Friday, 31 October 2014

தீண்டாத்தண்ணீர்..!!

தெருவிலோடிய மழைத்தண்ணீரில்
உன் வீட்டுத் தண்ணீரை நானறிந்தேன்!

என்மீது படாமல்
அத்தண்ணீர் ஒதுங்கிச் சென்றபோது !

         

Thursday, 30 October 2014

மேகப்பெண்..!!

ஓ!
மேகப் பெண்ணே!
ஏன் கதறிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறாய்!

ஆதிக்கவெறி நாய்களால்
குதறப்பட்ட
என் தேசப் பெண்களைப்போல்!

     

மழை..!!

கொட்டிய மழை
நின்று விட்டது!

என்னுள்
நினைவுமழையை
கொட்டச் செய்துவிட்டு.!!

       

Sunday, 26 October 2014

சரித்திரம்..!!

தடுத்தும்
அடித்தும்
களமாடும்
கிரிக்கெட் வீரனைப்போல !

ஓடியும்
ஓங்கி எத்தியும்
இலக்கையடையும்
கால்பந்தாட்ட வீரனைப்போல!

தற்காத்தும்
தாக்கியும்
தன்பலத்தை நிலைநாட்டும்
குத்துச்சண்டை வீரனைப்போல!

தடைகளை தகர்த்து
சூழ்ச்சிகளை மிதித்து
வாழத்துணிந்தவனே
சரித்திரமாகிறான்!

         

Saturday, 25 October 2014

மூத்தரச் சந்து..!! (நகைச்சுவை )


       "மாப்ள! சொல்ல மறந்துட்டேன்டா..!! கவிதா உன்னை விரும்புதான்டா..!!

     "இல்ல பரவாயில்லடா..!! அவ அண்ணே உன்ன "மூத்தரச் சந்துல கவனிச்சான்"னு கேள்விப்பட்டேன்டா..!!

            

Friday, 24 October 2014

தேடுகிறேன் ...!!

கவலையில்லாத மனிதர்களை..!

பொன்னை விரும்பாத பெண்டிர்களை.!

விடுதலையை நேசிக்காதப் போராளிகளை!

தமிழகத்தில் மின்வெட்டில்லாத ஒரு நாளை..!


தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாத அரசியல் கட்சிகளை..!

தோல்வியைச் சுவைக்காத வெற்றியாளர்களை..!

டாஸ்மாக் குறுக்கிடாதச் சாலைப் பயணத்தை.!

பாலியல் வன்கொடுமையில்லாத நாளிதழை..!!

தேடுகிறேன் !

கிடைக்காதென்றுத் தெரிந்தும்
தேடுகிறேன் !!

       

Monday, 20 October 2014

நீயில்லை..!!

காலைத் தேநீர் சுவைத் தரவில்லை!

தீண்டும் தென்றலும் குளிரவில்லை !

பௌர்ணமி நிலவும் கதைச் சொல்லவில்லை !

கடல்நுரையும் கால் நனைக்க வரவில்லை !

பிடித்தக் கவிதையும் தலைக் கோரவில்லை !

முயலின் கண்களிலும் அழகில்லை !

புறாக்களின் சிறகில் மென்மையில்லை!

காரணம்
என்னருகில் நீயில்லை!

     
     

Saturday, 18 October 2014

கனா..!!

நாம் வாழ்ந்து
திரும்பியது!

திரும்பவும்
விரும்பினாலும்
நுழைந்திட முடியாதது!

குழந்தைகளின்
கற்பனை உலகம்!

       

Friday, 17 October 2014

சாக்கடை..!!

கோலங்களை அலங்கோலமாக்கிடும்
தெருவிலோடும் சாக்கடைத் தண்ணீரைப்போல்!

குடும்பமெனும்  கோலங்களை
அலங்கோலப்படுத்துகிறது
டாஸ்மாக் "தண்ணி"யானது!

Thursday, 16 October 2014

தெரியுமா.!? (நகைச்சுவை )


(இருவர் சுவராசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது..)

     "மாப்ள! உனக்கு "ஒன்னுத்"தெரியுமா.!?

   "ம்ம்..!!"ஒன்னு,ரென்டு,மூனுனு ஆயிரம் வரைக்கும் தெரியும்..!!

       

Wednesday, 15 October 2014

இந்தியா தூய்மையாகிட....!!

மதவெறிகளை மாய்த்திட வேண்டும்!

தீண்டாமையை தீயிலிட வேண்டும்!

பெண் வன்கொடுமையாளர்களைத் தூக்கிலிட வேண்டும்!

மதுபானக்கடைகளுக்கு திறக்காத பூட்டை மாட்ட வேண்டும்!

வரதட்சணையாளர்களை ஆண்மையற்றவர் என அழைக்க  வேண்டும்!

மத,சாதிவெறிப் பேச்சாளர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும்!

பொய்யைப் பரப்பும் ஊடகங்களை ஊமையாக்கிட வேண்டும்!

ஆள்பவனையும்,ஆளப்படுபவனையும் ஒரே மாதிரி பார்க்கும் சட்டங்கள் வேண்டும்!

கல்விக்கூடங்கள்,மருத்துவங்களும்  இலவசமாக வேண்டும்!

அதிகாரவர்க்கம்,அடிமைவர்க்கம் எனும் சொல்லே இல்லாமலாக வேண்டும்!

விவசாயிகளை புனிதர்களாக மதிக்க வேண்டும்!

ஊழல் அரசியல்கட்சிகளுக்கு
நிரந்தரத்தடை  விதிக்க வேண்டும்!

இத்தனையும் நடந்திட மனிதத்தை  நேசிப்பவர்கள் ஆட்சியாள வேண்டும்!

         

Tuesday, 14 October 2014

பொறுமை இழந்தேன்..!!

நாவைப்பறித்து விட்டு
பேசச்  சொன்னாய்!

குரல்வளையை அறுத்து விட்டு
பாடச் சொன்னாய்!

மிளகாய்த்தூளை முகத்தில் வீசி விட்டு
சிரிக்கச் சொன்னாய் !

நகத்தை பிச்சியெடுத்து விட்டு
நகச்சாயம் பூசச் சொன்னாய்!

சுவாசத்தை அபகரித்துக்கொண்டு
வாசனையை நுகரச் சொன்னாய்!

மைனாவின் சிறகுகளைப் பிடுங்கி விட்டு
பறக்கச் சொல்லி வான் நோக்கி வீசினாய் !

இத்தனைக்கும் பொறுமைக் கொண்ட நான்!

எப்போது பொறுமையிழந்தேனென்றால்..!

"நீ!எழுதும்போது என்னை நினைக்காதே..!!"-என
நீ சொன்னபோதுதான்!

       

Sunday, 12 October 2014

உனது முகமே...!!

கவிதையெழுதி கிழித்துப்போட்ட
காகிதங்களிலும் உனது முகந்தான் தெரிகிறது!

சில்லுச் சில்லாய் உடைந்த
கண்ணாடிச் சிதறலில் தெரியும்
பல முகங்களைப் போல்!

      

Saturday, 11 October 2014

சாப்பாடு.!

பரிமாறிய உணவு
குறைவதால்
மனம் நிறைபவர்கள்!

குடும்பப்பெண்கள்!

         

Thursday, 9 October 2014

நட்சத்திரம்!

அட!
வானமகள் கன்னத்தில்
வெள்ளியினாலானப் பருக்கள் !

      

Wednesday, 8 October 2014

மின்னல்..!!

என்னத் திமிர்
இந்த மின்னலுக்கு.!?

பூமிப்பெண் குளிக்கும்போது
இப்படி புகைப்படம் எடுக்கிறது !!

 

Saturday, 4 October 2014

முதலை..!!

இன்னும் சிக்காத
முதலைகள் கைதட்டுகிறது!

சிக்கிய
பெருச்சாளியைப் பார்த்து!

       

Wednesday, 1 October 2014

காந்தி ஜெயந்தி !

காந்தியை
காப்பாற்ற முடியாதவர்களால்
கொண்டாடப்படுகிறது !

காந்தியின் பிறந்தநாள் !

      

மௌன மொழி..!!

ஆண் கிளியின் கழுத்துக்கோடு!

ஈரக்கூந்தலில் ஒற்றை ரோஜா!

சேலையை தாண்டிப்பார்க்கும் கட்டைவிரல் !

எரிந்து விழும் நட்சத்திரம்!

சோளக்காட்டுப் பொம்மை!

சேவலின் கொண்டை!

கிடாயின் தாடி!

தூங்கத்தில் குழந்தையின் புன்முறுவல் !

அடைகாக்கும் கோழி!

கரையொதுங்கிய படகுகள் !

பென்சிலால் கோடிட்டதுப்போல் முதல் பிறை!

தேவாலய மணிக்குண்டு!

இவைகளெல்லாம்
என்னிடம் எதையுமே பேசாவிட்டாலும் !

நீண்டநேரம் பேசியதுப்போல் உணரச்செய்பவைகள்!

பேசாத பிரியமானவர்களின்
பேசிச் செல்லும் மௌனங்களைப்போல்!