Thursday 30 June 2016

சீனி மரைக்கார்...!! (சிறுகதை) 6


       ஊரு வந்த சீனி மரைக்காருக்கு,தன் தாய் இறந்தச் செய்தி வேதனைத் தந்தாலும்,தான் வருவதற்கு முன்னே,அடக்கம் செய்து விட்டார்கள் என அறிந்ததும்,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.வீட்டில் இருந்தவற்றை அடித்து நொருக்கியவர்,இன்னும் வெறியேற்ற மதுவை நாடினார்.


      போதை தலைக்கேற ,ஊர் முக்கியஸ்தர்களை திட்ட ஆரம்பித்தார்.அது இன்னும் வம்பை விலைக் கொடுத்து வாங்கியது.மற்றவர்களையும் அச்செயல் சூடேற்றியது.மறு நாள் பஞ்சாயம் என ஊருக்குள் பேச்சாக இருந்தது.

      விடிந்ததும் ஆள் வந்து சொல்லிப் போனார்."இன்னைக்கு பஞ்சாயம் வச்சிருக்காங்க..சீனி மரைக்காரை வரச் சொன்னாக"என்று தகவலை ,பாத்திமாவிடம் சொல்லிச் சென்றார்.நேரம் கடந்தது எல்லோரும் பஞ்சாயத்திற்கு வந்து விட்டார்கள்.சீனி மரைக்காரும் பஞ்சாயத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

   "ஏம்பா...சீனி ...நீ எதுக்கு ஊர்ல உள்ளவங்கள பேசுனே...."என வைப்பத்தான் அப்பா ஆரம்பித்தார்.

       (தொடரும்)

    

Tuesday 28 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 5


       மரியம்பு மரணச் செய்தியை சீனியிடம் சொல்ல,ராமேஸ்வரத்திற்கு ஆள் அனுப்பினார்கள் .அன்றைய காலகட்டத்தில் கைப்பேசியெல்லாம் இல்லை.மற்ற வேளைகளை ஜமாத்தார்கள் பார்த்தார்கள்.சட்டம் வாங்க,ஓலைப்பாய் வாங்க ,குழித்தோண்ட ,என அடக்கம் பண்ணுவதற்கான வேலை நடந்தது.தகவல் சொல்ல சென்றவன் ,வந்து சொன்னான்.

   "அவரு கடலுக்கு போயிட்டாகளாம்,எப்ப வருவாகனு தெரியலயாம்,விசயத்த சொல்லிட்டு வந்துருக்கேன்...!கரைக்கு வந்தா சொல்ல சொல்லிட்டு..!! என சொல்லி முடித்தான்.

பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

     "சரி...அவன் எப்ப வாரான்னு தெரியல...அது வரைக்கும் "பாடி"த்தாங்கது....என்ன செய்யலாம்...!?

    "நாம "அடக்கிட்டா" சீனி கிட்ட யாரு பதில் சொல்லுறது...அவன் ஒரு "கிறுக்குப்பய",வம்பு பண்ணுவாங்க..."

    "அதுக்காக ,பொணத்த நாற வைக்கவா முடியும்...!?என பேசிக் கொண்டேப் போய் முடிவுக்கு வந்தார்கள் அடக்கம் செய்திட.பரக்கத்துல்லா மற்ற வேலைகளைப் பார்த்தான்.எல்லோரும் சேர்ந்து மரியம்புவை அடக்கம் செய்து விட்டார்கள்.

     அடக்கம் செய்த மறுநாள் ,கரைக்கு வந்த சீனியிடம் தன் தாய் இறப்புச் செய்தியைச் சொன்னார்கள்.ஊருக்கு கிளம்பினார்.பேருந்து பயணத்தில் தன் தாயின் நினைவுகள் ,இதுவரைக்கும் செய்யாத சித்ரவதை இப்பொழுது செய்தது.தன்னையறியாமலே கண்ணீர் வடித்துக் கொண்டும்,அடக்கம் செய்ததுத் தெரியாமலும் ,ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார் சீனி மரைக்கார்.

 (தொடரும்...)


Saturday 25 June 2016

சீனி மரைக்கார் .!(சிறுகதை) 4


          சுகமும் ,துக்கமும் கலந்ததுதான் வாழ்க்கை என்று ,யாராவது பாத்திமாவிடம் சொல்வேமேயானால்,"இல்ல ,அடியும்,மிதியும் கலந்ததுதான் வாழ்க்கை "என்றுதான் அவள் சொல்வாள்.ஆரம்பத்தில் சீனி மரைக்கார் அடி தாங்க முடியாமல்,அவள் அம்மா வீட்டிற்கு போய் விடுவாள்.இப்போதெல்லாம் போவதில்லை,இவரின் அடியை விட,அவள் அம்மா வீட்டு சொல்லடிகள் ,குரூரமாக காயப்படுத்துபவைகள்.

      காலங்கள் ஓடியது.கலவர வாழ்க்கையிலும் மூன்றுக் குழந்தைகளுக்கு தாயனாள் பாத்திமா.மூத்தவன் பரக்கத்துல்லா,இரண்டாவது பெண் கதிஜா,மூன்றாவது ஆண் ரபீக்.இப்படியான வேளையில் அவளது மாமியார் மரியம்பு ,படுத்த படுக்கையானாள்.இன்னைக்கோ ,நாளைக்கோ என சில மாதங்களாக கண்ணாமூச்சி ஆடினாள்.

         சீனி மரைக்கார் ராமேஸ்வரம் கிளம்பினார்.கையில் செலவுக்கு பணமில்லாததால் கிளம்ப வேண்டிய சூழல்.மீன் பிடிக்க சென்றால்,கரை வர மூன்று நாட்கள் கூட ஆகலாம்,அவர் கடலுக்குள் படகில் சென்ற இரண்டாம் நாள்,அவரது தாய் மரியம்பு இறந்து விட்டாள்.

    (தொடரும்)

   

Friday 24 June 2016

சீனி மரைக்கார்..! (சிறுகதை) 3


        மாணிக்கத்தை அடித்த பிறகு,சீனி மரைக்காருக்கு பதக்கம் கிடைத்தது போல ,ஊருக்குள் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.அது இன்னும்,இன்னும் சாராயப் போதையைப் போல் மமதைப் போதையை கொடுத்தது.அதிலிருந்து உள்ளூரில் எங்கு அடிதடியென்றாலும்,அவர் பெயரும் அடிபடும்.வேலைக்குப் போக,போதையைப் போட,சண்டைப் போட,இப்படியாகப் போனது அவரது நாட்கள்.

      "ஏண்டி..இப்படியா...!?ஒம்மவன் அநியாயம் பண்ணுவான்....!?ஒரு கல்யாணம் காச்சிய முடிச்சி வச்சா...திருந்திருவான்ல....! என ஊரில் உள்ள பெண்கள் சொல்ல,ஏதாவது பொண்ணு கிடைக்குமான்னு ,அவர் அம்மா மரியம் தேடத் தொடங்கினாள்.அவள் தேடல் வீண் போகவில்லை .பக்கத்து ஊரில் பொண்ணும் கிடைத்தது.பெயர் பாத்திமா.அது அப்படியே மருவி "பாத்துமா"என மாறி விட்டது.

      கல்யாணம் நடந்தது.பாத்திமா வந்ததிலிருந்து ,சீனி மரைக்கார் குடிப்பதில்லை,யாரிடமும் வம்பு வளர்ப்பதில்லை."என்னமா மாறிட்டாரு தெரியுமா..!?"என்றெல்லாம் எழுதிட ஆசை தான்.

       ஆனால் அவர் மாறவில்லை,மாறுவதாகவும் இல்லை.....

   (தொடரும்...)

   

Sunday 19 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 2


        சிறுவயதில் சீனி மரைக்கார் ,பயந்த சுபாவம் கொண்டவராகத் தான் இருந்தார்.காலப்போக்கில் முன் கோபக்காரராகவும்,முரட்டு குணக்காரராக மாறிப்போனார். அவரது பயந்த சுபவாத்தையறிந்து,சிலர் வன்முறையை அவர்மீது நடத்தியதால் ,கொடுமைக்கார இவ்வுலகத்தில் ,வாழ வேண்டுமென்றால் கோபங்கொண்டேயாக வேண்டும் என்று தன் பாதையை மாற்றிக்கொண்டார்."ஏய்...அவன் கோவக்காரன்பா.."என சிலர் அவர்முன் சொல்ல,சொல்ல ,அவருக்கு கோபம் ஒரு கேடயமாக தெரிந்தது.ஆனால் கொஞ்சம் ,கொஞ்சமாக கோபம் அவரது மனதை விழுங்க ஆரம்பித்து விட்டது.எதற்கெடுத்தாலும் கோபம்தான்.

       பருவ வயதில் வயிற்றுப் பிழைப்பிற்காக,கடல்தொழிலில்தான் ஈடுபட்டார்.ராமேஸ்வரம்,மண்டபம்,ஏர்வாடி என்று கடலுக்குப் போவதும் ,அதில் வரும் வருமானத்தில் வயிற்றைக் கழுவுவதுமாக ,ஏதேனும் மிச்சப்பட்டால்,அவர் அம்மா கையில் கொடுப்பதுமாக இருந்தார்.உடன் வேலைப்பார்த்தவர்கள் உபயமாக "கடல் காத்துக்கு..பீடி இழுத்தா தான் நல்லது"என்று அவர் வாயில் தீயைப் பற்ற வைத்தார்கள்."பாக்குற வேலைக்கு ,கொஞ்சம் "சரக்கு"அடிச்சாத் தான் ஒடம்பு அசதி மாறும்"என்று அவர் வயிற்றில் நெருப்பை ஊற்றினார்கள் .உருப்படத்தான் இங்கே வழி சொல்ல ஆட்கள் குறைவு.நாசமாக்க சொல்லவா வேண்டும்...!?

        ஒரு முறை தன் ஊருக்கு வந்த சீனி மரைக்கார்.கண்மாய்க்கரைக்குள் சாராயம் குடிக்கச் சென்றார்.சாரய வியாபாரி மாணிக்கமோ..

"இந்தா பாரு சீனி ..பழய காசு அம்பதஞ்சி ரூபாய வச்சிட்டு....குடி..அதுக்கு மேலயெல்லாம் கடங்கொடுக்க முடியாது....."என்று சொல்ல,

   "ஆமாம்.. "......"பெரிய கப்பல் யாவாரம் பாக்குறே..."ஊத்து..."......"என்று சீனி சொல்ல...

வார்த்தை தடித்து,மல்லுக்கட்டானது,தெரு நாயாவது கொஞ்சம் நல்லா சண்டைப் போடும்,அதை மிஞ்சி விட்டார்கள்.சீனியும்,மாணிக்கமும்....

  (தொடரும்...)

    

Saturday 18 June 2016

சீனி மரைக்கார் ..!! (சிறுகதை) (1)


         முன்னொரு காலத்தில் ஒடைமரங்கள் அடர்த்திருந்த காடு அது.தற்போது கொஞ்சம் கூடுதலாகவே வழுக்கை விழுந்திருந்தது,அந்தக் காட்டிற்கு.ஆனாலும் காடு என்ற பெயரை மட்டும் இழக்காமல் இருந்தது.அக்காட்டில் ஒடைமரங்களுக்கு சமமாக பனை மரங்களும் ,தன் ஆக்கிரமிப்பை செய்திருந்தது.அப்பனை மரங்களில் ,சில மொட்டைப்பனை மரங்களும் உண்டு.அதில் மைனாக்களும்,கிளிகளும் குடும்பத்தோடு குடித்தனம் நடத்தும்,பாழாய்ப்போன பல மனிதனின் மனம்,ஒன்றாக இருப்பதை பிரிப்பதுதானே வழக்கம்.குடித்தனம் நடத்தும் இடத்தைத் தேடி ,அம்மரத்திலேறி குஞ்சுகளை எடுத்து வளர்க்கவும் செய்வார்கள்.அடுத்த உறவுகளைப் பிரித்த பாவமோ என்னவோ,பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊராக,உறவுகளைப் பிரிந்து வாழ்கிறான் போல மனிதன்.

          அக்காட்டினை இரண்டாகப் பிரிப்பதுப் போல்,கடற்கரைக்குச் செல்ல ,சாலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அச்சாலையோர ஒடைமரமொன்றின் கீழ்,சுத்தம் செய்யப்பட்டிருந்தது .அந்த இடத்தினைச் சுற்றி,சீட்டுக் கட்டுகள்,மதுப்பாட்டில்கள்,காலியான தண்ணீர் பாக்கெட்கள் சிதறிக் கிடந்தன.பலர் அவ்விடத்திற்கு வந்துப் போன அடையாளங்கள்,அதிக அளவில் காணப்பட்டது.அந்த இடத்தில் ஐம்பத்தைந்திலிருந்து அறுபதுக்குள் வயதிருக்கும் ஒருவர் படுத்து தூங்கி கிடந்தார்.செருப்பை தலைக்கு வைத்துக் கொண்டு ,தலையில் வெள்ளையடித்த முடியுடன்,முன்னாளில் இத்தலையில்,கருப்பு முடிகளும் இருந்தது என அடையாளத்திற்கு சில கருப்பு முடிகளும் இருந்தன.இவர் எழுந்திருப்பதற்குள்,இவரைப் பற்றி பார்த்திடுவோம்.இவர் பெயர்தான் "சீனி மரைக்கார்"...!!

      (தொடரும்...)

     

Saturday 11 June 2016

ரமழானே வருக..!


உலகத் தேவையில் உலுத்துப் போன
உள்ளத்தினையும் ஆன்மீக ஒளி வீச செய்திடும் மாதமே!

கஞ்ச நெஞ்சத்திலும் தர்ம நீரூற்றினை ஊறச் செய்திடும் மாதமே!

மடமை இருளகற்ற மாமறை தந்த புனித மாதமே!

ஈமானின் வல்லமைதனை பாருலகம் உணர்ந்திட
பத்ருகளம் பாடம் நடத்திய மாதமே!

அருள் பொருந்திய மாதமே!

உன்னருளால் எங்களை நனைத்து
எங்கள் பாவக்கறைகளை கழுவிடு புண்ணிய மாதமே..!

 

Tuesday 7 June 2016

கல்லறைப் பூக்கள்.!

நீ "லைக்"கிடாத என் கவிதைப்பூக்கள்
வெறும் கல்லறைப் பூக்களாகவே  காட்சியளிக்கின்றது !

     

Wednesday 1 June 2016

இவ்வளவுதான் நான் .....!!


நானொன்றும்
பஞ்சுமெத்தையில்
துயில் கொண்டவனில்லை
வறுமையின் கோர நகங்களால் கிழிபட்டவன்!

நானொன்றும்
காதல்மடியில் தலை சாய்ந்தவனில்லை
காயங்களின் வலியில் வழியமைத்துக் கொண்டவன்!

நானொன்றும்
இலக்கியச் சமுத்திரத்தை மூச்சு முட்ட குடித்தவனில்லை
இம்சைகளின் இடையில் கிடைத்தவற்றை வாசித்தறிந்தவன்!

நானொன்றும்
பணப்பேய் பிடித்து ஆடுபவனில்லை
எவரிடமும் தலைச்சொறிந்து நிற்க கூடாது என்று சம்பாதிப்பவன்!

நானொன்றும்
அறிவுஜீவிகளிடம் அடைகாக்கப்பட்ட முட்டையல்ல
அடிபட்டே வாழ்க்கைப்பாடம் படித்தவன்!

ஆதலால்
என்னிடம் தென்படும் எதார்த்தங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
தத்துவங்களை தேடாதீர்கள் !