Wednesday, 14 June 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(3)


 

 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.தரை இறங்குவதற்கு முன்னாலேயே,நான் சிங்கபூருக்கு செல்லும் முன்,பயன்படுத்திய "சிம்"மை ,என் கைப்பேசியில் மாட்டி இருந்தேன்.சென்னையில் இறங்கியதும்,குறுஞ்செய்தி வந்தது.பணம் செலுத்த சொல்லி.விமானத்தை விட்டு இறங்கி,குடிநுழைவு சடங்குகளை முடித்து விட்டு ,எனது சாமான்களை எடுத்துக் கொண்டு ,வெளியானதும்,"சிம்"வேலை செய்ய பணம் ஏற்றினேன்.அடுத்த நொடி வாட்ஸ் அப்பில்,முனீராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.சென்னை வந்து விட்டதாக.உடனே பதில் வந்தது,என் செய்திக்காக காத்திருந்திருப்பாள் போல.மதுரைக்கு போயி ,மெசேஜ் போடுவதாக பதில் அனுப்பி விட்டு ,சில வார இதழ்கள் வாங்கலாம் என கடைகளில் பார்த்தேன்.நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் ,இங்கே அனேக பத்திரிக்கைகளுக்கு ,பெரிய பிரச்சனை என்னவென்றால் ,"அந்த சொப்பண சுந்தரியை யாரு வச்சிருக்கா.."என்றுதான். அட்டையில் நடிகைகள் நடிப்பை ,மன்னிக்கவும் இடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் .ஆதலால் இதழ்களை வாங்க விருப்பம் இல்லாமல்.,கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ,மின்மினிகளால் ஒரு கடிதம்"எனும் கவிதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

    அப்புத்தகத்தை வாங்கிட காரணம், பின் பக்க அட்டையில் இருந்த வரிகள் தான்.

"நான் உன் மூச்சுக் காற்று
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆக வேண்டும்."என இருந்த வரிகள்,எதுவுமே பேசாமல்,எதை எதையோ சொல்லிற்று அக்கவிதை.

    பிறகு வேக வேகமாக ,உள் நாட்டு முனையத்திற்கு சென்று,மதுரைக்கு செல்ல காத்திருந்தேன் .விமானம் ஒரு மணி நேரம் தாமாதமாகத் தான் வந்தது.நல்லவேளையாக கைவசம்,கவிதையாய் அவள் நினைவும்,அவளைப்போலவே அழகாய்,கவிக்கோவின் கவிதையும்
இருந்தது.அதில் சில ...

"உன்னை தரிசிக்கும்போது
கவிதை எழுதுகிறேன்
கவிதை எழுதும்போது
உன்னை தரிசிக்கிறேன்."

"நான் முள்ளாக
இருந்தாலென்ன!?
ரோஜாவே!
உன்னிடம் இருக்கிறேனே
அது போதாதா.!?"

       இத்தகையான வரிகளில்,தண்ணீரில் விழுந்த கற்கண்டாய் கரைந்து தான் போனேன் .வாசிப்பினூடே விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.அரை மணி நேர பயணத்திற்கு பிறகு மதுரை சென்றடைந்தேன்.வெளியில் நண்பன் அன்சாரி வந்து ,காத்திருந்தான் வாடகை வாகனத்துடன்.சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு ,கிளம்பினோம்.பிறந்த மண்ணைத் தேடி...

     வாகனப் பயணத்தில்,அன்சாரி வாங்கி வர சொன்ன,சிகரெட் கட்டுகளை அவனிடம் கொடுத்தேன்.அதை அவ்வளவு சந்தோசத்தோடு வாங்கி,பிரித்து ஒன்றை வாயில் வைத்து பற்ற வைத்து,புகையை ஆழமாக உள்ளிழுத்து,வெளியில் விட்டான்.உள்ளே சென்ற புகையில் முக்கால் பகுதிக்கும் மேலாக,உள்ளிருந்துக் கொண்டு,மிச்ச சொச்ச புகையே வெளியில் வந்தது.அந்த  பரமானந்தத்தை அடைந்த பின்பே பேச ஆரம்பித்தான்.

"எப்படிடா..அங்கே பொழப்பெல்லாம்..."என ஆரம்பித்து,எல்லா விசயங்களையும் கேட்டான்.நான் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.அதற்கிடையிலேயே முனீராவிற்கு ,வாட்ஸ் அப்பில் ,போன் பண்ணச் சொல்லி செய்தி அனுப்பினேன். அவளும் அழைத்து விட்டாள்.பயணத்தைப் பற்றி ,இன்னும் எவ்வளவு நேரத்திற்கு ஊருக்கு போவாய்..!?எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

     தார்ச்சாலை ,கானல்நீர்,கோடை வெயில்,கருவேல மரங்கள்,பொட்டல் காடு,என நான் கடந்து சென்றாலும் ,அது அத்தனையும் என்னிடம் நலம் விசாரிப்பதுப் போல் இருந்தது.நேரம் கழிய,தூரம் குறைய ,என் ஊரும் வந்தது.சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆராய்ச்சி நகர் என்ற பெயர் பலகையுடன் .சாலையிலிருந்து இறங்கி,இரு வீடுகள் தள்ளிச் சென்றதும் என் வீடு வந்தது.வீட்டிற்கு வெளியிலிருந்த வேப்பமரம் ,கொஞ்சம் சதைப் பிடிப்பாக இருந்து,கிளைகளை அகலப் பரப்பி இருந்தது.அம்மர நிழலில் ,இரை தின்றுக் கொண்டிருந்த கோழிகள்,தலைத்தூக்கி "கெக்,கெக்"என மெல்லிய சத்தத்துடன் ,"யார் இவன்"என கேட்பதுப் போல்,என்னைப் பார்த்து விட்டு,இரை வேட்டையை தொடர்ந்தது.வீட்டு வெளித் திண்ணையில்,பட்டியல் கதவில் மாட்டப்பட்டிருந்த திரைச்சீலை புதிதாக மாற்றப் பட்டிருந்தது.கல்யாண வீடென்பதால்.

        "வாடா..வாப்பா.."என முகம் முழுக்க சிரிப்புடன் என் தாய் கமீதா வரவேற்றாள்.கொண்டு வந்த சாமான்களை ஒரு அறையில் வைத்து விட்டு,வெளியில் வருகையில்,அடுப்படியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கை சரிபா வந்தாள்."என்னண்ணே..நல்லா இருக்கியா..!,?என ,திருமண சந்தோசம் அவள் முகத்தில் தெரிந்தது.நம் வீட்டில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவள்.போகும் வீட்டில்,எப்படி இருப்பாளோ என கலக்கமாகத் தான் இருந்தது எனக்கு.அதை மறைத்துக்கொண்டு "ம்ம்...நல்லா இருக்கேன்..."என்றேன் .சொந்தங்களில் சிலர் வந்து விட்டுப் போனார்கள்.ஓரிரு நாட்களே இருந்தது,தங்கையின் கல்யாணத்திற்கு,எல்லா வேலையையும்,என் தாய் ஒருத்தியே பார்த்திருக்கிறாள்.அதனை சொல்லிக் கொண்டிருக்கையில்,சில வருடங்களுக்கு முன்னால்,நோய்வாய்ப்பட்ட நிலையில்,என் தந்நை தவறியதை நினைத்து அழுதாள்.

    மறுநாள் நெருக்கமான உறவுகளை நேரில் சந்தித்து ,தங்கையின் திருமணமானத்திற்காக அழைத்தேன்.பலர் வருவதாக சொன்னார்கள்.சிலர் சில சடவுகளைச் சொல்லி வழக்காடினார்கள்.பணிந்து பேசி விட்டு வந்தேன்.அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்று.மற்றபடி என் நண்பர்கள்,எல்லோரையும் சந்தித்து,உறவாடினேன்.கண்மாய்,பேருந்து நிலையம்,மய்யத்து வாடி,மீன் பசார் என ,விட்டு போன சொந்தங்களை,புதுபித்து விட்டு வீடு வந்தேன்.

    மறுநாள் ஏ.எஸ் திருமண மகாலில் கல்யாணம்.இன்று என் வீட்டிற்கு வெளியில் சில பிரகாசமான விளக்குகளை கட்டியிருந்தார்கள்.வீட்டிற்குள் என் தங்கையின் தோழிகள் ,மருதாணி வைத்திட வந்திருந்தார்கள் .அவர்கள் இருப்பதை அறியாமல்,வீட்டிற்குள் நான் சென்றதும்,பூனைக்குப் பயந்து ,தாய்க்கோழியின் றெக்கைக்குள் ஒளிந்துக் கொள்ளும்,கோழிக்குஞ்சுகளைப் போல்,வெட்கப்பட்டுக்கொண்டு தங்கையின் தோழிகள் அருகில் இருந்த அறைக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.இதனால் வீட்டின் வெளியிலேயே,இரவு உணவை உண்டு விட்டு ,பக்கத்து வீட்டுக்காக,குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணலில் ,குற்றாலத்துண்டை விரித்து அதன் மேல்,என் உடலைச் சாய்த்தேன்.மணலின் ஈரம் ,உடலெங்கும் பரவி,ஒருவித கிளர்ச்சியை ஊட்டியது,முனீராவிடம் கைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன் .

   மறுநாள் காலை நேரத்தோடு,மகாலுக்கு சென்று விட்டோம்.நரிப்பையூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார்களும் வந்து விட்டார்கள்.மகாலின் கீழ்ப்புறம் விருந்துண்ணுவதற்காகவும்,மேல்தளம் திருமணம் நடப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது .மேடையில் மாப்பிள்ளை காசிம் அமர்ந்திருந்தார்.அவர் அருகினில் என் பெரிய வாப்பா அஸீஸ் அமர்ந்திருந்தார் .ஆலிம் பசீர் மகர் விபரம் எல்லாம் கேட்டு விட்டு ,பிரார்த்தனைகள் செய்து விட்டு ,"நெய்னா முகம்மதுவின் மகள் சரிபாவை,மகர் பணம் ஆயிரம் கொடுத்து திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா..!?என ஆலிம் பசீர்,கல்யாண மாப்பிள்ளை காசிமிடம் கேட்டார்.காசிம் சம்மதம் என சொல்லி விட்டு பிறகு,கையெழுத்திட்டார் .பிறகு இரு பெரியவர்களை அனுப்பி,கல்யாணப் பெண்ணிடம்,இன்னார் மகன் இன்னாரை கட்டிக் கொள்ள சம்மதமா..!?என கேட்டு விட்டு ,மணப் பெண்ணின் கையெழுத்து வாங்கி வர சொன்னார் ஆலிம்.மணமகள் அறைக்கு சென்றவர்கள்,சம்மதம் சொன்ன பிறகு கையெழுத்து வாங்கி வந்தார்கள்.இரண்டு,இரண்டு சாட்சி கையெழுத்து வாங்கி விட்டு,மணமக்கள் சிறந்து வாழ்ந்திட,நபிமார்கள்,அவர்களது மனைவிமார்கள் பெயர்களைச் சொல்லி வாழ்த்தினார்கள் .இனிதே நடந்து முடிந்தது,திருமண உடன்படிக்கை.

   மணமகன்,மணமகள் அறைக்கு சென்றார்,அங்கு அவர்களது உறவுகள்,கேலி கிண்டல் செய்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.மற்றபடி கல்யாணத்தில் கலந்துக் கொண்டவர்கள்,விருந்துண்டு விட்டு,கலைந்துக் கொண்டிருந்தார்கள் .இரைத்தேடி தன் கூட்டை விட்டு,வெளியேறும் பறவைகளைப் போல,விருந்துண்டு விட்டு ,தன் வீடுகளுக்கு மானுடப்பறவைகள் புறப்பட்டதால்,மகால் காலியானது.கல்யாணமானவர்கள் சாப்பிட்டு விட்டு ,நரிப்பையூர் கிளம்பினார்கள்.என் தங்கை செல்வதைப் பார்த்து ,என் தாய் அடக்கிட முடியாமல் அழுதார்.தங்கையும் அழுதுக் கொண்டே கிளம்பினாள்.

      என் தங்கையில்லாத வீடு,மின் விளக்குகள் இருந்தும்,மின்சாரம் இல்லாத நாட்களைப்போலவே இருந்தது .வீடெங்கும் வெறுமை ,நூலாம்படையாக ஒட்டியிருந்தது.நான் வெளியில் கிளம்பி விடுவதால்,அந்த சிரமத்திலிருந்து விடுபட முடிந்தது .என் தாய்தான் பாவம்,ரொம்ப சிரமப்பட்டார். பிறகு விருந்திற்கு ,தங்கையும் அவள் கணவரும் வந்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.அது கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திற்று.பக்கத்து ஊரில் தானே ,தன் மகள் இருக்கிறாள் என ,தன் மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என் தாயார்.

    திருமணம் முடிந்து ஒரு வார காலத்திற்குப் பிறகு,ஒரு நாள் காலை உணவாக,இடியாப்பமும்,வாலைமீன் குழம்பும் செய்திருந்தார்."கொழுத்த மீனு அதான் ,எண்ணையா மெதக்குது"என்று சொல்லிக் கொண்டே ,என் தட்டிலிருந்த இடியாப்பத்தில் குழம்பை ஊற்றி விட்டு,ஒரு சிறு தட்டில் மீனை வைத்து ,முள்ளில்லாமல் பிச்சி பிச்சி எனக்கு வைத்தார். நான் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தேன்.

"ஏம்மா ..கல்யாண செலவு எவ்வளவு வந்துச்சி..!?யார் கிட்டயும் கடன் எதுவும் வாங்குனீங்களா..!?"

"இல்லடா வாப்பா..நானே சொல்லனும்னு இருந்தேன்..நல்லவேளையா நீயே கேட்டுட்டா...ஒரு நாலு லட்ச ரூவாதான் வாங்கி இருக்கேன்..கொஞ்சம் நகை வாங்க தேவப்பட்டுச்சி..!"

"யாரு கிட்ட..!?

"சாகுல் மாமா இருக்கார்ல..பெரிய பள்ளி வாசத்தெருவுல..அவருகிட்ட.."

"ஒங்களுக்கா அவரு மாமா..எனக்கு தெரியாதே இவ்வளவு நாளா..!?

"ஹா..ஹா...எனக்கு அவரு அண்ண மொற வேணும்..ஒனக்கு தான் மாமா மொற..என் வாப்பாவ பெத்தவரும்,சாகுல் அண்ண வாப்பாவ பெத்தவரும் பங்காளிமாருக.."

"அதுசரி..ஒங்க வாப்பாவையே எனக்கு தெரியாது..இதுல அவுக பெத்தவுக வரை நான் யோசிக்க முடியாது..ஆமா அவரு கிட்ட சொல்லி வாங்குனீங்களா ..கடனை திருப்பி கொடுக்க,கொஞ்ச நாள் ஆகும்னு..."

"அதெல்லாம் கொடுக்க தேவையில்லடா..அவரு மக இளையதை தான் ,ஒனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன்..அதானல தான் அவரு பணம் தந்தாரு..இல்லனா..ஒரு ரூவா அவர்கிட்ட வாங்க முடியுமா...!?

எனக்கோ நாக்கின் உட்பகுதி,கடைவாய்ப் பற்களினால் கடிப்பட்டதுப் போல்,மண்டைக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

    "எவனைக் கேட்டு,அவரு கிட்ட பணத்தை வாங்கினா...!?என ஆரம்பித்து,முனீரா கதையெல்லாவற்றையும்,கோபத்தோடு கோபமாக சொல்லி முடித்தேன்.

அதற்கு,"எவளோ ஒருத்திக்காக ,பெத்த தாயோட இப்படி சண்டைக்கி வருவியாக்கும்.."என அழுது குவித்து விட்டார்.நானும் கெஞ்சியும் சொல்லிப் பார்த்தேன்,என் தாயார் கேட்பதாக இல்லை.என்னைத் திட்டி தீர்த்தார்.என் தந்தை மறைவிற்குப் பிறகு எங்களை கஷ்டப்பட்டு வளர்த்ததை சொல்லி அழுதுக் கொட்டினாள்.உடனே வீட்டின் வெளித் திண்ணையில் "இதென்னடா புதுக் கொடுமயா இருக்கு.."என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன்.

(தொடரும்...)

No comments:

Post a Comment