Tuesday, 27 October 2015

பூங்கொத்துதான்!

உன்னை மகிழ்விக்க
நான் தரும் பூங்கொத்துதான்!

"கவிதை"!

       

Monday, 26 October 2015

கண்ணீர்..!


கண்கள் எழுதிடும்
ஓர் உணர்வுக் கவிதை!

"கண்ணீர்"

    

Sunday, 18 October 2015

தகிக்கிறேன் நான்!


வெளிச்ச ஆடையை களைந்து விட்டு
கருப்பு நிற ஆடையை அணிய ஆயத்தமான வானம் !

நீள் மரங்களிடையில் சிதறிய
ஒளிக்கீற்றுகள்!

கொலுசுக்கட்டி நடந்திடும் நீரோடை!

பச்சைப் போர்வையை போர்த்திக் கொண்ட மலைகள்!

பசியோடு பறந்து சென்று வயிறு நிறைந்து
கூடு திரும்பும் பறவைகள்!

காற்றுடன் காதல் பேசும் பூக்கள்!

பூவிதழில் தேன் குடித்துக்கொண்டே சிறகசைக்கும்
பட்டாம்பூச்சிகள் !

இப்படியான காட்சிகளை கவிதைகளாக 
காணும்
இத்தருணத்தில் தகித்துதான் போகிறேன்!

பிடித்தமான ஒரு கவிதைப் புத்தகத்தினை 
பிரித்து படிக்கவா !?

இல்லை!

பிரியமானவளே உன்னை நினைத்து
ஓர் கவிதை எழுதிடவா !? என்று!

        

Wednesday, 14 October 2015

ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசமாகிட உண்டு.!


         இறைவன் படைத்தப் படைப்புகளில் ,ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்தன்மையுண்டு.ஒவ்வொரு மலரிலும் வெவ்வேறு வாசங்கள் இருப்பதைப் போல,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வேறு திறமைகள் உள்ளது.ஆனால் மனிதர்களாகிய நாமோ,அடுத்தவரிடம் உள்ள கூலாங்கற்களைக் கூட ,பெரும்சாதனையாக பார்க்கும் நாம்,நம் கையிலிருக்கும் முத்துக்களை கவனிப்பதில்லை .இப்படியாக நாம் பார்க்க தவறிய ,உணர மறுத்த,மறந்திட்டவற்றில் ஒன்று.நம் பிள்ளைகள் .

        குழந்தையாக நம் பிள்ளைகள் இருந்திடும்போது ,கண்ணே ,மணியே என்று கொஞ்சும் நாம் ,வளர வளர ,நம் பாசத்திற்கு ஒரு திரைப் போட்டுக் கொள்கிறோம்.ஆம்!அக்குழந்தைகள் படிப்பிலோ,மற்றவற்றிலோ சிறப்பாக செய்ய முடியாவிட்டாலும் ,முடிந்தளவிற்கு வெற்றிகளையோ,மதிப்பெண்களையோ பெற்று வருகையில்,அக்குழந்தையை நாம் ஆதரிப்பதில்லை,அடுத்து இன்னும் சிறப்பாக செய்ய மாற்று வழிகளை அக்குழந்தைகளுக்கு காட்டுவதில்லை .ஆனால் முழு பழியையும் குழந்தையின்மேல் சுமத்திவிட்டு நாம் தப்பித்துக் கொள்கிறோம்.அதே வேளை குழந்தைகள் தவறு செய்துவிட்டாலோ,அதனால் வரும் கோபத்தை அடியாகவோ,வசைச்சொற்களாகவோ தாராளமாக பயன்படுத்தி குழந்தைகளெனும் காகிதத்தை கிழித்து எறிந்து விடுகிறோம்.


          குழந்தைகளைப் "பச்ச மண்ணு"என சொல்வார்கள் .அதனை காரணமில்லாமல் சொல்லவில்லை ,நம் முன்னோர்கள்.ஆம்!ஈரமான மண்ணை மண்பாண்டங்களாக வடிவமைத்து ,பயன்படானதாக ஆக்கிடுவது குயவன் பொறுப்பைப் போலவே,நம் பிள்ளைகளை ,மனித சமூகத்திற்கு பயன்பாடான குழந்தைகளாக வளரச் செய்வது ,வாழச் செய்வது நம் பொறுப்பாக உள்ளது.அதனைச் செய்திடாமல் ,பக்கத்து வீட்டு பசங்களோட ,நம் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து திட்டித் தீர்க்காதீர்கள்.பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சமூக அந்தஸ்துள்ள மருத்தவராகவோ,பொறியியலாளராக இருக்கும் பட்சத்தில்,நம் பிள்ளைகள் நம்மை பார்த்து "நீங்க ஏன் அவர்களைப்போல"!?இல்லையென கேள்வி எழுப்பினால்,நம் முகத்தை நாம் எங்கே வைத்துக் கொள்ள முடியும்.ஆதலால் தான் சொல்கிறேன்.
"ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசம் உண்டு!ஒவ்வொரு உயிர்க்குள் ஓர் திறன் உண்டு!!"

     

Monday, 12 October 2015

கலங்கிடத் தேவையில்லை...!!


     "இந்தியா எங்கள் தாய் நாடு!இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்!என் தாய்த் திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்......""என பள்ளிக்கூடத்தில் உறுதி மொழி எடுக்கையில் ,நெஞ்சில் ஓர் இனம்புரியாத சந்தோசமும் ,தன்னையறியாமலே நெஞ்சு நிமிர்ந்து ஒரு கம்பீரம் தெரியும்,உடலிலும்,முகத்திலும்.கால ஓட்டத்தில் சுதந்திரகாலப் போராட்டங்களை படிக்கையிலும்,ஒரு இருமாப்பும் உண்டானது, சுதந்திரப் போராட்டத் தியாகளிகளான பகதூர் ஷா,நேதாஜி ,காந்தி போன்றவர்களின் வரலாற்றைப் படித்து அதனுள் பயணிக்கையில் .இப்படியாக இந்தியா என்றாலோ,இந்தியன் என்றாலோ ,ஒரு "கெத்து"மனதினுள் ஊடுவும்.மூன்றுப் பக்கமும் கடலாலும்,தலையில் பனிமலையுடனும் காட்சி தரும் அழகான தேசம்.பல நிற,இன,மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட அற்புதமானது தேசம்தான் இந்தியா.

      
        இப்படியாக எத்தனையோ ,பெருமைகள் கொண்ட இந்தியாவிலோ,மாட்டிறைச்சி தின்பது கூட மரணத்தண்டனைக்குரிய செயலானதாக பார்க்கப்படுகிறது ,பேசப்படுகிறது ,சில கயவர்களால்.மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் என பெருமையாக பேசிக்கொண்டு,இன்னொருப் பக்கம் உள்நாட்டு மக்கள் உண்பது மாபாதகமாக காண்பிக்கப்படுகிறது.இப்பாசிசவாதிகள் ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் ஆபத்தானவர்கள் என சிலர் மனப்பால் குடித்தார்கள்.ஆனால் இன்று பல்வேறான சம்பவங்கள் ,இந்த பாசிசவாதிகள் இந்திய இறையாண்மைக்கே எதிரானவர்கள் என சாமானிய இந்திய மக்களும் உணரத் தொடங்கி விட்டார்கள்.விவசாயிகளுக்கு எதிரான நில அபகரிப்பு சட்டம், கருப்பு பண விவகாரம்,கோயிலுக்குள் நுழைந்த தலித்
முதியவர் கொலை,புகார் அளிக்கச் சென்ற தலித் குடும்பத்தினர் நிர்வாணப்படுத்தப்பட்ண அவலம்,இப்படியாக நடக்கும் சம்பவங்கள் இந்தியா ,கற்காலத்திற்கு சென்று விட்டதோ என அச்சப்பட வைக்கிறது.

        இத்தனை வகையான அநீதிகள் நடக்கிறதே,நம்மால் என்ன செய்திட முடியும் என கலங்கி நிற்கத் தேவையில்லை,நம்மால் முடியுமா !?என மலைத்து நிற்கவும் தேவையில்லை.நம் இந்திய தேசத்தில் ஜனநாயக முறையில் போராடுவதற்கு ,வழிவகைகள் உள்ளது,அப்போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றது.நாம் செய்ய வேண்டிய கடமையானது ,ஜனநாயக வழியில் போராடும் அவர்களோடு கைக்கோர்ப்தேயாகும்.ஆம் !நாம் நம் பாரதத்தை காத்திட வேண்டும்.அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையாக வாழ்ந்திட நாம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும்."ஓடாத மானும் !போராடாத மக்களும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை"என ஓர் கவிஞன் சொன்னான்.ஆதலால் எதற்காகவும் கலங்கிட ,தயங்கிட தேவையில்லை,போராட்டக்குணம் நம்மிடையே இருக்குமேயென்றால் ........!!

        

Thursday, 8 October 2015

எஸ்.டி.பி ஐ ன் வெற்றி.!


       எஸ்.டி.பி.ஐ ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில்,"ஏம்பா !?ஒங்களுக்குத் தேவையில்லாத வேல.." "இருக்குற கட்சி பத்தாதா !?நீங்க வேறயா "என்றும்,
அரசியல் "ஹலாலா !?ஹராமா..!?என்றும் ,பல்வேறான கருத்துக்களும்,விமர்சனங்களும்,ஏன் அவதூறுகள் கூட சுமத்தப்பட்டது.ஆனாலும் அக்கட்சியின் ஆரம்ப கால தலைவர்களிடம் ,நீண்ட தூர தொலைநோக்குப் பார்வை இருந்தது .அவர்களது உறுதியான நிலைபாடுகளில் ,அவர்களிடம் சரியான திட்டமிடலினாலும்,கட்சி வளர்ந்துக் கொண்டேச் சென்றது.இன்று இந்தியாவெங்கிலும் எஸ்.டி.பி.ஐ கொடியினை காண முடிகிறது.

    இக்கட்சியின் போராட்டங்கள் பன்முகத்தன்மை கொண்டது.விலைவாசி உயர்வு,மது ஒழிப்பு,தலித் சமூகத்திற்கெதிரான கலவரங்கள்,இலங்கையில் நடந்த இனப்படுகொலை ,இப்படியாக போராட்டங்கள் நடத்தியது இக்கட்சி.ஈழப் படுகொலையின்போது,காங்கிரஸும்,பா ஜ க வும் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வேளையில்,"நாங்கள் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர்கள்"என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தமிழக அளவில் போராட்டங்கள்,அறிக்கைகள் என சுருக்கிக் கொண்டது.ஆனால் அதே வேளையில் எஸ்.டி.பி.ஐ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது,என்னைப் போன்ற மனிதத்தை நேசிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது .பெருநாள் சந்திப்பு விழாவின் போது மு.க.ஸ்டாலின் அவர்கள்"எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சி பொறாமைக் கொள்ளச் செய்கிறது "என்று சொன்ன வார்த்தை ,எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சியை பறைசாற்றுவதாகவே உள்ளது.

      இந்த வேளையில்தான் ,இராமநாதபுரம் மாவட்டம்,வாலிநோக்க மக்களின் போராட்டத்தை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது .இம்மக்கள் கடல் அலைகளையும்,கடற்கரை உப்புக்காற்றையும் எதிர்த்து உழைக்க தயங்காத எம் சொந்தங்கள்,அம்மக்கள் உரிமை வேண்டி போராட்டக்களத்தில் நிற்பது ஆச்சரியமும்,அதிசயமாகவும் உள்ளது.ஆம் அவர்களுள் போராட்டக்குணத்தை விதைத்து,உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயகத்தின் வழிமுறையைக் காட்டி ,வழி நடத்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியைப் பாராட்டியேத் தீர வேண்டும். ஏனென்றால் போராட்ட அரசியல் நடத்தும் அரசியல் கட்சி,போராடும் மக்களை உருவாக்குவதுதான்,முதல் வெற்றி. அவ்விசயத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றியடைந்துள்ளது.

"வாழ்த்துக்கள் !வாலிநோக்கம் மக்கா...!!

    

Tuesday, 6 October 2015

டிஜிட்டல் இந்தியா.!


இணையத் தொடர்பு புகழப்படும்!
ஏழை வயிற்றுப் பசி மறக்கப்படும்!

தாய்மார்களின் கற்புகள் கலவரத்தில் கிழித்து எறியப்படும்!
தாயைப் பற்றி கேட்டதும் கண்ணீர் மல்கும் காட்சிகள் போற்றப்படும்!

மாட்டுக்கறி புசிக்க தடையுள்ளது!
மனித கறிகள் கூறு போடப்படுகிறது !

இரவுக்கேளிக்கை விடுதிகள் உடைக்கப்படும்!
அந்நிய நாட்டில் பெண்ணை கட்டியணைப்பது பிரமதர் என்றால் சாதனையாக்கப்படும்!

பாகிஸ்தானிலிருந்து தாவுது இப்ராஹிம் தர தர வென இழுத்து வரப்படுவார் என தேர்தலின்போது முழங்கப்படும்!
பிறகு வெங்காயம் இறங்குமதியை சாதனையென சொல்லப்படும் !

உங்களுக்கு கொலைவெறி கோபம் வர வேண்டுமா.!?
இல்லை வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா !?

இந்திய அரசியலை கொஞ்சம் ஆழ்ந்து 
யோசித்துப் பாருங்கள்!
அடைந்திடலாம் அவ்வின்பத்தை!

இது தான் 
எங்கள் டிஜிட்டல் இந்தியா.!

     

Saturday, 3 October 2015

பாவம் அந்த மாடுகள்!


     உழைப்பிற்கும் ,சாந்ததிற்கும் பெயரின் பிராணியான மாடு தான் இன்றைய இந்தியாவில் "ஹாட் டாபிக் ". ஒரு முறை கர்ம வீரர் காமராசர் அவர்கள்,காரில் சென்றுக் கொண்டிருக்கையில் ,ஒரு கிராமத்துவாசி,காரை மறைத்து கேட்டாராம்,காமராசரிடம் "அய்யா.!சுடுகாட்டிற்கு செல்ல வழி அமைச்சி தாங்க"னு கேட்டார்.அதற்கு காமராசர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்,"நான் "இருக்குறவங்கள"ப் பத்தி கவலைப் படுறேன்.!நீங்க "போறவங்கள"பத்தி கவலைப் படுறீங்க"னு சொன்னாராம்.ஆம் !அய்யா காமராசர் அவர்கள் மனிதர்களின் வாழ்வை உற்று நோக்கினார்.அவர்களது வாழ்வை முன்னேற்ற, வாழ்நாளை கரைத்தார்.ஆனால் இன்று மனிதம் மறந்த மாக்களோ ,மாடுகளைப் பற்றி பேசி,மனிதர்களைக் கொள்கிறது மதங்களைச் சொல்லி. 

        மாட்டு இறைச்சியினை உணவாக உட்கொள்வது,இஸ்லாமிய சமூகத்தின் கட்டாய கடமையில்லை.அது அச்சமூகம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று,இதில் வேடிக்கை என்னவென்றால் இச்சமூகத்தில் மாட்டிறைச்சியை வாழ்நாளில் தொட்டுக்கூட பார்த்திடாதவர்கள் ஏராளமாக,தாராளமாகவும் உள்ளனர்.அதேவேளையில் மாட்டிறைச்சி நாள் தவறாமல் சாப்பிடும் பிற சமூகத்தினரும் உள்ளனர்.ஆனால் இஸ்லாமிய சமூகத்தை முன்னிறுத்தியேதான் இங்கே பேசப்படுகிறது .அதேப்போல் சில நாட்களுக்கு முன் குர்பானிக்கு கொண்டு ச் செல்லப்பட்ட பிராணிகளைத் தடுத்த "ப்ளு க்ராஸ்"அமைப்பினர்.,இவ்வமைப்பினர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை .பிற உயிர்களை காப்பாற்றுகிறார்களாமாம்,அய்யோ அய்யோ !எங்கே இருந்துதான் வருகிறார்களோ இப்படி, !? வருடத்திற்கு ஒரு முறை தான் குர்பானி ,அந்த இறைச்சி கூட ஏழைகளுக்கே பெரும்பான்மையாக பகிரப்படுகிறது ,ஆனால் தினந்தோறும் ஆடு,மாடு,கோழிகளை அறுத்து ஏற்றுமதி செய்திடும் பெரும்தொழில் நிறுவனங்களுக்கு எதிராக என்ன செய்தார்களோ !?.பிற உயிர்களை கொல்ல விரும்பாத "ப்ளு க்ராஸ் "அமைப்பினரே நீங்கள் இனி "ஷாம்பு"தேய்த்துக் குளிக்காதீர்கள் .ஏனென்றால்  உங்கள் தலையில் வளரும் பிற உயிர்களான "ஈரும்,பேனும்"சாகிறதால்.

     "குடிவெறி"யர்கள் "கல்யாணம்"நடந்தாலும் ,"கருமாதி"விழுந்தாலும் குடிப்பார்கள்.அவர்கள் காரணங்களுக்காக குடிக்கவில்லை,குடிப்பதற்காக காரணங்களைத் தேடுகிறார்கள்.அதுப்போல ரத்தவெறியர்களாக இப்பாசிசவாதிகள்,அவர்கள் 1992 ல் ரத்தம் குடிக்க ,ராமரும்-பாபரும் தேவைப்பட்டார்கள்.2002 ல் குஜராத் கலவரத்திற்கு சபர்மதி தீப்பற்றியது,காரணமாக இருந்தது.இப்பொழுது மாட்டை வைத்து மனிதத்தைப் புதைக்கிறார்கள்.புற்பூண்டுகளை சாப்பிட்டு வளரும் மாட்டின் பெயரைச் சொல்லி மனித ரத்தங்களை ஓட்டாதீர்கள்."பாவம் அந்த மாடுகள்".

     

சண்டியர்.!(சிறுகதை) (2)


           அஜீஸைப் பற்றி கொஞ்சம் பார்த்திருவோம்.இவன் தகப்பனார் சிங்கபூர் குடியுரிமை பெற்றவர்.இவன் இங்கே பிறந்து ,ஏழு வயது வரை இங்கேதான்  வாழ்ந்தான்.பிறகு தன் தாயுடன்,சிங்கபூர் சென்றான் தன் தகப்பனார் முயற்சியில் ,அப்படியே படிப்படியாக சிங்கபூர் குடியுரிமை பெற்று விட்டான்.ஐந்தாறு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த ஊருக்கு வந்து,சில மாதங்கள் தங்கி விட்டுப் போவான்.அப்படித்தான் இந்த முறையும் வந்திருந்தான்.சலீமுடன் அவனுக்கு ஒரு இடைவெளி,எப்போதும் இருக்கும்,அது ஏனென்று இருவருக்குமே தெரியாது.ஆனாலும் எங்காவதுப் பார்த்துக் கொண்டால்,ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள்,இல்லையென்றால் ஒதுங்கியே போய் விடுவார்கள் .இப்போது தன் சின்னம்மா மகன் மீராசாவை அடித்து விட்டான் என்பதில் கோபமானான்.அந்த கோபத்தை கூட சுற்றப் போனவர்கள் ,அணைந்திடாமல் எரிய வைத்திருந்தார்கள்.


          ஊருக்கு வந்த அஜீஸ்,நேரடியாக சலீமுடன் மோதிக்கொள்ளாமல்,சாடையாகப் பேச ஆரம்பித்தான்.அவன் ,இவனைத்தான் பேசுகிறான் என்பதை சலீம் புரிந்துக் கொண்டான்."நேரே வந்து வம்பு பண்ணு..அப்போ இருக்கு ஒனக்கு"என சலீம் கொதித்துக் கொண்டிருந்தான்.

       சில நாட்களில் கீழக்கரை மணல் மேட்டில் கைப்பந்துப் போட்டி பெரிய அளவில் நடத்த இருப்பதாக ,தகவல் வந்திருந்தது.அதுவரைக்கும் "சும்மா"இருந்த மருதநாயகம் திடல்,பரபரப்பானதாக மாறிப் போனது.தினமும் கைப்பந்துப் பயிற்சி தான்,சலீமிற்கு கைப்பந்தாட ஆசைதான்.ஆனால் விளையாடத் தெரியாது.அதனால் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பந்து ,குடிகாரனை கட்டிய மனைவியைப்போல,அடிபட்டுக் கொண்டும்,"கிழி"ப்பட்டுக் கொண்டும் இருந்தது.

      அப்போது அஜீஸ்,சலீமிடம் வந்தான்.
"வா ,கொஞ்சம் உன்கிட்ட பேசனும்" என்றான்.அதற்காகவே காத்திருந்ததுப் போல்,உட்கார்ந்து இருந்தவன் எழுந்தான்.இருவரும் திடலுக்கு அருகிலிருந்த பள்ளத்திற்கு சென்றார்கள்.அங்கு கருவேலமரங்கள் அடர்த்தியாக இருக்கும்.இருவரும் சென்றதை பந்து விளையாட்டை,உன்னிப்பாக கவனித்தவர்கள்.இவர்களைப் பார்க்கவில்லை .சில நிமிடங்கள்தான்,கழிந்திருக்கும்.அப்போது அடிபட்ட பந்து பள்ளத்தை நோக்கி ஓடிவிட்டது.அதனையெடுக்கப் போனாவன்.

"ஏய் !எல்லாரும் இங்கே வாங்கப்பா...ஒரே ரெத்தம்பா."என
அலறிக் கொண்டு,பந்து விளையாடியவர்களை அழைத்தான்.


       பந்து விளையாடியவர்கள்,
வேடிக்கைப் பார்த்தவர்கள் என எல்லோரும் ஓடிப் போய்ப் பார்த்தார்கள். சலீம் முகத்திலும்,அஜீஸ் முகத்திலும் ரத்தங்கள் அப்பிக்கொண்டும்,வடிந்துக் கொண்டும் இருந்தது.என்னமோ "முகம்மது அலி-மைக்டைசன்"என நினைப்புப் போல இருவருக்கும்,இன்னும் விடாமல் மாறி மாறி ,மூர்க்கமாக தாக்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.ஓடிப் போய்ப் பார்த்தவர்கள் .கஷ்டப்பட்டு இருவரையும் 
பிரித்தார்கள். அதற்குள் அவர்களது உறவுகள் வந்து ,கூட்டிச் சென்றார்கள்.அவர்களது முகம் ,அவர்களுக்கே அடையாளம் தெரிய ஒரு வார காலம் ஆகலாம்,அந்த அளவிற்கு முத்தங்களாகப் பதிந்திருந்தது குத்துக்கள்.


       "நீ என்னத்துக்கு மீராசாவை காப்பாத்த போனே.!அந்த நன்றி கூட இல்லாமல் இப்படி அடிச்சிருக்கானே.."மங்கரையான் திம்பான்"என சலீம் அம்மா ,தன் வீட்டிற்கு வந்தபின் அஜீஸைத் திட்டினாள்."ஏன்டா..!?சலீமைப் போய் அடிச்சே..அவன்தானடா மீராசாவ கூட்டி வந்தான்"என அஜீஸைத்தான் அதட்டினார்கள்.அவனது உறவுகள்.சில வாரங்கள் கழிந்தது.அஜீஸ் சிங்கபூர் பயணம் கிளம்பி விட்டான்.அதற்கிடையில் இருவரும் சந்திக்கவில்லை.

         காலம் கரைந்தோடியது. நாட்கள் வாரங்களாக,வாரங்கள் மாதங்களாக,மாதங்கள் வருடங்களாக ஓடியது.ஏழெட்டு வருடங்களானது,அதற்கிடையில் சலீமிற்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைக்கு தகப்பனாகி இருந்தான்.அஜீஸ் சண்டை பிரச்சினையில் ஈடுபட்டு,சிங்கபூர் சிறையில் இருப்பதாக ,ஊருக்குள் ஒரு பேச்சு அடிப்பட்டது.

         காலம் மர்மமானது,ஆச்சர்யமானது,அது போடும் 
முடிச்சுக்கள்,மனித மூளைச் சிந்தனைக்குள் அகப்பட முடியாத நுட்பம் கொண்டது.ஆம் !சலீமின் மனைவியின் தம்பிக்கு,சிங்கபூர் குடியுரிமைப பெற்ற உறவுக்காரப் பெண்ணிற்கும் திருமணம்,சிங்கபூரில் நடைபெற இருந்தது .அதற்கு சலீம் குடும்பத்தை கட்டாயம் வரச் சொல்லி அழைத்தான்.அவசரமாக கடவுச்சீட்டு(பாஸ்போர்ட் )விண்ணப்பித்து எடுத்து,சலீமின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் சிங்கபூர் சென்றார்கள்.

தானும் ஒரு நாள் சிங்கபூர் செல்வேன் என கனவில் கூட நினைக்காத  சலீம் சிங்கபூர் வந்து விட்டான்.சலீம் சிங்கை வந்த ஒரு வாரத்தில்,அஜீஸ் "உள்ளே"இருந்து வெளியில் வந்து விட்டான்.

     

        புக்கிட் பாத்தோக் சமூக நிலையத்தில் இரண்டாவது தளத்தில்,உற்றார் ,உறவுகள் சூழ திருமண உடன்படிக்கை நடந்தது.ஆண்களும்,பெண்களுமாக அவ்விடம் நிரம்ப ஆரம்பித்தது.புன்னகைகளால் மின்னிக் கொண்டும் இருந்தது .வந்தவர்களில் தனக்குத் தெரிந்தவர்களிடம் ,நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் சலீம்.அப்போது எதிர்பாராமல் வந்தான் கல்யாணத்திற்கு அஜீஸ்.சலீமிற்கு தர்ம சங்கடமான சூழல்,கல்யாணத்திற்கு வந்தவனிடம் எப்படி முகத்தைத் திரும்புவது !?எனத் தயங்கியவனாக ,லேசான புன்னகையுடன் ,தலையாட்டினான் "வா" என.அஜீஸும் பதிலுக்கு தலையசைத்து விட்டுச் சென்றான்.


     வந்தவர்கள் ,மணமக்களைச் சந்திக்கவும்,வாழ்த்துவதுமாகவும்,விருந்துண்பதுமாக இருந்தார்கள்.சிறிது நேரம் கழிந்தது.அஜீஸ் ,சலீம் அருகில் வந்தான்.

"வா !கொஞ்சம் பேசனும் "என்றான்.

      சலீம் வந்த இடத்தில் ,பிரச்சனையானால் நல்லா இருக்காதே"என தயங்கிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்.இருவரும் 
முதல் தளத்திற்கு வந்தார்கள்.அங்கு உட்கார்ந்துப் பேசுவதற்காக செய்யப்பட்டிருந்த,இருக்கையில் எதிர்,எதிரே அமர்ந்தார்கள் .அஜீஸ் "மார்ல்ப்ரோ"சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.பிறகு சலீம் பக்கம் ,சிகரெட்டை நீட்டினான்."நீ ஒன்னு எடுத்துக்கோ"எனும் தோனியில்.சலீம்
சொன்னான்.

"இல்ல அஜீஸ் !இப்ப இதெல்லாம் விட்டுட்டேன்."என்றான்.

"ம்ம்..."என தலையாட்டியவனாக,ஏதோ குழப்பமும் ,கவலையுமாக சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தவன்,சலீமிடம் கேட்டான்.

"கேள்விப்பட்டேன்..இப்ப "தண்ணியெல்லாம்"விட்டுட்டியாமே...ஆடம்பரமா நடக்க இருந்த கல்யாணத்த ,சிம்பிளா முடிக்க வச்சது,நீதானாமே...!?எப்ப இருந்து நீ "மாற" ஆரம்பிச்சே..."என ஒரு ஏக்கத்துடன் கேட்டான்.

   "ம்ம்...ஆமாம் .!நாம அன்னைக்கு அடிச்சிக்கிட்ட பிறகு,என் உம்மா வடிச்ச கண்ணீர் தான்.என்னால என் உம்மாவுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.நான் "கழிசடையா" தெரியும்போது,சொந்தங்காரவங்க கூட செத்த நாயை,பார்க்குற மாதிரி பார்த்தாங்க,ஆனா என் உம்மா என்னையத் தாண்டா ஒலகமா சுத்தி வந்துச்சி .,அப்போ தான் நெனச்சேன்,ஆடு,மாடு கூட யாருக்காவது ,எதுக்காவது பயன்படுது..ஆனா மனுசனுங்க நாம ஏன் யாருடைய கண்ணீருக்கோ,காரணமா இருக்கிறோமே னு கலங்க ஆரம்பிச்சேன்...சின்ன புள்ளயில கடமைக்கு,ஓதிப் பார்த்த குர்ஆனையும் ,நபி வாழ்க்கையையும் ,வாழ்க்கைக்கு வழி காட்டும்ங்ற ,நம்பிக்கையில படிச்சேன்.,என்னை மாத்துச்சி....""என கலங்கிய கண்களுடன் சொல்லி முடித்தான் சலீம் .

    இவன் சொன்ன வார்த்தைகள் ஏதோ ஒரு வகையில் அஜீஸைச் சுட்டது.அவன் முகம் இறுக்கமானதாக இருந்தது .அஜீஸின் தாய் சில மாதங்களுக்கு முன்னால்,இறந்திருந்தாள்.அவள் எத்தனையோ முறை ,இவனைத் திருந்தச் சொல்லி அழுது புலம்பி இருக்கிறாள்.இவன் தான் திருந்தாததுப் போனதை இப்போது எண்ணியதும்  மனம் பாரமாக இருந்தது .காலமெனும் உளி ,சலீமெனும் பாறையை செதுக்கி இருந்தது.அஜீஸை பதம்பார்த்து இருந்தது .இருவரும் கடும்தவம் போல்,பேச வார்த்தைகளின்றி அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

        அம்மௌனத்தை கலைக்கும் விதமாக ,இஷா தொழுகைக்கான பாங்கு ,சலீம் கைப்பேசியில் கேட்டது.சலீம் எழுந்து நின்றவனாக,அஜீஸை அழைத்தான்."வா!தொழுதுட்டு வருவோம் "என.முதலில் "இல்ல ,நீ போயிட்டு வா"என்றவன்.சலீம் கையை பிடித்து இழுத்ததும்,தவிர்க்க முடியாமல் சென்றான்.

      இருவரும் அருகிலிருந்த தண்ணீர் குழாயில் "ஒளு"செய்து விட்டு ,சுத்தாமன ஒரு அறையில் ,சலீம் இமாமாகவும்,அஜீஸ் அருகில் நின்றும் தொழ ஆரம்பித்தார்கள்.தொழுகை முடிந்து சலீம் திருப்பிப் பார்க்கையில் ,அதிர்ச்சியுடன் திகைத்தான்.ஏனென்றால் அவன் தொழ ஆரம்பிக்கையில் ,அஜீஸ் மட்டும்தான் நின்றான்,பிறகு இன்னும் சிலர் சேர்ந்திருந்தார்கள்.சங்கையான பெரியவர்களும்,திருமணத்திற்கு வந்த ஹஸரத்மார்களும்.இப்பெரியவர்களுக்கு முன்னால்,நான் நின்று தொழுகை நடத்தினேனா !?என எண்ணி நெகிழ்ந்தான் சலீம்.

       பிறகு அவரவர்கள் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்.அப்போதை அஜீஸ் ,தொலைந்த தன் வாழ்க்கையை எண்ணி,செய்திட்ட பாவத்தை எண்ணி,இனியாவது திருந்தி வாழ ,வழி காட்டு யா அல்லாஹ் !!என ஏந்திய கைகளுக்குள், முகத்தை மறைத்து கண்ணீர் வடித்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

    சலீமோ,சஜ்தாவில் விழுந்தவனாக,"சாக்கடையில் விழுந்து கலந்திட இருந்த மழைத்துளி என்னை,சிப்பியில் சேர்த்து முத்தாக்கிய யா! அல்லாஹ் !என தேம்பி,தேம்பி அழுது இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் சலீம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ,தவறுவதற்கும் ,திருந்துவதற்கும் வாய்ப்பைத் தருகிறது .நாம் எப்படி !?என்று நம் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டால் நல்லது.

  (முற்றும்)