Saturday, 29 August 2015

கவிதையே..!!(81-85)


81)
உன் கன்னக்குழியில்
ஒளிந்துக் கொள்ள விரும்பும்!

ஓர் மழைத்துளி நான்!
-----------------------
கவிதையே..!!(82)
--------------------
நதிதனைத் தேடும்
சமுத்திரமாய்!

சமுத்திரத்தைத் தேடிவரும்
நதியாய்!

கவிதையே!
நீயும்
நானும்.!
------------------------
கவிதையே..!!(83)
------------------
என் கவிதையின் 
ஊற்றுக்"கண்"ணினை!

கருப்புத்திரையினால் 
மறைத்து விட்டு!

காதல் கவிதை கேட்கிறியேடி
கொடுமைக்காரி!
---------------------------
கவிதையே..!!(84)
------------------
என்னையெழுதிட 
பேனா எடுத்தால்
கல்லெறிந்த புறாக்கூட்டமாகவும்!

உன்னையெழுத முனைகையில் 
சீனியை மொய்க்கும் எறும்புகளாகவும்!

என்னிடம் கண்ணாமூச்சி 
ஆடுகிறது வார்த்தைகள்.!
-----------------------------
கவிதையே..!!(85)
------------------
எனக்கு மட்டுமேத் தெரியும்!

உன் நினைவுகளோடு வாழ்வது!

எத்தனைக் கொடுமையானதென்பது!
------------------------------------

Tuesday, 25 August 2015

இன்னொரு கல்யாணம் ...!!


        எல்லோரும் கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் என தான் கல்யாணம் செய்துக்கொள்கிறோம்.ஆனால் கால ஓட்டத்தில்,கருத்து வேறுபாட்டினாலோ,இறப்பினாலோ,இன்னும் சில பல காரணத்தினாலோ,ஆணோ/பெண்ணோ வாழ்க்கைத் துணையை விட்டு பிரியும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.


           தனித்து  ஒழுங்காக,ஒழுக்கமாக வாழும் அந்த ஆணையோ/பெண்ணையோ, இந்த உலகம் சும்மா விடுகிறதா !?என்றால் ,அதுவும் இல்லை.அதற்கும் கட்டுக்கதை கட்டி அவர்களது காயம்பட்ட வாழ்க்கயில் கல்லை எறிகிறது.இந்த கேடு கெட்ட உலகம்.

       சரி,தனித்து வாழ்வதால்தானே இந்த அவலச்சொல்,வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள முயற்சித்தால்,அந்த ஆணையோ/பெண்ணையோ ,இது தேவையாக்கும்..!? 
இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டானே (ளே) னு குத்திக் கிழிக்கிறது.நரம்பில்லாத நாக்குகள்.

       ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உறவுகளே!இன்றைய காலகட்டத்தில் "தப்பானவழி" உறவைக்கூட சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு நியாயப்படுத்துகிறோம்.அதே நேரத்தில் சரியான வழியில் வாழ்க்கை அமைத்தால் அதனை எட்டி மிதிக்கிறோம்.மரணப்படுக்கையில் கிடக்கையில் மூச்சுவிட திணறும் ஒருவரது வாயில் பாலை ஊற்றுவதுப் போலுள்ளது.வாழ்க்கையை வெறுத்துக் கொண்டு இருக்கும்,அவர்களது வாழ்க்கையில் நாம் குறை கூறுவது.

       நம் வாழ்க்கையில் மனைவியையோ/கணவனையோ "பிரிந்து" வாழும் நிலை ஏற்பட்டால்,காலமெல்லாம் தனியே இருக்க முடிந்தால் இருந்துக் கொள்ளுங்கள்.அது உங்களது விருப்பம்,அதில் யாரும் தலையிட முடியாது.அதே நேரத்தில் மற்றவர்கள் விசயத்தில் ,தலையிட நமக்கும் உரிமை கிடையாது.

"வலியும்,வேதனையும் வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்,அது நமக்கு வராத வரை வேடிக்கையாகத்தான் தெரியும்"

     

Saturday, 22 August 2015

கவிதையே..!!(76-80)


76)
உன்னைப் படித்திடும்போது
என்னையும்!

உன்னை எழுதிடும்போது
என்னவளையும் பார்க்கிறேன்!
-----------------------------
கவிதையே..!!(77)
------------------
நீ போதைத் தராத
மதுக்குடுவை!

மதி மயங்கச் செய்யும்
மங்கையின் பார்வை!
------------------------
கவிதையே..!!(78)
------------------
காட்டில் மானையும்
முக்காட்டில் உன்னையும் காண்கையில்!

நெஞ்சுக்குள் பெரும்நெகிழ்வு
கவிதையை உருவமாக கண்டதுபோல்!
---------------------------------------
கவிதையே..!!(79)
-----------------
நன்றிக் கெட்ட என் பேனா !

என்னை எழுதச் சொன்னால்!
உன்னைத்தான் அது எழுதுகிறது !
---------------------------------
கவிதையே..!!(80)
------------------
உன்னை எழுதவில்லை என்பதற்காக!

உன்னை நினைக்கவில்லை என்று
அர்த்தமில்லை !
--------------------------------

Tuesday, 18 August 2015

கவிதையே..!!(71-75)


71)
என் மடிச் சேர்ந்த
மழலை நீ!

உன் தோள் சாய்ந்த
பாலகன் நான்!
--------------------
கவிதையே..!!(72)
------------------
என்னைப் பிடிக்கும் 
என்பவர்களை விட !

என் எழுத்தைப் பிடிக்கும்
என்பவர்களை!

ஏனோ
எனக்கு ரொம்ப பிடித்து விடுகிறது !
----------------------------------
கவிதையே..!!(73)
------------------
நீர்த்துளியாய் என் நெஞ்சூற்றில் 
நீ கசிந்திடுகையில் நான் உணரவில்லை!

நீ என் ஆழ்மனக் கிணற்றை
நிரப்பிட வந்த வெள்ளப்பெருக்கு என்பதனை!
----------------------------
கவிதையே..!!(74)
-------------------
"ச்சும்மா" "ச்சும்மா " என்னிடம் நீ
"ச்சும்மா "னு சொல்லாதே!

"ச்சும்மா "னு நீ சொல்லும் வார்த்தை
"ச்சும்மா "வாவது  என்னை ஒரு கவிதை எழுதிட வைக்கிறது !
-----------------------------
கவிதையே..!!(75)
------------------
காதலை விட
கவிதையே சிறந்தது!

ஆம்
காதல் காயத்தைத் தருகிறது!

கவிதை காயத்திற்கு மருந்திடுகிறது!
-----------------------------------

Friday, 14 August 2015

கவிதையே..!!(66-70)


66)
படிக்கல் என்மேல்
பட்டாம்பூச்சியாய் நீ ஒட்டியிருந்தும்!

உலகம் ஏனோ மறுக்கிறது 
எனக்கும் உணர்வுகள் இருப்பதை..!!
---------------------------------------
கவிதையே..!!(67)
------------------
"குட்டியச் சுவரு"என் மேலும்
பொன்வண்டுகள் மொய்க்கிறதென்றால்!

மல்லிகைச் செடியாய் நீ
என்னில் முளைத்திருப்பதினால்தான்.!
----------------------------___---------
கவிதையே..!!(68)
-------------------
நீ ஒரு நாள்
என்னை வாசித்தால் உணர்வாய்!

என் முரட்டு மீசைக்குள்
உனக்கான நேசத்துளிகள் இருப்பதனை !
----------------------------------
கவிதையே..!!(69)
------------------
உன்னை 
நான் கையில் பிடித்துக்கொண்டு
கடந்து வந்த பாதையை 
வெறித்துக்கொண்டும்!

இனி 
கடந்திட இருக்கும் பாதையை
சிரித்துக்கொண்டும் பார்க்கிறேன்!

"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!!(70)
----------------
பூ வாசக் காற்றே
உன்னை நான் நேசிப்பதால்!

சுவாசக் காற்றை 
நான் வெறுத்து விட்டேன் என்று அர்த்தமில்லை!
----------------------------


Monday, 10 August 2015

கவிதையே..!!(61-65)


61)
எங்கே தொலைந்தேன்!

எங்கே புதைந்தேன்! என

உனக்குள்தான் தேடுகிறேன் 
என்னை!
------------------------------
கவிதையே..!!(62)
-------------------
கால் நனைத்திட வரும் 
கடலலையிக்குப் பயந்து 
கரை நோக்கி ஓடுவதும்!

கடலுக்குள் மறைந்த
கடலலையைத் தேடி
கடலை நோக்கி ஓடுவதும்தான்!

உனக்கும் 
எனக்குமான உறவு!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!!(63)
-----------------
காந்தத்துண்டையும்
இரும்புத் துகளையும்
இணைக்கும் ஈர்ப்பு விசையைப் போல!

இருவேறுத் துருவங்களான
நம்மிருவரையும் இழுத்துவந்துச் சேர்த்துவைத்து
வேடிக்கைப் பார்க்கிறது 
"கவிதையே"!
------------------------------
கவிதையே..!!(64)
-----------------
உன்னையெழுதுவதால்
என்னைச் சிலருக்குப் பிடிப்பதில்லை!

என்ன செய்ய !?

உன்னை எழுதாவிட்டால்
என்னை எனக்கேப் பிடிப்பதில்லையே!
-----------------------------------------
கவிதையே..!!(65)
------------------
என்னைப் பார்த்து 
நீ யார் .!?என கேட்டார்கள் 
மத்தியில் !

நீயா..!?என
கேட்க வைத்தது!

நீ தான் "கவிதையே"!
--------------------------


Saturday, 8 August 2015

சிங்கபூர்!(50)

விருட்சமான விதை நீ!

மணக்க மறுக்காத மல்லிகை நீ!

வறுமைப் பறவைகளை அரவணைக்கும் வேடந்தாங்கல் நீ!

உழைக்கத் துணிந்தவர்களை உயர்த்திப் பார்க்கும் தாயுள்ளம் கொண்டவள் நீ!

திறனாளர்களைக் கரம் பற்றி அணைக்கும் நட்பு நீ!

சச்சரவுப் பிள்ளைகளை பெற்றிடாத தாய் நீ!

ஐம்பதாவது சுதந்திரத்தினத்தில் இன்று நீ!

இந்த அற்பனும் வாழ்த்திட ஆசைக்கொள்ளும் அன்னை  நீ!


Friday, 7 August 2015

மறந்தேனா...!!?

மேகத்தினுள் நிலவு
ஒளிகையில்!

விண்மீன்கள் கண் சிமிட்டிச்
சிரிக்கையில்!

பூக்களில் மழைத்துளிகள்
தங்கி இருக்கையில்!

கடலலையில் கால்கள் 
நனைத்து நடக்கையில் !

போர்வையின் இதத்தினை
தேகம் உணர்கையில்!

மழலையின் முடிதனை
கோதி விடுகையில்!

கத்தும் குயிலின் சோகத்தை
உணர்கையில்!

உன்னைத்தான் நினைக்கிறேன்
என்னவளே!!

உன்னை நான் பிரிந்தேன் என்பதினால்
திட்டித் தீர்த்திடு!

பொறுத்துக் கொள்கிறேன் !

ஆனால்
நான் உன்னை மறந்துவிட்டேன் என
ஒரு கணமும் எண்ணிடாதே!

      

Wednesday, 5 August 2015

".............".ப் பிறந்தது நானா..!!?

காதலின் பேரைச் சொல்லி
காமத்தில் கலந்திட்ட கருங்காளிகளாலோ!

தேகத்தின் ஆசைக்கு விலைப்பேசி
ஆணுறை வாங்க வக்கில்லாத
பிச்சைக்காரத் தனத்தினாலோ!


சாதி,மத வெறியாட்டத்தில்
கற்பைச் சூறையாடிய கலவரக் காவலிகளாலோ!

ஜனநாயகத்தினை நிலைநிறுத்தவென சொல்லி விட்டு
சிறைப்பட்ட மானினத்தை சின்னாபின்னமாப் படுத்திய
ஏகாதிபத்திய வெறிநாய்களாலோ!

சிந்தப்பட்ட உயிர்த்துளி 
கர்ப்பப்பையை அடைந்ததினால்
குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன்!

தவறுகளை ,அநியாயங்களை
அத்துமீறல்களைத் தடுக்கத் துப்பில்லாத
மனிதச் சமூகம் என்னைச் சொல்கிறது!

".............".ப் பிறந்தது நானென்று!

       

Sunday, 2 August 2015

அதன் பேர் மனசாட்சி இல்லடா.....!!

அடக்குமுறைகள்
கட்டவிழ்த்து விடப்பட்டாலும்!

நியாயக் கழுத்துக்கள்
தூக்கு கயிறுகளில் தொங்கினாலும்!

பாலுறுப்புகள் சூலாயுதங்களால் 
குத்திக் கிழிக்கப்பட்டாலும்!

வன்புணர்வுகளால் 
சாவின் விழும்பினைத் தொட்டாலும்!

மனிதம் மண்ணோடு மண்ணாய்
மடிந்துப் போனாலும்!

பாதிக்கப்படுவது மனிதம்தான் என
எண்ணாமல்!

பாதிப்புக்குள்ளான சமூகத்தின்
மதத்தைப் பார்த்து
சாதியைப் பார்த்து
மொழியைப் பார்த்து
உன் மனம் கொதிக்குமேயானால்!

அதன் பேர் மனசாட்சி இல்லடா 
மயிருகளா ..!!!

//"மயிருகளா "எனும் தடித்த வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை ,ஆனாலும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இதைவிட நாசுக்கான வார்த்தை எனக்குத் தெரியவில்லை //