Friday, 29 May 2015

கவிதையே.!(21-25)

21)
நதி உன்னில் விழுந்திட்ட
சருகு நான் கவிதையே!

உன்மேல் 
என்னை மிதக்கச் செய்தாலும் !

உனக்குள்
என்னை மூழ்கச் செய்தாலும்!

எனக்குப் பேரின்பமே
கவிதையே!
-----------------------
கவிதையே.!(22)
---------------
இன்று நான் உன்னை
லட்சியமாக எழுதுவது!

ஒரு நாள்
எனது லட்சியத்தை 
உனக்குள் எழுதத்தான்!

கவிதையே!
--------------------
கவிதையே.!(23)
---------------
உன்னையணிந்து
பார்க்கையில்தான்!

என்னை நேசிக்கும்
இதயங்களைக் கண்டேன் !

"கவிதையே"!
--------------------
கவிதையே.!(24)
-----------------
சோகத்தைக் கூட
உன்னில் புதைக்கையில்
சுகம்தான் !

கவிதையே!
---------------------
கவிதையே.!(25)
----------------
தொலைந்துக் கொண்டேதான்
இருக்கிறோம்!

உனக்குள்
நானும்!

எனக்குள் 
நீயும்! 
----------------

Saturday, 23 May 2015

கவிதையே.!(16-20)


16)
என்னை 
மன்னித்து விடு!

நான் 
சுமக்கும் முடியாத 
எண்ணச் சுமைகளை!

உன் மீது
இறக்கி வைப்பதால்.!
----------------------
கவிதையே.!(17)
---------------
உனக்கு
நாளைய வரலாற்றினை
இன்று படிக்க விருப்பமா.!?

என் தேசத்தில்
பாப்புலர் ப்ரண்ட் சகோதரனுடன்
ஒரு நாள் பயணித்துப் பார்.!
-----------------------------
கவிதையே.!(18)
---------------
ஒரு புள்ளியில் தொடங்கும்
எனது எழுத்துக்கள் கவிதையென்றால்!

பல புள்ளிகளை இணைக்கும்
உனது கோலங்களும் கவிதையே!
--------------------------------
கவிதையே.!(19)
---------------
வாழ்க்கைப் போர்க்களத்தில் 
நான் பொசுங்கிடாமல் இருக்கவே!

பூக்களாக 
உன்னை விதைக்கிறேன்
கவிதையே!
----------------------------
கவிதையே.!(20)
---------------
இன்று
என்னால் நீ 
எழுதப்படலாம் !

ஒருநாள் 
உன்னால் நான்
வாசிக்கப்படுவேன்!
-------------------

Friday, 22 May 2015

கவிதையே .!(11-15)

11)
உனக்கு 
ரோசம் அதிகம்!

உன்மேல் 
நேசம் கொள்ளாதவர்களுக்கு
நீ
அர்த்தம் தர மறுப்பதால்!
--------------------------
கவிதையே.!(12)
-----------------
உன்னைத் தேடி வந்த
உயிர்த்துளி நான்!

என்னை ஏற்றுக்கொண்ட
கருவறை நீ!
------------------------
கவிதையே.!(13)
----------------
மூச்சடைக்கும் 
ஓர் பேரணைப்பும்!

மூச்சைப் பறிக்கும்
பெரும் பிரிவும்!

உன்னுடன்
கூடவே பிறந்ததா.?

"கவிதையே"!
-----------------
கவிதையே.!(14)
----------------
மேகம் சேரும்
கடல் நீராய் !

கடலில் விழும்
மழைத் துளியாய்
இருக்கிறோம்!

கவிதையே
நீயும்
நானுமாய்!
----------------
கவிதையே.!(15)
------------------
என் சிந்தனைப் புல்வெளியில் 
மின்னிடும் பனித்துளிகள்
நீ தான்!

"கவிதையே"!
-----------------_


Wednesday, 20 May 2015

கவிதையே..!(6-10)

6)
காதலும்,கவிதையும்
மொட்டுக்களைப் போன்றது!

எப்போது பூக்கும் என
யாருக்கும் தெரியாது!

---------------------
கவிதையே..!(7)
-----------------
என்னைப் பிரிந்தவர்கள்
என்னைப் புரிந்தவர்களில்லை!

என்னைப் புரிந்தவர்கள்
என்னருகில் இல்லை!

கவிதையே!
நீ மட்டும் எப்படி
என்கூடவே இருக்கிறாய்..!!??

என்னைப் புரிந்ததாலா!?
புரியாததினாலா.!?
-------------------------
கவிதையே.!(8)
---------------
எனது எண்ணத்துளியினை
எனது மௌனச்சிப்பியினுள்
அடைகாத்துத் திறந்துப் பார்த்தால்!

நீ தான் 
சிரிக்கிறாய்!

"கவிதையே"!
--------------------------
கவிதையே.!(9)
----------------
நான் பேசாத 
நேரங்களில் !

எனது பேனா
பேசினால்!

அது
கவிதையே!
------------------
கவிதையே.!(10)
---------------
உன்னைத் தேடி
எடுக்க!

எத்தனைத் தடவைதான்
என்னை நான் தொலைக்க!?
--------------------

Sunday, 17 May 2015

கவிதையே.!(1-5)

1)
கவிதையே
என்னைப் பிரிந்திட
எண்ணாதே!

பின்னாளில் 
நீ தான் 
கண்ணீருடன் அலைவாய் !
--------------------------------

கவிதையே..!!(2)
----------------
ஆயிரம் பேர்
உன்னை எழுதலாம் !

என்னைப்போல்
யார் உன்னை நேசிப்பார்..,!??
------------------------------
கவிதையே.!(3)
--------------
என்னை 
மற்றவர்களுக்கு மட்டுமல்ல !

என்னை 
எனக்கே அறிமுகம் செய்தது
நீ தான்!
----------------------------
கவிதையே..!(4)
-----------------
ஓர் துளி 
எனக்கோர் தீராத ஆசை!

கவிக்கடல் உன்னை
குடித்திட!
-------------------------
கவிதையே..!(5)
----------------
என்னைக் கொல்ல வரும்
தனிமையெனும் மிருகத்திடமிருந்து
தற்காத்துக் கொள்ள !

உன்னைத்தான் 
ஆயுதமாக பயன்படுத்துகிறேன்!
----------------------------------

Thursday, 14 May 2015

பிம்பக்கவிதை..!

உன் நிழல் கூட
எனக்கு கவிதையாகத் தெரியும்போது!

உன் பிம்பத்திற்கு 
எப்படி கவிதை சொல்வேன் !?

       

Wednesday, 13 May 2015

எழுதிடா காதல் மொழி..!!

சப்தமிடும் முத்துக்களில்லாத
உன் தங்கக் கொலுசுகள் 
என்னிடம் பேசும் காதல் மொழிதனை
இதுவரை நான் எழுதிட துணியவில்லை!

காரணம் யாதென்றால்
கொலுசின் கீழ் நீ அணிந்திருக்கும் 
உனது காலணிகள்
என்னைப் பார்த்து மிரட்டிக்கொண்டே இருப்பதினால் !

         

Monday, 11 May 2015

ஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..!!


            எல்லாத்தரப்பின மக்களும் சமமாக வாழவே விரும்புவார்கள்.யாரிடமும் அடிமைப்பட விரும்ப மாட்டார்கள்.தன் மீது பிறருடைய அடக்குதல் கரங்கள் ,அழுத்திடும்போது திமிறி எழவே முயற்சிப்பார்கள்.ஆனாலும் அடக்குமுறைகளும்,அதற்கு எதிரானப் போராட்டங்களும் காலங்காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதனடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச பா ஜ க ஆட்சியிலேறியதிலிருந்து மத துவேசப் பேச்சுகள்,உணர்ச்சிவசப்படுத்தக் கூடியப் பேச்சுக்கள் அதிகமாகவே கேட்க முடிகிறது.இது எதிர்பார்த்தது தான்,பா ஐ க அவ்வாறு நடக்கவில்லை என்றால் தானே ஆச்சர்யம்.!?

          இன்றைய காலக்கட்டத்தில் பா ஜ க ஆட்சியில் அமர்ந்து விட்டதால் ,ஒருசாரார் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இன்னொரு சாரார் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.இதில் விரக்தியடைய ஒன்றும் இல்லை,ஏன் விரக்தியடைய வேண்டும்.!?வரலாறு நெடுகிலும் அநீதி மேலோங்குவதும்.,அதனை நீதி வெல்லுவதும் நடந்தேறி உள்ளது.இனி நடந்திடவும் உள்ளது.இருட்டினால் விடிந்துதானே ஆக வேண்டும்.!?.இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் கோபத்தில் திட்டி எழுதுவதும்,ஆபாச வார்த்தைகளில் எழுதுவதும்,இன்னும் அபாயகரமானமாக எழுதுவதும்,முகம் சுழிக்கச் செய்கிறது..!?நாம் இதன் மூலம் என்ன மாற்றத்தை நிகழ்த்திட முடியும்.!?இன்னும் தகாத வார்த்தைகளை எழுதுவதினால் ,நடுநிலையான நபர்கள் கூட எதிரிகளாக மாறிட கூடும்.இன்னும் சிலரோட சிந்தனை எழுத்துக்கள் சிலிர்க்க வைக்கிறது.அதேவேளையில் சமூகத்தளங்களில் எழுதுவதும்,கொஞ்சம் பிரயோசனம் ஆகுமே தவிர,தீர்வாகும் என சொல்லிட இயலாது,
   
                          ஜனநாயகத்தை,சமத்துவத்தை,சமூக அமைதியை விரும்பக் கூடிய இந்திய மக்களாகிய நாம்,சற்று நிதானமாக சிந்திக்க கூடிய சூழலில் இருக்கிறோம்.இந்த பாசிசவாதிகள் எவ்வாறு ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது.!? . அதொன்றும் நேற்று சிந்தித்து ,இன்று நடைப்பெற்ற நிகழ்வு அல்ல.மாறாக நீண்டகாலத் திட்டம் கொண்ட ,ஆர்.எஸ்.எஸ். ன் ஒரு பகுதிதான் பா ஜ க எனும் கிளை.எண்பது கால கட்டங்களில் தொடங்கிய பா ஜ க எப்படி இருமுறை நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது.?நாம் சற்று சிந்திக்க வேண்டும்.நீண்டகாலப் பயணம் வேண்டும்,அப்படி ஒரு பயணம் இல்லாமல் ,இந்த பாசிசத்தை ஒன்றும் செய்திட முடியாது.

          இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக அமைப்புகள் ஒன்று கூடி ,பாசிசத்திற்கு எதிராக களமாடுகிறார்கள்.அதில் உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.அதில் பாப்புலர் ப்ரண்ட் எனும் அமைப்பும் (இஸ்லாமியர்கள் மட்டுமே இதில் இணைய முடியும்),எஸ்.டி.பி.ஐ எனும் அரசியல் கட்சியும் இந்தியா முழுவதும் ,போராடிக் கொண்டிருக்கிறார்கள் .இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இணைந்துச் செயலாற்றுங்கள்.அல்லது உங்களுக்குப் பிடித்தமான அமைப்பில் இணைந்துக் கொள்ளுங்கள் .ஆதலால் விரக்தியடையவோ,ஆத்திரமடையவோ தேவையில்லை.இன்றைய தேவை அறிவுப்பூர்வமான ,ஆக்கப்பூர்வமானப் போராட்டமே தேவை.


             ஓர் கவிஞன் சொன்னான்.
"ஓடாத மானும்
போராடாத மக்களும்
உயிர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை" என்று..

           

Saturday, 9 May 2015

அமாவாசை நிலவு..!!

அமாவாசைத் தினத்தன்று
நிலா வருவதில்லை எனும் சொல்லாடல்
பொய்யாய் போனது!

ஓர் அமாவாசைத் தினத்தன்று 
எனது தெருவை நிலவாய்
நீ கடந்துச் சென்ற போது!

       

Wednesday, 6 May 2015

யாரிங்கே முட்டாள்கள்..!!?

பாகற்காய் இனித்திடும்!
நீலவானம் "வெளுத்திடும்"!

இந்துமகா சமுத்திரம் குடி நீராகிடும்!
அருவிகள் மேல் நோக்கிப் பாய்ந்திடும்!

வடக்கில் சூரியன் உதிக்கும் !
நிலவு இனி தேயாதிருக்கும்!

இப்படியெல்லாம் சொன்னார்கள்!
ஆட்சியைப் பிடித்தார்கள்!

இதுவரை ஒரு ஆணியையும் புடுங்கவில்லை!
நாகரிகம் கருதி "ஆணி"என சொல்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை !

குனிய குனிய கொட்டுபவனும் முட்டாள்!
கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள்!!
என்பார்கள் கிராமத்தில் !

இங்கே யார் முட்டாள்கள்!?
தொடர்ந்து ஏமாற்றும் ஆட்சியாளர்களா !?
ஏமாற்றுவார்களை ஆட்சியிலேற்றும் என் தேச மக்களா.!? 

       

Monday, 4 May 2015

முருகன் கல்யாணம்! (இது கதையல்ல )


   "என்னண்ணே.!? பாக்காம போறே..!?னு ஒரு கை என்னை முதுகில் தட்டியது.

நானும் "யார்டா நம்ம முதுகுலத் தட்டுறது"னு திரும்பிப் பார்த்தேன்.

எனக்குப் பரிச்சயமானவன் தான் முருகன்.நான் வேலைப் பார்த்த உணவகத்தின் அருகில் தங்கி இருந்தவன். எப்போதாவது கடைக்குள் வந்து கதைப் பேசுவான்.ஆனால் எப்போது போனில் பேசிக் கொண்டிருப்பான்.அவனுக்கு வயது இருபத்தேழு இருக்கலாம்.அவன் போனில் பேசும்போதெல்லாம் 

"என்னடா !?லவ்வா..!?னு கேட்டால், சைகை காட்டுவான்,"பேசாம போ..!!"னு.

நான் தொழுகைக்காக நடந்துப் போகும் நேரங்களில் 
"என்னண்ணே ? தொழுகவா .!?னு கேட்பான்.

"வேற என்னைப் பாத்தா ,ஒனக்கு தூங்கப் போறவன் மாதிரி தெரியுதோ"! னு கேட்பேன்.

"பாத்தியா..!!காலையிலேயே வம்பு பண்ணுறியே..!!சரி சரி பாத்துப் ஓரமாப் போ ,ரோடு உள்ளே வுழுந்துறாதே"னு கேலிப் பேசுவான்.

             ஒரு நாள் ஓய்வு நேரத்தில் சாப்பிட்டு விட்டு,நாளிதழை படித்துக் கொண்டிருந்தபோது ,முருகன் வந்தான்.

      "எதுவும் பேப்பர்ல விசேசமா.?னு கேட்டான்.

       "நீ வந்தா !? விசேசம் எப்படி இருக்கும்.."!நான் கேட்டேன்.

     "ஷ்..ஷ்...! உன்ட பேச முடியாது..!!அந்தப் பேப்பரைத் தா" னு வாங்கி பாகப் பிரிவினை செய்தான் .எனக்கு ரெண்டு தாளைத் தந்து விட்டு,மத்ததை அவன் பார்க்க ஆரம்பித்தான்.நான் பேப்பரைப் படிக்க ஆர்வம் இல்லாமல் முருகனிடம் பேச்சை வளர்ந்தேன்.

         "என்ன முருகா .?எப்ப கல்யாணம் ..!?

       "மெதுவா ..முடிப்போம்.....

"போன்ல பேசுறியே அந்த பொண்ணையா கல்யாணம் பண்ணப் போறே..!!

       "ஆமா...அத்த பொண்ணுதான் அது...

   "அதுசரி ! சொந்தத்துல யாராவது பொண்ணு கொடுத்தாதான் ஒனக்கெல்லாம்....!"

     "என்னய வம்பு இழுக்குறதே ஒனக்கு வேலையா போச்சி ..இரு!நான் சாப்டு வந்து ஒனக்கு பதில சொல்றேன் !"னு கிளம்பிட்டான்.


        இப்படியாக நான் அவனை கேலி செய்வதும், அவன் என்னை வம்புக்கு இழுப்பதும் தொடர்கதையான ஒன்று.சில வருடங்கள் இப்படியாக கழிந்தது.காலம் கடந்தது.வேலை மாற்றம் எனக்கும் ஏற்பட்டது.இடம் மாறினேன். ஒன்றரை வருட காலம் முருகனை சந்திக்கவில்லை.அதற்குப் பின் கடைவீதி  ஒன்றில் இன்றுதான்  என்னைத் தோளில் தட்டி அழைத்தான்.

      "டேய் முருகா..!என்னடா இங்கே இருக்கே...!! இது நான்.

     "என்ன நீ ஒம்பாட்டுக்கு சொல்லாம கடை மாறி போயிட்டே "-முருகன்.

     "சரி வா !டீ குடிச்சிட்டுப் பேசுவோம்"னு இரண்டுப்பேரும் ஒரு உணவகத்தில் அமர்ந்து தேநீர் வாங்கி குடித்துக் கொண்டே பேசினோம்.நலம் விசாரிப்புகள்,இப்போது வேலைப் பார்க்கும் இடங்களைப் பற்றி பேசிக்கொண்டும்,இடையில் கேலிச் செய்துக்கொண்டும்,அப்போது எனக்கு ஓர் நினைவு வந்தவனாக கேட்டேன்.

          "ஆமா..!! ஒனக்கு கல்யாணம் ஆயிருச்சாடா..!!-நான்.

      "அத்த பொண்ணுக்கு ஆயிருச்சி ,வேற ஆளோட..."-என்றான் சிரிச்சிக் கொண்டே..

     "ஏன்டா ? எதுவும் குடும்ப பிரச்சனையா !?-அதிர்ச்சி மாறாமல்.

      "அதெல்லாம் இல்ல ! ஜாதகம் பார்த்தாய்ங்க !அதுல அந்த பொண்ண கட்னா எனக்கு ஆபத்தாம் !என்றான்.

        "சரி அது அவுக "நம்பிக்கைய" நான் ஒன்னும் சொல்ல வரல.வேற பொண்ணப் பாத்து கட்டிக்க வேண்டியது தானே..!!-நான்.

       "அதுக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆகும்.."அவன்.

     "ஏன்டா ? வீட்ல தங்கச்சிங்க யாரை கட்டிக் கொடுக்கனுமா..!?- நான்.

     "இல்லண்ணே..!ரெண்டு வருசங் கழிச்சி தான் கல்யாணம் பண்ணனும்னு..
சொல்லிருக்காரு....! -முருகன் 

    "யாரு....!? -நான்

   "ஜாதகம் பார்த்தவரு...! -முருகன்.

   "ஏன்டா ?கல்யாணம் ஒனக்கா ?இல்ல அந்த ஜாதகம் பார்த்தவருக்கா..!?ஒங்கல்யாணத்தை முடிவுப் பண்ண அவரு யாருடா..!?-என்றேன் கடுப்பாக.

     "என்ன செய்யண்ணே...!!?வீட்ல கேக்க மாட்டேங்குறாங்க..!!-என்றான் முருகன் விரக்தியாக.

         இனி அவனை இவ்விசயத்தை கிளறி அவனைச் சஞ்சலப்படுத்திட எனக்கு விருப்பமில்லை .வேறொருப் பக்கம் பேச்சைத் திருப்பினேன். நீண்ட நேரம் பேசியப் பிறகு கிளம்பத் தயாரானோம்.

     "சரி முருகா !இது என் போன் நம்பர் எடுத்துக்க ..!னு சொல்லி போன் நம்பர்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.இருவரும் வெவ்வேறு வழியில் அவரவர் இருப்பிடத்திற்கு .

             எனக்கானப் பேருந்து வந்து விட்டது.எனக்குப் பிடித்தமான இருக்கையான சன்னலோரத்தில் அமர்ந்துக்கொண்டேன். பேருந்து முன்னோக்கிச் சென்றாலும் என் நினைவுகள் பின்னோக்கியே இருந்தது,முருகனுடன் பேசியதை நோக்கி. எப்படித்தான் அவன் பேசிச் சிரித்தாலும் ,அவன் அத்தை மகள் பேச்சையெடுத்தப் போது ,கண்கள் கக்கிய கண்ணீரை அவன் என்னிடம் மறைக்கப் பட்டப்பாட்டினை ,நான் நினைத்துப் பார்க்கையில்,என் கண்களிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

         

Sunday, 3 May 2015

காதல் கிண்ணம்.!

நீ
குளிர்ந்தாலென்ன ?
கொதித்தாலென்ன.!?

உன்னை ஏற்றுக்கொள்ளும்
காதல் கிண்ணம் நான்!

     

Saturday, 2 May 2015

வரும்...ஆனா வராது..!!

"வெளிநாடு வாழ் இந்தியர்கள் 
இந்தியா திரும்ப வேண்டும் " என
சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு!

ஆனால் சொல்லுறவரு
ஊரான் வூட்டு காசுல 
நாடு நாடா சுத்துறது நல்லா இல்லையே!


        

Friday, 1 May 2015

தனியார் மயமாக்கல்!

தன் சொத்தினை நிர்வகிக்கத் தெரியாத
அறிவற்ற முட்டாள்கள் !

அடுத்தவனிடம் விற்று விட்டு
அவ்வீட்டு வாசல் முன்
பிச்சையெடுப்பதுப் போலுள்ளது !

அரசுடமைகளை தனியார் மயமாக்கும் 
அரசுகளின் செயல்பாடுகள்!