Wednesday, 7 May 2014

இராமநாதபுரம் To சென்னை! {சிறு கதை}

                    இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ,இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி இராமநாதபுரத்திற்கு சரியாக எட்டு முப்பதுக்கு வந்திடனும் என்றாலும் பெரும்பாலும் தாமதமாகத்தானே என்ற எண்ணத்தில் எட்டு முப்பதுக்கே ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். ரயிலோ மெல்ல மெல்ல நகர தொடங்கி இருந்தது.

      ''தடக்..தடக்..எனும் சப்தத்துடன் நகரத்தொடங்கியது.  வேகமும் நடையுமாக கிடைத்த பெட்டியில் ஏறிக்கொண்டேன்.எனது இருக்கைக்காண தேடலை தொடங்கினேன். ரயிலில் கூட்டம் மிதமாகவே இருந்தது.ரயிலோடும் சப்தத்துடன் சன்னல் கம்பிகளும் ,கதவுகளும் கைக்கோர்த்து கூடுதலாக குரலெழுப்பியது.

   இதோ வந்து விட்டது.எனது இருக்கை.எனக்கு முன்னதாக ஒரு தம்பதி குழந்தையுடன்  அங்கிருந்தார்கள்.நான் எனது உடமைகளை வைத்தேன்.அப்பெண் சன்னலோரம் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள். நான் சென்றதும் திரும்பிப்பார்த்தாள்.என்னைக்கண்டதும் சுவற்றில் அடித்து திரும்பும் பந்தைப்போல சடாரென திரும்பிக்கொண்டாள்.

          எனது உடமைகளை இருக்கையின் கீழ் வைத்து விட்டு,மாலைப்பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தேன்.எதிரே அமர்ந்திருந்த அப்பெண்ணின் கணவர் ''பேசி வைத்த பொண்ணை எட்டி எட்டி ''பார்ப்பதுப்போல் பத்திரிக்கையை பார்த்துக்கொண்டிருந்தார்.உணர்ந்துக்கொண்ட நான்.

 ''இந்தாங்க.!படிச்சிட்டு தாங்க ''என நீட்டினேன்.

   அவரும் சங்கோஜத்துடன் வாங்கிக்கொண்டார்.

     நான் பையினுள் வைத்திருந்த வைர முத்து  எழுதிய ''தண்ணீர் தேசம்'' என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அவர் பத்திரிக்கையை புரட்டிப்பார்த்து விட்டு என்னிடம் தந்தார்.
அதனோடு ஒரு கேள்வியும் கேட்டார்.

  ''சார்!நீங்க எங்கே சென்னைக்கா...!?என்றார்.

 நான் ''ஆமாம்''என்றேன்.

  ''நான் என் மனைவி பிள்ளையோட  விழுப்புரம் போறேன்.சொந்தக்காரவுக கல்யாணத்திற்கு ...!!-இது அவராகவே சொன்னார்.

அவராகவே பேசிய பிறகு நாம பெரிய பந்தா காட்ட வேண்டாம் என்று கையிலிருந்த புத்தகத்தை வைத்து விட்டு பேசத்தொடங்கினேன்.

''அப்படியா..!?நான் நண்பரை பார்க்க போறேன்.''-என்றேன்.

    அவர் தனது பெயரைச்சொன்னார். என் பெயரைக்கேட்டார்.

 ''சீனி.....''என தொடர்ந்து சொல்வதற்குள் ,அவர் ஒரு கேள்வியெழுப்பினார்.

  ''ஏங்க!உங்க வீட்ல ரேசன் கடை நடத்துனாங்களா..!?-கேட்டார்.

   ''இல்லையே...!?'' -இது நான்.

 ''அப்ப எதுக்குங்க ''சீனி''உப்பு'' என்றெல்லாம் பேரு வச்சிருக்காங்க..!!-என சொல்லி தொடர்ந்து ''கெக்கப்புக்கே''னு சிரித்தார்.

  எனக்கும் இந்த பேரின் மேலான கோபம் இருக்கிறது.இருந்தாலும் அவர் சொல்லி சிரிப்பது எரிச்சலைத்தந்தது.காட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டேன்.எங்களது பேச்சு சொந்த ஊரைப்பற்றியும்,செய்யும் தொழிலைப்பற்றியமாக பேசிக்கொண்டோம்.அரசியல்  சினிமா என தொடர்ந்துக்கொண்டிருந்தது.

     ரயிலோ பரமக்குடி,மானாமதுரை,சிவகங்கை என தனக்கான இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணப்பட்டது.நேரம் கடந்தது. குழந்தை தாயின் மடியில் நான்கு விரல்களை சூப்பியபடியே உறங்கி விட்டது.

    சரி!நாமும் கண்ணயர்வோம் என இருவருக்குமே புத்தியிலப்பட்டது.எனது இடத்தை அவருக்கு கொடுத்து விட்டு மேலேறி படுத்துக்கொண்டேன்.அவருக்கெதிரே அப்பெண்ணும் குழந்தையும் படுத்துக்கொண்டார்கள்.

     எனக்கோ தூக்கம் வருவதாக இல்லை.சென்னையில் அவனிடம் பணத்தை வாங்கிடலாமா.!?இன்னும் இழுத்தடிப்பானா..!?என கேள்விகள் குழப்பியெடுத்தது.காலையிலிருந்து கொஞ்சம் கூடுதலாக அலைந்ததால்,உடம்பு வேற 'கச கச''ன்னு இருந்தது. ரயிலோ இலக்கை நோக்கி சீறிக்கொண்டு ஓடியது.

         எப்பொழுது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.எழுந்துப்பார்த்தால் மணி அதிகாலை 5-30 ஐ காட்டியது.நான் எழுந்திருக்கும்போது அத்தம்பதிகள் இல்லை.விழுப்புரத்தில் இறங்கி இருப்பார்கள்.என்னிடம் அப்பெண்ணின் கணவர் சொல்லிட்டுப்போனாரா..!?இல்லை தூங்குவதை கெடுக்க வேண்டாமென சொல்லாமலே சென்றாரா..!?என என்னால் யூகிக்க முடியவில்லை.

          படுக்கையை விட்டு கீழிறங்கினேன்.இயற்கை உபாதைக்காக கழிவறை சென்று விட்டு,முகங்கழுவிக்கொண்டேன். மீண்டும் இருக்கைக்கு வந்து சன்னலோரத்தில் உட்கார்ந்தேன்.இன்னும் கொஞ்ச நேரத்தில் எக்மோர் வந்து விடும்.சிலு சிலுவென காலை நேரக்காற்று முகத்தில் பட்டு முதுகின் நடுப்பகுதியை சில்லிட செய்தது.தலை முடியை கலைத்து நெற்றியை துளாவியது.

         நேற்றிரவு ஒன்றாக வந்த அந்த நபரிடம்,எனது சொந்த ஊரை மறைத்தே தான் பேசிக்கொண்டு வந்தேன்.அது சரியா..!? தவறா..!?என ஒரு நெருடல் எனக்கு சங்கடத்தையே தந்தது.நான் ஏன் அவரிடம் எனது ஊரை மறைக்கனும்.!?

       சரி!அவ்வளவு நேரம் அவருடன் பேசிக்கொண்டு வருகையில்,அப்பெண் சிலைப்போல திரும்பாமலே ஏன் இருக்கனும்..!?

          ஊரின் பெயரை அவரிடம் மறைத்ததற்கும்,அப்பெண்ணோட அந்நிலைப்பாட்டிற்கும் ஒரே பதில்.

    ''எனக்கு அப்பெண்ணையும்,அப்பெண்ணிற்கு என்னையும் நன்றாகவே தெரியும்.நாங்கள் யாரென்று...!!''

5 comments:

  1. அடடா ,நல்ல முடிச்சு கடைசி வரியில் !கணவர் இப்போதான் சொல்லாமல் சென்றார் ,அந்த பெண் முதலிலேயே சென்று விட்டாரோ ?

    ReplyDelete
  2. 'எனக்கு அப்பெண்ணையும்,அப்பெண்ணிற்கு என்னையும் நன்றாகவே தெரியும்.நாங்கள் யாரென்று...!!''//// யாரு அதையும் சொல்லி இருக்கலாமே சகோ

    ReplyDelete
  3. கடைசி டிவிஸ்ட் சூப்பர்!

    ReplyDelete