Friday, 19 May 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(2)


       அத்தீண்டல் பார்வை சில நேரங்களில் மட்டுமே கிடைத்தது.நாள் செல்ல செல்ல அடிக்கடி கிடைத்தது.பார்வை பார்த்ததும் ,லேசான புன்னைப் பூத்துக் கொண்டோம்.சிற்சில நேரங்களில் வேலியில் ஓணான் ஓடி போயி ஏறிக்கொண்டு ,தலையை மெதுவாக ஆட்டுமே,அதுப்போல ஆட்டிக் கொண்டோம்.ஆனால் அப்பெண்ணிடம் பேசிட தயக்கம் என்றும் சொல்லலாம் அதைவிட பயம் என்றும் சொல்லலாம்.நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்வதையும்,தலையாட்டிக் கொள்வதையும்,சாரா கவனித்து இருந்திருக்கிறான்.அதனை நான் அறியவில்லை .

    ஒரு நாள் சாப்பிட்டு விட்டு,வெள்ளி கட்ட போனவளிடம், சிரித்து பேசி விட்டு,அவள் போனதும் என்னிடம் வந்தான்.

"என்ன அர்ஷத்...!?ஒரு மாதிரியா மலாய்க்கார புள்ளய பாக்குறே..!என்று அவன் திடீரென கேட்டது,எனக்கு கொதி தண்ணீர் நெஞ்சின் வழி இறங்கியதுப் போல் இருந்தது.நான் சமாளித்தவனாக..

"இல்ல..நீ பாத்தியாக்கும்..!?என்றேன்.

"டேய் பொத்து ...இப்ப கொஞ்ச நேரத்துல பாரு..ஒனக்கு மெசேஜ் வரும் பாரு..என்றான்.அதுபோல குறுஞ்செய்தியும்.,"ஹாய்.."என்று வந்தது.புதிய எண்ணிலிருந்து .

"சாரா..கௌண்டர்ல,அவக்கிட்ட என்ன சொன்னா.."என்று நான் கேட்டேன்.

"ம்ம்..ஆமாலா..நீ பாத்துக்கிட்டே இருந்தே..அதுவும் ஒன்ன பாத்துச்சா..நா அத பத்த வச்சேன்..காசு கட்ட வரயில..அவ கிட்ட சொன்னேன்..நீ அவ கிட்ட பேச விரும்புறதா சொல்லி,ஒன்னோட போன் நம்பர அவ கிட்ட கொடுத்தேன்"என சத்தமாக சிரித்து விட்டு,"நம்ம "கைங்க" எப்பவுமே இப்படிதான்லா..."என இரண்டு கைகளையும் முழங்கையோடு மடக்கி கொண்டு,கை விரல்களை தன் நெஞ்சுப் பக்கம் வளைத்து காட்டினான் .ஏதோ ஆங்கில பாடல் இசைப் பிரியர்கள் கையை அசைப்பதைப் போல்.

    எனக்கோ உள்ளூர பயம்,நமக்கு இது தேவையா..!?வந்தமா பொழச்சமா..!?ஊர் பக்கம் போனாமா னு இல்லாமா...!தேவயில்லாத வேல பாக்க வேணாமே"என்று புத்தி சொன்னாலும்,பழாய்ப் போன மனசு கேட்கவில்லை.ஆசை யாரைதான் விட்டது.!?.பதிலுக்கு "ஹலோ.."என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

    இப்படியாக தொடர்ந்த குறுஞ்செய்தி ,கைப்பேசியில் அழைத்து பேசும் அளவிற்கு வளர்ந்து விட்டது.இதில் அவளது பெயர் முனீரா என்று தொடங்கி,இருக்கும் இடம்,அவளது அம்மா சிறு வயதில் இறந்து விட்டதாகவும் ,அவளது தந்தை மறுமணம் செய்துக் கொண்டதையும்,அம்மாற்றாந்தாய் அவளை நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும்  சொன்னாள்.என்னைப் பற்றிய விபரங்களையும் கேட்டாள்.நானும் பகிர்ந்துக் கொண்டேன்.

       எனக்கென்று உற்றார் உறவினர் யாருமில்லாத சிங்கபூரில் ,அவளது அக்கறையான விசாரிப்புகள்,குறுஞ்செய்தி அனுப்பிட தாமாதமானால்,கைப்பேசிக்கு அவள் அழைத்து காரணம் கேட்பதும்,என் மனதிற்குள் அவள் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.நடுக்கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு ,கையில் சிக்கும் ஒரு பலகை எப்படி பேருதவியாக இருக்குமோ,அப்படித்தான் அவளது அன்பான வார்த்தைகளும் ,அக்கறையான விசாரிப்புகளும் இருந்து.இப்படியாக சில மாதங்கள் கடந்து விட்டது.

    ஒரு நாள் மாலை நேரம்,"தியோங் பாரு"பார்க்கில்,அவளை சந்திப்பதற்காக சென்றிருந்தேன்.அவ்விடத்தில் சிறு சிறு கூட்டமாகவும்,தனி ஆட்களாகவும்,அவர்களால் முடிந்த உடற்பயிற்சிகள் செய்துக் கொண்டிருந்தார்கள் மக்கள்.நானும் முனீராவும்,கூம்பு போன்ற வடிவில் கட்டப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்திருந்தோம்.எனக்கு எதிரில் அமர்ந்துக் கொண்டு,இந்தியாவில் காஷ்மீர் அழகைப் பற்றி,தாஜ்மகாலைப் பற்றி,ஹிந்தி நடிகைகளைப் பற்றி ,திரைபடங்களில் பார்த்திருப்பாள் போல.அவளுக்கு தெரிந்தவற்றை எல்லாம் என்னிடம் சொல்லிக் கொண்டே போனாள் .நானும் ம் ம் என தலையாட்டிக் கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான் அவளிடம் நான் கேட்டேன்.

"இப்படி இந்தியாவ பத்தி கேட்குறீயே..இந்தியாவுல உள்ளவன கல்யாணம் பண்ணிக்கலாம்ல நீ.."என்று

"ஹா...ஹா...எனக்கு யாரைத் தெரியும் அங்கே..நீ வேணும்னா என்னய கல்யாணம் பண்ணிக்க.."என்றாள்.

நான் வேண்டுமென்றே தான் அக்கேள்வியை கேட்டேன்.அவளது மனதில் உள்ளதை தெரிந்துக் கொள்ள ,நான் எதிர்பார்த்த பதிலே அவளிடமிருந்து வந்தது.கொஞ்சம் நேரம் கழித்து அவள் கிளம்புவதாக சொல்லி சென்று விட்டாள்.நானோ கிளம்பிட மனமில்லாமல்,மரம்,நிழல்,வெயில்,மாலை,என பார்த்துக் கொண்டே அவ்விடத்தை சுற்றிக் கொண்டிருந்தேன்.ஏதேதோ நினைவுகளுடனும்,கனவுகளுடனும்..

        வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ,மூன்று மாதங்களும் ஆன நிலையில் ,ஊரில் தங்கைக்கு கல்யாணம் வைப்பதாக இருந்ததால்,அக்கல்யாணத்தை காரணம் காட்டி,ஒரு மாத விடுமுறையில் ,ஊருக்கு செல்ல திட்டமிட்டேன்.விடுமுறை தர ,முதலாளி நூர்தீனுக்கு விருப்பம் இல்லை.தொடர்ந்து வற்புறுத்தியதால் விடுமுறை தந்தார் மனதிற்குள் கோபத்தை வைத்துக் கொண்டு,முகத்தில் அதனைக் காட்டிக் கொள்ளாமல்.

    தேக்காவிற்கு சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டேன்.ஊருக்கு செல்வதை ,சில நாட்கள் முன்னதாகவே முனீராவிடம்,நேரில் சந்தித்து சொன்னேன்.சிறு புன்னகையை ,உதடுகள் உதிர்த்தாலும்,அவள் கண்களில் கலக்கம் மின்னலாய் வெட்டியது.ஆனாலும் வார்த்தைகளில் ,சோகத்தை காட்டவில்லை."சரி...போயிட்டு வா.."என்றாள்.எப்பொழுது பயணம் எப்போது திரும்பி வருவாய் ,ஊர் கைப்பேசி எண்கள் கிடைத்ததும்,வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்,என்றெல்லாம் ஆவலாய் சொன்னாள்.

    எனது பயண நாளும் வந்தது,அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்திருக்கையில்,முனீராவிற்கு குறுஞ்செய்தி போடுவோமா,தூங்கிக்கொண்டிருப்பாளே,விமானம் ஏறும் போது எட்டு மணிக்கு மேலாகி விடும்,அந்நேரத்திற்கு முன்னால்,கைப்பேசியில் அழைத்து பேசிக் கொள்வோம்,என நினைத்துக் கொண்டிருக்கையில் ,என் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததை கத்திச் சொன்னது.எடுத்துப் பார்த்தால் அவளிடம் இருந்து குறுஞ்செய்தி ..

"என்ன ஏர்போர்ட் கிளம்பியாச்சா..."என்று.

"இன்னும் கொஞ்ச நேரத்தில கெளம்பிருவேன்"என பதில் செய்தி அனுப்பி விட்டு,குளித்து விட்டு ,வாங்கி கட்டிய சாமான்களை தூக்கிக் கொண்டு ,வாடகை வாகனத்திற்காக காத்திருந்தேன்.என்னுடன் சாரா நின்று கொண்டிருந்தான்.வாகனம் வந்தது ,சாமான்களை வண்டிக்குள் ஏற்றி விட்டு,"

"டேய்..ஊருக்கு போனதும் போன் பண்ணு சரியா ...!?போனாமா வந்தமா னு இரு.....!?என அக்கறையாக சொல்லி விட்டு ,நான் ஏறியதும் வாகனக் கதவை சாத்தி விட்டு கையசைத்து விட்டு சென்றான்.

   அதிகாலை நேரம் என்பதால்,சாலை காலியாக இருந்தது.மிக இலகுவாக,மித வேகமாக வாகனம் சென்றது.சாலையோர மரங்களும்,சாலை விளக்குகளும்,சுரங்க வழி சாலைகளும்,அவ்வதிகாலை வேளையில் ஒளிக் கவிதையாய் காட்சி தந்தது.

   சாங்கி விமான நிலையம், முனையம் இரண்டில் வாடகை வாகனம் நிற்க,பணத்தை செலுத்தி விட்டு ,சாமான்களை தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு ,விமான நிலையத்திற்குள் நுழைந்தேன்.அங்கே இளம் நீல நிற "பாஜு குரோங்"ஆடையணிந்து,அதே நிற "தூடோங்"கட்டி,கொஞ்மாக மை தீட்டி,அதிமாக நேசம் காட்டி நின்றுக் கொண்டிருந்தாள் முனீரா.


    அவளைக் கண்ட அந்த கண நேரம் ,ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் குழைந்து,மனதைக் கொஞ்சம் பரவசப் படுத்தியது.கண்கள் பெரிதாக்கிக் கொண்டு,

"எப்ப நீ இங்கே வந்தா..!?என்றேன்.

"ஒனக்கு மெசேஜ் போட்டு,நீ ரிப்ளை பண்ணியவுடன் கிளம்பி வந்தேன்..."

"வாரதா ஏன் சொல்லல.."

"இங்கே வந்து பாத்துக்கோ"னு தான் "என்று சொல்லி,தன் தொள்பட்டையை தூக்கி,சிரித்து விட்டு இறக்கினாள்.

"ம்..ம்..அங்கே உட்காரு..நான் போர்டிங் போட்டு விட்டு வாரேன்.."என்று சொல்லி சென்று விட்டு,திரும்பி வந்து ,அவளிருந்த இருக்கையின் அருகில் உட்கார்ந்துக் கொண்டேன்.அவள் பேச ஆரம்பித்தாள்.

"எவ்வளவு நேரமாகும்..நீ ஒங்க கம்போங்க்கு போக...!?

"சாயங்காலம் நாலு,அஞ்சு மணிக்குப் போயிருவேன்.."

"ஏன் அவ்வளவு நேரம்..!?"

"ம்..ம்..சென்னையில இறங்கி..மதுரைக்கு போக,ப்ளைட்க்கு வெய்ட் பண்ணி,அங்கே இறங்கி,வண்டியில மூனு மணி நேரம் போகனும்...."

"ஷ்...ஷ்...அவ்வளவு தூரமா....,"என ஆச்சர்யமாக கேட்டவள்,பேசிக் கொண்டே என் தோள் மீது,தலை சாய்ந்தாள்.என்னால் அதனை தடுக்க முடியவில்லை .சாய்ந்துக் கொள்ளட்டும் ,என விட்டு விட்டேன் .சாய்ந்தவள் தழு தழுத்தக் குரலில் சொன்னாள்.

"சென்னை இறங்கியதும் எனக்கு ,வாட்ஸ் அப்ல மெசேஜ் போடு சரியா..!?நான் வெய்ட் பண்ணுவேன்."என்றவள்.தன் கண்ணீரை தடுக்க முடியாமல்,என் சட்டையை நனைத்தாள்.என் சட்டையை நனைத்து இறங்கிய அத்துளிகள் என் தோளின் தோல் அடைந்து,எந்தன் நெஞ்சுக் கூட்டை அடைந்தது .அக்கணம் ,எத்தனையோ பேர்கள்,அவ்விடத்தில் இருந்துக் கொண்டிருந்தாலும் ,விழிப்பிற்கும்,தூக்கத்திற்கும் இடைப்பட்ட ,சலனமற்ற,சஞ்சலமற்ற,எதுவுமற்ற,ஒரு ஆழ்மன நிலையில் நாங்கள் இருந்தோம்.

  சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.நான் முன் செல்ல ,முனீரா பின் தொடர்ந்தாள்.

"சரி போயிட்டு வாரேன்.."என நான்
சொன்ன வார்த்தைக்கு.,பதில் சொல்லாமல் தலையை மட்டும் நடுநிலையாக ஆட்டினாள். நான் குடிநுழைவு சம்பிரதாயங்களை முடித்து விட்டு,விமானத்தில் அமர்ந்திருந்தேன்.விமானம் கிளம்ப ,சில நிமிடத் துளிகள் இருக்கையில்,"போய் வருகிறேன்"என குறுஞ்செய்தி அனுப்பினேன்.விமானம் புறப்பட்டு,மேலே மேலே சென்றது.

    ஆனால் எவ்வளவு தூரத்தில் பருந்துகள்,பறந்தாலும் ,பூமியில் கிடக்கும் ,தன் இரையின் மீது கண் வைத்திருப்பதைப் போல் ,உயரத்தில் நான் பறந்துக் கொண்டிருந்தாலும்,என் மனம் அவளை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்...)


வெள்ளி-சிங்கபூர் பணத்திற்கு தமிழர்கள் பயன்படுத்தும் வார்த்தை.
கம்போங்-கிராமத்தை குறிக்கும் மலாய் வார்த்தை.
பாஜு குரோங்-மலாய் பெண்கள் அணியும் பாரம்பரிய உடை.
தூடோங்-தலையில் கட்டும் முக்காடுத்துணியை குறிக்கும் மலாய் வார்த்தை.



    

No comments:

Post a Comment