Monday 4 May 2015

முருகன் கல்யாணம்! (இது கதையல்ல )


   "என்னண்ணே.!? பாக்காம போறே..!?னு ஒரு கை என்னை முதுகில் தட்டியது.

நானும் "யார்டா நம்ம முதுகுலத் தட்டுறது"னு திரும்பிப் பார்த்தேன்.

எனக்குப் பரிச்சயமானவன் தான் முருகன்.நான் வேலைப் பார்த்த உணவகத்தின் அருகில் தங்கி இருந்தவன். எப்போதாவது கடைக்குள் வந்து கதைப் பேசுவான்.ஆனால் எப்போது போனில் பேசிக் கொண்டிருப்பான்.அவனுக்கு வயது இருபத்தேழு இருக்கலாம்.அவன் போனில் பேசும்போதெல்லாம் 

"என்னடா !?லவ்வா..!?னு கேட்டால், சைகை காட்டுவான்,"பேசாம போ..!!"னு.

நான் தொழுகைக்காக நடந்துப் போகும் நேரங்களில் 
"என்னண்ணே ? தொழுகவா .!?னு கேட்பான்.

"வேற என்னைப் பாத்தா ,ஒனக்கு தூங்கப் போறவன் மாதிரி தெரியுதோ"! னு கேட்பேன்.

"பாத்தியா..!!காலையிலேயே வம்பு பண்ணுறியே..!!சரி சரி பாத்துப் ஓரமாப் போ ,ரோடு உள்ளே வுழுந்துறாதே"னு கேலிப் பேசுவான்.

             ஒரு நாள் ஓய்வு நேரத்தில் சாப்பிட்டு விட்டு,நாளிதழை படித்துக் கொண்டிருந்தபோது ,முருகன் வந்தான்.

      "எதுவும் பேப்பர்ல விசேசமா.?னு கேட்டான்.

       "நீ வந்தா !? விசேசம் எப்படி இருக்கும்.."!நான் கேட்டேன்.

     "ஷ்..ஷ்...! உன்ட பேச முடியாது..!!அந்தப் பேப்பரைத் தா" னு வாங்கி பாகப் பிரிவினை செய்தான் .எனக்கு ரெண்டு தாளைத் தந்து விட்டு,மத்ததை அவன் பார்க்க ஆரம்பித்தான்.நான் பேப்பரைப் படிக்க ஆர்வம் இல்லாமல் முருகனிடம் பேச்சை வளர்ந்தேன்.

         "என்ன முருகா .?எப்ப கல்யாணம் ..!?

       "மெதுவா ..முடிப்போம்.....

"போன்ல பேசுறியே அந்த பொண்ணையா கல்யாணம் பண்ணப் போறே..!!

       "ஆமா...அத்த பொண்ணுதான் அது...

   "அதுசரி ! சொந்தத்துல யாராவது பொண்ணு கொடுத்தாதான் ஒனக்கெல்லாம்....!"

     "என்னய வம்பு இழுக்குறதே ஒனக்கு வேலையா போச்சி ..இரு!நான் சாப்டு வந்து ஒனக்கு பதில சொல்றேன் !"னு கிளம்பிட்டான்.


        இப்படியாக நான் அவனை கேலி செய்வதும், அவன் என்னை வம்புக்கு இழுப்பதும் தொடர்கதையான ஒன்று.சில வருடங்கள் இப்படியாக கழிந்தது.காலம் கடந்தது.வேலை மாற்றம் எனக்கும் ஏற்பட்டது.இடம் மாறினேன். ஒன்றரை வருட காலம் முருகனை சந்திக்கவில்லை.அதற்குப் பின் கடைவீதி  ஒன்றில் இன்றுதான்  என்னைத் தோளில் தட்டி அழைத்தான்.

      "டேய் முருகா..!என்னடா இங்கே இருக்கே...!! இது நான்.

     "என்ன நீ ஒம்பாட்டுக்கு சொல்லாம கடை மாறி போயிட்டே "-முருகன்.

     "சரி வா !டீ குடிச்சிட்டுப் பேசுவோம்"னு இரண்டுப்பேரும் ஒரு உணவகத்தில் அமர்ந்து தேநீர் வாங்கி குடித்துக் கொண்டே பேசினோம்.நலம் விசாரிப்புகள்,இப்போது வேலைப் பார்க்கும் இடங்களைப் பற்றி பேசிக்கொண்டும்,இடையில் கேலிச் செய்துக்கொண்டும்,அப்போது எனக்கு ஓர் நினைவு வந்தவனாக கேட்டேன்.

          "ஆமா..!! ஒனக்கு கல்யாணம் ஆயிருச்சாடா..!!-நான்.

      "அத்த பொண்ணுக்கு ஆயிருச்சி ,வேற ஆளோட..."-என்றான் சிரிச்சிக் கொண்டே..

     "ஏன்டா ? எதுவும் குடும்ப பிரச்சனையா !?-அதிர்ச்சி மாறாமல்.

      "அதெல்லாம் இல்ல ! ஜாதகம் பார்த்தாய்ங்க !அதுல அந்த பொண்ண கட்னா எனக்கு ஆபத்தாம் !என்றான்.

        "சரி அது அவுக "நம்பிக்கைய" நான் ஒன்னும் சொல்ல வரல.வேற பொண்ணப் பாத்து கட்டிக்க வேண்டியது தானே..!!-நான்.

       "அதுக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆகும்.."அவன்.

     "ஏன்டா ? வீட்ல தங்கச்சிங்க யாரை கட்டிக் கொடுக்கனுமா..!?- நான்.

     "இல்லண்ணே..!ரெண்டு வருசங் கழிச்சி தான் கல்யாணம் பண்ணனும்னு..
சொல்லிருக்காரு....! -முருகன் 

    "யாரு....!? -நான்

   "ஜாதகம் பார்த்தவரு...! -முருகன்.

   "ஏன்டா ?கல்யாணம் ஒனக்கா ?இல்ல அந்த ஜாதகம் பார்த்தவருக்கா..!?ஒங்கல்யாணத்தை முடிவுப் பண்ண அவரு யாருடா..!?-என்றேன் கடுப்பாக.

     "என்ன செய்யண்ணே...!!?வீட்ல கேக்க மாட்டேங்குறாங்க..!!-என்றான் முருகன் விரக்தியாக.

         இனி அவனை இவ்விசயத்தை கிளறி அவனைச் சஞ்சலப்படுத்திட எனக்கு விருப்பமில்லை .வேறொருப் பக்கம் பேச்சைத் திருப்பினேன். நீண்ட நேரம் பேசியப் பிறகு கிளம்பத் தயாரானோம்.

     "சரி முருகா !இது என் போன் நம்பர் எடுத்துக்க ..!னு சொல்லி போன் நம்பர்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.இருவரும் வெவ்வேறு வழியில் அவரவர் இருப்பிடத்திற்கு .

             எனக்கானப் பேருந்து வந்து விட்டது.எனக்குப் பிடித்தமான இருக்கையான சன்னலோரத்தில் அமர்ந்துக்கொண்டேன். பேருந்து முன்னோக்கிச் சென்றாலும் என் நினைவுகள் பின்னோக்கியே இருந்தது,முருகனுடன் பேசியதை நோக்கி. எப்படித்தான் அவன் பேசிச் சிரித்தாலும் ,அவன் அத்தை மகள் பேச்சையெடுத்தப் போது ,கண்கள் கக்கிய கண்ணீரை அவன் என்னிடம் மறைக்கப் பட்டப்பாட்டினை ,நான் நினைத்துப் பார்க்கையில்,என் கண்களிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

         

2 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete