Wednesday, 31 August 2016

ஈரம்..!! (சிறு கதை) (3)


        ஆசிப் தன் கையிலிருந்த பந்தை,அமீர் பாட்சா அண்ணன் கடையில் வைக்கச் சொல்லி,வீசியபோது,அந்தப்பக்கம் வியர்வையுடன் சட்டையில்லாமல் சென்ற ,இப்ராகிமின் முதுகில் பந்து வேகமாக அடித்திட,அந்த வலியால் இப்ராகீம் கெட்ட வார்த்தையால்,திட்டிக் கொண்டே,ஆசிபை அடிக்க ஓடி வந்தான்.கலைந்து சென்றவர்களெல்லாம்,ஓடி வந்து இருவரையும் அடித்துக் கொள்ளாமல் இழுத்தார்கள்.இருவரும் விடுவதாக இல்லை.ஒரு வழியாக சமாதானப்படுத்தி விலக்கி விட்டார்கள்.மஃரிபிற்கு பாங்கு சொன்னதும்,அவரவர்கள் ,தொழுதிட சிலரும்,வீட்டுக்கு சிலரும் கலைந்துச் சென்று விட்டார்கள்.

     இரண்டு மூன்று நாட்கள் கழித்து,எந்த மனக்கசப்பும் இல்லாமல்,மருதநாயகம் அணியினரும்,தீன் தென்றல் அணியினரும்,பந்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஆசிப்போ,இப்ராகீமை பார்க்கும் இடமெல்லாம் ,முறைத்து பார்ப்பதும்,நண்பனின் பைக்கில் செல்கையில் ,முறுக்கிக் கொண்டு செல்வதும்,சிகரட்டின் புகையை அவனது முகத்தில் ஊதுவதுப்போல் சைகை காட்டுவது என ,இப்ராகீமிற்கு கோபத்தை கிளறிக்கொண்டே இருந்தான்.இப்ராகீம் நினைத்தால்,ஆசிப்பை தாக்கிட முடியும்,"எதுக்கு நாய அடிப்பானே..பிய்ய சுமப்பானே..."என ஒதுங்கி போனான்.அப்படி இருந்தும் ஆசிப்பின் செயல்பாடுகள்,அவனது பொறுமையை சோதித்தது .

      ஆசீப் ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்தவன்.நோயாளி தாயார்,ஊரைச் சுற்றும் தகப்பன் என.இப்ராகீம் பணக்கார குடும்பம் என சொல்ல முடியாவிட்டாலும் ,ஓரளவிற்கு மரியாதையான குடும்பமாக ,ஊரில் பெயர் பெற்றவர்கள்.

     ஒரு நாள் இரவு நேரம்,மின்சாரம் தடைபட்டிருந்தது,அப்பொழுது ஆசிப் நண்பனின் பைக்கில் ,இப்ராகீம் தெருவில் வேகமாக வந்தான்.

    (தொடரும் ...)

   


ஈரம்..!! (சிறு கதை) (2)


     அதோடு விளையாட்டு நின்று விட்டு,வாய் சண்டை ஆரம்பித்து விட்டது.கோப வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மாறியது.இனிமேல் இவர்கள் அடித்துக் கொள்வார்கள் என்ற பயத்தில் ,விளையாட்டை தன் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நூஹ் மாமா ,திடலை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    "ஏம்பா...சும்மா ஜாலிக்குத் தானே வெளயாடுறீங்க....ஏஞ்சண்ட போட்டுக்கப் பாக்குறீங்க...கலஞ்சி போங்கப்பா..அசிங்கப்படுத்தாம...டேய் சித்திக்கு கெளம்பி போ..காசிம் ஒம்பயலுவல கூட்டிட்டு போ...."என சத்தம் போட்டார்.மாமா மேலே எல்லோருக்கும் மரியாதை உண்டு .அதனால் அவர்களால் ஒன்றும் எதிர்த்து பேசவில்லை.கலைந்துச் சென்று கழட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொள்ள ,ஆளுக்கொரு திசையை நோக்கி சென்றார்கள்.

     இவ்விரு அணியைச் சேர்ந்தவர்களும்,ஒப்பிலான் ஊரைச் சேர்ந்த அத்தனைப் பேர்களுமே,உறவினர்கள்தான்.ஏனென்றால்,பொண்ணு ,மாப்பிள்ளை எடுப்பது ,தொன்னூற்றொன்பது சதவிகிதம்,உள்ளூரிலேயே தான் எடுப்பார்கள்.இம்மக்கள் வெளிநாடுகளில்,சிங்கபூர் போன்ற நாடுகளில் வாழ்ந்தாலும்,தன் உறவுகளை மறக்காதவர்கள்.அதனடிப்படையில்தான்,இவ்விரு அணியினருமே,அண்ணன்,தம்பியாகவோ,மச்சான்,மாப்பிள்ளையாக, உறவுக்காரர்கள் தான்.ஆனாலும் இதுபோன்ற உரசல்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

     கலைந்துச் செல்கையில்தான்,முடிந்த பிரச்சனையை , ஆசிப்பின் செயல் மூட்டி விட்டது.

(தொடரும்..)

Tuesday, 30 August 2016

ஈரம்..!! (சிறு கதை) (1)


       மாலை நேர வெயில் கொஞ்சம் இதமாகவே இருந்தது,அவ்வேளையில் மருதநாயகம் திடல் கொஞ்சம் கொதிப்பாகத்தான் இருந்தது .அத்திடலில் மருத நாயகம் அணியும்,தீன் தென்றல் அணியும்,நட்பு முறை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த திடல் அது.கடலாடியில் கைப்பந்து போட்டி என அறிந்ததும்,பயிற்சிக்காக விளையாட ஆரம்பித்தார்கள் ,இவ்விரு அணிகளும்.இதில் மருத நாயக அணியில் முக்கிய விளையாட்டளர்களாக,காசிம்,மௌலல்,கபிருல்லா,சீனி காசிம்,இருந்தார்கள்.மேற்கொண்டு ஆட்கள் தேவைப்பட்டால்,அணியை சாராத மற்றவர்களை சேர்த்துக் கொள்வார்கள்.அன்றைக்கு சேர்த்திருந்த நபர் இப்றாகீம் .அதேப் போல் தீன் தென்றல் அணியில் முக்கிய விளையாட்டாளர்கள்,மரைக்கான்,சித்திக்,அப்தாகீர்,அமீன்,அலிபுல்லா இப்படியாக சிலர்.ஆள் பற்றாக்குறைக்கு ஆசிப்பை சேர்த்திருந்தார்கள்.

           விளையாட்டை அங்கொன்று,இங்கொன்றுமாய் சிலர் நின்றுக் கொண்டும் ,உட்கார்ந்துக் கொண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சாய்ந்தபடி,நூஹ் மாமாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.விளையாட்டில்,இரு அணிகளுமே ,ஒரு ஒரு பக்கம் ஜெயித்து,மூன்றாவதாக மோதினார்கள்.இதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கின்ற வேகம் ,இரு அணிக்குமே கூடுதலாக இருந்தது.பொழுதுப்போக்காக விளையாட ஆரம்பித்து.கூடுதல் கடுகடுப்புடன் மோதிக் கொண்டார்கள்.அப்போது தீன் தென்றல் அணியிலிருந்த ஆசிப்,"சர்வீஸ் பால்"ஐ அனுப்பினான்.அப்பந்தை சீனி காசிம்
எடுத்து கபிருல்லாவிற்கு அனுப்ப,கபிருல்லா காசிமிற்கு அனுப்ப காசிம் "கட்"அடித்தார்.அதை மரைக்கான்,சித்திக் வலைக்கு மேலெழும்பி தடுக்க,அப்பந்து காசிம்
பக்கமே விழுந்து விட்டது.அப்பொழுது கபிருல்லா..."சித்திக் நெட் டச்" நமக்கு தான் பாயிண்ட்"என்றார்."ஏய் இரு இரு...யார் நெட் டச்"அதெல்லாம் இல்ல..."சித்திக் சொல்ல,விளையாட்டு வில்லங்கமாக மாற ஆரம்பித்தது.

(தொடரும்....)


Monday, 29 August 2016

குத்து விளக்கு.!


    மாலை நேரம் அது,பகலின் வெளிச்சத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருந்தது.தன் உணவினை விழுங்கும் மலைப்பாம்பைப் போல்.இருட்டிடத் தொடங்கிய அவ்வேளையில் ,ஏழைகுடிலில் ஓர் ஏழைத்தாய்,தான் காலையில் விளக்கி வைத்திருந்த,குத்துவிளக்கை எடுத்து மண்ணெண்ணையூற்றி இறுக பூட்டி விட்டு,திரியினில் நெருப்பை பற்ற வைத்தாள்.அவ்விளக்குதான் அவளது ஏழைக்குடிலை அலங்கரிக்கும் ஒரே வெளிச்சம்.

     அவ்வெளிச்சத்தில் அத்தாய் தனது இரவுக்கான உணவு தயாரிப்பில் இருந்தாள்.அவளது குழந்தைகள் ,பள்ளிப்பாடங்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள்.இவ்விரவிலாவது ,வயிறு நிறைய உணவு கிடைக்குமா என்ற சந்தேகத்துடன்.ஒரு பூனைக்குட்டி முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு,பாடங்கள் எழுதிடும் பிள்ளைகளின் அருகே படுத்துக் கொண்டு,குத்து விளக்கின் கீழ் ஆடிக் கொண்டிருந்த நிழலை எகத்தாளமாக பார்த்துக் கொண்டிருந்தது இப்பூனை.தானும் அவ்விளக்கின் வெளிச்சத்தில் தான் பார்க்கிறோம் என்பதை மறந்து விட்டு.

       அப்பூனையின் எண்ண ஓட்டத்தை,அக்குத்துவிளக்கு அறிந்திருந்தாலும்,தன் இருள் நீங்காவிட்டால் என்ன ,!?,தன்னால் பிறர் வெளிச்சம் பெறட்டுமே எனும் நல்லெண்ணத்தில் தன்னை வருத்திக் கொண்டு,தன் மேல் நெருப்பை சுமந்துக் கொண்டும்,அணையாமல் எரிந்துக் கொண்டிருந்தது அக்குத்துவிளக்கு .

   

Saturday, 27 August 2016

ஒரு வேப்பமரத்தின் கதை.!


     கண்மாய் கரையோரம் நிற்கும் வேப்பமரம் அது.அதனுடைய வயது பதினைந்து இருக்கலாம்,தடித்த தண்டு கொண்டு,கொப்புகள் பரப்பி கிளைகள் விரித்து பசுமையான மரம் அது.அடர்ந்த நிழல் தரும் மரம்.அம்மரத்தின் கீழ் வழிபோக்காக போவோர்,வருவோர் சில நாழித்துளிகள் இருந்து விட்டுச் செல்வதும் உண்டு.சிறியவர்கள் அம்மரத்தில் ஏறி விளையாடுவதற்கும்,மரத்தின் நிழலில் "கோலி"விளையாடுவதற்குமென்று , இப்படியாக பலவற்றிற்கு இவ்வேப்பமரம் பயன்பாடாய் இருந்தது.

      இவ்வேப்பமரத்திற்கு ஒரு கர்வம் இருந்தது.தன்னால் தான் எல்லோரும் பயன்படுகிறார்களெனவும்,தன் நிழலில் கிடக்கும் சருகுகளை ,இன்னும் கீழ்த்தரமாக நினைத்தது.ஒரு காலத்தில் தன்னில் இலைகளாக இருந்து அழகுபடுத்திய இலைகள்தான்,இன்றைக்கு உதிர்ந்து சருகுகளானது என்பதனை மறந்து.சருகுகளுக்கு மரத்தின் எண்ணம் தெரிந்தும்,எதிர்த்துப் பேச துணிவில்லை,கிடைத்திடும் நிழலும் கிடைக்காது போய் விடுமோ எனும் எண்ணத்தில்.

       ஒரு நாள் கோடைமழையோடு ,பலத்த காற்றும் வீசியது.மழையும் காற்றும் சில நாட்கள் நீடித்ததால்,சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்மாய்களின் தண்ணீரை திறந்துவிட்டார்கள்.திரண்டு வந்த தண்ணீர்,இவ்வேப்பமரத்தின் வேரில் தொடர்ந்து பயணித்ததால்,அம்மரம் சாய்ந்து தண்ணீரில் விழுந்தது.தண்ணீரின் ஓட்டத்தில் ,மரத்தின் வேரும்,கொப்புகளும்,தண்ணீருக்கு ஈடு கொடுக்க முடியாமல்,மண்ணிலும் சிக்கி கொண்டு சித்திரவதை அடைந்தது.ஆனால் அம்மரத்தால் கேவலமாக எண்ணப்பட்ட,சருகுகளோ தண்ணீரில் ,மிதந்து மிதந்து ஆனந்தமாக சென்றுக் கொண்டிருந்தது .

Wednesday, 24 August 2016

குழந்தையதிகாரம்.!(16)


என் கவிதைகளெல்லாம்
உன்னைத்தான் கைகட்டி வேடிக்கைப் பார்க்குதடி!

உயிரோவியமே.!

    

Sunday, 21 August 2016

குழந்தையதிகாரம்.!(15)


உன் ஓரப் பார்வையை எழுதிட
ஓராயிரம் வார்த்தைகளைத் தேட வேண்டியுள்ளது !

    

Thursday, 18 August 2016

குழந்தையதிகாரம்.!(14)


உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
பாரமான நெஞ்சும் பஞ்சாகி விடுகிறது.!

     -சீனி ஷாஹ் .

Tuesday, 16 August 2016

குழந்தையதிகாரம்.!(13)


நானும் அதிர்ஷ்டக்காரன்தான்
கவிதைப்பூச்சிக்களும் என்மேல் ஒட்டுவதால்!

 

Sunday, 14 August 2016

குழந்தையதிகாரம்.!(12)


நானும் எழுதிடக் கூடாது என்றிருந்தாலும்
கவிதையும்
 என்னையும்
எட்டித்தான் பார்க்கிறது!

    

Saturday, 13 August 2016

குழந்தையதிகாரம்.!(11)


நீ
உயிரின் துளியா.!?
கவியின் ஊற்றா.!?

 

Tuesday, 9 August 2016

குழந்தையதிகாரம்.!(10)


உயிரின் வேரில் ஊற்றப்படும் நன்னீர் !
உன் முத்த எச்சில் !

    

Sunday, 7 August 2016

குழந்தையதிகாரம்.!(9)


எப்பூவிதழிலும் இல்லை
உன் பிஞ்சு விரலின் மென்மை.!

   

Friday, 5 August 2016

குழந்தையதிகாரம்.!(8)


எந்த பேனாவும் இன்னும் எழுதிடா கவிதை!
உன் புன்சிரிப்பு!

    

Monday, 1 August 2016

குழந்தையதிகாரம்.!(7)


தந்தையின் உயிர்த்துளிதான் நாமென்றாலும்
நம் உயிர்த்துளியிலும் நம் தந்தைகள் தெரிவதுமுண்டு!