Wednesday, 12 July 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(4)

 

        என் தாயார் நெருங்கிய சொந்தங்களிடம் எல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்து கொண்டு அலைந்தார்.பார்க்கும் சொந்தங்களல்லாம் ,தன் காதுகளை அடைத்துக் கொண்டு,வாய்களை மட்டும் திறந்து வைத்திருந்தார்கள்.அதனால்தான் நான் சொல்லுவதை கேளாமல்,அவர்கள் அறிவுரை என்ற பெயரில் பேசிக் கொண்டே இருந்தார்கள்.எறும்பு ஊற ஊற கல்லும் கரையும் என்பார்களால்லவா..!?அதுப் போல ஆளாளுக்கு ,பழைய கதைகளை எல்லாம் சொல்லி,சொல்லி,என்னை நிலைகுலைய செய்தார்கள்.இதற்கிடையில் முனீரா எனக்கு போன் செய்துக் கொண்டிருந்தாள்.சில நேரங்களில் ,எடுத்து நான் பேசுவதில்லை .ஏனென்றால் எனது மனமெங்கும் குழப்ப நிலை.என்ன செய்வதென்று தெரியவில்லை ,தாயை மீறவும் முடியவில்லை,தாயில்லாத முனீராவை ஒதுக்கவும் முடியவில்லை .

      ஒரு நாள் இரவு நேரம் போன் செய்தாள்.எடுத்து பேசினேன் .

"ஹலோ .."

"ம் ம்..என்ன போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறே...!?"

"இல்ல ..கொஞ்சம் பிரச்சனை அதான்.."

"என்ன பிரச்சனை.."என்றுக் கேட்டாள் .

நான் எதையும் மறைக்காமல்,என்னை வைத்து கடன் வாங்கியது,அதற்கு பகரமாக ஒரு பெண்ணை பேச இருப்பது,நான் தாயோடு சண்டைப் போட்டது,உறவுகள் என் மண்டையை கழுவியது என அனைத்தையும் சொல்லி முடித்தேன்.அதன் பிறகு அவள் கேட்டாள் .

"நீ அப்போ என்ன முடிவுல இருக்கே.."!?

"அதான் ஒரே கொழப்பமா இருக்கு.."

"ஓ...சரிதான் நீ உறுதியா இல்ல..அப்படிதானே..என்னை ஒதுக்க முடிவு பண்ணிட்டே..அப்படிதானே.."என அவள் வார்த்தையில் கோபம் கொப்பளித்ததை என்னால் உணர முடிந்தது.,என்னை நான் சமாளித்துக் கொண்டு..

"இல்ல நீ தப்பா புரிஞ்சிக் கிட்டே.."

"யாரு நானா..நான் சரியா தான் புரிஞ்சிக் கிட்டேன்...நீ போன் ஒழுங்க பேசாம தவிர்த்ததுக்கு என்ன காரணம்...!?என்னை ஒதுக்க தானே..!?என பட படவென பட்டாசாய் வெடித்தாள்.பாசக்கார பாதகத்தி ,இப்படி கொளுந்து விட்டு எரிவாள் என எனக்கு முன்னேயே தெரியவில்லை.என்னை பேச விடவில்லை .அவளே பேசி விட்டு,"தொலஞ்சி போ.."என சொல்லி போனை துண்டித்தாள்.நான் திரும்ப திரும்ப அழைத்தும் பதிலில்லை ,வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலில்லை .இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவள் கைப்பேசிக்கு ,குறுஞ்செய்தியும் போகவில்லை ,அழைப்பும் போகவில்லை .அவள் தனது கைப்பேசி எண்ணை மாற்றி விட்டாள்.

   என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை.சாராவிற்கு போன் செய்து சொன்னேன்.அவனோ அப்படியா..!?கடைக்கு சாப்பிட வந்தால்..அவள்ட பேசி பாக்குறேன்டா..கொஞ்ச நாளா இந்த பக்கம் வாராது இல்ல...."னு சொன்னான் .

    நானோ அடிக்கடி கைப்பேசியை எடுத்து எடுத்து பார்த்தேன்.ஏதாவது ஒரு அழைப்பு அவளிடம் இருந்து வாராதா..!?என்று ஆனால் வரவே இல்லை.

   ஏன் இப்படி புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் இவர்கள்.தாய்தான் இப்படி செய்கிறார் என்றால்,இவளும் இப்படி செய்கிறாளே..!?என்றும்,"ம்ம்...என்ன செய்ய பெத்து இத்தனை காலம் வளத்தவளே நம்மள புரியாம இருக்கைல,அவ நேத்து பழகுனவ அவ மேல கோபப்பட்டு என்ன செய்ய..!?என என் தாய்மீதும்,முனீரா மீதும் மாறி மாறி ,கோபமும் அனுதாபமும் வந்தது.

    மனதில் வலியும் வேதனையும் கதகளி ஆடியது.சிறகிருந்தும் பார்வை இழந்த பறவைப் போலானேன்.திசை தெரியவில்லை,எங்கே பறக்க எங்கே பதுங்க என்று.மனம் ஒரு வினோதமான  தரிசு நிலம்,அதில் எதை மறக்க நினைத்து புதைக்கிறோமோ..!அதுதான் நன்றாக வேர்விட்டு வளர்ந்து நம்மை பாடாய் படுத்தும்.இனி முனீராவை தொடர்பு கொள்ள வழியில்லை .

    என் தாயிற்கோ சந்தோசம் தாளவில்லை.நான் அதிகமாக போன் பேசாததினால், அவர் யூகித்துக் கொண்டார்.அவளை விட்டு மகன் ஒதுங்கி விட்டான் என்று.அந்த சந்தோசத்தை ,என்னிடம் காட்டாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

    என்னை விட்டு தூக்கம்,தூரம் சென்று விட்டது .இரவு நேரங்களில் பெரும்பகுதி சாயல்குடி பேருந்து நிலையத்தில் தான்,சுற்றிக் கொண்டிருந்தேன்.அங்கே உள்ள ரசூல் டீக்கடையில் ,டீ குடித்து விட்டு ,தனியாக எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டு.

     இப்படியாக சில நாட்கள் கழிந்தது.விடுமுறை முடிய நான்கு நாட்கள் இருக்கும்போது ,ஒரு மதிய வேளையில் சாரா எனக்கு போன் பண்ணினான்.வெளித் திண்ணையில் நான் உட்கார்ந்துக் கொண்டு பேசுகையில் ,எனக்கு பின்னால் தான் என் தாய் அமர்ந்திருந்தார்.

"ஹலோ..என்ன சாரா..!? எப்படி இருக்கே.."!?

"ம்..ம்..இருக்கேன்டா.. வீட்ல அம்மா,தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க..!?"

"ம்..ம்...இருக்காங்க...சொல்லு..திடீர்னு போன் பண்ணி இருக்கே....வரயில எதுவும் வாங்கிட்டு வரவா.."!?

"இல்ல..இல்ல.அதெல்லாம் வேணாம்..ஒங்கிட்ட ஒன்னு சொல்லனும்.."என பொடி வச்சி பேசினான்.

நானும் முனீரா விசயமாக இருக்கும் என்று ஆவலாக கேட்டேன் .

     "சொல்லு..."

"இல்லடா.. நீ ஊருக்கு லீவுல போனது..முதலாளிக்கு புடிக்கலடா..அதான் அந்தாளு மலைச்சாரு...நீ திரும்ப திரும்ப கேட்டதால தான் விட்டாரு...அந்த கோபத்துல ஒனக்கு பதிலா வேற ஆளை எடுத்துட்டாருடா..ஒன்னோட "எஸ் பாஸ்"ஐ கேன்சல் பண்ணிட்டாரு..."

எனக்கு தலைக்குள் சுர்ரென்று இருந்தது.

"ஏன்டா..நல்லது கெட்டதுக்கு வராம இருக்க முடியுமா.."

"நீ சொல்லுறது சரிதான்..அது அந்தாளுக்கு தெரியனும்ல..."என்றான்.

நான் "சரி"என்று போனை வைத்து விட்டேன் .சாராவிடம் நான் சண்டைப் போட்டு என்ன செய்ய...!?அவனும் என்னைப் போல ஒரு வேலைக்காரன் தானே..!

     பிறகு தான் என் தாய் கேட்டார்.என்னடா வாப்பா ஆச்சி...!?என படபடப்புடன்.அதற்கு நான் கடுங்கோபத்தை முகத்தில் காட்டாமல் சொன்னேன்.

"ம்..ம்...எல்லாத்துலயும் மண்ணள்ளி போட்டானுங்க ..போயி வேலய பாரு "என்று.

     சிங்கபூரில் எனக்கு வேலையில்லாமல் போனது,அக்கம் பக்கத்தில் பரவ ஆரம்பித்தது.அப்பொழுதுதான் சிலரது சுய ரூபங்களை கண்டேன்.கண்களெல்லாம் சந்தோசத்தை வைத்துக் கொண்டு ,உதட்டில் மட்டும் சோகச்சாயத்தை பூசிக் கொண்டு,"என்னபா..!?வேலை போச்சாமே..நெசமாவா...!?இல்ல கேள்வி பட்டேன் அதான் கேட்டேன்."என்று ,என்னை கடந்ததும் சிரித்துக் கொண்டு போவதையும் ,என்னால் உணர முடிந்தது .இந்த மனிதர்கள்தான் எத்தனை விதமான முகமூடியுடன் அலைகிறார்கள் .

      வேலைப் போன விவகாரம் சாகுல் அவரது காதையும் அடைந்திருந்தது .ஒரு நாள் சாயங்கால வேளையில்,சாகுல் அவரது நெருங்கிய உறவினர் சுல்தான் வந்தார்.அவருக்கு அறுபது வயதிருக்கும் ,நல்லா உழைத்த உடம்பு என்பதை அவரது தொந்தியில்லாத வயிறும்,புடைத்து ,திட்டு திட்டாக காட்சியளித்த அவரது புஜங்களும் சொல்லாமல் சொல்லியது .முண்டா பனியனுடன் மேலே ஒரு துண்டுடனும் வந்தார்.அவர் வரும்போது ,நான் வேப்ப மர நிழலில் ,கீழே செருப்பை போட்டு அதன் மேல் உட்கார்ந்துக் கொண்டு ,முழங்காலைக் கட்டிக் கொண்டு கோழிகள் மேய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரைக் கண்டதும் உள்ளே இருந்த என் தாயார்,சாயாக் குவளையுடன் வந்து,அவருக்கும் எனக்கும் கொடுத்தார்.நான் கொஞ்சம் குடித்துக்கொண்டு இருக்கையில்,சுல்தானைப் பார்த்து,என் தாயார் பேச்சை ஆரம்பித்தார்..

"என்ன சாச்சா..இந்த நேரத்துல வந்திருக்கீங்க ..எதாவது முக்கியமான விசயமா...!?

"ஆமாம்மா...அந்த சாகுல்தான் ஒரு விசயம் சொல்லி அனுப்பினான்..!அது ஒன்னுமில்ல ..அவனோட மகளுக்கு ,ஒம்மவன கேட்டுருந்தான்ல..அது இப்ப சரி வராதுனு சொல்லி விட்டான்மா.."

என் தாயார் பயமும் கவலையும் கலந்தவளாக என்னை பார்த்து விட்டு,சுல்தானிடம் சொன்னாள். "ஏன் சாச்சா...எதுக்கு சரி வராதுனு சொல்லுறாக..எம்புள்ளைக்கி என்ன கொறச்சலாம்..."

"கொறச்செல்லாம் ஒன்னும் சொல்லலமா..!என்னமோ பொழைக்க போன எடத்துல லவ் பண்ணாறாம்ல..இப்ப வேற வேலையும் இல்லாம போச்சில..அதான் பொண்ண கொடுக்குறவன் யோசிக்கிறான்..."

என் தாயாருக்கு என்ன சொல்ல என தெரியவில்லை.நீண்ட மௌனம் அங்கே நிலவியது.நான் இவர்கள்
பேசிக் கொண்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .என் தாய்தான் மிகவும் கலங்கிப் போனார்.அம்மௌனத்தை கலைக்கும் விதமாக சுல்தான் எழுந்து நின்றுக் கொண்டு சொன்னார்.

   "அப்புறம் என்னன்னாமா..ஒம்மக கல்யாணத்துக்கு சாகுல் பணம் கொடுத்தான்ல..அத கொஞ்சம் வேகமா திருப்பி கேட்டதா சொல்ல சொன்னான்மா.."என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினார் சுல்தான்.

(தொடரும்..)

1 comment:

  1. சில கெட்ட விசயம்ங்கள் நம் வாழ்க்கையில் நடப்பதும் நல்லதுவே. ஏன்னா, அப்பதான் மனிதர்களின் உண்மை சொரூபம் தெரிய வரும்

    ReplyDelete