Saturday, 2 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 7



       "வேற என்னங்க...!? எம்மாவை எப்படிங்க ..நா வாரத்துக்குள்ள அடக்கம் பண்ணலாம்...!?"என குரலை உயர்த்தி கோபமாக கேட்டார் சீனி மரைக்கார்.

    "அதுக்கு...மயிரு நீ பேசுவே...நாங்க பொறுக்கனுமோ...."என கூட்டத்திலிருந்து சித்திக் குரல் கிளம்பியது.

பேசியவரை அடிக்க சீனி கிளம்ப,சித்திக்கும் கிளம்ப ,பிரச்சனை பெரிதானது.எல்லோருமாக சேர்ந்து இருவரையும் பிடித்து உட்கார வைத்தார்கள் .வைப்பாத்தான் அப்பா பேச ஆரம்பித்தார்.

    "ஏங்கடா..ஆளாளுக்கு சண்டைப் போடவா...இங்க வந்தீங்க..அப்ப எதுக்கு பஞ்சாயத்து கூடனும்...!?ஏம்பா சீனி ஒங்க உம்மா ,எல்லோரும் சேர்த்து அடிச்சி கொன்னா ,ஒனக்கு தெரியாம பொதச்சிட்டோம்..!?அதுக்கு ஆயுசு அவ்வளவுதான்..."என வைப்பத்தான் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே,சீனி கேட்டார்.

"அதுக்காக ,பெத்த புள்ள நான் இல்லாம...எப்படிங்க அடக்கம் பண்ணலாம்.." என்றார்.

  "ஒனக்கு ஆளு அனுப்பினோம்..நீ கடலுக்கு போனவன் ,எப்ப வருவேனு யாருக்கு தெரியும்...நீ வார வரைக்கும் "மய்யத்து"தாங்குமாடா...அதான் எல்லோரும் சேர்ந்து அடக்கம் பண்ணினோம்...இல்லனா..அழுகி போகும்டா....மத்த மத்த ஊருல "மவுத்து"னா,எனக்கென்னனு இருந்துருவானுங்க..நம்ம ஊரு புள்ளைங்க அதுல பெருமை படனும்,எல்லோரும் வந்துர்ராங்க..."என தொடர்ந்து பேசி முடித்தார்.சீனியிடம் பதிலில்லை ,மௌனமாக இருந்தார்.

"சரி ஊரை பேசுனதால,ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிரு..எல்லார் கிட்டயும் எந்திருச்சி..மன்னிப்பு கேட்டுரு..."என பஞ்சாயம் பேசி முடிக்கப்பட்டது.


         மாறாத தகப்பனின் போக்கும்,வறுமையும்,உள்ளூர்வாசிகளின் ஏளனப் பார்வையும்,தானும் எல்லோரைப் போலவும் ,தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என வெளிநாடு செல்ல,சீனியின் மகன் பரக்கத்துல்லா முடிவெடுத்தான்.கடனை வாங்கி சவுதியில் வேலைப் பார்க்கச் சென்றான் பரக்கத்துல்லா.

(தொடரும்..)

   

2 comments: