Sunday, 30 December 2018

காயம்.!

நீ ஏற்படுத்திய 
காயத்திலிருந்தே கசிகிறது

உனக்கான கவிதைகள்.!

Wednesday, 19 December 2018

கடல் நீர்.!

உலகத்தின் கண்ணீரால்
கடல் உப்பு கரித்து விட்டது
நீயும் அழுது நீர்மட்டத்தை

உயர்த்தி விடாதே..!

Saturday, 8 December 2018

பூக்கடை..!

பூக்கடையை கடந்து செல்லும் போதெல்லாம்
நீ என்னுள் தோன்றி மறைகிறாய்.!

Friday, 7 December 2018

மௌனம்..!

ஏன் என் மௌனத்தை கலைத்திட 
இவ்வளவு பிடிவாதம் கொள்கிறாய்.!?

என் மௌனம்
உனக்கு கோழைத்தனமாகவோ
வீரத்தனமாகவோ
முதிர்ச்சித்தனமாகவோ
முட்டாள்தனமாகவோ
அமைதியாகவோ
அதிர்ச்சியாகவோ
அடக்கமாவோ
அடாவடியாவோ
இப்படியாக ஏதோ ஒன்றாக
உன் விருப்பப்படி என்னைப் பற்றி
பிம்பத்தை வரைந்துக் கொள் 
அதைப்பற்றி நான் கவலைப்பட 
போவதில்லை.

என் மௌனத்தை மட்டும் 
கலைத்திட விரும்பாதே

ஒருவேளை என் 
மௌனம் உடைப்படும் தருணம்
உன் கண்ணில் சில கண்ணீர்த்துளிகள்
விரயமாகலாம்.!

Saturday, 6 October 2018

கவிஞன்.!

காசு பணம் இருக்க வேண்டும் என்று
எந்த கட்டாயமும் இல்லை
கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும்
நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சாய்த்திட..!


Wednesday, 26 September 2018

சொர்க்கம்.!

காலம் நம் தலையில்
வெள்ளை அடித்தால் என்ன .!?
நாம் சொர்க்கத்தில் இளமையாகத்தானே
சந்திக்கப் போகிறோம்..!

Thursday, 30 August 2018

பாடல்..!

மறந்தப் போன
பாடலொன்றை 
திரும்ப கேட்கும் போதெல்லாம்
உன் முகமே தெரிகிறது!Thursday, 23 August 2018

அறிவு ஞானம்.!

நீ 
உலகை தெரிந்துக் கொள்வது
அறிவு
உன்னையே அறிந்துக் கொள்வதுதான்
ஞானம்.!Sunday, 12 August 2018

கவிஞன் ..

காசு பணம் இருக்க வேண்டும் என்று
எந்த கட்டாயமும் இல்லை
கொஞ்சம் கவிஞனாக இருந்தாலே போதும்
நிலவின் மடியிலும் கொஞ்சம் தலை சாய்த்திட..!


Sunday, 5 August 2018

மௌனம்..

மௌனம்தான் என் சிறை
மௌனம்தான் என் சிறகு
மௌனம்தான் என் காதல்
மௌனம்தான் என் காயம்
மௌனம்தான் என் வாசிப்பு
மௌனம்தான் என் கவிதை
மௌனம்தான் என் பார்வை
மௌனம்தான் என் பயணம்
மௌனம்தான் என் வலி
மௌனம்தான் என் வழி
மௌனம்தான் என் சரணம்
மௌனம்தான் என் மரணம்.

Saturday, 28 July 2018

காகித கப்பல்..!

அளவில்லாத சந்தோசங்களை
சுமந்து செல்வதால்
புறப்பட்ட சிறிது நேரத்தில்
கவிழ்ந்து விடுகிறது
காகித கப்பல்கள்.!


Friday, 27 July 2018

விட்டில்..!

விளக்கில் எரிந்துதான்
சாக வேண்டும் என்று
விதியாக இருக்கையில்
பாவம் விட்டில் பூச்சிதான் 
என்ன செய்யும்..!?


Tuesday, 24 July 2018

உன் பெயர்...!!

உன் பெயரெழுத எண்ணி
ஒரு புள்ளி வைத்ததுமே
எறும்புகளாய் மொய்க்க ஆரம்பித்து விடுகிறது
கவிதைகள்.!Monday, 23 July 2018

பேனா..!

கொலைக் களத்திலும்
நாம் பேனாக்களை வைத்து
முதுகு சொறிந்துக் கொண்டிருக்கிறோம்!Thursday, 19 July 2018

போதை!

உன் பார்வை தாழும் வரை
என் போதை தெளியப் போவதில்லை .


Wednesday, 18 July 2018

வரும் போகாது.!

காசும் பணமும்  வரும் போகும்
இரவும் பகலும் வரும் போகும்
குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும்
கோடையும் மழையும் வரும் போகும்
நிழலும் வெயிலும் வரும் போகும்

ஆனால்
நட்பும் காதலும் வரும் போகாது
நமக்குள்ளேயே தங்கி விடுகிறது!Saturday, 2 June 2018

அலை நுரை.!

சமுத்திரமே 
உனக்கானதாக இருக்கிறது
நீயோ அலை நுரையில்
முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!Thursday, 31 May 2018

தெரு நாய்..!

தெருவில் கிடந்த ஒன்றை
தலையில் தூக்கி ஆடியதற்கு
நன்றிக் கடனாகத் தான்
கருத்து சொல்வதாக
கடித்து குதறி இருக்கிறது
தெரு நாயொன்று..!


Sunday, 6 May 2018

கவலைப்படாதே..

சோதனைப் பெருங்கடல் 
உன் முன் நின்றால் என்ன.!?
உன்னிடம் தான் (இறை)நம்பிக்கை யெனும்
கைத்தடி இருக்கிறதே...


Saturday, 5 May 2018

வேட்டி..

எப்போதாவது கட்டும் வேட்டி
எப்பொழுது அவிழ்ந்து விடுமோ என்ற
பதற்றத்தை  போலவே
உன்னை சந்திக்கும்போதெல்லாம்
வாய் தவறி வார்த்தை வந்து 
விழுந்திடுமோ என அஞ்சுகிறேன்.!Saturday, 28 April 2018

திருந்திருக்கிறேனா..!?

கடல் அலையே
மரக்கிளையே

நிழலே
விழுதே

தென்காற்றே
தேனூற்றே

மேகமே
தாகமே

என்னை நினைவிருக்கா.!?

திரும்பவே வர மாட்டேன் என்றவன்
திரும்பவும் வந்திருக்கிறேன்!

திருந்திருக்கிறேனே எனும் கேள்வியை
உன்னிடமே கேட்டு நிற்கிறேன்!Sunday, 22 April 2018

வீணாக்காதே..!!

என்னை திட்டுவதாக எண்ணி
உங்கள் வார்த்தைகளை வீணாக்கி விடாதீர்கள்
ஏனென்றால்
அவ்வார்த்தைகளை சேமித்து வைத்திட
என் நெஞ்சுக் கூட்டிற்குள் இடமில்லை!


Tuesday, 17 April 2018

வார்த்தை கல்.!

சில்லுண்ட என்னைச் சேர்த்து வைத்து
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வார்த்தைக் கல்லிற்காக..!Sunday, 15 April 2018

கைக்கொட்டும் துரோகங்கள்...

நான் அந்தி என்கிறேன்
நீ மாலை என்கிறாய்

நான் பூ என்கிறேன் 
நீ மலர் என்கிறாய்

நான் விடியல் என்கிறேன்
நீ அதிகாலை என்கிறாய்

நான் மணம் என்கிறேன்
நீ வாசம் என்கிறாய்

நான்வந்தார்கள்என்கிறேன்
நீவருகைப் புரிந்தார்கள்என்கிறாய்

நான் சமுத்திரம் என்கிறேன் 
நீ கடல் என்கிறாய்!

நாம் இருவரும் சொல்வது
ஒன்றுதான் என புரியாமல்
சண்டையிடும் நம்மைக் கண்டு

கைக்கொட்டி சிரிக்கிறது 
துரோகங்களும் பகைமைகளும்!
Thursday, 12 April 2018

பெத்தவ..

ஒங்கள பெத்து என்னத்த கண்டேன்
ஒரு பொட்டு நகைய கண்டேனா
ஒரு பவுசி மவுசிய அடைஞ்சேனா
பேதியில போவியளா..
என் வயித்துல வந்து பொறந்தியளே..”என
வார்த்தைகளால்  குத்தி கிழிக்கும் 
இந்த உலகத்தில்தான்.!

பெத்த கடனுக்காக
கஷ்பட்டு நஷ்டப்பட்டு
அடிப்பட்டு மிதிப்பட்டு
காஞ்சிப்போன கருவாடாக ஆனப்போதும்!

எம்மவனுவ கஷ்டப்படுறப்போது
கொடுத்து ஒதவ 
எங்கையில ஒன்னுமில்லையே..”என
எந்தாயைப்போல கலங்கி நிக்கிற
ஆத்மாக்களும் வாழ்கிறார்கள்.”Monday, 9 April 2018

பேதமை..

ஏழு வர்ணங்களை வானவில்லென ரசிக்கிறாய்

சில வண்ணப்பூக்களின் கூடலை
பூங்கொத்துவென ஏற்கிறாய்

ஆறு சுவை உணவை
அறுசுவை உணவென உண்ணுகிறாய்

கட்டை ,நீளம்,சின்னதென்ற விரல்களை
தன் கையென சொல்கிறாய்!

ஒன்பது விதமான கற்களை 
நவ ரத்தினங்களென அணிகிறாய்.

தேசத்தால்,இனத்தால்
மொழியால் 
வெவ்வேறான  மனிதர்களிடம்  மட்டும்
ஏன் பேதமை கொள்கிறாய்.!?Sunday, 8 April 2018

உன்னால் முடியும்தான்....!!

செடிக்கு தண்ணீர் ஊற்றுவது நீயாக இருந்தாலும்
அச்செடியை வளரச் செய்வது 
உன் கையில் இல்லை!

கிணறுகள் தோண்டுவது நீயாக இருந்தாலும்
அதில் நீரூற்றுகளை பீறிடச் செய்வது
உன் கையில் இல்லை!

முயற்சிப்பது நீயாக இருக்கலாம்
அது வெற்றியாக மாறுவதென்பது
உன் கையில் இல்லை!

பயணப்படுதல் நீயாக இருந்தாலும்
அதன் பயண முடிவு என்பது
உன் கையில் இல்லை!

புத்தகங்கள் வாங்குவது நீயாக இருந்தாலும்
அது அறிவாக மாறுவது 
உன் கையில் இல்லை!

தூங்கச் செல்வது நீயாக இருந்தாலும்
தூங்கி எழுவதென்பது
உன் கையில் இல்லை!

மனிதா...!
உன்னால் முடியும் என்பது உண்மைதான்
ஆனால்
உன்னால் எல்லாம் முடியாது என்பதும் பேருண்மை!