Monday, 7 September 2015

போராடு....!!


        படைப்புகளில் சிறந்த படைப்பு மனித படைப்பு.ஆனால் படைக்கப்பட்ட மற்றப் படைப்புகளெல்லாம்,தன் படைக்கப்பட்ட நோக்கத்தையடைகிறது.ஆம் !ஏதோ ஒரு வகையில் எதற்காகவேனும் பயன்படுகிறது.ஆனால் மனித இனம்.!?தன் படைப்பின் நோக்கத்தை அறிய முனைகிறதா !?தன்னுள்ளிருக்கும் திறமைகளை அகக்கண் கொண்டுப் பார்க்கிறதா .!?என்றால்,பெரும்பாலோர் அறியவில்லையென்பதும்,அறிய முயல்வதில்லையென்பதுதான்,நாம் கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

               அதே வேளையில் சிலரோ,தன் பிறப்பை,இருப்பை அர்த்தமாக்கிடத் துணிகிறார்கள்,பயணிக்கிறார்கள்.அந்த லட்சியப் பயணத்தில் பயணித்திடும்போது,வாய்ப்புகள் கிடைத்திடாத போது,கிடைத்த வாய்ப்புகள் கை நழுவிடும்போது,உறவுகளின் ஏளனப் பார்வைகளின் போது,சமூகத்தின் கேலி கிண்டலின் போது,தளர்ந்துப் போகிறார்கள் .விரக்தி அடைகிறார்கள்.அதனால் "பத்தோடு பதினொன்றாக" கலந்து விடுகிறார்கள் .தான் கொண்ட கனவினையும்,லட்சியத்தையும் அனாதைகளாக்கி விட்டு "கிடைத்ததை" வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் .

      ஓ! லட்சியம் கொண்டவர்களே! சாதிக்க வேண்டும் எனும் உரம் கொண்டவர்களே! கலங்காதீர்கள்!கவலைப்படாதீர்கள்!உங்கள் லட்சியம் ஓர் நாள் வெல்லும்.அன்றைக்கு,உன் செயலைப் பார்த்து "ஆமாம் "என்று இன்று இழுத்து பேசி ,உன்னை இகழ்ந்துப் பேசியக் கூட்டம் "ஆஹா..!!"என்று சொல்லும் காலமும் வரும்.ஆயிரம் கதவுகளைத் தட்டு தவறில்லை.உனக்காக எங்கோ ஓர் கதவு ,திறந்து காத்துக் கொண்டுதான் இருக்கும்,உன் வரவிற்காக.இன்றைக்கு சாதித்தவர்களின் கடந்த காலத்தைப் படித்துப் பார்.காயங்களையும்,அவமானங்களைத் தாங்கித்தான் அவை இருக்கும்.உன் மேலும் ஒரு நாள் உலகின் பார்வை விழும்,அப்பொழுது உன்னால்,நீ பிறந்த மண்ணும்,உன்னைத் தாங்கிப் பிடித்தவர்களும்,உன் தேசமும் பிரகாசம் அடையும்.இதுவரைக்கும் ராமேஸ்வர மீனவர்களின் அழுகுரலைத் தான் இந்த உலகம் கேட்டுக் கொண்டிருந்தது .ஆனால் அதே உலகம் ராமேஸ்வரத்தைப் பார்த்து அழுததென்றால்,அதே மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் மறைவிற்குத் தான்.ஆதலால் நீ எங்கே நிற்கிறாய் என்பதல்ல முக்கியம்,எதை நோக்கி நிற்கிறாய் என்பதே முக்கியம். போராடத் துணிந்தவனுக்கே இவ்வுலகம் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்,போராடத் தயங்கியவர்களை சமாதிகள் என்று இவ்வுலகம் தீர்மானித்து விடும்.ஆதலால் போராடு,போராடு .வெல்லும்வரைப் போராடு.

     

Saturday, 5 September 2015

அரசியல் படி..!!



         "வேலை வெட்டி இல்லாதவனுங்க,வெட்டிப் பயலுவ,இவனுங்கெல்லாம் உருப்படவா..!?"இப்படியாக எத்தனையோ,வசைச் சொற்கள். முழு மனித சமூகத்திற்காக,உழைத்திட,அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தந்திட உழைக்கும் அரசியல் களம் காணும் சொந்தங்களை ஏளனப்படுத்துகிறது,கேவலப்படுத்துகிறது.சில ,பல நாக்குகள்.அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு "அரசியல் ஒரு சாக்கடை"அதில் இறங்கக் கூடாது.நாமும் நாறிடுவோம் என்பது.

           ஓ!"சுத்தப்பத்தமானவர்களே!
கொஞ்சம் பொறுங்கள்.நீங்கள் சொல்லும்,அந்த அரசியல் சாக்கடையில் தான்,செந்தாமரையாய் மலர்ந்து மணம் வீசினார்கள் .கர்ம வீரர் காமராசர் அவர்களும்,கண்ணியமிகு காயித மில்லத் அவர்களும்.நாம் அவர்களது சாதனைகளை வாய்கிழிய பேசுகிறோம்.ஆனால் களமாட மட்டும் "சப்பைக் கட்டு" கட்டுகிறோம்.இது எப்படி இருக்கிறதென்றால் !?,மாம்பழச் சாறு குடிக்கும் நாம் அறிவாளிகளாகவும்,விதைத்து,பாதுகாத்து மாம்பழத்தை பறித்து ,விற்பவர்களை முட்டாள்களாகப் பார்ப்பது போன்றுள்ளது.

        நாட்டின் மேல் நேசம் கொண்டவர்களும்,மனித சமூகத்தின் மேல் அக்கறைக் கொண்டவர்களும்,எனக்கென்ன !?என ஒதுங்கியதால்தான் ,நம் தேசம் "கொள்ளையர்களாலும்",கொலைகாரர்களாலும்" மாறி மாறி ஆளப்படுகிறது .இப்படியே இது பழகிப் போனதால் ,அரசியலுக்கு வர வேண்டுமானால் ,கொள்ளை,கொலைச் செய்ய வேண்டும் என பாமரன் புத்தியில் பதிந்தும் விட்டது.ஆதலால் இன்றோ,அழகான நம் 
இந்தியத் தேசம் அலங்கோலமாகி விட்டது.மதயானைக் கூட்டம் புகுந்த சோளக்காடாய் ஆகி விட்டது.அரசியல் அதிகாரம் எனும் ஆயுதம் நல்லவர்கள் கையிலிருந்தால்,நாட்டைப் பாதுகாக்கும்,அதே அதிகாரம் அநியாயக்காரர்களின் கையிலிருந்தால்,நாட்டைச் சுடுகாடாய் மாற்றி விடும்.நம் நாட்டைப் பாதுகாக்க!நியாயவான்களே அரசியலையும் படிங்க!!

     

Thursday, 3 September 2015

கல்லானாலும் கணவனா .!?


                 "ஏன்டி .!?நான் ஆம்பளடி அப்படித்தான் செய்வேன் ..!ஒனக்கென்ன !,?ஒழுங்க பொத்திக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு......."".....""இப்படியான வார்த்தைகளை ஏராளமாக,தாரளமாக கேட்க முடிகிறது.சில இடங்களில்.


       மேலும் சிலரோ,இரண்டு,மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே,"காரணமாக"இருந்து விட்டு,தன் மனைவிக்கோ,தன் மக்கள்களுக்கோ செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு,வெறுமனே சோற்றுக்குத் தண்டமாகவும்,பூமிக்கு பாரமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்திற்காக பெண்கள் வேலைக்குச் சென்று ,குடும்பப் பாரத்தைச் சுமக்கிறார்கள்.தன் பிள்ளைகளுக்காகவும்,தன் மானத்துடன் வாழ்வதற்காகவும்.

          ஆண் என்பவன் கூடுதல் வலிமையுடன் படைக்கப்பட்டுள்ளான்.அவ்வலிமையைக்கொண்டு தன் குடும்பத்தை,தான் சார்ந்திருக்கும் மனித சமூகத்தை மேம்படுத்தவே,அவ்வலிமையைப் பயன்படுத்தியாக வேண்டும்.அப்படி எவனோருவன் வாழ்கிறானோ ,அவன்(ர்) தான் ஆண்மகனாகத் திகழ்கிறான் .

"பெற்றவளையும்
கட்டியவளையும்
கண்ணீருடன் வைத்திருப்பவன்!

ஆம்பிள்ளையென்று சொல்லதே!
உதட்டின் மேல் மீசை இருப்பதால்!"என்று நான் என்றோ எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது.

ஆண்களே!
                கல்லாய்தான் இருப்பேன் என்றால்,ஏதாவது ஒரு கல்லை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் .மென்மை கொண்ட பெண்மையை நசுக்குவது ஆண்மைத்தனமல்ல,அது அடி முட்டாள் தனம்!

    

Saturday, 29 August 2015

கவிதையே..!!(81-85)


81)
உன் கன்னக்குழியில்
ஒளிந்துக் கொள்ள விரும்பும்!

ஓர் மழைத்துளி நான்!
-----------------------
கவிதையே..!!(82)
--------------------
நதிதனைத் தேடும்
சமுத்திரமாய்!

சமுத்திரத்தைத் தேடிவரும்
நதியாய்!

கவிதையே!
நீயும்
நானும்.!
------------------------
கவிதையே..!!(83)
------------------
என் கவிதையின் 
ஊற்றுக்"கண்"ணினை!

கருப்புத்திரையினால் 
மறைத்து விட்டு!

காதல் கவிதை கேட்கிறியேடி
கொடுமைக்காரி!
---------------------------
கவிதையே..!!(84)
------------------
என்னையெழுதிட 
பேனா எடுத்தால்
கல்லெறிந்த புறாக்கூட்டமாகவும்!

உன்னையெழுத முனைகையில் 
சீனியை மொய்க்கும் எறும்புகளாகவும்!

என்னிடம் கண்ணாமூச்சி 
ஆடுகிறது வார்த்தைகள்.!
-----------------------------
கவிதையே..!!(85)
------------------
எனக்கு மட்டுமேத் தெரியும்!

உன் நினைவுகளோடு வாழ்வது!

எத்தனைக் கொடுமையானதென்பது!
------------------------------------

Tuesday, 25 August 2015

இன்னொரு கல்யாணம் ...!!


        எல்லோரும் கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் என தான் கல்யாணம் செய்துக்கொள்கிறோம்.ஆனால் கால ஓட்டத்தில்,கருத்து வேறுபாட்டினாலோ,இறப்பினாலோ,இன்னும் சில பல காரணத்தினாலோ,ஆணோ/பெண்ணோ வாழ்க்கைத் துணையை விட்டு பிரியும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.


           தனித்து  ஒழுங்காக,ஒழுக்கமாக வாழும் அந்த ஆணையோ/பெண்ணையோ, இந்த உலகம் சும்மா விடுகிறதா !?என்றால் ,அதுவும் இல்லை.அதற்கும் கட்டுக்கதை கட்டி அவர்களது காயம்பட்ட வாழ்க்கயில் கல்லை எறிகிறது.இந்த கேடு கெட்ட உலகம்.

       சரி,தனித்து வாழ்வதால்தானே இந்த அவலச்சொல்,வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள முயற்சித்தால்,அந்த ஆணையோ/பெண்ணையோ ,இது தேவையாக்கும்..!? 
இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டானே (ளே) னு குத்திக் கிழிக்கிறது.நரம்பில்லாத நாக்குகள்.

       ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உறவுகளே!இன்றைய காலகட்டத்தில் "தப்பானவழி" உறவைக்கூட சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு நியாயப்படுத்துகிறோம்.அதே நேரத்தில் சரியான வழியில் வாழ்க்கை அமைத்தால் அதனை எட்டி மிதிக்கிறோம்.மரணப்படுக்கையில் கிடக்கையில் மூச்சுவிட திணறும் ஒருவரது வாயில் பாலை ஊற்றுவதுப் போலுள்ளது.வாழ்க்கையை வெறுத்துக் கொண்டு இருக்கும்,அவர்களது வாழ்க்கையில் நாம் குறை கூறுவது.

       நம் வாழ்க்கையில் மனைவியையோ/கணவனையோ "பிரிந்து" வாழும் நிலை ஏற்பட்டால்,காலமெல்லாம் தனியே இருக்க முடிந்தால் இருந்துக் கொள்ளுங்கள்.அது உங்களது விருப்பம்,அதில் யாரும் தலையிட முடியாது.அதே நேரத்தில் மற்றவர்கள் விசயத்தில் ,தலையிட நமக்கும் உரிமை கிடையாது.

"வலியும்,வேதனையும் வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்,அது நமக்கு வராத வரை வேடிக்கையாகத்தான் தெரியும்"

     

Saturday, 22 August 2015

கவிதையே..!!(76-80)


76)
உன்னைப் படித்திடும்போது
என்னையும்!

உன்னை எழுதிடும்போது
என்னவளையும் பார்க்கிறேன்!
-----------------------------
கவிதையே..!!(77)
------------------
நீ போதைத் தராத
மதுக்குடுவை!

மதி மயங்கச் செய்யும்
மங்கையின் பார்வை!
------------------------
கவிதையே..!!(78)
------------------
காட்டில் மானையும்
முக்காட்டில் உன்னையும் காண்கையில்!

நெஞ்சுக்குள் பெரும்நெகிழ்வு
கவிதையை உருவமாக கண்டதுபோல்!
---------------------------------------
கவிதையே..!!(79)
-----------------
நன்றிக் கெட்ட என் பேனா !

என்னை எழுதச் சொன்னால்!
உன்னைத்தான் அது எழுதுகிறது !
---------------------------------
கவிதையே..!!(80)
------------------
உன்னை எழுதவில்லை என்பதற்காக!

உன்னை நினைக்கவில்லை என்று
அர்த்தமில்லை !
--------------------------------

Tuesday, 18 August 2015

கவிதையே..!!(71-75)


71)
என் மடிச் சேர்ந்த
மழலை நீ!

உன் தோள் சாய்ந்த
பாலகன் நான்!
--------------------
கவிதையே..!!(72)
------------------
என்னைப் பிடிக்கும் 
என்பவர்களை விட !

என் எழுத்தைப் பிடிக்கும்
என்பவர்களை!

ஏனோ
எனக்கு ரொம்ப பிடித்து விடுகிறது !
----------------------------------
கவிதையே..!!(73)
------------------
நீர்த்துளியாய் என் நெஞ்சூற்றில் 
நீ கசிந்திடுகையில் நான் உணரவில்லை!

நீ என் ஆழ்மனக் கிணற்றை
நிரப்பிட வந்த வெள்ளப்பெருக்கு என்பதனை!
----------------------------
கவிதையே..!!(74)
-------------------
"ச்சும்மா" "ச்சும்மா " என்னிடம் நீ
"ச்சும்மா "னு சொல்லாதே!

"ச்சும்மா "னு நீ சொல்லும் வார்த்தை
"ச்சும்மா "வாவது  என்னை ஒரு கவிதை எழுதிட வைக்கிறது !
-----------------------------
கவிதையே..!!(75)
------------------
காதலை விட
கவிதையே சிறந்தது!

ஆம்
காதல் காயத்தைத் தருகிறது!

கவிதை காயத்திற்கு மருந்திடுகிறது!
-----------------------------------