Monday, 15 May 2017

உன்னை காணாத வரம் வேண்டும்..!(1)


          திருச்சி சர்வதேச விமான நிலையம்.இரவு மணி 1-15 போல்,சிங்கபூர் செல்லவிருக்கும் டைகர் ஏர்வேய்ஸ் விமானத்தில்,கைப்பைகளுடன் ஏறிய பயணிகள் ,தங்களுக்கான இருக்கையைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.இதில் பலர் ,சிங்கபூருக்கு வேலைக்கு செல்பவராக இருக்கலாம்,அல்லது விடுமுறை நாட்களை கழிக்க இந்தியா வந்தவர்களாக இருக்கலாம்.ஏறிய பயணிகளில் சில வித்தியாசங்கள் இருந்தாலும்,அனைவரது மனதிலும் ஒரு கனவு நிச்சயமாக இருக்கும்.அக்கனவு ,தனது பழைய வீட்டை இடித்து புதிய மனை கட்டவோ,தன் குடும்பக் கடனை தீர்க்கவோ,தன் உடன்பிறந்தவர்களின் எதிர்காலத்திற்காகவோ என,இப்படியாக பல கனவுகளை சுமந்தவர்களாகத் தான் இருப்பார்கள் இப்பயணிகளில் பலர்.கனவுகளை சுமந்த இந்த மானுடங்களை சுமந்து பறக்க தயாராக இருந்தது விமானம்.

     மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது.சில மழைத்துளிகள் ,நான் இருந்த சன்னல் கண்ணாடியில் வழிந்து ,நெளிந்து, வடிந்துக் கொண்டு செல்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.விமானத்தின் வெளியில் மழையாலும்,விமானத்தினுள் குளிரூட்டிகளாலும்,குளிர்ச்சி பரப்பபட்டாலும்,என் மனக்குழி கனன்றுக் கொண்டிருந்தது.அக்கதகதப்பு என் உடலெங்கும் பரவி,ஏதோ ஒரு பரிதவிப்பை உணர்த்தியது.ஏனென்றால் நானும் சில வருடங்களுக்கு முன்னால் ,சிங்கபூரில் தான் வேலைப் பார்த்தேன்.விடுமுறையில் வந்தவன் திரும்பி செல்லவில்லை.இப்போது செல்ல வாய்ப்பு வாய்த்தும்,மனம் ஒப்பவில்லை.காரணம் ஒரு முகம்,அம்முகம் எனக்கு ஆறுதலைத் தந்தது,சிரிப்பைத் தந்தது,சில நேரங்களில்,தொடர்ச்சியாக கவிதைகளையும் தந்திருக்கிறது.

    அம்முகம் காணாமல் பரிதவித்த காலம் போய்,இனி அம்முகத்தை கண்டிட கூடாதென்று ,என் மனம் வெதும்பி கிடக்கிறது .அதற்கான காரணமும் இருக்கிறது.அம்முகத்திற்கு சொந்தக்காரியின் பெயர் முனீரா.

     சில வருடங்களுக்கு முன்னால்,சிங்கபூர் ரிவர்வேலி சாலையிலுள்ள "அர் ரவுதா"உணவகத்தில் தான் வேலைப்பார்த்தேன்.உணவக உரிமையாளர் நூர்தீன்,நன்றாக பழுத்த மாம்பழ நிறத்தில் இருந்தார்.மலாய்க்கார தாயிக்கும்,இந்திய தகப்பனுக்கும் பிறந்தவர்.அவரது நீளமான முடி ,மின் விசிறிக் காற்றினால் ,அவரது தோளில்  கொஞ்சம் நயனமாக ஆடியது.அவரது இருக்கையின் முன்னால் இருந்த என்னிடம்,தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் விசாரித்தார்.

"ஒம் பேரென்ன..!?

"அர்ஷத்."

"ரொட்டி போடத் தெரியுமா...!?"

"ம்ம்..ஆமாம்.."

"எல்லாரும் இப்படித்தான்லா சொல்லுறானுங்க...அப்புறம் சரியா வேல தெரிய மாட்டேங்குது..."என தொடங்கி,சம்பள விபரம்,தங்குகிற இடம் விபரமனைத்தையும்,சொல்லி விட்டு,கடையின் மேற்பார்வையாளர் மலேசிய தமிழரான சரவணனை என்னிடம் அறிமுகம் செய்து விட்டு,

"சாரா...எல்லா விபரமும் சொல்லுவான்..அவன்கிட்ட கேட்டுக்க.."என சொல்லி விட்டு ,என்னை சாரா என அழைக்கப்படும் சரவணனிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார் நூர்தீன்.

    சாரா பார்க்கும்போதும்,பேசும்போதும் ரவுடிப்போல தெரிவான்.ஆனால் பழகிய கொஞ்ச நாளிலேயே புரிந்தது.இவன் நம்ம "கைப்புள்ள வடிவேலு"போல ,வெள்ளந்தியானவன் என்று.புரோட்டா போடும் இடத்திற்கு அழைத்துச் சென்று ,விபரங்களை சொன்னான் .எந்த எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று .விபரங்களை சொல்லும் போது ,புதிய நாடு,புதிய பழக்கங்களால் எனக்கு பயமும்,கலக்கமும் இருந்ததை சாரா உணர்ந்திருக்க வேண்டும்.அதனால் அவன் சொன்னான்.

"அர்ஷத் ..பயப்படாதலா...சாரா இருக்கேன் ஒனக்கு ஓ கே யா..!?என சிரித்துக் கொண்டு,அவனது வேலையைப் பார்க்க சென்று விட்டான்.அவனது சிரிப்பு என் கலக்க இருளிற்கு,சிறு பொறி வெளிச்சத்தை தந்தது.

       அந்த உணவகம் பாதியளவு சமையல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.அவ்விடத்தில் "தாய்லாந்து கடல் உணவும்,மேற்கத்திய உணவும் தயாரிக்கப்பட்டது .அதன் வெளிப்புறம் இந்திய உணவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது .அதன் வலதுபுறம்தான் புரோட்டா போடுவதற்கான இடம்.அந்த இடத்தை ,பெரிய கண்ணாடியால் மறைத்திருந்தார்கள்.உள்ளே புரோட்டா போடப்படுவதை,வாடிக்கையாளர் பார்க்கும் வண்ணம் இருந்தது.அந்த இடம் தான்,நான் ஆட வந்த ஆடுகளம்.எனக்கு தெரிந்த வரை மற்ற சமையல் எல்லாம் சில நாட்கள் பார்த்தால்,மறுநாள் ஏறக்குறைய நம்மால் செய்திட முடியும்.ஆனால் புரோட்டா போடுவது அவ்வளவு எளிதாக பார்த்தவுடனே ,எல்லோராலும் செய்திட முடியாது,அதனை கற்றுக்கொள்ள,பொறுமையும்,தொடர் முயற்சியும் தேவை.

     சிங்கபூரில் பலவகையான புரோட்டாக்கள் செய்யப்படுகிறது .அதிலொன்று "டிஸ்ஸு "என்றும்,"பேப்பர் புரோட்டா"என்றழைக்கப்படும்.கூம்பு வடிவிலான புரோட்டா அது.புரோட்டா மாவை அகலமாக வீசி,அப்படியே தூக்கி ,"தாவா"வில் இதமான சூட்டில் போட்டு,அதன் மேல் "மஞ்சள் நெய்யை"தடவி,கொஞ்சம் சீனியை மேலாக தூவி,சிறிது நேரம் கழித்து,அதன் நடுவில் வெட்டி,சுருட்டி எடுத்திட வேண்டும்.இப்புரோட்டாவை சிறு பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.கண்ணாடியின் வெளியில் நின்றுக் கொண்டு ,சின்ன சின்ன கண்களைக் கொண்டு,அழகான பூக்களைப்போல்,சிறு குழந்தைகள் புரோட்டா போடுவதை வியப்பாக பார்க்கும் அழகை,வார்த்தைக்குள் அடக்கிட முடியாது.

    இப்படியாக தெரிந்த வேலையை செய்துக் கொண்டும்,தெரியாத வேலையை சாராவிடம் கேட்டுக் கொண்டும் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.அதனூடே மாலாய் மொழியை,தப்பும் தவறுமாக பேசி பேசி,ஓரளவு நன்றாக பேசவும் கற்றுக் கொண்டேன்.புரோட்டா ஆர்டர் வராத நேரங்களில் ,சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை,வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அப்பொழுதான் ஐந்தாம் எண் கொண்ட மேசையில்,இரண்டு சீன ஆடவரும் ,ஒரு மலாய் பெண்ணும்,ஒரு இந்திய பெண்ணும், சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒன்றாக படிப்பவர்களாக இருக்கக்கூடும் .அந்த நால்வரில்,ஒருவரது இரு கண்கள் மட்டும் என்னை நிலைக்குத்தி பார்த்தது.சில கணங்களில் ,பார்வையை தவிர்த்து விட்டு,அவர்களுடன் பேச்சில் கலந்து விட்டது.அந்த நிலைகுத்திய பார்வை,என்னை நிலைகுலைய செய்தாலும்,அப்பார்வையின் தீண்டல் எனக்கு தேவையாக இருந்தது.

(தொடரும்...)




No comments:

Post a Comment