வழியமைத்துக் கொண்டவன்!

நானொன்றும்
இலக்கியச் சமுத்திரத்தை மூச்சு முட்ட குடித்தவனில்லை
இம்சைகளின் இடையில் கிடைத்தவற்றை வாசித்தறிந்தவன்!

நானொன்றும்
பணப்பேய் பிடித்து ஆடுபவனில்லை
எவரிடமும் தலைச்சொறிந்து நிற்க கூடாது என்று சம்பாதிப்பவன்!

நானொன்றும்
அறிவுஜீவிகளிடம் அடைகாக்கப்பட்ட முட்டையல்ல
அடிபட்டே வாழ்க்கைப்பாடம் படித்தவன்!

ஆதலால்
என்னிடம் தென்படும் எதார்த்தங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
தத்துவங்களை தேடாதீர்கள் !

   

Sunday, 29 May 2016

ஈரத்துண்டு..!!

காய்ச்சலின் போது ஈரத்துண்டைக் கொண்டு
உடல் சூட்டைக் குறைப்பதைப் போல்
மன உளைச்சலின்போது உன் நினைவுத்துண்டைக் கொண்டு
என் மனம்தனை துடைத்துக் கொள்கிறேன்.!

    

Thursday, 26 May 2016

என் எழுத்துக்கள் !

சிப்பியைக்கொண்டு
சமுத்திரத்தை இரைக்கும் முயற்சிதான்
என் எழுத்துக்கள் !

     

Monday, 23 May 2016

மன்னிப்பாயா..!?

என்னை மன்னித்து விடு
தொலைந்து போன என்னை
தேடிப் பிடிக்க
உன்னைக் கொஞ்சம்
எழுதிக்கொள்கிறேன்.!

     

Sunday, 22 May 2016

என் கவிதைகள்!

உன் நினைவிற்குள்
என்னை மறந்திடுகையில்
தென்படும் வாக்கியங்களே
என் கவிதைகள்!

   

Saturday, 21 May 2016

காற்று.!

வெற்றுக் குடுவைகள் என்றாலும்
நிரம்பிதான் இருக்கிறது
காற்று!

    

Tuesday, 17 May 2016

நிஜம் தொலைத்த நிழல்.!(சிறுகதை)


      ஏன் என் வாழ்வில் நீ வந்தாய் எனத் தெரியவில்லை,எல்லோரும் நம்மை பிரிந்திட வேண்டிய போது,நாம் இணைந்திருந்தோம்,மற்றவர்கள் நாம் இணைந்தே வாழ வேண்டும் என ஆசைப்படுகிற போது நாம் பிரியப் போகிறோம்...!?ஏன் இந்த முரண் ,...!?இதுதான் வாழ்க்கையா....!?புரியாத போது பயணிப்பதும்,புரியும்போதும் முடிந்திடுவதுதான் வாழ்க்கையா..!?இன்னும் எனக்கு ஒன்றும் புரியவில்லை .


      நான் செய்த சேட்டைகளையெல்லாம் ரசித்தவள் நீ.!என் நீள் முடிக்கு பின்னலிட்டவள் நீ..! இன்னும் இன்னும் நான் செய்த திமிருத்தனங்களுக்கு தூபம் போட்டவள் நீ..!இன்றோ நீ நான் செய்வதெல்லாம் தவறென்று பிரிய முனைகிறாய்.நான் செய்வதெல்லாம் தவறுதான்,நான் திருந்தப் பார்க்கிறேன் ,அதற்காக நீ என்னைப் பிரிய நினைக்காதே.....

        நம் வீட்டுச் சுவரும் உன் கை விரல்களைத் தேடுகிறது,உன் நினைவுகள்காற்றைப் போல நம் அறைகளில் நிறைந்திருக்கிறது .நான் என் தவறுகளை ,நான் விட்டாலும் ,நீ என்னை ஏற்பதாகவும் இல்லை.என்னை நீ தொலைத்து விட்டுப் போகிறாய்.நான் உன் நினைவுகளை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன் ...!! என தன் நாளேட்டில் என்றோ எழுதிய வரிகளைப் படித்ததும்,கன்னத்தில் கண்ணீர் கோலமிட்டதை தடுத்திட முடியவில்லை ,முதியோர் இல்லத்திலிருந்த அஷ்ரப்பினால்....!!

     
      

Monday, 16 May 2016

டிஸ்ஸு"!

நம்மை அழகாக்கிட
தன்னை அழுக்காக்கிக் கொள்கிறது
"டிஸ்ஸு"!

    

Sunday, 15 May 2016

புளியம்பழங்கள் !

பழமென்றாலும்
இனிப்பதில்லை
புளியம்பழங்கள்!

    

Saturday, 14 May 2016

மல்லிகை.!

வீதியில் கிடந்தாலும்
வாசம்தான் வீசுகிறது
மல்லிகைகள்.!

     

Thursday, 12 May 2016

மௌனக் கதறல்..!!


காக்கையின் கரைதலில் கண்ணீர் கலந்திருக்கிறது
பறந்து கடந்துச் செல்லும் கொக்குகளும் முணங்களுடன் செல்கிறது
வாலைத் தட்டி ஓடித்திரியும் அணிலின் கண்களில் ஏக்கம் நிறைந்திருக்கிறது
தென்னைமர மைனாக்கூட்டில் ஒப்பாரி கேட்கிறது
வீதியில் செல்லும் வெள்ளாடுக்கூட்டத்தில் வெறுமை விளையாடுகிறது
கவிதை தரும் என் சிந்தனைக்கூடமும் சிதிலமடைந்து விட்டது!

ஆம்!
புதுப்பள்ளிக்காக
உயிருடன் உணர்வுடன் உறைந்திருந்த பள்ளிவாசல் உடைபடுவதால்........!!!!

Tuesday, 10 May 2016

எஸ் டி பி ஐ நீ புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால்...!!


தேசத்தை சூழ்ந்திருக்கும் பாசிசக் காற்றை நீ உணர்ந்திருக்க வேண்டும்!
அதிகாரவர்க்க கரங்களில் படிந்திருக்கும் ரத்தங்கள நீ படித்திருக்க வேண்டும்!
கலவரங்களில் கருவறுக்கப்பட்ட அபலைகளின் அழுகுரல்களை நீ கேட்டிருக்க வேண்டும்!
நீதியின் பேரினுள் ஒழிந்திருக்கும் அநீதியை நீ அறிந்திருக்க வேண்டும்!
இத்தனையும் நீ அறிந்தவனென்றால் இந்நேரம் எஸ்.டி.பி.ஐ யில் நீ இணைந்திருக்க வேண்டும்!

           

Saturday, 7 May 2016

பூக்கள் !

தோட்டக்காரனுக்காக மட்டுமே
சிரிப்பதில்லை
பூக்கள்!

     

Friday, 6 May 2016

எஸ்.டி.பி.ஐ.

எங்கள் இரத்தங்கள் இளம்சூடானது
எங்கள் கண்கள் பெரும்கனவுகள் கொண்டது
எங்கள் சிந்தனைகள் மக்கள் விடுதலைக்கானது"
எங்கள் பயணம் அடிமைச்சங்கிலிகளை அவிழ்ப்பது
எங்கள் காதல் களமாடுவது
இக்கவிதை எஸ்.டி.பி.ஐ கட்சிக்கானது!

       

Tuesday, 3 May 2016

வேடிக்கை மனிதர்கள்...!!


      "என்னடா ..!?எப்படி இருக்குறா..!?அடுத்த வாரம் ஊருக்கு போறேன்..மதுரையில 80 லட்சத்துல வீடு கட்டுனேன் ல அது குடியேற போறேன்... "என்று சொல்லி விட்டு என்னை கடந்து சென்றார் உறவுக்காரர் ஒருவர்.இதற்கு முன்னால் சென்னையில வீடு,ராமநாதபுரத்துல நெலம்னு வாங்கி ,பணக்காரத்தனமாக ஊருக்கு தெரிபவர்.ஆனால் ஊருல இருக்குற "உம்மா ,வாப்பா"வுக்கு நோன்பு பெருநாள் ,ஹஜ் பெருநாள் காலத்துல மட்டும் , பெருநாள் காசு கொடுத்து விடுவாரு.."அந்த உறவுக்காரர்.

      "என்னடா...செய்ய சொல்லுறே...!? சின்ன புள்ளயில இருந்துதான் கஷ்டபடுறேன்..ஒழச்சு ஒழச்சு...அக்கா ,தங்கச்சி கல்யாணம்,
தம்பிக்காரன் கல்யாணம் ,வயசான வாப்பா உம்மா னு நல்லது ,கெட்டது எல்லாம் செஞ்சி கிட்டு இருக்கேன்..இதுல நான் என்னத்த பேங்க்ல சேர்த்து வச்சிருக்கேன்....!?பாப்போம்..அல்லாஹ் என் கஷ்டத்தை தீர்ப்பான்,அவன் எனக்கு கூலிய தருவான்டா...!!"னு சொல்லி சென்ற என் நண்பனையும் பார்க்கிறேன் .

எனக்கென்னவோ இவ்விருவரையும் பார்க்கும்போது " உறவுக்காரர் மனதால் பிச்சைக்காரனாகவும்...நண்பன் அவன்
மனதால் பணக்காரனாகவும் எனக்குத் தெரிகிறார்கள்.

        

Monday, 2 May 2016

மறுபக்கம் !

நாணயத்தின் இருபக்கம்போல்!
நேசத்தின் மறுபக்கம் துயரம்!

         

Saturday, 30 April 2016

கைக்குட்டைகள்!

தான் துடைத்த கண்ணீர்களை
தம்பட்டம் அடித்து சொல்வதில்லை
கைக்குட்டைகள்!

    

Friday, 29 April 2016

மறக்கத்தான் நினைக்கிறேன்...!!


நனைத்த கோடை மழையையும்
தங்கவிட்டு தள்ளிவிட்ட பூவிதழையும்
குளிர்ந்த வேப்பமர நிழலையும்
மூழ்கச்செய்த கவி வரிகளையும்
விழுங்கிய புன்னகையையும்
வருடிய மயிலிறகையும்
வாட்டியெடுத்த வாடையையும்
இறுக்கியணைத்த இளங்காற்றையும்
இத்துடன் சேர்த்து என்னையும் !

"மறக்கத்தான் நினைக்கிறேன்"!

   

Thursday, 28 April 2016

தண்ணீர்.!

பெரும் தாகம் கொண்ட நாவிற்கே
தேனாய் இனிக்கிறது
தண்ணீர்!

     

Wednesday, 27 April 2016

சிரிப்புச் சப்தம் !

என் கவிதைப் பூந்தோட்டம்
காய்ந்து போய் விட்டது!

உன் சிரிப்பு சத்தம் கேளாமல் !

      

Tuesday, 26 April 2016

தெரு நாய்கள்.!

எதிர்த்து நிற்பவர்களிடம்
தன் வாலை ஆட்டுவதில்லை
தெரு நாய்கள் !

     

Sunday, 24 April 2016

மிதிவண்டி !

சுமைகள்தான் என்றாலும்
சுமந்துதான் செல்கிறது
மிதி வண்டிகள்!

      

Friday, 22 April 2016

தூக்கணாங்குருவிகள்!

கைகளில்லா விட்டாலும்
கூடிகளில்தான் வாழ்கிறது
தூக்கணாங்குருவிகள்!

       

Monday, 18 April 2016

எலிகள்.!

கடுமையான மலைகளையும்
தனக்கான விளையாட்டுத் தளமாக்கி கொள்கிறது
எலிகள்!

      

Sunday, 17 April 2016

ராசிக்கற்கள் .! (1700 வது பதிவு)

கல்லில் ராசி இல்லாததினாலேயே
விற்கப்படுகிறது
ராசிக்கற்கள்!

     

சாய்வு நாற்காலிகள்!

யாரோ ஒருவர்
சாய்ந்துக் கொள்ளவதற்காகவே
தயாரிக்கப்படுகிறது
சாய்வு நாற்காலிகள்!

     

Thursday, 14 April 2016

பருந்து.!

எவ்வளவோ உயர்த்தில் பறந்தாலும்
தன் இலக்கை(இரை) மறப்பதில்லை
பருந்துகள்!

       

Wednesday, 13 April 2016

மா மரங்கள் !

கல்லெறியும் கைகளுக்கும்
பழங்களைத்தான் கொடுக்கிறது
மா மரங்கள் !

     

Sunday, 10 April 2016

ஆடை.!

ஆடு மாடுகளையும்
வெட்கப்பட வைக்கிறது
நவீன ஆடைகள்!

      

Friday, 8 April 2016

சகுனம் !

சகுனம் பார்த்து
தன் சிறகுகளை விரிப்பதில்லை
பறவைகள்!

     

Monday, 4 April 2016

பாம்பு..!!

விஷப்பாம்பிற்கு
இவ்வுலகம் வைத்திருக்கும் பெயர்தான்
"நல்ல பாம்பு" !

     

Sunday, 3 April 2016

கருவேப்பிலை !

குழம்பிற்கு வாசமேத் தந்தாலும்
ஒதுக்கத்தான் படுகின்றது
கருவேப்பிலைகள்!

     

Saturday, 2 April 2016

அருவி..!

வீழ்ந்தாலும்
அழகுதான்
அருவிகள்!

     

Friday, 1 April 2016

கை !

வலிமைக்காகத் தான்
வலியைத் தாங்கிக்கொள்கிறது
கைகள்!!

    

Wednesday, 30 March 2016

ஒத்தன முத்தம்..!!


நனைத்து பிரிந்த கடல் அலை
ஈரத்தை விட்டுச் சென்றதைப் போல்!

உரசிச் சென்ற கடற்காற்று
ஒட்டிச் செல்லும் பிசுப்பிசுப்பைப் போல்!

மறையும் சூரியன்
விட்டுச் செல்லும் நிலவினைப் போல்!

சோம்பல் முறித்து உடலைச் சிலிர்த்துச் சென்ற சேவல்
உதிர்த்திட்ட இற்குகளைப் போல.!

வளைக்குள் நுழைந்திட்ட நண்டுகள்
பதித்துச் சென்ற தடங்களைப் போல்!

ஒத்தன இதழ்முத்தம்
மிச்சம் வைத்திட்ட எச்சிலைப் போல்!

உண்டு உமிழ்ந்த வெத்தலை
உதட்டில் சிகப்பாய் தங்கி இருப்பதைப் போல் !

நீ என்னை வெறுத்துச் சென்றிருந்தாலும்
என்னுள் விதைத்துச் சென்றிருக்கிறாய் கவிதைகளை..!!

     -/இந்த கவிதை சிங்கபூரில் வெளியாகும் "தி சிராங்கூன் டைம்ஸ் "ல்
வெளியாகி இருந்தது,ஜனவரியில்//

மரம்...!!

சருகுகளை நினைத்து வருந்துவதில்லை
துளிர்விடத் தெரிந்த
மரங்கள் !

Tuesday, 29 March 2016

அலை.!

தள்ளியே விட்டாலும்
கடலை விட்டு பிரிவதில்லை
அலைகள்!

      

Thursday, 24 March 2016

அழகு சாதனங்கள் .!

எதார்த்தங்களிடம்
தோற்றுத்தான் போகின்றன
அழகு சாதனங்கள் !

     

Wednesday, 23 March 2016

ஆலமரம்.!

இளைப்பாறிய பறவைகளிடம்
எதனையும் எதிர்பார்ப்பதில்லை
ஆலமரங்கள்!

    

Saturday, 19 March 2016

சிகரட்.!

தன்னைப் "பற்ற" வைப்பவர்களுக்குள்
"புற்றை"வைத்து விடுகிறது
புகையிலைகள்!

      

Wednesday, 16 March 2016

கூண்டுக்கிளிகள் !

சிறைப்பட்டே வாழ்ந்து விட்டதால்
சிறகுகள் தனக்கிருப்பதையே மறந்துவிடுகிறது
கூண்டுக்கிளிகள்!

     

Sunday, 13 March 2016

ஏணிகள் .!

ஏமாளியென்ற பட்டம் கிடைத்தாலும்
ஏறியவர்களை கீழேத் தள்ளி விடுவதில்லை
ஏணிகள்!

    

Wednesday, 9 March 2016

புல்லாங்குழல் !

தன்னுள்ளிருந்து இன்னிசை வெளிப்படத்தான்
தன்மேல் துளைகளை ஏற்றுக்கொள்கிறது
புல்லாங்குழல்கள்!

    

Tuesday, 8 March 2016

கடல்.!

அலைகளை எதிர்க்க துணிந்தவர்களுக்கே
தன்னுள் கடக்க வழி விடுகிறது
கடல்!

     

Saturday, 5 March 2016

கோழிக்குஞ்சு..!!

தடைதனை உடைத்திட தயாரில்லையென்றால்
ஓட்டிற்குள்ளேயே சமாதியாகி விட வேண்டியதுதான்
கோழிக்குஞ்சுகள்!

    

Thursday, 3 March 2016

பெண்மை..!


வேதனையின் உச்சத்தைத் தொட்டப் பிறகே தான்
தாய்மை எனும் பட்டம் பெறுகிறது
பெண்மை!

       

Sunday, 28 February 2016

யானை.!

தன் பலத்தினை மறந்ததினால்
பிச்சையெடுக்கிறது
யானைகள்!

    

Wednesday, 24 February 2016

விதை.!

முளைத்திட வேண்டுமென்றால்
முதலில் புதைந்திட வேண்டும்
விதைகள்!

    

Tuesday, 23 February 2016

கடவுச்சீட்டு !

கை சேர்ந்த காதலையும்
கண்ணீர் வடிக்க வைத்து விடுகிறது
கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) !

     

Friday, 19 February 2016

காத்தாடி !

காற்றுடன் போராடித்தான்
மேலே உயருகிறது
காத்தாடிகள்!

     

Monday, 15 February 2016

கரும்பு.!,

கசக்கிப் பிழியப்பட்டாலும்
மறந்தும் கசப்பதில்லை
கரும்புகள்!

   

Saturday, 13 February 2016

தங்கம்.!

சேதாரங்கள் உண்டென்றாலும்
ஜொலிக்கத்தான் செய்கிறது
தங்கங்கள்!

     

Wednesday, 10 February 2016

புரோட்டா !

அடிப்பட்டு கிழிப்பட்டாலும்
ருசிக்காமல் இருப்பதில்லை
புரோட்டாக்கள்!

    

Thursday, 4 February 2016

தெரு விளக்குகள்.!

தனக்கென்று யாருமில்லையென்றாலும்
பிறருக்கு  வெளிச்சம் தராமல் இருப்பதில்லை
தெரு விளக்குகள் !

     

Wednesday, 3 February 2016

தலைக்கணம்.!

தான்கொண்ட தலைக்கணத்தினால்தான்
சுத்தியலிடம் அடிபடுகிறது
உளி!

   

Tuesday, 2 February 2016

துடுப்பு.!

படகுகளின் பயணத்தை
துடுப்புகள்தான் தீர்மானிக்கிறது !

     

Monday, 1 February 2016

உளி !

பெரும்பாறையானாலும்
அதற்கும் சிறு உளியின் தீண்டல் தேவைதான் படுகிறது !

    

Saturday, 30 January 2016

முடி.!

கிரீடமாக பார்க்க்கபட்டது
கீழ்த்தரமாகவும் பார்க்கப்படுகிறது
முடி!

   

Wednesday, 27 January 2016

செருப்பு..!!

எப்படிதான் உழைத்தாலும்
வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை
செருப்புகள்!

    

நதி !

கடலில் கலந்திடும்வரைதான்
அதன் பேர் நதி !

   

Tuesday, 26 January 2016

மண்ணறை.!

இன்னும் இன்னுமென அலைபவர்களைப் பார்த்து
மௌனமாய் சிரிக்கிறது மண்ணறைகள்!

    

Saturday, 23 January 2016

தேனீ..!!

தனக்காக மட்டுமே
தேனினை சேகரிப்பதில்லை தேனீக்கள் !

Thursday, 21 January 2016

கர்ப்பப்பை !

சில காலகட்டங்கள் வரைதான்
கர்ப்பப்பை கூட நம்மைத் தாங்குகிறது !

   

Wednesday, 20 January 2016

மெழுகுவர்த்திகள் !

தன் கண்ணீரை
பிறர்மீது எறிவதில்லை மெழுகுவர்த்திகள் ..!!

     

Tuesday, 19 January 2016

கத்தரிக்கோல் .!

சில சிலவற்றுடன் பிரிந்திருப்பதும்
நன்மைக்குத்தான்.
ஏனென்றால் கத்தரியின் இரு இதழ்கள் இணைந்துதான்
ஒட்டியிருப்பதை வெட்டி விடுகிறது !

     

Saturday, 16 January 2016

அசுத்தம் ..!

தாகம் தீர்த்திட்ட நதியினை
தன் நாக்கினால் நக்கி அசுத்தம் செய்து விட்டதாக
மனப்பால் குடிக்கிறது
நாய்கள்..!

     

Wednesday, 13 January 2016

புரோட்டா.!

அடிப்பட்டு கிழிப்பட்டாலும்
ருசிக்காமல் இருப்பதில்லை
புரோட்டாக்கள்!

    

Sunday, 10 January 2016

நாற்றம்.!

கருவாட்டு ஈக்களுக்கு
கஸ்தூரி நாறிடத்தான் செய்யும்!

     

Friday, 8 January 2016

சோம்பல் .!

புல்வெளியிற்கும்
பனித்துளியிற்குமான உறவென்பது
சூரியன் சோம்பல் முறிக்கும் வரைதான்..!!

    

Monday, 4 January 2016

படகு..!

படகுகளின் மேல் உரிமை கொள்வதில்லை
பலகைகளான மரங்கள்!

    

Friday, 1 January 2016

கண் மூடு..!!

என் கவிதைகளை
கண் மூடி தடவிப் பார்!

அதில் நான்
உன்னை ஒளித்து வைத்திருப்பதை
உணர்வாய்!