Thursday, 15 March 2018

மனதோடு மழைக்காலம்..!



     மழை இந்த வார்த்தையைக் கேட்டாலே ஒரு வித சிலிர்ப்புதான் ,நெஞ்சோடு உரசும் எனக்கு.சில நேரங்களில் ,ஏதோ பிரம்மைப் பிடித்தவனைப் போல் ,பார்த்துக் கொண்டிருப்பேன் மழை பெய்துக்கொண்டிருப்பதை,அது நனைத்த மரங்களை,மைனாக்களை,சாலையை,,பாதசாரிகளையென வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.ஏன் இந்த மழைமேல் எனக்கொரு மோகம்..!?ஒருவேளை காய்ந்துப் போன மண்ணில் பிறந்தவன் என்பதால்தானோ.!?என்னவோ..!?ஆம் தாகம் கொண்டவனுக்குத்தான் ,தண்ணீரின் அருமை.

      சிறுவயதில் மழை நேரங்களில்,பலதரப்பட்ட சந்தோசங்கள் கிடைக்கும்.அதில் சிலவைகள், பள்ளிக்கூடம் இடையிலேயே விட்டு விடுவதும்,மதரசாக்களும் விடுமுறை விடுவதும்.அப்பொழுதெல்லாம்,தெருவில் ஓடும் மழைத் தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு செல்வதும்,மாடி வீடுகளிலும்,ஓட்டு வீடுகளிலும் ,வழியும் தண்ணீரில் குளிப்பதும் அலாதியான சுகம்.நீண்ட நாட்களாக உப்பு நீரில் குளித்ததினால்,மழைத் தண்ணீர் தேனாய்தான் இனிக்கும்.யானை வரும்
பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்களால்லவா .!?அதுப்போலவே தான் மழை வந்த சில நாட்களில்,தும்பிகளும் வந்து விடும்.அத்தும்பிகளுக்கு பல்வேறான பேர்கள் இட்டிருப்பார்கள்."கண்ணாடி தும்பி,ராஜா தும்பி,வயித்து முட்டித் தும்பி,"இப்படியாக,இத்தும்பிகளை பிடிக்க வேண்டுமென்றால்,காலையில் செடிகள்,வேலிகள் இருக்கும் இடங்களுக்குச் சென்றால்,இலகுவாக பிடிக்கலாம்,காலை நேரம் தும்பிகள் ,துயிலில் இருக்கும்.

        முதலில் குறிப்பிட்ட தும்பிகள் சிறுவகையானவைகள்."மோதிரம் தும்பி,யானைத் தட்டான்,வரிக்குதிரை"என பெரியவகைத் தும்பிகளும் ,அவ்வயதில் பிடித்து விளையாடுவதும் உண்டு .பெரிய தும்பிகளை காட்டிற்கு சென்றுதான் பிடிக்க முடியும்.ஒடைமரத்தில் ஒட்டி இருக்கும் ,அத்தும்பிகளை பிடிக்க உயரம் பற்றாமல் இருப்பதினால் ,ஒருவர் தோளில் இன்னொருவர்,ஏறி நின்றுக் கொண்டு தான் பிடிப்போம்.அதுவும் சப்தம் எதுவும் போடாமல்,மிக எச்சரிக்கையாக இருக்க இல்லையென்றால்,அத்தனை சிரமங்களும் பாழாகி விடும்..

    பிடித்து வந்த "மோதிரத்தும்பி"யின் வாலை நூலால் கட்டி,ஒரு டப்பாவில் போட்டு,இரவில் பசித்தால் சாப்பிடும்
என ,சிறு தும்பிகளை இறக்கைகளை பாதி பிய்த்து விட்டு,டப்பாவில் போட்டு அடைத்து வைத்து ,காலையில் பார்த்தால் ,தும்பிகள் செத்து எறும்புகளுக்கு இறையாகி ,செத்துக் கிடக்கும்.காரணம் புரியாமல் எறும்பின் மீது கோபம் கொண்டு காலால் மிதிப்பேன்,அவ்வெறும்புகளை.!

    அதோடு வண்ணத்துப்பூச்சிகள்,"கொளுஞ்சி செடிகளில்"அதிகமாக ஒட்டி இருக்கும்,கூட்டம் கூட்டமாக.அதனை தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு ,பொத்தினாலே போதும்,சாதுவாக மாட்டிக்கொள்ளும்,அதன் வாலில் நூலைக் கட்டி பறக்க விடுவது ஒரு சந்தோசம் அந்த வயதில் ."ஒரு வண்ணத்துப் பூச்சி ஒன்று ,என் வழி தேடி வந்தது அந்த வண்ணங்கள் மட்டும் எந்தன் விரலோடு உள்ளது"என ஒரு பாடல் வரியை எப்பொழுது கேட்டாலும்,எனக்கு அந்த வண்ணத்துப்பூச்சிகள் தான் .என் நினைவிற்கு வரும்.இப்பொழுதெல்லாம் வரும் கொஞ்ச நஞ்ச தும்பிகளையோ,வண்ணத்துப்பூச்சிகளையோ,பிடித்து பறக்க விட்டு பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன்...







     

No comments:

Post a Comment