Saturday 28 April 2018

திருந்திருக்கிறேனா..!?

கடல் அலையே
மரக்கிளையே

நிழலே
விழுதே

தென்காற்றே
தேனூற்றே

மேகமே
தாகமே

என்னை நினைவிருக்கா.!?

திரும்பவே வர மாட்டேன் என்றவன்
திரும்பவும் வந்திருக்கிறேன்!

திருந்திருக்கிறேனே எனும் கேள்வியை
உன்னிடமே கேட்டு நிற்கிறேன்!



Sunday 22 April 2018

வீணாக்காதே..!!

என்னை திட்டுவதாக எண்ணி
உங்கள் வார்த்தைகளை வீணாக்கி விடாதீர்கள்
ஏனென்றால்
அவ்வார்த்தைகளை சேமித்து வைத்திட
என் நெஞ்சுக் கூட்டிற்குள் இடமில்லை!


Tuesday 17 April 2018

வார்த்தை கல்.!

சில்லுண்ட என்னைச் சேர்த்து வைத்து
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வார்த்தைக் கல்லிற்காக..!



Sunday 15 April 2018

கைக்கொட்டும் துரோகங்கள்...

நான் அந்தி என்கிறேன்
நீ மாலை என்கிறாய்

நான் பூ என்கிறேன் 
நீ மலர் என்கிறாய்

நான் விடியல் என்கிறேன்
நீ அதிகாலை என்கிறாய்

நான் மணம் என்கிறேன்
நீ வாசம் என்கிறாய்

நான்வந்தார்கள்என்கிறேன்
நீவருகைப் புரிந்தார்கள்என்கிறாய்

நான் சமுத்திரம் என்கிறேன் 
நீ கடல் என்கிறாய்!

நாம் இருவரும் சொல்வது
ஒன்றுதான் என புரியாமல்
சண்டையிடும் நம்மைக் கண்டு

கைக்கொட்டி சிரிக்கிறது 
துரோகங்களும் பகைமைகளும்!








Thursday 12 April 2018

பெத்தவ..

ஒங்கள பெத்து என்னத்த கண்டேன்
ஒரு பொட்டு நகைய கண்டேனா
ஒரு பவுசி மவுசிய அடைஞ்சேனா
பேதியில போவியளா..
என் வயித்துல வந்து பொறந்தியளே..”என
வார்த்தைகளால்  குத்தி கிழிக்கும் 
இந்த உலகத்தில்தான்.!

பெத்த கடனுக்காக
கஷ்பட்டு நஷ்டப்பட்டு
அடிப்பட்டு மிதிப்பட்டு
காஞ்சிப்போன கருவாடாக ஆனப்போதும்!

எம்மவனுவ கஷ்டப்படுறப்போது
கொடுத்து ஒதவ 
எங்கையில ஒன்னுமில்லையே..”என
எந்தாயைப்போல கலங்கி நிக்கிற
ஆத்மாக்களும் வாழ்கிறார்கள்.”



Monday 9 April 2018

பேதமை..

ஏழு வர்ணங்களை வானவில்லென ரசிக்கிறாய்

சில வண்ணப்பூக்களின் கூடலை
பூங்கொத்துவென ஏற்கிறாய்

ஆறு சுவை உணவை
அறுசுவை உணவென உண்ணுகிறாய்

கட்டை ,நீளம்,சின்னதென்ற விரல்களை
தன் கையென சொல்கிறாய்!

ஒன்பது விதமான கற்களை 
நவ ரத்தினங்களென அணிகிறாய்.

தேசத்தால்,இனத்தால்
மொழியால் 
வெவ்வேறான  மனிதர்களிடம்  மட்டும்
ஏன் பேதமை கொள்கிறாய்.!?



Sunday 8 April 2018

உன்னால் முடியும்தான்....!!

செடிக்கு தண்ணீர் ஊற்றுவது நீயாக இருந்தாலும்
அச்செடியை வளரச் செய்வது 
உன் கையில் இல்லை!

கிணறுகள் தோண்டுவது நீயாக இருந்தாலும்
அதில் நீரூற்றுகளை பீறிடச் செய்வது
உன் கையில் இல்லை!

முயற்சிப்பது நீயாக இருக்கலாம்
அது வெற்றியாக மாறுவதென்பது
உன் கையில் இல்லை!

பயணப்படுதல் நீயாக இருந்தாலும்
அதன் பயண முடிவு என்பது
உன் கையில் இல்லை!

புத்தகங்கள் வாங்குவது நீயாக இருந்தாலும்
அது அறிவாக மாறுவது 
உன் கையில் இல்லை!

தூங்கச் செல்வது நீயாக இருந்தாலும்
தூங்கி எழுவதென்பது
உன் கையில் இல்லை!

மனிதா...!
உன்னால் முடியும் என்பது உண்மைதான்
ஆனால்
உன்னால் எல்லாம் முடியாது என்பதும் பேருண்மை!






Friday 6 April 2018

முட்டாள் நான்..

எது நான்
எதற்காக நான் என 
தெரிந்த பின்னும்
எதையோ தேடி 
தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும்
முட்டாள்களில் ஒருவன் நான்!


Tuesday 3 April 2018

விடியும்..

ஒரு நாள் விடியுமென்ற
நம்பிக்கையில் தான் 

ஒவ்வொரு இரவையும் கடக்கிறேன்.!