Tuesday, 2 May 2017

நிஸாவின் கையெழுத்து-5



         கூட படிச்ச சேக்கு இப்பவும் கூட்டாளிதான்.தொடர்புலதான் இருக்கான்.சமது சிங்கபூர்ல, ரெஸ்டாரண்ட் வச்சிருக்கான்.எப்பவாவது,எங்கேயாவது பாத்தா பேசிக்குவோம்.ரெண்டு மூனு வார்த்தைங்க பேசிட்டு,வேற வேற பாதையில போயிருவோம்.பிர்தௌஸ்ஸை எடயில பாத்தேன்.தலயெல்லாம் வெள்ளையாகி இருந்துச்சி."என்னடா இப்படி.!?னு ,அவந்தலய காட்டி கேட்டேன்."விடுடா..மயிருதானே..."னு சொல்லி சத்தமாக சிரித்தான்.அப்புறம் கார்த்திக்கேயன் ,இவன் மதுரையில வாத்தியார் வேல பாக்குறான்னு கேள்விபட்டுருந்தேன்.அவன ரெண்டரை வருசத்துக்கு முன்னால,எங்க ஊரு பேங்குக்கு வந்திருக்கயில பாத்தேன்.அடயாளம் தெரிஞ்சிக்க கொஞ்ச நேரம் ஆச்சி."என்னடா..கார்த்தி வாத்தியாரா ஆயிட்டியாம்...!?ஹா...ஹா.."னு நான் சிரிச்சதும்,"ஆமா...நண்பா...நீ கவிஞனாயிட்டியாமே.."னு அவன் கேட்டதும்,எனக்கு சிரிப்பு தாளல.அவனை நான் தெரிஞ்சி வச்சிருப்பது போல,அவனும் என்னை தெரிஞ்சி வச்சியிருந்தான் போல.

     அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால,சாயல்குடி சுப்ரீம் கடயில செருப்பு வாங்க போயிருந்தேன்.ரொம்ப அலட்டிக்காம,நல்ல செருப்பா ஒன்னு தாங்க பாய்"னு சொன்னதும்,ரெண்டு மூனு செருப்புகள ,எடுத்துப்போட்டாப்ல,கடயில இருந்தவரு.அதுல ஒரு சோடிய நான் எடுத்துக்கொண்டு,கட பையங்கிட்ட கேட்டேன்."இந்த செருப்பு பிஞ்சுருமா..!?னு,அதுக்கு அவன் சொன்னான்."ஆமா..பிஞ்சிரும்..அப்பதானே,இன்னொரு செருப்பு வாங்க வருவீங்க..அந்த செருப்புக் கம்பெனியும்,நாங்களும் பொழைக்க முடியும்" னு சொல்லி விட்டு சிரிச்சான்.நானும் அவன் பேச்சை ரசிச்சேன்.காச கெட்டிட்டு,வீடெக்ஸ் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தேன்.ஏதாவது வண்டி வந்தா போகலாம்னு.,அப்ப ஒரு ஷேர் ஆட்டோ வந்துஞ்சி,மாரியூர் போக.

      டிரைவர் கிட்ட,ரெண்டு பக்கமும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டாங்க.என்னமோ,பூனைப்படை பாதுகாப்பு மாதிரி.நடுபக்கத்துல,பொம்பளைங்க நெறஞ்சி இருந்தாங்க.கம்பு பையில சாமான்களை வாங்கி மடியையும் நெறச்சிக்கிட்டாங்க.நான் உக்கார மிச்சம் இருந்தது,பின்னாடி கதவ தொறந்துப் போட்டு,காலியா இருந்த எடம்தான்.எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம்,காலைத்தொங்க போட்டுக்கிட்டு,வேடிக்கை பாத்துக்கிட்டு போவலாம்னு.ஆட்டோ கெளம்பி போனது.என் சந்தோசம் ரெம்ப நேரம் நெலைக்கல.ஆட்டோ டீசல் ஊத்த,பல்க்ல நின்னதும்,ஆட்டோ எங்க போகுதுனு கேட்டு ஒருத்தன் ஏறிக்கிட்டான்.என் பக்கத்துல ,அவன் வந்து உக்காந்ததும்தான்,எனக்கு தெரிஞ்சிச்சி.அவன் என்னோட படிச்ச ஒமர் னு.

         ஆட்டோ கெளம்ப ஆரம்பிச்சிச்சி.  ஒமர் ரொம்ப மாறியிருந்தான்,கண்ணுக்கு கீழே கருவளயமும்,ஒட்டிக் கருத்த மொகமும்,சிகரெட் கறப்படிஞ்ச பல்லு னு அவனை கெட்ட செயல்கள் ரொம்ப   சாப்புட்டுருச்சினு நெனச்சிக்கிட்டே,     நான் அவனைப் பாத்து கேட்டேன்."எப்படிடா இருக்கா..!?னு,நான் கேட்ட கேள்விய விட,என் பார்வய உள்வாங்கி இருப்பான் போல.பொல பொல னு பேச ஆரம்பிச்சிட்டான்."அதான் பாக்குறீலே..எப்படி இருக்கேன்னு...எல்லாம் போச்சிடா....ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனேன்...இப்ப ஓஞ்சி போயிட்டேன்டா...எல்லாத்தையும் அனுபவிக்கனும்...எல்லா கெட்ட செயலையும் செஞ்சேன்...அப்புறம் அத விட முடியாம கெடந்தேன்...பொழைக்க போனா சரியா வருவான்னு,வெளிநாட்டு ஏத்தி விட்டானுங்க வீட்ல,அங்க போனதும் கொஞ்ச காசு கைல பொரளுச்சி,அப்புறமென்ன குடிதான்,குடிதான்,குடியே தான்.எத்தன பேரு எங்கிட்ட வாங்கி குடிச்சானுங்க தெரியுமா..!? ..........மவனுங்க இப்ப என்னய நாயி மாதிரி பாக்குறானுங்க..எல்லாத்தையும் வெறுத்துட்டேன்டா...என்று ,நான் கேட்காத விசயத்தையெல்லாம் சொல்லிக்கிட்டே போனாவனை இடயில மறச்சி,"சரி கல்யாணம் எதுவும் முடிச்சியா இல்லையா..!?னு கேட்டதுக்கு,அவன் சொன்னான்."ம் ம்..முடிச்சி வச்சானுங்க வீட்ல ,நான் திருந்துவேன்னு,மயிர திருந்துனேன்,கூட கொஞ்சம் நாசமாதான் போனேன்.இதுல ரெண்டு புள்ளங்க வேற பெத்தாச்சி,நான் திருந்த மாட்டேங்குறேன்னு,எம் பொண்டாட்டிக்காரி,மண்ணனய ஊத்திக்கிட்டு,பத்த வச்சிக்குவேன்னு ,பாவ்லா காட்டுனா,படார்னு புடிச்சிருச்சி,.......... அவள ராம்நாட் ஜி ஹெச்ல வச்சி பாத்து கூட்டி வந்து இருக்கா வீட்ல.அப்பவே செத்துருந்தாலும்,அடக்கம் பண்ணியிருக்கலாம்..ரொம்ப இப்ப கஸ்டபடுறா..."னு சொல்லி அவன் கண்ணு கலங்குனத,என்னால சாதாரணாமா எடுத்துக்க முடியல.மனசெல்லாம் வேதனையா போச்சி .இதுக்கிடையில ஆட்டோ ,போற வழியில ஆள எறக்கவும்,ஏத்தவுமா இருந்துச்சி.ஆட்டோ முக்கு ரோடைத் தாண்டி,ஒப்பிலான்,மாரியூர் போற ரைஸ் மில் வளைவுல வளஞ்சிச்சி.

      ஒமர் கிட்ட என்ன பேசனும்னு எனக்குத் தெரியல.அவனும் நானும் மவுனமாதான் இருந்தோம்.அந்த மவுனத்த கலைக்க,நாந்தான் பேச்செடுத்தேன்."டேய்..நம்மோட படிச்சிச்சில,சரிபு நிஸா இப்ப எப்படிடா இருக்கு..னு.உடனே பட்டுனு திரும்பி சொன்னான்.அந்த ............ .......தான் எம் பொண்டாட்டி"னு .எனக்கு சுர்ருனு இருக்கையில,யாரோ சொன்ன.,"கையெழுத்து எப்படி இருக்கோ,அப்படிதான் ஒருத்தவங்களோட தலையெழுத்தும் இருக்கும்"னு சொன்னது,நெனப்புக்கு வந்து சோக கீதம் பாடுச்சி.

(முற்றும்)


    

2 comments:

  1. ஆஹா அருமையான கையெழுத்து சகோ! நலம் தானே!

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ...
      நீங்கள் நலம் தானே...
      நீண்ட நாள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சி சகோ..

      Delete