Monday, 7 September 2015

போராடு....!!


        படைப்புகளில் சிறந்த படைப்பு மனித படைப்பு.ஆனால் படைக்கப்பட்ட மற்றப் படைப்புகளெல்லாம்,தன் படைக்கப்பட்ட நோக்கத்தையடைகிறது.ஆம் !ஏதோ ஒரு வகையில் எதற்காகவேனும் பயன்படுகிறது.ஆனால் மனித இனம்.!?தன் படைப்பின் நோக்கத்தை அறிய முனைகிறதா !?தன்னுள்ளிருக்கும் திறமைகளை அகக்கண் கொண்டுப் பார்க்கிறதா .!?என்றால்,பெரும்பாலோர் அறியவில்லையென்பதும்,அறிய முயல்வதில்லையென்பதுதான்,நாம் கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

               அதே வேளையில் சிலரோ,தன் பிறப்பை,இருப்பை அர்த்தமாக்கிடத் துணிகிறார்கள்,பயணிக்கிறார்கள்.அந்த லட்சியப் பயணத்தில் பயணித்திடும்போது,வாய்ப்புகள் கிடைத்திடாத போது,கிடைத்த வாய்ப்புகள் கை நழுவிடும்போது,உறவுகளின் ஏளனப் பார்வைகளின் போது,சமூகத்தின் கேலி கிண்டலின் போது,தளர்ந்துப் போகிறார்கள் .விரக்தி அடைகிறார்கள்.அதனால் "பத்தோடு பதினொன்றாக" கலந்து விடுகிறார்கள் .தான் கொண்ட கனவினையும்,லட்சியத்தையும் அனாதைகளாக்கி விட்டு "கிடைத்ததை" வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் .

      ஓ! லட்சியம் கொண்டவர்களே! சாதிக்க வேண்டும் எனும் உரம் கொண்டவர்களே! கலங்காதீர்கள்!கவலைப்படாதீர்கள்!உங்கள் லட்சியம் ஓர் நாள் வெல்லும்.அன்றைக்கு,உன் செயலைப் பார்த்து "ஆமாம் "என்று இன்று இழுத்து பேசி ,உன்னை இகழ்ந்துப் பேசியக் கூட்டம் "ஆஹா..!!"என்று சொல்லும் காலமும் வரும்.ஆயிரம் கதவுகளைத் தட்டு தவறில்லை.உனக்காக எங்கோ ஓர் கதவு ,திறந்து காத்துக் கொண்டுதான் இருக்கும்,உன் வரவிற்காக.இன்றைக்கு சாதித்தவர்களின் கடந்த காலத்தைப் படித்துப் பார்.காயங்களையும்,அவமானங்களைத் தாங்கித்தான் அவை இருக்கும்.உன் மேலும் ஒரு நாள் உலகின் பார்வை விழும்,அப்பொழுது உன்னால்,நீ பிறந்த மண்ணும்,உன்னைத் தாங்கிப் பிடித்தவர்களும்,உன் தேசமும் பிரகாசம் அடையும்.இதுவரைக்கும் ராமேஸ்வர மீனவர்களின் அழுகுரலைத் தான் இந்த உலகம் கேட்டுக் கொண்டிருந்தது .ஆனால் அதே உலகம் ராமேஸ்வரத்தைப் பார்த்து அழுததென்றால்,அதே மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் மறைவிற்குத் தான்.ஆதலால் நீ எங்கே நிற்கிறாய் என்பதல்ல முக்கியம்,எதை நோக்கி நிற்கிறாய் என்பதே முக்கியம். போராடத் துணிந்தவனுக்கே இவ்வுலகம் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்,போராடத் தயங்கியவர்களை சமாதிகள் என்று இவ்வுலகம் தீர்மானித்து விடும்.ஆதலால் போராடு,போராடு .வெல்லும்வரைப் போராடு.

     

No comments:

Post a Comment