Monday 17 July 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(5)



      சாகுலிடம் வாங்கிய கடனை அடைக்க என்ன செய்வதென்று தெரியவில்லை.சொந்தம் பந்தங்களிடம் கேட்கவும் மனம் தயாராக இல்லை.காரணமும் இருந்தது ,கடன் தருபவர்கள் எப்போது திருப்பி தருவார்கள் என்று தான் எதிர்பார்ப்பார்கள்  .இத்தனை காலம் ஆகும் என தவணை எங்களால் சொல்லிட முடியாமல் இருந்தது .வேலையில்லாமல் வேறு நானிருக்கிறேன்.வேறு வழியில்லை,வீட்டை அடமானம் வைக்க துணிந்தேன்.அதுவும் கந்து வட்டிக்கு.என் அம்மாவிற்கு இதில் உடன்பாடில்லை.அவருக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் உதவிகள் தெரியவில்லை .

   என் நண்பர்களிடம் சொல்லி வைத்தேன்.வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டு,யாராவது பணம் தருவார்களா..!?என்று.அன்சாரி சொன்னான்.

"அர்ஷத்..எனக்கு தெரிஞ்ச ஆளு இருக்காப்ல..தொரசாமி அவரு கிட்ட போயிட்டு கேட்டுப் பாப்போம் .."என்றான்.நானும் "சரி"என்று சொல்லி விட்டேன்.ஆனாலும் என் நிலையை நினைத்து,நினைத்து அழுகை அழுகையாக வந்தது.நாங்கள் வாழ்ந்த வீடு,மாடமாளிகையாக இல்லையென்றாலும்,ஒண்டுவதற்கு ஒரு குடிசைப்போலவாவது இருந்தது.பசியோடயோ,சாப்பிட்டு விட்டோ,ஊருக்கு தெரியாமல் முடங்கிக் கொள்ளவாவது அவ்வீடு இருந்தது.அதையே அடமானம் வைப்பதை நினைக்கையில் ,ஈரக்குலை பிதுங்குவதுப் போல் ஓர் உணர்வு.

     சாயங்காலம் போல் இருவேலி அருகே உள்ள திடலில்,பந்து விளையாடி கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது என் தங்கச்சி சரிபா மாப்பிள்ளை காசிம்
கைப்பேசியில் அழைத்தார் .எடுத்து பதிலளித்தேன்.

 "ஹலோ .."

"எங்கே இருக்கா நீ..!?"

"இருவேலியில பந்து வெளயாடுற எடத்துல..!"

"உம்மா..எங்க இருக்காக..!?

"வீட்ல.."

"சரி..நான் இங்கே சாயல்குடி வீடெக்ஸ் முக்குல தான் நிக்கிறேன்..நீ ஒங்க வீட்டுக்கு வா..நானும் வாரேன் இப்ப .."என்றார்.அவரது குரலில் ஒரு வருத்தமும்,கோபமும் கலந்திருந்தது.

    நான் வீட்டிற்கு போவதற்குள்,அவர் வீட்டினுள் இருந்தார்.எனது தாயார்,இஞ்சி சாயாப் போட்டு,கொஞ்சம் பிஸ்கட்களை,ஒரு சிறிய சில்வர் தட்டில் வைத்தார்.சாயாவை குடித்து விட்டு ,பிஸ்கட்களை கொஞ்சம் கடித்து விட்டு ,அதுவரை நிலவிய ,அமைதியை கலைத்தார்.என் அம்மாவை பார்த்துக் கேட்டார்.

"ஏன் மாமி ..என்ன நெனச்சிக் கிட்டு இருக்கீங்க ..ஒங்க மனசுல..."

அம்மா பதறிப்போய்க் கேட்டார்.."என்ன வாப்பா ..என்ன கேட்குறீங்க நீங்க ..!?என பதறியவளாக கேட்டார்.

           காசிம் தொடர்ந்தார் .
"என்ன மாமி எனக்கு தெரியாதுனு நெனக்கிறீங்களா..வீட்டை கந்துவட்டிக்கு அடமானம் வைக்க போறீங்காளாமே...!?

அம்மா என்னை திரும்பி பார்த்து விட்டு ,தலையை கவிழ்ந்துக் கொண்டே சொன்னார்.

"ஆமாம் வாப்பா..வேற வழி தெரியல...அதான்.."

"ஏன் என்கிட்ட கேட்டுருக்கலாம்ல..!?நாந்தேறேன் அந்த ஆளு சாகுல்கிட்ட கொடுத்துருங்க.."

"இல்ல வாப்பா ..வேணாம் ..சம்பந்தம் கலக்கிட்டு இப்படி காசு வாங்குறது..நல்லதா தெரியலபா.."

"ம்ம்..என்ன நல்லதா தெரியல..!?நீங்க சொல்லுறது எனக்கு வெளங்கல.."

"ஒங்க உம்மா,வாப்பா ஏதாவது சொல்லுவாக..அதான்பா.."

"அவுக ஒன்னும் சொல்ல மாட்டாக..நீங்க வட்டிக்காரன்கிட்ட வீட்டை வச்சிட்டா...அவனுங்க வட்டி வரலனா..வீட்டை பூட்டுவானுங்க..எனக்கும் சேத்துதான் அது அசிங்கம் மாமி..."என்றார்.எனது அம்மா என்ன பேசுவதென்று தெரியாமல் ,என்னை பரிதாபமாக பார்த்தாள்.காசிம் தொடர்ந்தார்.

"என்ன மாமி யோசிக்கிறீங்க...!?நாந்தருற பணத்தை கடனா நெனச்சி வச்சிக்கங்க..எவனோ வட்டிக்காரன் கிட்ட வாங்கனும்னு இருந்தீங்க..நான் வட்டியில்லாம தாரேன்னு நெனச்சிக்கங்க..மாப்ள வேலைக்கு போன பெறகு,வாங்கிக்கிறேன் ..."என்று சொல்லி முடித்தார்.எங்களிடம் வார்த்தை இல்லை பதில் சொல்ல.பிறகு அவரே.."சரி நாளக்கி...பணத்தோட வாரேன்..அர்சத் எங்கேயும் நாளைக்கி போயிறாதே...ரெண்டு பெரிய ஆளுங்கள வச்சி.,பணத்த கொடுத்துருவோம்..சரி நான் கிளம்புறேன்."என்று.எங்கள் பதிலை எதிர்பாராமல் கிளம்பினார்.வாசல்வரை வந்து வழியனுப்பி விட்டோம்.அவர் முதுகு மறையும்வரை பார்த்து விட்டு ,உட்கார்ந்தேன்.என் தாயை திரும்பி பார்த்தேன்.அவர் தன் கண்ணீரை முக்காட்டுக்குள் புதைத்தார்.

   மறுநாள் மச்சான் காசிம் பணத்தோடு வந்தார்.நான்,அம்மா,காசிம் மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் நிர்வாக அறைக்கு சென்றோம் .அங்கு ஜமாத் தலைவர் ஜமால் உட்கார்ந்திருந்தார்.எங்களது விவகாரம் முன்னேயே தெரியும் என்பதால்,"வாங்கப்பா..உக்காருங்க.."என்று சொல்லி விட்டு,சாகுலை போன் செய்து கூப்பிட்டார்.கொஞ்ச நேரத்தில் வந்து விட்டார்.எப்போது கூப்பிடுவார்கள் என்று காத்திருந்திருப்பார்போல.வந்தவர் நாங்கள் இருந்த இருக்கைக்கு ,சிறிது தள்ளி உட்கார்ந்துக் கொண்டார்.ஜமாத் தலைவர் பொருளாளரை அழைத்து வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"ஏம்பா சாகுலு..நீ கடன் கொடுத்தியாம்ல...நாலு லட்ச ரூபா..அத கொடுக்க வந்துருக்காக பா."

"ம் ம்..சரி"என்பது போல் தலை சிறிது ஆட்டினார்.ஜமாத் தலைவர் பணத்தை வாங்கி,சாகுலிடம் கொடுத்து விட்டு,"சரி..இதோட ஒங்களுக்குள்ள எந்த வரவு செலவு இல்லபா.."என சொன்னார்.பொருளாளரை சாட்சியாக வைத்து.பணத்தை வாங்கிக் கொண்டு அவர் கிளம்பிப் போனார்.நாங்கள் மூவரும் வெளியில் வந்ததும்,காசிம் அவரது பைக்கில் இராமநாதபுரம் போவதாக கிளம்பினார்.என் அம்மா காசிமை ,"சாப்பிட்டு போங்க வாப்பா "என்றழைத்தார்.

"இல்ல மாமி..இன்னொரு நாள்..வாரேன் "என கிளம்பினார்.

நாங்கள் இருவரும் வீடு வந்தோம்,ஒரு பெரும்பாரம் இறங்கிய மன நிறைவுடன் .


     அன்றிரவு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ,வெளித் திண்ணையில் படுத்திருந்தேன்.ஏனோ தூக்கம் தான் தொலைந்துப் போய் இருந்தது.கண்களை மூடி சில நிமிடங்களே அசந்திருப்பேன்,அதற்குள் ஒரு விழிப்பு என ஓயாமல்,என்னை எழுப்பிக்கொண்டே இருந்தது.அவ்வளவு ஆழமாக என் மனம் காயமடைந்திருந்தது.முனீராவின் முகம் இடை இடையே வந்து,என் காயத்தில் மிளகாய்ப் பொடியை தூவிச் சென்றது.சாகுலின் நயவஞ்சகம்,கருநாகமாய் நாக்கை நீட்டி,நீட்டி உள்ளிழுத்து பயம் காட்டியது.வேலையில்லாது போனதும்,நெருங்கிய உறவுகளின் ,ஏளனப் பார்வைகளை நினைத்திடுகையில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.எனக்கு முழுவதுமாய் தூக்கம் கலைந்திருந்தது.இத்தனை வலிகள் எனக்கேன் வரனும்...!?என ஏதேதோ ,வன்ம எண்ணங்கள் என்னுள் உதித்தது.

     அதே வேளையில்,யாரென்றே தெரியாத சாரா எனக்கு ,இடை இடையே போன் செய்து ஆறுதல் சொல்வதும்,வேறு எங்காவது சிங்கபூரில் வேலை இருந்தால் ,என்னிடம் சொல்வதாக சொன்னதும்,எத்தனையோ பேர்கள் ஒருவரது கஷ்டத்தின் போது உதவுவதாக சொல்லிக் கொண்டு,அவரிடம் இருப்பதை எல்லாம்,அபகரிக்க முயலும் இவ்வுலகில்,காசிம்
 என் தங்கையை கெட்டிக்கொண்ட காரணத்திற்காக,எனது மானப்பிரச்சனை அவருக்கும் பாதிப்பாக கருதி உதவியதும்,என் வன்ம எண்ணத்தீயில்,தண்ணீரை ஊற்றியது.

       வாழ்க்கைப் பயணத்தில் பழகிடும் உறவுகளெல்லாம் ,நல்லவர்களும் கிடையாது,கெட்டவர்களும் கிடையாது.அதனை நாம் தான் பிரித்தறிந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.பாலில் தண்ணீரை கலந்து வைத்தாலும்,தண்ணீரை விட்டு விட்டு,பாலை மட்டும் அருந்தும் அன்னப்பறவையைப் போல.என்னை காயப்படுத்தியவர்களை,நான் பழிதீர்த்தே ஆக வேண்டும்,அதற்கு நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கியது.சாம்பல் நிற இருள் விடிய போவதை உணர்த்தியது.அந்த விடியலைப் போலவே,என் மனமும் வெளிச்சமான முடிவை எடுத்து இருந்து.

      ஊரில் இருந்த பெரும்பகுதியை ,புத்தக வாசிப்பில் கழித்தேன்.ஒவ்வொரு புத்தகமும்,வெவ்வேறான பாடம் நடத்தியது.வாசிப்பில் எனக்கு ஆனந்தம் கிடைத்தது,அவ்வானந்தம் கசப்பான கடந்த கால காயங்களை ,மாற செய்தது.அறிவுப் பசிக்கு புத்தகத்தை தேடினேன்.வயிற்றுப்பசிக்கு சுற்றுவட்டாரங்களில் வேலை தேடினேன் .

      சாயல்குடி பேருந்து நிலையம்,இராமநாதபுரம் சின்னக்கடை தெரு,மதுரை டவுன்ஹால் ரோடு,போன்ற பகுதிகளில் ,உணவகங்களில் வேலைப் பார்த்தேன் .அவ்விடங்களில்தான் வெவ்வேறான உலகத்தைப் பார்த்தேன்.அங்கு வேலைப் பார்த்தவர்களிடமெல்லாம் வெவ்வேறு முகம் கொண்ட கதைகள் இருந்தது.மகன் பெரிய அளவில் சம்பாதித்தும்,மகன் உழைப்பில் சாப்பிட மனமில்லாமல் உழைக்கும் தகப்பன்.பட்டம் படித்திருந்தாலும்,வேலைக்கு உத்திரவாதம் இல்லாத,துப்பு கெட்ட நாட்டில் பிறந்ததால்,எச்சியிலை எடுக்கும் இளைஞன்.குடிப்பதற்காகவே உழைக்க வரும் குப்பைகள்.இப்படியாக வாசிக்க புத்தகங்கள் கிடைக்காத நாட்களில் ,இப்படியான மனிதர்களின் கதைகளை காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பேன்.

    எனக்குள்ளும் ஒரு எண்ணம் இருந்தது.ஒரு கடை வைத்திட வேண்டும் என்று.வேலைக்கு இடையே அதற்கான வேலையை தொடங்கி இருந்தேன்.சில நபர்களிடம் கடை அமைந்தால் சொல்லும்படி ,சொல்லி வைத்திருந்தேன்.சில மாதங்கள் வேலைக்குப் பிறகு,சில நாட்கள் கிடைக்கும் ஓய்வின்போது, சொந்த ஊருக்கு போய் வருவேன்.தங்கச்சியும் இடை இடையே,வந்து அம்மாவுடன் தங்கி விட்டு செல்வாள்.அவளது கணவர் காசிமின் அனுமதியோடு தான்.கர்ப்பமாகவும் அவள் இருந்ததால்,காசிம் பரவாயில்லை ,கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருக்கட்டும்"என கடினம் காட்டாமல் இருந்தார்.

    இப்படியே நான் சிங்கபூரிலிருந்து ,ஊருக்கு வந்த ஒரு வருடத்திற்கு மேலாகி இருந்தது .ஒரு நாள் வேலை முடிந்து அறையில் இருந்தபோது,சாரா போன் செய்தான்.எடுத்து பேசினேன்.

"ஹலோ ...என்னடா எப்படி இருக்கே.."

"ம்..ம்..இருக்கேன்...இந்நேரத்துல போன் பண்ணி இருக்கே...லீவா..."

"இல்லலா...சும்மாதான் ஒங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும் அதான்.."

"என்ன விசயம் சொல்லு.."

"அதான்டா..மொதலாளி புதுசா கடை தொறக்க போறாரு..தெம்பனீஸ் பக்கமா.."

"சரி..."

"அதான் ஆளு தேடுனாரு ரொட்டி போட ...நான் ஒன்னய சொன்னேன்..ஊர்ல தான் அர்ஷத் இருக்கான் அவன எடுங்கனு..அவரு ரொம்ப யோசிச்சிட்டு..சரி அவன்கிட்ட கேட்டு சொல்லுனு சொன்னாரு..நீ என்ன சொல்லுறே..."!?

"ம்ம்.....அங்க வர யோசனையா இருக்கு...இங்கேயே கடை எதாவது வைக்கலாம்னு யோசிக்கிறேன்.."

"ம்ம்..கடை வைக்க போறா சரி...காசு வச்சி இருக்கியா..!?"

"ம்ம் ...இல்லதான்..கடன் எதாவது வாங்கி தான் செய்யனும்.."

"ஏன்டா.."....."ஏற்கனவே தங்கச்சி மாப்ள கிட்ட கடன் வாங்கி இருக்கே...அதையே இன்னும் நீ கொடுக்கல...இதுல இன்னும் கடனா...!?யோசிச்சி பாரு...இங்க வந்து கொஞ்ச நாள் ஓட்டு,காசு சேத்துக்கிட்டு வேணும்னா போயி கடை வைய்யி...யாரு வேணாம்னு சொன்னா..!?

    பலத்த யோசனைக்கு பிறகு,சரி என்று சொன்னேன்."ஓகே..அப்போ மொதலாளி கிட்ட சொல்லுறேன்..அவரு ஒனக்கு அப்ளை பண்ணி கெடச்சிருச்சினு "பாஸ்"னு சொன்னதும் சூரா எல்லாம் மெயில்ல அனுப்புறேன்..வர பாரு சரியா..!?"என்று சொல்லி விட்டு சாரா போனை வைத்தான்.


     மூன்று நாட்களுக்கு பிறகு ,சாரா போன் பண்ணிச் சொன்னான்.எனக்கு சிங்கபூரில் "பாஸ்" கிடைத்து விட்டது என்று,உடனே வேலைப் பார்த்த கடையில் சொன்னேன்.அக்கடையின் முதலாளி,வேறு ஆள் சேர்ந்த பிறகு,போக சொன்னார் .அதேப்போல் இரண்டு,மூன்று நாட்களில் ஆளை சேர்த்து விட்டு ,என்னை சந்தோசமாக வழியனுப்பினார்.கூட வேலைப் பார்த்த ஆட்களிடம் சொல்லி விட்டு,சம்பளம்
ஒரு நாளைக்கு ஏழுநூறு ரூபாய் கணக்குப்படி,இருபது நாளைக்கு பதினான்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டிய இடத்தில்,கூடுதலாக ஆயிரம் வைத்து ,பதினைந்தாயிரமாக தந்திருந்தார் முதலாளி.அதோடு பெரியார் பேருந்து நிலையம் வந்து,மாட்டுத்தாவணி இறங்கி,அங்கிருந்து அருப்புகோட்டைக்கு பயணப்பட்டேன். அப்பயணத்தில் ராமராஜன் சிகுனா சட்டையோடு ஆடி பாடி கூடவே வந்தார்,தொலைக்காட்சிப் பெட்டியில் ,அருப்புகோட்டை இறங்கி சாயல்குடி பேருந்தில் கிளம்பி ,ஊர் வந்து சேர்ந்திட ,மணி பத்துக்கு மேலாகி இருந்தது.

     அந்த இரவிலும் ,வீட்டு வாசலில் என் தாய் காத்திருந்தாள்.என் தலையைக் கண்டதும்,ஓடி வந்து என் கையிலிருந்த ,அழுக்குத்துணிமணிப் பையை வாங்கிக் கொண்டு நடந்தார்.என் தங்கை ஆதித்யா டிவியில் ,நகைச்சுவைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.இரவு உணவாக சப்பாத்தியும்,மதியம் செய்த கூனி குழம்பும் இருந்தது.கடையில் சாப்பிட்டே பழகி போனதால்.,வீட்டு சாப்பாடு தேனாய் தெரிந்தது.எதுவுமே இல்லாமல் போய்,திரும்ப கிடைத்தால்தான்,இருந்த அந்த ஒன்றின் அருமை தெரிகிறது.

     மறுநாள் சிங்கபூர் செல்ல விமான டிக்கட் போட்டு விட்டு ,அடுத்த நாளே கிளம்பினேன்.நான் வீட்டை விட்டு கிளம்பிடுகையில்,என் தாய் மிகவும் கலங்கியே இருந்தார்.கண்ணீரை மறைக்க முயன்றும் தோற்றுப் போனார்.தங்கை ஒருபுறம் சோகத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.நான் கனத்த இதயத்துடன் பயணம் சொல்லி விட்டு வெளியேறினேன்,கண்ணீரை வெற்றிக்கரமாக மறைத்துக்கொண்டே. திருச்சி விமான நிலையத்திற்கு,மச்சான் காசிம் வாடகை வாகனத்தில் கூடவே வந்தார்.வரும்வழியில் எத்தனையோ ,எண்ணங்கள் எனக்குள்ளே,நீந்திச் சென்றது.இரவு பன்னிரெண்டு மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தேன்.மச்சானிடம் கடைசியாக பயணம் சொல்லி விட்டு,உள் சென்றேன்.குடிநுழைவு வேலைகளை முடித்து விட்டு,சிங்கை செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்து தான்.,இவ்வளவு கதைகளை சொல்லியிருக்கிறேன்.இன்னும் மூன்று மணி நேரத்தில் சிங்கபூரில் தரை இறங்கிடுவேன்.

(தொடரும்...)
     

Wednesday 12 July 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(4)

 

        என் தாயார் நெருங்கிய சொந்தங்களிடம் எல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்து கொண்டு அலைந்தார்.பார்க்கும் சொந்தங்களல்லாம் ,தன் காதுகளை அடைத்துக் கொண்டு,வாய்களை மட்டும் திறந்து வைத்திருந்தார்கள்.அதனால்தான் நான் சொல்லுவதை கேளாமல்,அவர்கள் அறிவுரை என்ற பெயரில் பேசிக் கொண்டே இருந்தார்கள்.எறும்பு ஊற ஊற கல்லும் கரையும் என்பார்களால்லவா..!?அதுப் போல ஆளாளுக்கு ,பழைய கதைகளை எல்லாம் சொல்லி,சொல்லி,என்னை நிலைகுலைய செய்தார்கள்.இதற்கிடையில் முனீரா எனக்கு போன் செய்துக் கொண்டிருந்தாள்.சில நேரங்களில் ,எடுத்து நான் பேசுவதில்லை .ஏனென்றால் எனது மனமெங்கும் குழப்ப நிலை.என்ன செய்வதென்று தெரியவில்லை ,தாயை மீறவும் முடியவில்லை,தாயில்லாத முனீராவை ஒதுக்கவும் முடியவில்லை .

      ஒரு நாள் இரவு நேரம் போன் செய்தாள்.எடுத்து பேசினேன் .

"ஹலோ .."

"ம் ம்..என்ன போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறே...!?"

"இல்ல ..கொஞ்சம் பிரச்சனை அதான்.."

"என்ன பிரச்சனை.."என்றுக் கேட்டாள் .

நான் எதையும் மறைக்காமல்,என்னை வைத்து கடன் வாங்கியது,அதற்கு பகரமாக ஒரு பெண்ணை பேச இருப்பது,நான் தாயோடு சண்டைப் போட்டது,உறவுகள் என் மண்டையை கழுவியது என அனைத்தையும் சொல்லி முடித்தேன்.அதன் பிறகு அவள் கேட்டாள் .

"நீ அப்போ என்ன முடிவுல இருக்கே.."!?

"அதான் ஒரே கொழப்பமா இருக்கு.."

"ஓ...சரிதான் நீ உறுதியா இல்ல..அப்படிதானே..என்னை ஒதுக்க முடிவு பண்ணிட்டே..அப்படிதானே.."என அவள் வார்த்தையில் கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.,என்னை நான் சமாளித்துக் கொண்டு..

"இல்ல நீ தப்பா புரிஞ்சிக் கிட்டே.."

"யாரு நானா..நான் சரியா தான் புரிஞ்சிக் கிட்டேன்...நீ போன் ஒழுங்க பேசாம தவிர்த்ததுக்கு என்ன காரணம்...!?என்னை ஒதுக்க தானே..!?என பட படவென பட்டாசாய் வெடித்தாள்.பாசக்கார பாதகத்தி ,இப்படி கொளுந்து விட்டு எரிவாள் என எனக்கு முன்னேயே தெரியவில்லை.என்னை பேச விடவில்லை .அவளே பேசி விட்டு,"தொலஞ்சி போ.."என சொல்லி போனை துண்டித்தாள்.நான் திரும்ப திரும்ப அழைத்தும் பதிலில்லை ,வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலில்லை .இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவள் கைப்பேசிக்கு ,குறுஞ்செய்தியும் போகவில்லை ,அழைப்பும் போகவில்லை .அவள் தனது கைப்பேசி எண்ணை மாற்றி விட்டாள்.

   என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை.சாராவிற்கு போன் செய்து சொன்னேன்.அவனோ அப்படியா..!?கடைக்கு சாப்பிட வந்தால்..அவள்ட பேசி பாக்குறேன்டா..கொஞ்ச நாளா இந்த பக்கம் வாராது இல்ல...."னு சொன்னான் .

    நானோ அடிக்கடி கைப்பேசியை எடுத்து எடுத்து பார்த்தேன்.ஏதாவது ஒரு அழைப்பு அவளிடம் இருந்து வாராதா..!?என்று ஆனால் வரவே இல்லை.

   ஏன் இப்படி புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இவர்கள்.தாய்தான் இப்படி செய்கிறார் என்றால்,இவளும் இப்படி செய்கிறாளே..!?என்றும்,"ம்ம்...என்ன செய்ய பெத்து இத்தனை காலம் வளத்தவளே நம்மள புரியாம இருக்கைல,அவ நேத்து பழகுனவ அவ மேல கோபப்பட்டு என்ன செய்ய..!?என என் தாய்மீதும்,முனீரா மீதும் மாறி மாறி ,கோபமும் அனுதாபமும் வந்தது.

    மனதில் வலியும் வேதனையும் கதகளி ஆடியது.சிறகிருந்தும் பார்வை இழந்த பறவைப் போலானேன்.திசை தெரியவில்லை,எங்கே பறக்க எங்கே பதுங்க என்று.மனம் ஒரு வினோதமான  தரிசு நிலம்,அதில் எதை மறக்க நினைத்து புதைக்கிறோமோ..!அதுதான் நன்றாக வேர்விட்டு வளர்ந்து நம்மை பாடாய் படுத்தும்.இனி முனீராவை தொடர்பு கொள்ள வழியில்லை .

    என் தாயிற்கோ சந்தோசம் தாளவில்லை.நான் அதிகமாக போன் பேசாததினால், அவர் யூகித்துக் கொண்டார்.அவளை விட்டு மகன் ஒதுங்கி விட்டான் என்று.அந்த சந்தோசத்தை ,என்னிடம் காட்டாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

    என்னை விட்டு தூக்கம்,தூரம் சென்று விட்டது .இரவு நேரங்களில் பெரும்பகுதி சாயல்குடி பேருந்து நிலையத்தில் தான்,சுற்றிக் கொண்டிருந்தேன்.அங்கே உள்ள ரசூல் டீக்கடையில் ,டீ குடித்து விட்டு ,தனியாக எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டு.

     இப்படியாக சில நாட்கள் கழிந்தது.விடுமுறை முடிய நான்கு நாட்கள் இருக்கும்போது ,ஒரு மதிய வேளையில் சாரா எனக்கு போன் பண்ணினான்.வெளித் திண்ணையில் நான் உட்கார்ந்துக் கொண்டு பேசுகையில் ,எனக்கு பின்னால் தான் என் தாய் அமர்ந்திருந்தார்.

"ஹலோ..என்ன சாரா..!? எப்படி இருக்கே.."!?

"ம்..ம்..இருக்கேன்டா.. வீட்ல அம்மா,தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க..!?"

"ம்..ம்...இருக்காங்க...சொல்லு..திடீர்னு போன் பண்ணி இருக்கே....வரயில எதுவும் வாங்கிட்டு வரவா.."!?

"இல்ல..இல்ல.அதெல்லாம் வேணாம்..ஒங்கிட்ட ஒன்னு சொல்லனும்.."என பொடி வச்சி பேசினான்.

நானும் முனீரா விசயமாக இருக்கும் என்று ஆவலாக கேட்டேன் .

     "சொல்லு..."

"இல்லடா.. நீ ஊருக்கு லீவுல போனது..முதலாளிக்கு புடிக்கலடா..அதான் அந்தாளு மலைச்சாரு...நீ திரும்ப திரும்ப கேட்டதால தான் விட்டாரு...அந்த கோபத்துல ஒனக்கு பதிலா வேற ஆளை எடுத்துட்டாருடா..ஒன்னோட "எஸ் பாஸ்"ஐ கேன்சல் பண்ணிட்டாரு..."

எனக்கு தலைக்குள் சுர்ரென்று இருந்தது.

"ஏன்டா..நல்லது கெட்டதுக்கு வராம இருக்க முடியுமா.."

"நீ சொல்லுறது சரிதான்..அது அந்தாளுக்கு தெரியனும்ல..."என்றான்.

நான் "சரி"என்று போனை வைத்து விட்டேன் .சாராவிடம் நான் சண்டைப் போட்டு என்ன செய்ய...!?அவனும் என்னைப் போல ஒரு வேலைக்காரன் தானே..!

     பிறகு தான் என் தாய் கேட்டார்.என்னடா வாப்பா ஆச்சி...!?என படபடப்புடன்.அதற்கு நான் கடுங்கோபத்தை முகத்தில் காட்டாமல் சொன்னேன்.

"ம்..ம்...எல்லாத்துலயும் மண்ணள்ளி போட்டானுங்க ..போயி வேலய பாரு "என்று.

     சிங்கபூரில் எனக்கு வேலையில்லாமல் போனது,அக்கம் பக்கத்தில் பரவ ஆரம்பித்தது.அப்பொழுதுதான் சிலரது சுய ரூபங்களை கண்டேன்.கண்களெல்லாம் சந்தோசத்தை வைத்துக் கொண்டு ,உதட்டில் மட்டும் சோகச்சாயத்தை பூசிக் கொண்டு,"என்னபா..!?வேலை போச்சாமே..நெசமாவா...!?இல்ல கேள்வி பட்டேன் அதான் கேட்டேன்."என்று ,என்னை கடந்ததும் சிரித்துக் கொண்டு போவதையும் ,என்னால் உணர முடிந்தது .இந்த மனிதர்கள்தான் எத்தனை விதமான முகமூடியுடன் அலைகிறார்கள் .

      வேலைப் போன விவகாரம் சாகுல் அவரது காதையும் அடைந்திருந்தது .ஒரு நாள் சாயங்கால வேளையில்,சாகுல் அவரது நெருங்கிய உறவினர் சுல்தான் வந்தார்.அவருக்கு அறுபது வயதிருக்கும் ,நல்லா உழைத்த உடம்பு என்பதை அவரது தொந்தியில்லாத வயிறும்,புடைத்து ,திட்டு திட்டாக காட்சியளித்த அவரது புஜங்களும் சொல்லாமல் சொல்லியது .முண்டா பனியனுடன் மேலே ஒரு துண்டுடனும் வந்தார்.அவர் வரும்போது ,நான் வேப்ப மர நிழலில் ,கீழே செருப்பை போட்டு அதன் மேல் உட்கார்ந்துக் கொண்டு ,முழங்காலைக் கட்டிக் கொண்டு கோழிகள் மேய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரைக் கண்டதும் உள்ளே இருந்த என் தாயார்,சாயாக் குவளையுடன் வந்து,அவருக்கும் எனக்கும் கொடுத்தார்.நான் கொஞ்சம் குடித்துக்கொண்டு இருக்கையில்,சுல்தானைப் பார்த்து,என் தாயார் பேச்சை ஆரம்பித்தார்..

"என்ன சாச்சா..இந்த நேரத்துல வந்திருக்கீங்க ..எதாவது முக்கியமான விசயமா...!?

"ஆமாம்மா...அந்த சாகுல்தான் ஒரு விசயம் சொல்லி அனுப்பினான்..!அது ஒன்னுமில்ல ..அவனோட மகளுக்கு ,ஒம்மவன கேட்டுருந்தான்ல..அது இப்ப சரி வராதுனு சொல்லி விட்டான்மா.."

என் தாயார் பயமும் கவலையும் கலந்தவளாக என்னை பார்த்து விட்டு,சுல்தானிடம் சொன்னாள். "ஏன் சாச்சா...எதுக்கு சரி வராதுனு சொல்லுறாக..எம்புள்ளைக்கி என்ன கொறச்சலாம்..."

"கொறச்செல்லாம் ஒன்னும் சொல்லலமா..!என்னமோ பொழைக்க போன எடத்துல லவ் பண்ணாறாம்ல..இப்ப வேற வேலையும் இல்லாம போச்சில..அதான் பொண்ண கொடுக்குறவன் யோசிக்கிறான்..."

என் தாயாருக்கு என்ன சொல்ல என தெரியவில்லை.நீண்ட மௌனம் அங்கே நிலவியது.நான் இவர்கள்
பேசிக் கொண்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .என் தாய்தான் மிகவும் கலங்கிப் போனார்.அம்மௌனத்தை கலைக்கும் விதமாக சுல்தான் எழுந்து நின்றுக் கொண்டு சொன்னார்.

   "அப்புறம் என்னன்னாமா..ஒம்மக கல்யாணத்துக்கு சாகுல் பணம் கொடுத்தான்ல..அத கொஞ்சம் வேகமா திருப்பி கேட்டதா சொல்ல சொன்னான்மா.."என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார் சுல்தான்.

(தொடரும்..)