Wednesday, 5 August 2015

".............".ப் பிறந்தது நானா..!!?

காதலின் பேரைச் சொல்லி
காமத்தில் கலந்திட்ட கருங்காளிகளாலோ!

தேகத்தின் ஆசைக்கு விலைப்பேசி
ஆணுறை வாங்க வக்கில்லாத
பிச்சைக்காரத் தனத்தினாலோ!


சாதி,மத வெறியாட்டத்தில்
கற்பைச் சூறையாடிய கலவரக் காவலிகளாலோ!

ஜனநாயகத்தினை நிலைநிறுத்தவென சொல்லி விட்டு
சிறைப்பட்ட மானினத்தை சின்னாபின்னமாப் படுத்திய
ஏகாதிபத்திய வெறிநாய்களாலோ!

சிந்தப்பட்ட உயிர்த்துளி 
கர்ப்பப்பையை அடைந்ததினால்
குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன்!

தவறுகளை ,அநியாயங்களை
அத்துமீறல்களைத் தடுக்கத் துப்பில்லாத
மனிதச் சமூகம் என்னைச் சொல்கிறது!

".............".ப் பிறந்தது நானென்று!

       

Sunday, 2 August 2015

அதன் பேர் மனசாட்சி இல்லடா.....!!

அடக்குமுறைகள்
கட்டவிழ்த்து விடப்பட்டாலும்!

நியாயக் கழுத்துக்கள்
தூக்கு கயிறுகளில் தொங்கினாலும்!

பாலுறுப்புகள் சூலாயுதங்களால் 
குத்திக் கிழிக்கப்பட்டாலும்!

வன்புணர்வுகளால் 
சாவின் விழும்பினைத் தொட்டாலும்!

மனிதம் மண்ணோடு மண்ணாய்
மடிந்துப் போனாலும்!

பாதிக்கப்படுவது மனிதம்தான் என
எண்ணாமல்!

பாதிப்புக்குள்ளான சமூகத்தின்
மதத்தைப் பார்த்து
சாதியைப் பார்த்து
மொழியைப் பார்த்து
உன் மனம் கொதிக்குமேயானால்!

அதன் பேர் மனசாட்சி இல்லடா 
மயிருகளா ..!!!

//"மயிருகளா "எனும் தடித்த வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை ,ஆனாலும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இதைவிட நாசுக்கான வார்த்தை எனக்குத் தெரியவில்லை //

Friday, 31 July 2015

கவிதையே..!!(56-60)


56)
நாமிருவர் எழுதிய
காதல் "கவிதையே"!

இன்று
குழந்தையாக உயிர்ப்பெற்று சிரிக்கிறது
நம் கைகளிலே!
------------------------------
கவிதையே..!!(57)
------------------
நீ
திட்டத் திட்ட 
நான் கவிதை சொல்வேன்!

ஏனெனில்
எனக்கு இன்னும் திகட்டவில்லை
"கவிதையே"!
------------------------------
கவிதையே..!!(58)
-------------------
கண்ணை மூடி தூங்கென்று
என்னைச் சொல்பவர்களுக்குத் தெரியாது!

நான் கண்களை மூடிக் கொண்டும்
உன்னைத் தேடுவேன் என்பது!
--------------------------------
கவிதையே..!!(59)
------------------
காலம் கடந்து
தாய்மை அடைந்தவளின்
மன நிலைதான் எனக்கும்!

நான் காதல் கவிதை 
எழுதிடும்போதெல்லாம்!
-----------------------------
கவிதையே..!!(60)
----------------
என்னை விட்டு 
நீ பிரிந்துப் போனாலும்!

சிரிப்புடனேயேப் போ
கவிப்பூவே !

வேண்டுமென்றால்
உனக்கும் சேர்த்து 
நான் அழுதுக் கொள்கிறேன்!
------------------------------

Monday, 27 July 2015

கவிதையே..!!(51-55)

51)
காதல் கொண்டவர்களெல்லாம்
உன்னை எழுதுவார்களெனத் தெரியவில்லை !

ஆனால்
உன்னை எழுதுபவர்களெல்லாம்
ஏதோ ஒன்றின்மேல் 
காதல் கொண்டவர்கள்தான்!

//ஏதோ ஒன்று என்பதினை நீதியின் மீதோ,சமூகத்தின் மீதோ,எதிர்பாலினத்தின் மீதோ,.....இப்படியாக பொருள் கொள்க//
-------------------------------------
கவிதையே..!!(52)
------------------
உன்னைத் தேடி ஓடுவதில்
நான் "இளைக்கிறேன்"எனும்
ரகசியம்!

என் "கிறக்கத்தை"க் கேட்பவர்களுக்குத்
தெரிவதில்லை!
----------------------------------
கவிதையே..!!(53)
------------------
கொஞ்சம் நாளாய்
என்னைக் காணவில்லையென்றாய் 
தேடினாய் !

உனது வேர்களைத் தேடித்தான்
கொஞ்சத்தூரம் போய் வந்தேன்
கவிதையே!
-------------------------------
கவிதையே..!!(54)
--------------------
என்னவளின் கண் மை டப்பாவை
கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டு
வந்துச் சொல்!

நான்
காதல் காவியமொன்று
எழுதிட வேண்டும்.!
-----------------------------
கவிதையே..!!(55)
--------------------
நான் 
கண்ணீர்த்துளியாய் விழுகையில்
உள்ளங்கையால் தாங்கிடாதவர்கள்!

இப்பொழுது தேடுகிறார்கள்!

கவிக்கடல் உன்னில்
நான் கலந்திட்டது தெரியாமல் !
---------------------------------

Friday, 24 July 2015

எச்சில்கள் !

உன் முத்தத்தின் எச்சில்கள்!

என் உயிர்ப்பூவில் படிந்திருக்கும்
பனித்துளிகள்!

         

Wednesday, 22 July 2015

காதல்.!

கட்டில் ஆடும் 
காலத்தை விட!

கை கால் ஆடும்
காலமே உணர்த்துகிறது !

உண்மைக்காதல் எதுவென்று..!!?

      

Saturday, 18 July 2015

மருதாணி !

என்னைப்போல தான்
மருதாணியும்!

உன்னை
அழகுப்படுத்த!

தன்னையே அர்ப்பணித்து விட்டது!