காலை வெயில் விமானம் எங்கும் பரவ ஆரம்பித்தது.சன்னோலரத்தில் இருந்த ,என் முகத்திலும் கொஞ்சம் அறைந்ததில் விழித்துக் கொண்டேன்.அதே நேரத்தில் ,விமானம் தரை இறங்க இருப்பதால்,சீட் பெல்ட்டை கட்டிக்கொள்ளவும்,இருக்கைகளை நேராக வைக்கவும்,விமான பணியாளர்கள் சொல்லி விட்டு பரிசோதிக்கவும் செய்தார்கள்.சன்னம் சன்னமாக விமானம் இறங்கியதில்,நீள் கடலும் ,அதிலொருபுறம் தரையுமாக தெரிந்தது.கீழிறங்க இறங்க,மழைத் தண்ணீரில் ஓடும்,காகித கப்பலைப் போல ,கடலில் கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன.தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல்,கட்டடங்கள் காட்சி தந்தது .சிறுக சிறுக தரையை நோக்கி வந்து,தன் பின்புறத்தை தரையிலிறக்கி,படுவேகமாக சென்று,பின் மிதமான வேகத்தில்,சிங்கபூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் நின்றது .
அவரவர்கள் தனது பைகளை எடுத்துக் கொண்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக எறும்பு ஊர்வதுப் போல்,நகர்ந்து வெளியேறினார்கள்.ஒரு சிலர் விமான நிலையத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தார்கள் ,சிலர் அவசர அவசரமாக ,சில மதுப்பாட்டில்கள் ,சிகரெட்கள் வாங்கச் சென்றார்கள்.நான் "வருகை"என ஆங்கிலத்தில் எழுதி ,அம்புக்குறி காட்டிய இடத்தை தேடி சென்றேன்.குடிநுழைவு இடத்தில்,ஆங்கிலம்,சீனம்,மலாய்,தமிழ் ,என நான்கு மொழிகளிலும் ,"நல்வரவு"எனும் சொல்லை,வெவ்வேறு மொழிகளில் எழுதி இருந்தது.வரிசையாக நின்ற கூட்டத்தில் நானும் நின்றுக் கொண்டேன் .எனது கையில் வேலை அனுமதிக்கான சூராவைப் பார்த்ததும்,ஒரு அதிகாரி ,"நீ அந்த கௌண்டருக்கு போ."என்றார்.
நானும் எனக்கு வலது புறமாக இருந்த ,கௌண்டருக்கு சென்றேன்.அங்கிருந்த அதிகாரி ,எனது பாஸ்போர்ட்.,மற்றும்
வேலை அனுமதிக்கான சூராவையும் சரி பார்த்தார்.எனது இடது,வலது கைரேகைகளை ,அங்கிருந்த இயந்திரத்தில் வைத்திட சொன்னார்.பிறகு ஒரு மாத விசா கொடுத்து,அதற்குள் "பாஸ்"எடுத்துக் கொள்ள சொன்னார்.
விமான நிலையத்திற்கு வெளியில் வந்து ,வாடகை வாகனம் எடுத்து,புதிய கடை விலாசத்தை ஓட்டுநரிடம் சொல்லி விட்டு,அவருடன் பயணித்தேன்.அந்த காலை வேளையில் வாகனங்கள் சாரை சாரையாக சென்றுக் கொண்டிருந்தது.எந்த வாகனத்திலும்,"எச்சரிக்கை ஒலி"எழுப்பபடவில்லை.எனக்கோ இந்த பயணத்தின் வினோதத்தை நினைத்து அதிசயித்துக் கொண்டே பயணித்தேன்.ஏனென்றால் ,இதே சிங்கபூரிலிருந்து கிளம்புகையில்,முனீராவுடன் காலம் முழுவதும் இங்கே வாழ்வேன் என்று நினைத்து பயணித்தேன்.ஆனால் முனீராவின் காதல் முறிந்துப் போனதும்,முதலாளி வேலையை விட்டு விலக்கியதும்,இனி இந்த நாடு எனக்கு எட்டாதகனிதான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,மீண்டும் இந்நாட்டிற்கு வந்ததை நினைத்து,ஆழ்ந்த சிந்தனைக்குள் உள்ளானேன்.ஆம் எங்கோ நமக்கானது நிச்சயிக்கப்பட்டு விட்டது,ஒன்று நாம் அதை நோக்கி பயணிக்கிறோம்,அல்லது அந்த ஒன்று நம்மை நோக்கி வருகிறது என்பதை உணர்ந்தேன்.
சிறிது நேரத்தில் தெம்பனீஸ் பகுதியில் ,நான் சொன்ன விலாசத்தில் வாகனம் நின்றது.வந்ததற்கு பணம் செலுத்தி விட்டு ,புதிதாக திறக்கப்பட்டிருந்த அக்கடைக்குள் நுழைந்தேன் ,வாடிக்கையாளர்கள் அவ்வேளையில் கொஞ்சம் பேர்களாக அமர்ந்திருந்தார்கள்.சாப்பிட்டு முடித்த தட்டிகளை எடுக்காததினால்,அம்மிச்ச உணவுகளை,கொஞ்சம் தனக்கென்று எடுத்துக் கொண்டு ,அதிகமாக கீழே கொட்டிக் கொண்டு இருந்தது மைனாக்கள்.காசாளர் பகுதியில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார் மலாய் ஆடவர் ,நாற்பது வயதிருக்கலாம் அவருக்கு,அவரை நான் நெருங்கியதும்,சிறிது தயக்கத்துடன் என்னைப் பார்த்தார்.நான் சலாம் சொல்லி விட்டு,எனது பெயரைச் சொன்னதும்.
"ஓ...!!ஆமா...ஆமா..மொதலாளி சொன்னாரு..சாராவும் சொன்னான்..அது நீ தானா...வா...ரூம்பை காட்டுறேன்..ரெஸ்ட் எடுத்து விட்டு ,சாயங்காலம் வா...வேல டைமிங்க சொல்லுறேன்..ரொட்டி எதாவது கட்டிக்க..."என சர சரவென சொல்லி விட்டு,என்னை நான் தங்க இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.பிறகு என்னை அங்கு விட்டு விட்டு,மாலை நேரத்தில் வா"என சொல்லி விட்டு கிளம்பினார்.அந்த அறை நான்கு பேர்கள் தங்கும் அளவிற்கு,இரண்டு அடுக்குகள் கொண்ட,கட்டில்கள் போடப்பட்டிருந்தது .எனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ,கொண்டு வந்த பொருட்களை வைத்து விட்டு,குளித்து சாப்பிட்டு விட்டு ,கொஞ்சம் கண்ணயர்ந்தேன்.
மாலை நேரம் கடைக்கு இறங்கியதும்,காலையில் பார்த்த அந்த மேலாளர்,
"ஒனக்கு காலை வேலை...ஆறு மணிக்கு வந்திரு.."என விபரங்கள் சொன்னார்.அங்கிருந்த மற்ற வேலையாட்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.அன்றைய நிகழ்வுகள் மன நிறைவாக இருந்தது .
சில நாட்கள் வேலை ஓடியது.இடையில் சாரா வந்து நலம் விசாரித்து விட்டு போனான்.பேச்சிக்கு கூட முனீராவை பற்றி எதுவும் அவன் சொல்லவில்லை ,நானும் கேட்கவில்லை .பழைய கடைக்கு நானும் செல்லவில்லை .இங்கேயே இருந்துக் கொண்டேன்.விடுமுறை நாட்களில் தேக்கா பகுதிக்கு சென்று தமிழகத்தில் வெளியாகும் சில வார இதழ்களை வாங்கி விட்டு ,அங்கேயே சாப்பிட்டு விட்டு,அறைக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
நான் வேலைப் பார்க்கும் உணவகத்திற்கு அஅருகாமையிலிருக்கும் திடலில்,"பசார் மாலம்"போட்டிருந்தார்.அங்கு ஆடைகள்,உணவுகள் என பலவகையானவைகள் விற்பனை செய்தார்கள்.இதுபோன்ற கடைகள்,சீன பெருநாள்,நோன்பு பெருநாள்,தீபாவளி,கிருஸ்துமஸ்,போன்ற விடுமுறை நாட்களில் திறப்பார்கள்.அவ்வேளையில் பலதரப்பட்ட மக்கள் வந்துப் போவார்கள்.அக்கடைகள் திறந்திருந்ததால்,நான் வேலைப் பார்க்கும் உணவகத்திலும்,எந்நேரமும் கூட்டமாகவே இருந்தது.
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் என்பதால்,தொடர் வேலையினால் ,மிகவும் அசதியாக இருந்தது.என்னை மாற்றி விட இரவு நேர ரொட்டிக்காரன் ஹிஷாம் வந்ததும்,நான் கிளம்பி விட்டேன்.அறைக்கு சென்றதும்,ஆடைகளை மாற்றி விட்டு குளிப்பதற்கு தயாரானேன்.வாளியில் தண்ணீரை திறந்து விட்டு விட்டு,அவ்வாளி நிறையும் வரை,வார இதழ்களில் சில பக்கங்களை மேயலாம் என திறந்தேன்,ஆனால் அந்நாளில் வந்துப் போன வாடிக்கையாளர்களில் அந்த ஒரு முகம்,என்னை படிக்க தொடர விடவில்லை .ஆம்,முனீரா வந்திருந்தாள்.ஒரு ஆடவருடன்,அவ்வாடவர் அவளது கணவனாகவோ,அல்லது காதலானகவோ இருக்கலாம் அவர்களது நெருக்கம் அப்படியாக இருந்தது.என்னை அவள் பார்த்தாள்,ஆனால் தெரிந்ததுப்போல் காட்டிக் கொள்ளவில்லை .சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள்.எனக்கு அவள் இன்னொருவருடன் வந்துப் போனது,பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.,ஏனென்றால் நான் இப்பொழுதெல்லாம் எதார்த்தங்களை உள்வாங்க பழகி கொண்டேன்.அவளுக்கொரு வாழ்க்கை இருக்கும்போது,எனக்கும் ஒரு வாழ்க்கை காத்திருக்கத்தான் செய்யும்.காய்ந்துப் போன காயத்தை,கிளறிப் பார்க்க எனக்கு உடன்பாடில்லை .வாளி நிறைந்து தண்ணீர் வடியும் சப்தம் கேட்டது.,அவசரமாக குளிக்கச் சென்றேன்.யாரை நினைத்தும் இனி நான் என் வாழ்வை நாசமாக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை.
(முற்றும்)
super story !
ReplyDelete