Saturday 31 March 2018

வாசிப்பு ...

வாசிப்பு ஒரு சிறுப்பொறி ,அது சிந்தனைத் தீயை பற்ற வைப்பதினால்!

வாசிப்பு ஒரு தாய்மடி,அது சோகத்தின் போதெல்லாம் தலைக்கோதி விடுவதினால்!

வாசிப்பு ஒரு கலங்கரைவிளக்கம் ,அது குழப்ப இருளின்போது வெளிச்சமாய் தெரிவதினால்!

வாசிப்பு ஒரு ஆசை முத்தம்,அது நினைக்கும் போதெல்லாம். இனிப்பதினால்!

வாசிப்பு ஒரு உளி,அது மனதினை செதுக்குவதினால்!

வாசிப்பு ஒரு கோடை மழை,அது வறண்டுப்போன நெஞ்சத்தை குளிர்விக்க செய்வதினால்!

ஆதலால்
வாசி வாசி!

கொஞ்சம் உன்னையாவது
நீ நேசிப்பாய்!






Wednesday 28 March 2018

உன்னை இழந்தால்தான்..

இன்றை இழந்துதான் நாளையைப் பெறுகிறோம்
சத்தை இழந்துதான் சந்ததியைப் பெறுகிறோம்
அறியாமையை இழந்துதான் அறிவைப் பெறுகிறோம்
வியர்வையை இழந்துதான் ஊதியத்தைப் பெறுகிறோம்
பணத்தை இழந்துதான் நல்ல புத்தகங்களைப் பெறுகிறோம்

நான் எனும் ஆணவத்தை இழந்தால்தான் ஞானம் பெறுவோம் .!

Tuesday 27 March 2018

நினைவுக் குட்டை..

மலையுச்சிலிருந்து 
குதிக்க துணிந்த தண்ணீர்
குட்டையை விட்டு கடக்க முடியா நிலைதான்
உன் நினைவில் என் நிலையும்!



Sunday 25 March 2018

நதியைப் போலவே..

கடலில் முடியும் 
நதியைப் போலவே
என் கவிதைகளெல்லாம் 

உன்னிடமே முடிகிறது!!

Saturday 24 March 2018

நாய் முத்தம்..

நாயை முத்தமிட்டு
படுக்கை வரை அனுமதித்து விட்டு
தெருவில் கிடக்கும் சக மனிதனை
அற்ப ஜந்துவாய் பார்ப்பதுதான்
உங்களது நாகரீகம் என்றால்
என்னை மன்னித்து விடுங்கள்
நான் உங்களை சார்ந்தவன் அல்ல!

Thursday 22 March 2018

மனக்கோப்பை!

உன்னை 
எவ்வளவுதான் ஊற்றினாலும்
என் மனக்கோப்பை 
நிறைவதாகவே இல்லை!




Wednesday 21 March 2018

சந்நிதானம்..

பிறரது கண்ணீரே
உங்களது உள்ளத்தை 
சுட்டிடாத போது
நீங்கள் செய்யும்
பிரார்த்தனைகளா
இறைவனின் சந்நிதானத்தை
தொட்டு விட போகுது.!?




Tuesday 20 March 2018

தமிழ் மீசை..

மானமுள்ளவர்களால்
தன் மீசையை முறுக்கி கொள்கிறது
தமிழகம்!


சிந்தனை துளிகள்.


ஏழ்மையெனும் உளிதான்
இப்பிரபஞ்சத்தில்
இலட்சிய சிற்பங்களை
செதுக்குகிறது!

            &

ஏழ்மைப் பட்டறைகள்
புரட்சி வாட்களை 
கூர் தீட்டுகிறது.!


Sunday 18 March 2018

பூக்கள் மட்டுமல்ல..

தோட்டத்திலுள்ள 
பூக்கள் மட்டுமல்ல  
என்னவளே!
உன் முகத்தில் 
பருக்களும் அழகுதான்!


பேர் அழகு..

"நாரோடு சேரும் பூக்கள் மாலையாவதைப் போலத்தான் 
உன்னால் சொல்லப்படும்போதுதான்
என் பெயர்கூட அழகாகிறது.!"


Thursday 15 March 2018

மண்..!

"மண்ணை மலாடாக்கி விட்டு பயிரு விளைய முடியாமல் செய்து விட்டு,     வளர்ச்சியெனும் மயிரை வைத்து என்ன
 செய்ய போகிறீர்கள்..!?" 
                  &
"தன் தாயை காப்பாற்றுபவனை சமூக விரோதியென சொல்வது போன்றுள்ளது .தன் மண்ணை காப்பாற்ற போராடுபவனை ,தேசத்துரோகியென சொல்வது."!
                     &

தவிச்ச வாயிக்கு தண்ணீர் கொடுப்பதை தர்மமாக நினைப்பது தான் தமிழர் பண்பாடு .அத்தமிழர்களின் மண்ணை பாழாக்குவெதென்பது வெட்கக்கேடு.!"

மனதோடு மழைக்காலம்..!



     மழை இந்த வார்த்தையைக் கேட்டாலே ஒரு வித சிலிர்ப்புதான் ,நெஞ்சோடு உரசும் எனக்கு.சில நேரங்களில் ,ஏதோ பிரம்மைப் பிடித்தவனைப் போல் ,பார்த்துக் கொண்டிருப்பேன் மழை பெய்துக்கொண்டிருப்பதை,அது நனைத்த மரங்களை,மைனாக்களை,சாலையை,,பாதசாரிகளையென வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.ஏன் இந்த மழைமேல் எனக்கொரு மோகம்..!?ஒருவேளை காய்ந்துப் போன மண்ணில் பிறந்தவன் என்பதால்தானோ.!?என்னவோ..!?ஆம் தாகம் கொண்டவனுக்குத்தான் ,தண்ணீரின் அருமை.

      சிறுவயதில் மழை நேரங்களில்,பலதரப்பட்ட சந்தோசங்கள் கிடைக்கும்.அதில் சிலவைகள், பள்ளிக்கூடம் இடையிலேயே விட்டு விடுவதும்,மதரசாக்களும் விடுமுறை விடுவதும்.அப்பொழுதெல்லாம்,தெருவில் ஓடும் மழைத் தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு செல்வதும்,மாடி வீடுகளிலும்,ஓட்டு வீடுகளிலும் ,வழியும் தண்ணீரில் குளிப்பதும் அலாதியான சுகம்.நீண்ட நாட்களாக உப்பு நீரில் குளித்ததினால்,மழைத் தண்ணீர் தேனாய்தான் இனிக்கும்.யானை வரும்
பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்களால்லவா .!?அதுப்போலவே தான் மழை வந்த சில நாட்களில்,தும்பிகளும் வந்து விடும்.அத்தும்பிகளுக்கு பல்வேறான பேர்கள் இட்டிருப்பார்கள்."கண்ணாடி தும்பி,ராஜா தும்பி,வயித்து முட்டித் தும்பி,"இப்படியாக,இத்தும்பிகளை பிடிக்க வேண்டுமென்றால்,காலையில் செடிகள்,வேலிகள் இருக்கும் இடங்களுக்குச் சென்றால்,இலகுவாக பிடிக்கலாம்,காலை நேரம் தும்பிகள் ,துயிலில் இருக்கும்.

        முதலில் குறிப்பிட்ட தும்பிகள் சிறுவகையானவைகள்."மோதிரம் தும்பி,யானைத் தட்டான்,வரிக்குதிரை"என பெரியவகைத் தும்பிகளும் ,அவ்வயதில் பிடித்து விளையாடுவதும் உண்டு .பெரிய தும்பிகளை காட்டிற்கு சென்றுதான் பிடிக்க முடியும்.ஒடைமரத்தில் ஒட்டி இருக்கும் ,அத்தும்பிகளை பிடிக்க உயரம் பற்றாமல் இருப்பதினால் ,ஒருவர் தோளில் இன்னொருவர்,ஏறி நின்றுக் கொண்டு தான் பிடிப்போம்.அதுவும் சப்தம் எதுவும் போடாமல்,மிக எச்சரிக்கையாக இருக்க இல்லையென்றால்,அத்தனை சிரமங்களும் பாழாகி விடும்..

    பிடித்து வந்த "மோதிரத்தும்பி"யின் வாலை நூலால் கட்டி,ஒரு டப்பாவில் போட்டு,இரவில் பசித்தால் சாப்பிடும்
என ,சிறு தும்பிகளை இறக்கைகளை பாதி பிய்த்து விட்டு,டப்பாவில் போட்டு அடைத்து வைத்து ,காலையில் பார்த்தால் ,தும்பிகள் செத்து எறும்புகளுக்கு இறையாகி ,செத்துக் கிடக்கும்.காரணம் புரியாமல் எறும்பின் மீது கோபம் கொண்டு காலால் மிதிப்பேன்,அவ்வெறும்புகளை.!

    அதோடு வண்ணத்துப்பூச்சிகள்,"கொளுஞ்சி செடிகளில்"அதிகமாக ஒட்டி இருக்கும்,கூட்டம் கூட்டமாக.அதனை தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு ,பொத்தினாலே போதும்,சாதுவாக மாட்டிக்கொள்ளும்,அதன் வாலில் நூலைக் கட்டி பறக்க விடுவது ஒரு சந்தோசம் அந்த வயதில் ."ஒரு வண்ணத்துப் பூச்சி ஒன்று ,என் வழி தேடி வந்தது அந்த வண்ணங்கள் மட்டும் எந்தன் விரலோடு உள்ளது"என ஒரு பாடல் வரியை எப்பொழுது கேட்டாலும்,எனக்கு அந்த வண்ணத்துப்பூச்சிகள் தான் .என் நினைவிற்கு வரும்.இப்பொழுதெல்லாம் வரும் கொஞ்ச நஞ்ச தும்பிகளையோ,வண்ணத்துப்பூச்சிகளையோ,பிடித்து பறக்க விட்டு பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன்...







     

Tuesday 13 March 2018

வாடாதிருக்க தான்..

பூக்கள் வாடிடாமல் இருப்பதற்காக 
பூக்களின் மீது தெளிக்கும்
தண்ணீரைப் போல தான்
என் மனம் வறண்டுப்போகாதிருக்க 
உன் நினைவுகளை
கவிதைகளாக்கி கொள்கிறேன் !"


சிந்தனை துளிகள்..

மழைப் பேய்ந்து ஓய்ந்து விட்டது!
என்னை மட்டும் ஞாபகத் தூறலில் நனைய விட்டு!

              &

ஊறுகாயை திறந்து வைத்தவர்களை விட்டு விட்டு,வாயில் எச்சில் ஊறியவர்களை குற்றவாளிகளாப் பார்க்கிறது.இக்கலிகாலம்.

            &

"நீர்க்குமிழிக்காக
சமுத்திரத்தை இழந்திடாதே!"

             &

"அண்ணன் தம்பிகள் அதிகமாக பேசிக்கொள்வதில்லையென்றாலும்,மனதோடு உறவாடிக் கொள்வார்கள் ."


               

Monday 12 March 2018

இஞ்சிச் சாறாய்..

நாவின் வழிச் சென்று
தொண்டைக்குழிக்குள் தங்கியிருக்கும்
இஞ்சிச் சாற்றின் காரம்போல்
நாம் கேலிப்பேசி கலைந்திட்டப் போதும்
இன்னும் மிச்சமிருக்கிறது
நமக்குள் நேசம்."


   

இருள் வெளிச்சம்..!(சிறுகதை)


    "ஹரி ராயா"விடுமுறை தினமென்பதால்,அன்றைய தினம் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் ,ஜனத்திரள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.உள்ளூர்வாசிகள்,சுற்றுலாப்பயணிகள் ,என திட்டுத் திட்டாக குழுமி இருந்தார்கள். சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டியும்,கடல் நீரில் கால்களை நனைத்தும் விளையாட,அப்பிள்ளைகளின் வீட்டுப் பணிப்பெண்கள் பின்னாலேயே பாதுகாப்புக்காக நின்றுக் கொண்டிருந்தார்கள் .ஒரு சிலர் "சூரியக்குலியலில்" தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்

       இதில் ஒரு ஓரமாக பாறங்கற்கலால் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றின் மேல்,நான்,மரைக்கான்,மைதீன்,ரியாஸ்,என சிலபேர்கள் அமர்ந்துக் கொண்டு சில கதைகள் பேசிக் கொண்டிருந்தோம்.ஆழ்கடலும்,அதில் மிதந்த கப்பல்களும்,மயங்கும் மாலைப்பொழுதும், என்னை ஏதேதோ செய்தது மட்டுமல்லாமல் ஏதேதோ சொன்னது.அப்போது மரைக்கார் சொன்னார்.

   "சீனி அந்தா தீவு மாதிரி தெரியுதுல..அதான் "பாத்தாம்" இங்கே இருந்து அரை மணி நேரத்துல அங்கே போயிரலாம்.. நீதான் வர மாட்டேங்குறியே..."என்றார்.

"ஆமாம்பா...நான் வர வேணாம்னு நீங்கதான்,நான் வரமுடியாத நேரமா பாத்து சொல்லுறீங்க ...அப்படினா எப்படி வாராது..." என்றேன்.

    "ஆமாம் நீ வந்துட்டாலும்....உருப்பட்ட மாதிரிதான் போயி வேலய பாரு.."என்றான் மைதீன்.

சில நேரப் பேச்சுக்கு பிறகு,
"சரி இந்த பெருநாள் லீவோட போயிட்டு வந்துருவோம்..நாளைக்கு சரி வரும்....இரு, அங்க உள்ள டெக்சி டிரைவருக்கு போன் பண்ணிக் கேட்டுக்குறேன்..."என மரைக்கார் போன் செய்தார்.பேசி விட்டு...

"இல்ல...ரென்டு நாளைக்கு எல்லாம் லீவாம்..பெருநாள்னால வர வேணாம்னு சொல்றான்.."என்றார்.

     சரி விடு என்று மற்ற கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தோம்.சூரியன் முழுவதுமாக மறைந்திருந்தான்.மின்மினிப் பூச்சிகளாய் ,கப்பலில் வெளிச்சம் தெரிந்துக் கொண்டிருந்த அவ்வேளையில் மரைக்கார் போன் அலறிற்று.

     "அன்பு மலர்களே ...!!நம்பி இருங்களேன்...!நாளை நமதே..!"என அழைப்பொலி சப்தத்தைக் கேட்டு,தன் கைப்பேசியை காதிற்கு கொடுத்து பேசினார் மரைக்கார் .

   "ஹலோ...."

"..........."

"நாங்க ஈஸ்ட் கோஸ்ட்ல தான் இருக்கோம்..."

"......................."

"சீனி,மைதீன் எல்லாம்தான்.....நீ அங்கேயே இரு... கொஞ்சம் நேரம் கழிச்சி அங்கே வந்துறோம்..."என பேசி விட்டு கைப்பேசியை ,தன் சட்டைப்பையிக்குள் போட்டு விட்டு மரைக்கார் சொன்னார்.

    "அவந்தான்டா....நவாஸ்...சீனி ,ஒன்னோட படிச்சான்ல...அவந்தான்....
பின்னாலதான் கூட்டாளிகளோட இருக்கானாம்...கூப்பிட்டான்...அப்படியே பார்த்து விட்டு போவோம்...என மரைக்கார் சொல்லி முடித்தார்.

     எனக்கு சில பல நினைவுகள் மனதிற்குள் அசைந்தாடிற்று.சிறுவயதில் ஒரே மதரசாவில் ஓதியவர்கள்தான் நானும்
அவனும்.அரசுப்பள்ளியில் படிப்பு என சிறு வயது வாழ்க்கை. வயது்ஏற ஏற விளையாட்டும் கூடியது.பம்பரம்,கிட்டி,பளிங்கு ,குதிரைக்கல்,கள்ளன் போலீஸ்.....இப்படியாக எக்கச்சக்கமான விளையாட்டுகள் .இன்றைக்கு அவ்விளையாட்டுகள்.தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும்,கைப்பேசிக்குள்ளும் ,நாமும் நம் குழந்தைகளும் புதைந்துப் போனதால் ,அவ்விளையாட்டுகளும் அழிந்துப் போய் விட்டது.

     வேப்பமரத்தில் தேன் எடுத்து குடிப்போம்,இப்படியாக இருக்கையில்தான்,ஒருநாள் நொங்கு வெட்ட பனைமரத்தில் ஏறி இருந்தான் நவாஸ் .

     பனையின் மீதேறி ஓலையின் மேல் லாவகமாக அமர்ந்துக் கொண்டு ,நொங்குகளை  வெட்டினான்.கீழே இருந்த நான் எடுத்துக் கொண்டிருந்த வேளையில்,அப்பனைமரங்களை குத்தகைக்கு எடுத்திருந்த பால்சாமி நாடார் ,"டேய்...எவன்டா அது ...!?என ஓடி வந்தார்.அவர் வருவதைப் பார்த்து மேலிருந்து அருவாளை கீழேப் போட்டு விட்டு,விறு விறுவென கீழே இறங்கினான் நவாஸ் .கீழிருந்த நான்,அருவாளையும் நொங்குகளையும் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தோம்.அவரால் எங்களைப் பிடிக்க முடியவில்லை .வீட்டிலும்,தலைமையாசிரியை ராஜலட்சுமி அவர்களிடமும் போட்டுக் கொடுத்து விட்டார் பால்சாமி.

        வீட்டில் திட்டும் அடியும்,பள்ளிக்கூடத்தில் பிரம்பு ஒடியும் வரை அடியும் அவர் சொல்லிக் கொடுத்ததின் பலனாக கிடைத்தது.அப்படியாக காலம் கடந்தது.ஆறாவது படிக்கையில் நவாஸ் அவனது உறவினர்களின் உதவியுடன் ,சிங்கபூரில் படிப்பதாக பயணம் கிளம்பி விட்டான். நான் எட்டுவரை படித்து விட்டு,தொடர்ந்து படிக்க ஆர்வமும் ,ஆசையும் இருந்தாலும்,வறுமையும் ,கடமையும் கூடுதலாக இருந்ததால் பிழைப்புத் தேட வேண்டி வந்தது.பள்ளிக்கூடம் நடத்தாத பாடத்தை இந்த உலகம் எனக்கு நிறைய நடத்தி இருக்கிறது, நடத்திக் கொண்டே தான் இருக்கிறது.

      சில வருடங்கள் கழித்து நானும் பிழைப்புத் தேடி சிங்கபூர் வர வாய்ப்பு அமைந்தது. ஆனாலும் நவாஸை சந்திக்க, நட்பை புதுப்பிக்க வாய்ப்பு அமையவில்லை ,இப்படியாக நினைவலைகளில் ,கடற்கரை மணலில் மல்லாந்து படித்திருந்த என்னை..

"கண்ணை தொறந்துக்கிட்டே கனவு காணாதே... எந்திரி.."னு என்னை எழும்ப சொன்னான் மைதீன்.

    சிறு தயக்கமும் கலக்கமுமாக அவர்களுடன் சென்றேன்.சிறிது தூரமே நடந்திருப்போம்.அப்போது ஒரு குரல் கேட்டது ,"தேத்தண்ணி"கடையிலிருந்து..

"ஹலோ செல்லம்...என்னலா பாக்காமா போறீங்க..!? என....

     கூப்பிட்ட இடம் நோக்கித் திரும்பிப் பார்த்தால்,அங்கே "தேத்தண்ணி "கடையில் வேலைப்பார்க்கும் ஷேக் ,எங்களை நோக்கி வந்தான்.

"என்னங்க மச்சாமார்களா...!இந்த பக்கம் வந்திருக்கீங்க..!?என்றுக் கேட்டான்.

"இல்ல..சும்மாதான் .."பின்னால நவாஸும் அவன் கூட்டாளிகளும் வந்திருக்கானுக..அதான் பாக்க போறோம் ..."என்றார் மரைக்கார்.

"அங்கேயே இருங்க...வேல முடிஞ்சதும் வந்துறேன்...விடிய விடிய ஆடி வாறோம் "என்றான் சிரித்துக் கொண்டே.

   பேசிக் கொண்டிருந்த அவ்வேளையில் ,சகுபர் தன் கடையிலிருந்து ,கரும்புச்சாறு கொண்டு வந்து,எங்களது கையில் திணித்தான்."குடிங்க மச்சான் என்று.வாங்கிக் குடித்துக்கொண்டே  நடந்தோம்.சிறிது தூரத்தில் குளம் போன்ற நீர் நிலை அருகில்,கும்பலாக உட்கார்ந்திருந்தார்.அவர்களை நெருங்க ,நெருங்க அவர்கள் பேசிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைகள் அவர்களுக்கு தலைக்கேறிய போதையை உணர்த்தியது.அவர்கள் அருகே சென்றதும்,கைகள் குலுக்கி விட்டு,உட்கார்ந்தோம்.என்னைப் பார்த்ததும் நவாஸ் என்னருகே வந்தான்.

     என்னைப் பார்த்த  ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்திருந்தது அவனது முகத்தில் தெரிந்தது.அவனது உருவத்தில் நிறைய மாற்றம்,உடலில் அங்கே,இங்கே என பச்சைகள் இருந்தது.அது அவனது கடந்த காலத்தை காட்டியது.

   "என்னடா எப்படி இருக்கா...!?என பேச ஆரம்பித்தவன்,ஊரில் உள்ள,ஆலமரக் கண்மாய்,மணல்மேடு,விளையாட்டு திடல்,சாயாக்கடை,மளிகை கடை ஹரிதாஸ் அண்ணன்,ஆச்சாமார்கள்,இப்படியாகஅவன் நினைவில் இருந்தவற்றைப் பற்றியெல்லாம் கேட்டான்.நானும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

   "ஏன்டா.. இவ்வளவு கேட்குறே ..ஊருக்கு போயிட்டு வராலாம்ல...?என கேட்டேன் நான்.

"ம்ம்...போகனும்டா...."என பெருமூச்சு விட்டவனாக சொன்னான்.

    என்னுடன் வந்தவர்கள்,அங்கிருந்தவர்களுடன் விளையாடிக் கொண்டு,கதையளந்துக் கொண்டிருந்தார்கள்.அப்படியே சிலர் எழுந்து காலாற ,நடக்க ஆரம்பித்தார்கள்.அங்கே மிச்சம் இருந்தது.நானும் நவாஸும் தான்.எனக்கு மனதில் பட்டுக் கொண்டே இருந்தது.நாங்கள் பேசிக் கொண்டிருப்பது,சண்டையில் தான் முடியும் என்று,அதற்கு காரணமும் இருந்தது.

      அவன் பக்கத்தில் காலியான பீர் பாட்டில்கள் கிடந்தது.அவன் அதை எடுத்து அடித்தால்,நான் என்ன அவனை செய்யனும் என்பதை மனதிற்குள் படமோட்டிப் பார்த்துக் கொண்டேன்.பேசிக்கொண்டே "மார்ல்ப்ரோ" சிகரட் எடுத்து பற்ற வைத்தவன்,எனக்கொன்று தந்தான்.

   "இல்ல..வேணாம்..."என்றேன்.

"ஏன்..அடிக்க மாட்டியா..!?"என்றான்.

"இல்ல விட்டு ரொம்ப வருசமாச்சி...."

"....சரி..."என்றவன். சிகரட் புகையை வலது பக்கமாக ஊதி விட்டு,என்னிடம் கேட்டான்.நான் எதிர்பார்த்த கேள்வியை...

"ஆமா..எதுக்கு எந்தம்பிய...ஊர்ல...அதான் வாலிநோக்கத்துல வச்சி அடிச்சே..."


       இரண்டாண்டுகளுக்கு முன்னால்,விடுப்பில் தாயகம் சென்றிருந்தேன்.ஒரு நாள் இராமநாதபுரத்தில் எஸ் டி பி கட்சி நடத்திய ஈத்மிலன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விட்டு,நானும் கபீபும் பைக்கில் வந்துக் கொண்டிருந்த வேளையில் ,என் கைப்பேசி எடுத்துப் பேச அழைத்தது.பைக்கில் பின்னாலிருந்த நான் எடுத்துப் பேசினேன்.எதிர்முனையில் ஆரிப்.

"ஹலோ.."

"அஸ்ஸலாமு அலைக்கும்..அண்ணே எங்கே இருக்கா..!?"

" அலைக்கும் சலாம்....ராம்நாட்ல இருந்து வந்து கிட்டு இருக்கோம்டா..சிக்கல் கிட்ட நெருங்கிட்டோம்...ஏன்டா..."

"அப்படியே வாலிநோக்கம் காலணிக்கு வந்துட்டுப் போ..."

"எதுக்கு..!?"

"பிரச்சனப்பா...கூட யாரு வந்துருக்கா.."!?

"கபீப் வந்துருக்கான்..."

"நல்லதா போச்சு ...அவனையும் கூட்டி வா.."என சொல்லி விட்டு கைப்பேசியை அணைத்து விட்டான்.

பைக் ஓட்டிக் கொண்டே கபீப் கேட்டான்..

"யார்டா போன்ல.."

"ஆரிப் தான்"

"என்னவாம்...!?"

"வாலிநோக்கம் கூப்புடுறான்...ஏதோ பிரச்சனையாம்.."!

"ஷ்...ஷ்...அங்கே போயி எப்ப வீட்டுக்குப் போக...எம்பொண்டாட்டி காலையில பைக் எடுக்கயில சொன்னா...நீயும்,சீனி அண்ணனும் ஒன்னா சுத்துற வரைக்கும் உருப்பட மாட்டீங்கனு.."

"ஹா...ஹா...சொல்லட்டும்டா..பாவம் அதுக நம்மள கட்டிக்கிட்டு கஸ்டப்படுதுகள்ல..அதான் சொல்லிருக்கும்..."

"ஏன் நல்லாதானே வச்சிருக்கோம்..வேற என்ன..!?சரி சித்திக் போன் பண்ணி வர சொல்லு அங்கே.."

"அவன் வேணாம்டா..ஏற்கனவே கேஸ் கோர்ட்னு அலையிறான்..."

பேசிக்கொண்டே வாலிநோக்கம் காலணிக்கு சென்று விட்டோம்.அங்கே பழைய கிணற்றுக்கருகே கூச்சலும் குழப்பமுமாக ஒரு கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது .

     அக்கூட்டத்தை நெருங்கினோம்,சுற்றி ஒரு வட்டமாக இளைஞர்கள் பலரும்,அதனூடே வாலிநோக்கம் ரபீக்கும்,ஆரிபும் உட்கார்ந்திருந்தார்கள்.கூட்டத்தின் நடுவிலே மூன்றுப்பேர்கள் இருந்தனர்.அதில் இருவர் காலணியைச் சேர்ந்தவர்கள்.அவ்விருவருக்கும் அடிபலமாக விழுந்திருக்கும்போல,எங்கள் ஊரு ஹைதர் எந்த பாதிப்பும் இல்லாமலே உட்கார்ந்திருந்தான்.நாங்கள் போயி உட்கார்ந்ததும் ரபீக் சொன்னான் .கபீபைப் பார்த்து..

     "கபீபு...இங்க உள்ளவனுங்களோட ,ஒங்க ஊரு ஹைதரும் போதையப் போட்டு,ஊரை "கிழிச்சி"ருக்கானுங்க...அதோட இங்க உள்ள பசங்க ரெண்டுப் பேருக்கு,அடிய போட்டானுங்க..,ஹைதர் ஒங்க ஊருக்காரன்னால,நாந்தான் அடிக்க விடாம,பிடிச்சி வச்சி..,ஆரிபை வர சொன்னேன்.நீங்களும் வந்துட்டீங்க.."என்று சொல்லி முடித்தான்.

    ஏற்கனவே உள்ளூரிலும்,பல பிரச்சனை இந்த ஹைதரால்,எனக்கு இவன்மேல் அதனால் கோபம் இருந்தது,இப்போது இந்த பிரச்சனையைப் பார்த்ததும் இன்னும் ஆத்திரம் தலைக்கேறியது.ஹைதர் அருகே போயி கேட்டேன்

"ஏன்டா ..!?இப்படி அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கே..?"என்று

     அவன் அலட்சியமாக என்னைப் பார்த்து விட்டு சொன்னான்.

   "உன்னுடய வேல மயிரைப் பாத்துப் போ..பெருசா பேச வந்துட்டான்.."னு சொன்னான்.

          அவ்வாறு அவன் என்னைத் திட்டியதும்,நான் கபீபைத் திரும்பிப் பார்த்தேன்.கபீப் ,ஆரிபை பார்த்தான்.ஆரிப் "அடியப் போடு"னு செய்கை செய்தான்."சப் சப்"அடிய கிளப்பினேன்.கபீப் வந்து பிரித்து விட்டான்.காலணியைச் சார்ந்தவர்கள்.

 "அண்ணே..அவனை விட்டுட்டு போங்க..நாங்க "கவனிச்சி"அனுப்புறோம்"என்றார்கள்.

  "ஏய்...சும்மா இருங்கப்பா...அவுகதான் அடிச்சிட்டாங்கள்ல..வேற என்ன..!?என உள்ளூர்வாசிகளைத் திட்டு விட்டு,எங்களைப் பார்த்து ரபீக் சொன்னான் ."நீங்க அவனைக் கூட்டிக்கிட்டுப் போங்க"என்று.

   ஆரிப் பைக்கில் ஹைதரை ஏற்றிக் கொண்டு,கபீப் பைக்கில் நானும் ஏறிக்கொண்டு ,காலணியிலிருந்து வாலிநோக்கம் பஸ் ஸ்டாப் வந்தடைந்தோம்.டீக்கடையில் ஆளுக்கொரு டீ வாங்கி குடித்துவிட்டு ,வீட்டிற்கு கொஞ்சம் பூரி வாங்கிக் கொண்டோம்.ஹைதருக்கும் வாங்கி கொடுத்தோம்.ஒன்றும் பேசாமல் வாங்கிக்கொண்டான்.ஏதாவது பேசினால்,போகும் வழியில் நடுக்காட்டில் ,மூன்றுப் பேரும் சேர்ந்து அடித்தாலும் அடிப்பார்கள் என ஹைதரும் நினைத்திருக்கலாம்..."

      இச்சம்பவம் ஊருக்குள் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது."சீனி எதுக்கு அவன அடிக்கனும்"என்றும்,"அங்கே பிரச்சனையை ஓய்க்க அடிச்சிருப்பான்"பா என்றும்,பேசி விட்டு ஊரு ஓய்ந்து விட்டது.ஒரு நாள் மாலை நேரம் கடற்கரை சென்று வர செம்மண் சாலையில் நடந்துச் செல்கையில் ,தம்பி நசீர் என்னைப் பார்த்ததும்,சாயாக்கடையில் இருந்தவன்,ஓடி வந்து பேச்சுக் கொடுத்தான்.

   "என்னண்ணே...கடக்கறைக்கா...போறா...!?

"ம்..ம்..இல்ல,கபுர்ஸ்தானுக்கு போறேன்...!"

"சும்மா இருண்ணே...எப்ப பாத்தாலும் ,நக்கல் பண்ணாம..நான் ஒன்னு சொல்லுறேன்...யார்கிட்டயும் சொல்லிறாதே...நான் சொன்னேனு .."

"மொதல்ல சொல்லு...அப்புறம் நான் யோசிக்கிறேன்...சொல்லவா..!சொல்ல வேணாமா"னு."

"அன்னைக்கு ஹைதரை அடிச்சீல..அதை அவன் அண்ணன் நவாஸ் கிட்ட,போன்ல சொன்னான்.நீ சிங்கபூர் போனதும் உன்னை அடிக்கனும்னு சொன்னான்ணே..அதான் மனசு கேட்காம ஒங்கிட்ட சொன்னேன்.."

"ஏன்டா..இப்படி பேசுன அவனை சும்மாவா..விட்டா..!?"என கேட்டேன் கேலியாக.

"அண்ணே..நீ அடிச்சனால ஊருக்குள்ள ஹைதர் நடாமாடுறான் ,நான் அடிச்சிருந்தேனு வச்சிக்க...இன்னேரம் கொலை கேஸ்ல நான் உள்ளே போயிருப்பேன்"என நக்கலாக சொன்னான் நசீர்.

        சில நாட்கள் நான் விடுமுறை முடிந்து சிங்கபூர் திரும்பி விட்டேன்.நவாஸை எதிர்ப்பார்த்தேன்.என்னை சந்திக்க வருவான் என ,ஆனால் அவன் வரவில்லை.இந்த எண்ணமே நவாஸ் மீது என் மனதிற்குள் கோபத்தை உற்பத்தி செய்திருந்தது .இத்தனை நாட்கள் கடந்து ,பெருநாள் அன்றுதான்,நவாஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    "சீனி...சொல்லு.. ஏன் எந்தம்பியை அடிச்சே..."என திரும்ப கேட்டான் நவாஸ்.

     "ஏன் அடிச்சேனு ஒந்தம்பி ,ஒங்கிட்ட சொல்லலையா..!?"எனக் கேட்டேன்.ஏதாவது பண்ணு நீ அப்புறம் இருக்கு ஒனக்கு"னு மனதிற்குள் வன்மத்தை வைத்துக்கொண்டு .

   "அவன் ஆயிரம் செய்வான்டா...நீ என்ன ......க்கு..அவனை அடிச்சே...ஊர்ல நீ என்ன பெரிய ......!?எனக் கேட்டு,பீர் பாட்டிலை எடுப்பான் என எதிர்பார்த்தேன்.ஆனால் அவனோ....

 "வெவரம் சொன்னான்டா...அதோட ஒன்னைய அடிக்க சொன்னாம்பாரு...எனக்கு வந்து ஏறிடுச்சி..."கிழி கிழினு" ,தம்பிக்காரன கிழிச்சி விட்டுட்டேன்.நான் எப்படிடா ஒங்கோட சண்ட போட...நாம எப்படிப்பட்ட கூட்டாளி தெரியுமா...!?அவனுக்கு....,நான் சொன்னேன் அவங்கிட்ட,சீனி அடிச்சதோட விட்டுரு,அவனை பாக்குற போது ,சீனி கிட்ட வம்பு பண்ணே...ஓம்மூஞ்சிய ஒடப்பேன்....."என அவன் தம்பி ஹைதரை அவன் திட்டியதை சொல்ல சொல்ல,எனக்கோ கண்கள் கலங்கி விட்டது.அவ்விருட்டில் நவாஸ் அதனை கவனிக்கவில்லை .

   ஆம்,எனது தவறான புரிதலையும்,அவன்மேல் நான் கொண்டிருந்த வன்மத்தையும் நினைத்து அவ்விடத்தில் வெட்கத்துடன்,தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன் நவாஸ் முன்பாக.

(முற்றும்)