Saturday, 31 May 2014

மன மாற்றம்!

நாற்றங்கொண்ட மனதை
யாரும் கண்டுக்கொள்வதில்லை!

மன மாற்றங்கொண்டால்
மண்ணை வாரி இறைக்காமல் விடுவதில்லை!

மனமாற்றம் என்பது
ஆல மரம் போன்றது!

சில் வண்டுகள் சப்ததிற்கு
கலங்காது!

ஆனால்
இதனை
முட்டாள் சில் வண்டுகள் உணராது!

   

Friday, 30 May 2014

உதாசினம்.!

சப்தம் இல்லாமல்
ஓர் யுத்தமில்லை என்பது
உண்மையே!

ஆனால்
இங்கோ
ஓர் யுத்தமே நடத்தினாய்
சப்தமில்லாமலே!

உனது
உதாசின உதட்டுச்சுழிப்பால்..!!

     

Thursday, 29 May 2014

பூத்திருக்கு..!!

பலரது கண்கள்
பூக்களை தேடுகிறது!

தன் தோட்டத்திலும்
பூக்கள் பூத்திருப்பதை
அறியாமல்!


இழந்ததா..!?

இவ்வுலகில்
இழந்ததாக
எதனை பட்டியலிட!

எதனையுமே
கொண்டு வந்திடாதப்போது!

  

வெட்கம்.!

மானமெனும்
உடல்
கிழிபடாதிருக்க!

வெட்கம் என்பது
ஆடையாக வேண்டும்!

     

Wednesday, 28 May 2014

தழும்பு!

வெற்றிச்சிரிப்போ!
வெற்றுச்சிரிப்போ!

அவ்விரு சிரிப்பிலும்
மறைந்திருக்கும்
ஓர் தழும்பு!

   

தயாரா..!?

தடைகளே
தயாராய் இருங்கள்!

லட்சியவாதிகளிடம்
உடைப்பட..!!

  

Tuesday, 27 May 2014

ஒன்றுதான் !

புன்னகையும்
பூவும் ஒன்றுதான் !

எப்படி
பூத்தாலும்
அழகாகிறது!

    

நீயா !? நானா.!.?

உறவே!

விவாதிக்க!

கருத்தில் மோதிக்க!

நாம் கலந்து இருப்பது
விவாத மேடையல்ல!

வாழ்க்கை!

சிறு பிரிவென்றாலும்
சேர்ந்தே இருந்துக்கொள்வோம்!

விட்டு சென்றாலும்
மீண்டும் கலந்திடும்
கடல் அலையைப்போல்!

   

Monday, 26 May 2014

உறவுமுறை..!?

என்னவளே!

உனக்கும்
திருவள்ளுவருக்கும்
என்ன உறவுமுறை!?

இரு வரிகளில்
அவர் கருத்தை விதைத்தார்!

நீயோ!
கூர் பார்வை
ஓர் மௌனம்
இவ்விரு செய்கைகளால்!

என்னுள்
கவிதை விதைக்கிறாய்!

    

Sunday, 25 May 2014

தேகமெனும் மூங்கில்..!!

தொட்டுச்செல்லும்
தென்றல்!

முகத்தில் விழும்
மழைத்தூறல்கள்!

கொளுத்தும்
வெயில்!

நடு முதுகில் ஓடும்
வியர்வை துளிகள்!

அந்தி சாயும்
நேரம்!

நாசி துளைக்கும்
மல்லிகை வாசம்!

காற்றிலாடி
உரசிய கூந்தல்!

கன்னங்களை
இளஞ்சூடேற்றிய
உள்ளங்கைகள்!

உச்சந்தலையில் விழும்
நீர்வீழ்ச்சி!

உள்ளங்காலை சுடும்
தீக்கங்கு!

இப்படியாக
நிகழ்வுகள்!

தேகத்தை
தாக்குகிறது!

உணர்வுகளை தட்டுகிறது!

எழுதிட சொல்லி தள்ளுகிறது!

கவிதைகள் பிறக்கின்றது!

புல்லாங்குழலியினுள்
செலுத்தப்படும் காற்று
விரலசைவிற்கு தக்கவாறு வெளிப்படும்
ஓசையைப்போல்!

     

நாடக கலை!

பெரும்பாலோர்
கவலையுறுகிறார்கள்!
நாடக கலை அழிகிறதென்று!

பாவம்
அவர்களுக்கு
நாடக கலை தெரிந்தளவிற்கு
அரசியல் நிகழ்வுகள்
தெரியவில்லை!

   

Saturday, 24 May 2014

பஞ்சு..!

தலையணையில்
நல்லவேளை  பஞ்சை வைத்தார்கள்!

இல்லையென்றால்
பலரது கண்ணீர் வெளியில் தெரிந்திடும்!

    

சிரிப்பு..!!

சந்தோசத்தில்
சிரிப்பவர்களை விட!

சோகங்களை
மற(றை)க்க
சிரிப்பவர்களே அதிகம்!

   

புதையவில்லை.!

புதைந்தேன் என
எண்ணாதே!

முளைக்கிறேன்!

இப்படிக்கு
விதை!

   

Friday, 23 May 2014

மதிப்பு..!!

ஒவ்வொன்றுக்கும்
ஓர் மதிப்பு இருக்கத்தான்
செய்கிறது!

கல்யாண வீட்டில்
நகைகளை விட
செருப்புகள் திருடப்படுவதைப்போல்!

    

பெண் கல்வி!

கற்றறிந்த
ஓர் ஆண்
பொருளாதாரத்தை ஈட்டலாம்!

கற்றறிந்த
ஓர் பெண்ணோ
சமூகத்தையே கட்டமைப்பாள்!

    

Thursday, 22 May 2014

நானும்-பேனாவும்!

நான் பேசியதை விட
மௌனித்த தருணங்களே அதிகம்!

எழுதியதை விட
எழுதி அழித்த என் பேனாவைப்போல!

      

சூடு..!!

திட்டினாய்!
திட்டிக்கொண்டே இருந்தாய்!

நான் மௌனித்ததால்
இன்னும் வேகமாய்!

உனக்கொன்று தெரியுமா.!?

உன் அன்பில்
உறைந்த எனக்கு!

உனது
கோபமெனும் சூடு தேவைப்படுகிறது!


Wednesday, 21 May 2014

மருதாணி..!!

மறவாதே நீ!என
தன் பாசத்தை
பதிந்து விட்டே பிரிகிறது!

மருதாணி !

Tuesday, 20 May 2014

வாழ்க்கை துணை!

அன்று
வாழ்க்கைக்கு துணை
தேடப்பட்டது!

இன்று
''வாழ்வாதாரத்திற்கு'' துணை
தேடப்படுகிறது!

   

கனத்த மழை..!! {நகைச்சுவை}

         ''டேய்! வெளியே போகும்போது குடையை எடுத்துட்டு போ! கனத்த மழை பேயும்னு ரேடியோவுல சொல்றாங்க..!!

   ''அப்படியா..!? ''கனத்த''மழையினா,எத்தனை கிலோ னு சொன்னாங்களா..!?

       

Monday, 19 May 2014

கண்ணாடி..!

கண்ணே!
கண்ணாடி முன்னின்று
புன்னகைத்து!

கண்ணாடிக்கு
கோபத்தை கிளராதே!

கண்ணாடி சிலையான
உன்னை !

காயப்படுத்த
உடைந்திட போகிறது!

உன் வீட்டு கண்ணாடி!எழுதிடாதது..!!

உன் பார்வை!

இன்னும்
எழுதப்படாத கவிதை.!

     

Sunday, 18 May 2014

விடியல்!

இருள் சூழ்வது
விடிவதற்குத்தான்!

     

Saturday, 17 May 2014

பாடம்..!!

வெற்றியினால்
ஆட மாட்டார்கள்!

தோல்வியினால்
வாட மாட்டார்கள்!

யார் !?
அவர்கள்!

வரலாறுகளை
படித்தவர்களல்ல!

வரலாறுகளில்
பாடம் படித்தவர்கள்!

    

Friday, 16 May 2014

தீபம்!

அநீதி காற்றின்
இடையில்தான்!

நீதியின் தீபங்கள்
எரிகிறது!

  

Thursday, 15 May 2014

இரக்கம் காட்டுங்கள்! {ஓர் வேண்டுகோள்}

           அன்பார்ந்த உறவுகளே!
தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது.மாணவ சொந்தங்களின் சாதனைகளை உணர்த்தியது.எத்தனை கனகவுகளுடன் எழுதி இருப்பார்கள்.!?சாதிப்பேன் என மார்த்தட்டினார்கள்,நம் மாணவ சொந்தங்கள்.ஆனால் அச்சாதனைகள் கை கூடுமா..!?அதற்கான வாய்ப்புகளுக்கு ,இன்றைய கல்விக்கான சூழல் உள்ளதா..!?கடந்த காலங்களில் எழுதிய மாணவர்கள் என்ன ஆனார்கள்!?. படிப்பை தொடர்ந்தார்களா..!? இடையிலேயே நின்றார்களா..!? எத்தனை பேர் அறிவோம்.!?

       கல்வி இன்றைக்கு காசுக்கு விற்பனையான பண்டம் ஆகிவிட்டதே! கல்லூரிகளை ஏழைகள் தொடக்கூடிய காரியமா.!?படிப்பை தொடர வேண்டுமானால்
எத்தனை இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. தாயின் தாலிக்கயிறு வரை அறுக்கப்படுகிறதே!இப்படி கஷ்ட நஷ்டத்தில் படித்த மாணவனால் ,எப்படி சமுதாயத்திற்கு தொண்டாற்ற முடியும்.!?தன்னை கஷ்டப்படுத்திய சமூகத்திற்கு தன்னை எப்படி அர்ப்பணிப்பான்!?.

   ஆதலால் உறவுகளே!
மாணவ/மாணவியர்கள் வாழ்வில் கல்வியெனும் ஒளியேற்ற நம்மால் முடிந்தவற்றை செய்வோம்.எத்தனையோ செல்வந்தர்கள்,வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் உதவிகளை செய்கிறார்கள்.மனித சமூகத்திற்கான நன்மையை செய்கிறார்கள்.அந்த வள்ளல்களால் மட்டும் முடியாத காரியம்,அனைவருக்கும் கொடுத்து உதவிட.செல்வந்தர்கள் அள்ளி கொடுக்கும்போது,மற்றவர்கள் கிள்ளியாவது கொடுக்கலாமே.!.? .நாம் உதவுவது ஒரு தலைமுறைக்கான கல்வி அது.உதவுவோம்.
மாணவர்கள் உயர கை கொடுப்போம்.


Wednesday, 14 May 2014

ஹ்ம்ம்..!!

அழகியவளை
எழுத கூடாதென்று!

அழகானவற்றை
எழுதினேன்!

ஹ்ம்ம்..!!

அழகானதும் கூட
அழகியைதான் நினைவூட்டுகிறது!

 

Tuesday, 13 May 2014

பேரென்ன..!?

கலவிக்கு
பேரம் நடந்தால்
அதன் பேரு..!?

கல்விக்கும்
பேரம் நடக்கிறதே
இதன் பேரு..!?

     

கல்லூரி சேர்க்க..!!

தேர்வு முடிவுகள்
வந்து விட்டது!

ஏழைத்தாய்களின்
தாலி தங்கங்களின் நிலையெண்ணி
என் மனம் வெம்புது!

எங்கு அடகுபட போகிறதோ.!?

அடி மாட்டு விலைக்கு விற்கப்பட போகிறதோ..!?

  

ஞாபகங்கள்!

சில நேரங்களில்
மயிலிறகால்
முகம் வருடி
மூர்ச்சையாக்குகிறது!

சில நேரங்களில்
மீசை முடியை பிடித்திழுத்து
அலறிட வைக்கிறது.!

   Monday, 12 May 2014

நெனப்பு..!!

நெலம் கடந்து!

கட(ல்) கடந்து!

தேச எல்ல கடந்து!

எங்க போயி
என்ன செய்ய.!?

அறுத்திக்கிட்டேதான் இருக்குது
நெஞ்சுக்குள்ளே நெனப்பு கெடந்து!

     

கண்ணீர்த்துளி..!!

ஆயிரம் மைத்துளிகள்
உணர்த்திட முடியாத
உணர்வுதனை!

ஓர்
கண்ணீர்த்துளி
உணர்த்தி விடுகிறது!


Sunday, 11 May 2014

வாழ்க்கை!

வலிகள் கொண்டதுதான்
வாழ்க்கை!

வலி தீர
வழிகளையும் வைத்துள்ளது
வாழ்க்கை!

   

Saturday, 10 May 2014

கண் மை..!!

மழைக்காலத்தில்
மின் விளக்கில்
மோதி சாகும்
தும்பிகளைப்போல்!

என் முகத்தில்
கரி பூசப்படும் என
தெரிந்தும்!

உன் கண் மையை தொட்டு
கவிதையெழுத முயல்கிறேன்!

   

Friday, 9 May 2014

தேனடை..!!

நல்லதா..!?
கெட்டதா..!?
எனக்கு தெரியவில்லை!

மற்றவர்களுக்கு
தேன் குளவிகள் நிறைந்த
தேனடையாக தெரிவது!

எனக்கோ
தேன் துளிகள் மட்டுமே
தெரிகிறது!

   

ஊதா கலரு தாவாணி....!!

சன்னலுக்குள்
மேகமாய் மிதந்திருக்கிறாய்!

சந்துகளுக்கிடையில்
மின்னலாய் மறைந்திருக்கிறாய்!

அவசரத்தில் கதவிடுக்கில்
கடிபட்டும் இருக்கிறாய்!

அழுக்கு கூடையில்
அண்ணாந்து பார்த்தும் இருக்கிறாய்!

கொடியில் காய்ந்தபோது
வானவில்லாய் காட்சியும் தந்திருக்கிறாய்!

உன்னை கட்டியவளை விட
கட்டிக்கொண்ட உன்னையே
அதிகம் கண்டவன் நான்!

எழுத்துருவம் கொடுக்க
துணிந்தவன் நான்!

உன் சொந்தக்காரியை
எழுதுவதாக எண்ணமில்லை!

காரணம் இல்லாமலில்லை!

ஏனென்றால்
இவ்வுலம்
எழுதப்பட்ட உன்னை விட்டு விடும்!

எழுதிய
என்னையும் விட்டு விடும்!

எனக்கென்ன என
வெள்ளந்தியாய் இருந்தவளை
வார்த்தைகளால் காயப்படுத்திடும்!

      

கல்யாண மாப்பிள்ளை!{நகைச்சுவை}


 ''யோவ்! புரோக்கரு! மாப்ள கமல ஹாசன் மாதிரி இருப்பாருன்னு சொன்னே! ''ஒரு மாதிரி''யாவுலயா இருக்காரு..!?

    ''ஆமாங்க! இவரு ''பதினாறு வயதினிலே''
கமல ஹாசன்..!!

   

கையில் இல்லை..!!

எழுதுவது
நாமாக இருக்கலாம்!

புரிய வைப்பது
நம் கையில் இல்லை!

      

Thursday, 8 May 2014

கூடாதது..!!

எழுத்தும்
உறவும்
ஒன்றுதான்!

விருப்பமில்லாமல்
தொடரக்கூடாது!

   

Wednesday, 7 May 2014

இராமநாதபுரம் To சென்னை! {சிறு கதை}

                    இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ,இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி இராமநாதபுரத்திற்கு சரியாக எட்டு முப்பதுக்கு வந்திடனும் என்றாலும் பெரும்பாலும் தாமதமாகத்தானே என்ற எண்ணத்தில் எட்டு முப்பதுக்கே ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். ரயிலோ மெல்ல மெல்ல நகர தொடங்கி இருந்தது.

      ''தடக்..தடக்..எனும் சப்தத்துடன் நகரத்தொடங்கியது.  வேகமும் நடையுமாக கிடைத்த பெட்டியில் ஏறிக்கொண்டேன்.எனது இருக்கைக்காண தேடலை தொடங்கினேன். ரயிலில் கூட்டம் மிதமாகவே இருந்தது.ரயிலோடும் சப்தத்துடன் சன்னல் கம்பிகளும் ,கதவுகளும் கைக்கோர்த்து கூடுதலாக குரலெழுப்பியது.

   இதோ வந்து விட்டது.எனது இருக்கை.எனக்கு முன்னதாக ஒரு தம்பதி குழந்தையுடன்  அங்கிருந்தார்கள்.நான் எனது உடமைகளை வைத்தேன்.அப்பெண் சன்னலோரம் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள். நான் சென்றதும் திரும்பிப்பார்த்தாள்.என்னைக்கண்டதும் சுவற்றில் அடித்து திரும்பும் பந்தைப்போல சடாரென திரும்பிக்கொண்டாள்.

          எனது உடமைகளை இருக்கையின் கீழ் வைத்து விட்டு,மாலைப்பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தேன்.எதிரே அமர்ந்திருந்த அப்பெண்ணின் கணவர் ''பேசி வைத்த பொண்ணை எட்டி எட்டி ''பார்ப்பதுப்போல் பத்திரிக்கையை பார்த்துக்கொண்டிருந்தார்.உணர்ந்துக்கொண்ட நான்.

 ''இந்தாங்க.!படிச்சிட்டு தாங்க ''என நீட்டினேன்.

   அவரும் சங்கோஜத்துடன் வாங்கிக்கொண்டார்.

     நான் பையினுள் வைத்திருந்த வைர முத்து  எழுதிய ''தண்ணீர் தேசம்'' என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அவர் பத்திரிக்கையை புரட்டிப்பார்த்து விட்டு என்னிடம் தந்தார்.
அதனோடு ஒரு கேள்வியும் கேட்டார்.

  ''சார்!நீங்க எங்கே சென்னைக்கா...!?என்றார்.

 நான் ''ஆமாம்''என்றேன்.

  ''நான் என் மனைவி பிள்ளையோட  விழுப்புரம் போறேன்.சொந்தக்காரவுக கல்யாணத்திற்கு ...!!-இது அவராகவே சொன்னார்.

அவராகவே பேசிய பிறகு நாம பெரிய பந்தா காட்ட வேண்டாம் என்று கையிலிருந்த புத்தகத்தை வைத்து விட்டு பேசத்தொடங்கினேன்.

''அப்படியா..!?நான் நண்பரை பார்க்க போறேன்.''-என்றேன்.

    அவர் தனது பெயரைச்சொன்னார். என் பெயரைக்கேட்டார்.

 ''சீனி.....''என தொடர்ந்து சொல்வதற்குள் ,அவர் ஒரு கேள்வியெழுப்பினார்.

  ''ஏங்க!உங்க வீட்ல ரேசன் கடை நடத்துனாங்களா..!?-கேட்டார்.

   ''இல்லையே...!?'' -இது நான்.

 ''அப்ப எதுக்குங்க ''சீனி''உப்பு'' என்றெல்லாம் பேரு வச்சிருக்காங்க..!!-என சொல்லி தொடர்ந்து ''கெக்கப்புக்கே''னு சிரித்தார்.

  எனக்கும் இந்த பேரின் மேலான கோபம் இருக்கிறது.இருந்தாலும் அவர் சொல்லி சிரிப்பது எரிச்சலைத்தந்தது.காட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டேன்.எங்களது பேச்சு சொந்த ஊரைப்பற்றியும்,செய்யும் தொழிலைப்பற்றியமாக பேசிக்கொண்டோம்.அரசியல்  சினிமா என தொடர்ந்துக்கொண்டிருந்தது.

     ரயிலோ பரமக்குடி,மானாமதுரை,சிவகங்கை என தனக்கான இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணப்பட்டது.நேரம் கடந்தது. குழந்தை தாயின் மடியில் நான்கு விரல்களை சூப்பியபடியே உறங்கி விட்டது.

    சரி!நாமும் கண்ணயர்வோம் என இருவருக்குமே புத்தியிலப்பட்டது.எனது இடத்தை அவருக்கு கொடுத்து விட்டு மேலேறி படுத்துக்கொண்டேன்.அவருக்கெதிரே அப்பெண்ணும் குழந்தையும் படுத்துக்கொண்டார்கள்.

     எனக்கோ தூக்கம் வருவதாக இல்லை.சென்னையில் அவனிடம் பணத்தை வாங்கிடலாமா.!?இன்னும் இழுத்தடிப்பானா..!?என கேள்விகள் குழப்பியெடுத்தது.காலையிலிருந்து கொஞ்சம் கூடுதலாக அலைந்ததால்,உடம்பு வேற 'கச கச''ன்னு இருந்தது. ரயிலோ இலக்கை நோக்கி சீறிக்கொண்டு ஓடியது.

         எப்பொழுது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.எழுந்துப்பார்த்தால் மணி அதிகாலை 5-30 ஐ காட்டியது.நான் எழுந்திருக்கும்போது அத்தம்பதிகள் இல்லை.விழுப்புரத்தில் இறங்கி இருப்பார்கள்.என்னிடம் அப்பெண்ணின் கணவர் சொல்லிட்டுப்போனாரா..!?இல்லை தூங்குவதை கெடுக்க வேண்டாமென சொல்லாமலே சென்றாரா..!?என என்னால் யூகிக்க முடியவில்லை.

          படுக்கையை விட்டு கீழிறங்கினேன்.இயற்கை உபாதைக்காக கழிவறை சென்று விட்டு,முகங்கழுவிக்கொண்டேன். மீண்டும் இருக்கைக்கு வந்து சன்னலோரத்தில் உட்கார்ந்தேன்.இன்னும் கொஞ்ச நேரத்தில் எக்மோர் வந்து விடும்.சிலு சிலுவென காலை நேரக்காற்று முகத்தில் பட்டு முதுகின் நடுப்பகுதியை சில்லிட செய்தது.தலை முடியை கலைத்து நெற்றியை துளாவியது.

         நேற்றிரவு ஒன்றாக வந்த அந்த நபரிடம்,எனது சொந்த ஊரை மறைத்தே தான் பேசிக்கொண்டு வந்தேன்.அது சரியா..!? தவறா..!?என ஒரு நெருடல் எனக்கு சங்கடத்தையே தந்தது.நான் ஏன் அவரிடம் எனது ஊரை மறைக்கனும்.!?

       சரி!அவ்வளவு நேரம் அவருடன் பேசிக்கொண்டு வருகையில்,அப்பெண் சிலைப்போல திரும்பாமலே ஏன் இருக்கனும்..!?

          ஊரின் பெயரை அவரிடம் மறைத்ததற்கும்,அப்பெண்ணோட அந்நிலைப்பாட்டிற்கும் ஒரே பதில்.

    ''எனக்கு அப்பெண்ணையும்,அப்பெண்ணிற்கு என்னையும் நன்றாகவே தெரியும்.நாங்கள் யாரென்று...!!''

சொட்டு மருந்து..!!{நகைச்சுவை}

          ''என்னது!மூனு நாளா சொட்டு மருந்து ஊத்தியும்,கண்ணெரிச்சல் குறையலயா..!?

     ''ஆமாம்!டாக்டர்!!

    ''கிட்ட வாங்க இன்னக்கி சொட்டு மருந்து
ஊத்தி விடுறேன்,நாளைக்கு வாங்க செக் பண்ணிப்பார்ப்போம்!'

     ''டாக்டர்!நீங்க ஊத்த வேணாம் ,மூனு நாளா ஊத்துன,நர்சையே ஊத்த சொல்லுங்க..!!

   

எழுத்தாளர்களே..!!

துப்பாக்கியை
ராணுவ வீரன் தாங்கினால்
தேசத்தை பாதுகாக்கும்!

பைத்தியக்காரன் தாங்கினால்
தன் முன் தெரிந்தவர்களையெல்லாம்
தாக்கும்!

எழுத்தாளர்களான
உறவுகளே!

நாமும் எழுத்தெனும்
ஆயுதத்தைத்தான் வைத்துள்ளோம்!

ஓர் கேள்வியையும்
எதிர் நோக்கியுள்ளோம்!

நாம்
ராணுவ வீரர்களா...!?

பைத்தியக்காரர்களா..!?

   

Tuesday, 6 May 2014

ஹிட்லர்கள்!

அன்று
தோட்டாவிற்கு அஞ்சாத
ஹிட்லரும்
பேனா மையிக்கு பயந்தது
வரலாறு!

இன்றோ
ஹிட்லர்களுக்கு 
வக்காலத்து பேனா மைகள் 
வாங்குவதால்தான்
பெரும் கோளாறு!!


       

மை..!!

உண்'மை' உருகிவிட்டது!
பொய்'மை' பொங்கி வழிகிறது!

பத்திரிக்கையாளர்களின்
பேனா குடுவைகளில்!

ஆதலால்தான்!

குண்டு தயாரித்தவன் ரவுடியானான்!

கைது மட்டும் செய்யப்பட்டவன் தீவிரவாதியானான்!

      

நாய்கள்..!!

எச்சில் இலைக்கு
கடித்துக்கொள்ளும்
தெரு நாய்கள் போல்!

ஓட்டுப்பிச்சைக்காக
அப்பாவிகளில் உயிர்களை
காவு வாங்குகிறது!
சில அரசியல் நாய்கள்!!

     

Monday, 5 May 2014

பித்தளை..!!

தங்கங்களைத்தான்
துணையாக்க துடிக்கிறது!

பித்தளைகள்!

   

மழை தந்த நினைவு!

மழையில் நனையும்போதெல்லாம்!
ஓர் நினைவு நெஞ்சை அறுக்கும்!

அன்றொரு நாள்!
ஓர் குரல்!

''சனியனே!
தடுமல் பிடிக்க போகுது!! -என்றது!

அக்குரல் ஓர் வீட்டினுளிருந்தே வந்தது!

அவ்வீட்டிற்குள் யாரும் நனைய வாய்ப்பில்லை!

அவ்வீட்டினஜ கடந்தபோது ''சனியன்'' என்னைத்தவிர யாருமில்லை!

    

சுண்டல்...!!{நகைச்சுவை}


   ''செல்லம்!ஒரு வார்த்த சொல்லடி!நிலவ பிடித்து உன் தலையணையாக்குகிறேன்!நட்சத்திரங்களை கொண்டு மெத்தை விரிக்கிறேன்..!!

    ''அதெல்லாம் வேணான்டா..!? முதல்ல சுண்டல்கார பையனோட பாக்கிய கொடு!ஒரு மாதிரியா பாக்குறான்..!!

     

Sunday, 4 May 2014

புருஷன் போக்கு..!! {நகைச்சுவை}

 ''வர வர எம்புருஷன் போக்கு சரியில்லடி..!!

''ஏன்டி!?என்னாச்சி..!?

  ''முதல்ல என்னைய ''ஹனி!ஹனி''னு கூப்புடுவாரு!இப்ப ''சனி!சனி''னு கூப்புடுறாரு..!!

  

நேரமில்லை..!!

என் பார்வையும் வேறு!
என் பாதையும் வேறு!

என் எழுத்தும் வேறு!
என் இலக்கும் வேறு!

புரியமாட்டேன் என்பவர்களை
புரிந்துக்கொள்ளுங்கள் என
கெஞ்சுவதும் கிடையாது!

நின்று நிதானித்து
விளக்கம் கொடுக்க
எனக்கு
நேரமும் கிடையாது!

    

Saturday, 3 May 2014

யோகி..!!

அமைதியாக
துயில் கொள்ள
நாமொன்றும்
யோகிகளுமல்ல!

இவ்வுலகமொன்றும்
வனாந்தர காடுமல்ல!

    

வண்ணங்கள்..!!

இதென்ன
முகமா..!?

வண்ணந்தீட்டும்
இடமா..!?

கர்மம்!
எத்தனை நிறங்கள்தான்
பூசிக்கொள்(ல்)வது..!?

  

என் தேசம்!

மதவாதம்!
சாதியவாதம்!
தீவிரவாதம்!
அரச பயங்கரவாதம்!

இவ்வாதங்களால்
பாதிக்கப்பட்டு
முடக்கு வாதத்தில் கிடக்கிறது!
என் இந்திய தேசம்!

       

இந்தியா..!

வளர்ந்த நாடுகளிலெல்லாம்
எம் தேச சகோதரனின்
உழைப்பு உள்ளது!

எம் பாரதமோ
இன்னும்
வளரும் நாடாகவே இருக்கிறது!

        

Friday, 2 May 2014

உண்டியல்...!!

சிறுக சிறுக சேர்த்து வைத்த
உண்டியலை
தேவையேற்படும்போது
துலாவும் விரல்களைப்போல்!

வேலை நாட்களில்
வாசிப்பிற்கென்று
நேரத்தை கொஞ்சங்கொஞ்சமாக
சேமிக்க வேண்டியதாகிறது!

     

தட்டுங்கள்...!!

தட்டிக்கொண்டே
இருப்போம்!

இல்லையென்றால்
கதவுக்கு பின்னால்
நாமிருப்பது
யாருக்கும் தெரியாமலே போய்விடும்!

  

Thursday, 1 May 2014

ராசிக்கல்!

ஒத்த கல்லை மாட்டினால்
செல்வம் கொட்டுமாம்!!

மொத்த கல் வியாபாரிகள்
எத்தனைப்பேர்கள்
செல்வந்தர்களாக இருக்கிறார்கள்!?

     

கசிகிறது...!!

உதடுகளுக்கு
மௌனமெனும்
பூட்டுப்போட்டு கொண்டாய்!

கண்களை மறைக்க
ஏனோ!?-
மறந்து விட்டாய்!

நீ
மறைத்த உனதன்பை
கண்களின் வழி அறிகிறேன்!

அணைகளின்
இடுக்குகளில்
கசியும் தண்ணீரைப்போல!

உன் கண்ணில்
கசியவே செய்கிறது
எனக்கான
உன் எண்ணங்கள்!

     


சுவாதி!

என்ன பாவம் செய்தாள்
சுவாதி!?

பாவத்திற்கு அஞ்சாத
பாவிகளின் காரியத்தால்
பலியாகி விட்டாளே..!!

        

சென்னை குண்டு வெடிப்பு!

மிருகங்கள் கூட
செத்த பிறகும்
மனிதர்களுக்கு
உதவுகிறது!

மனிதர்களை சாகடித்து
என்ன சுகம் காண்கிறது
இம்மனித மிருகங்கள்!?