ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி விட்டதால்,இராமநாதபுரம் "மதார்ஷா" ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.அந்த கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு ஆசிப் வெளியேறினான் .தன் மனைவி ஆயிசாவுடன்.ஆசிப்பிற்கு முப்பத்தி மூன்று வயதுதான் .கொஞ்சம் உடம்பு பருத்து வயதைக் கூட்டிக் காட்டும்,பார்க்க அழகாகதான் இருப்பான்.கொஞ்சம் தொந்தியைக் குறைக்க நினைச்சி,நினைச்சே "டையர்ட்"ஆகிப் போனவன்.அவன் மனைவி நல்ல களையாக இருப்பாள்.அவனுக்கு ஏற்ற ஜோடிதான்.இருவரும் வாங்கிய சாமான்களை கம்பு பைக்குள் வைத்துக் கொண்டு,தான் வந்த "விக்டா"வை நோக்கிச் சென்றார்கள் .
அங்கே "விக்டா"பக்கத்திலிருந்த,ஒரு கல் மேலே உட்கார்ந்துக் கொண்டு டிரைவர் காதர்.கோல்ட் ப்ளாக் இழுத்துக்கொண்டு இருந்தான்."புண் பட்ட நெஞ்சைப் புகையை விட்டு ஆத்துடா"னு கூட இருந்த கூட்டாளி சொல்லி,"இழுக்க"ஆரம்பிச்சவன்,இப்போது "இழுத்து,இழுத்து" நெஞ்செல்லாம் புண்ணாக எரியுதென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறான்.ஆனால் சிகரெட்டை விட முடியலை னு சொல்லிக்கொண்டே சிகரெட் பிடிப்பான்.தூரத்தில் ஆசிப் வருவதைப் பார்த்ததும் ,மிச்சமிருந்த சிகரெட்டை,இரண்டு "இழுப்பில்"காலி செய்து விட்டு,காலால் சிகரெட்டை அணைத்து விட்டு ,ஆசிப்பை நோக்கிச் சென்றான்.
வண்டியின், பின்னால்,வாங்கியதை திணித்து விட்டு, மூவரும் ஏறி அமர "விக்டா"கிளம்பியது. காதர் பேச்சுக் கொடுத்தான் .தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிப்பைப் பார்த்து..
"என்ன மச்சான்.!?இவ்வளவு சீக்கிரமா "ஷாப்பிங்"க முடிச்சிட்டீங்க....!!
"ஏன்டா..!?"சீரியசா"க் கேட்கிறியா .!?இல்ல ,நக்கலா கேட்கிறியா..!?நைட் ஒம்பதரைக்கு மேலே ஆயிருச்சி ..!?ஒனக்கு இது சீக்கிரமா ..!? ஒன் அக்காகூட வந்தா,லேட் ஆகாம என்ன செய்யும்..!?
"ஹா..ஹா...!இல்ல மச்சான் !சும்மா தான் கேட்டேன்..."என சிரித்தான்.
நடு பக்கத்து இருக்கையில் ஆயிஷா,சிரித்துக்கொண்டே காதரிடம் கேட்டாள்.
"ஏன்டா காதரு .!ஒனக்கு எப்ப கல்யாணம்..!? மாமா மாவள பேசி இருக்குனு கேள்விப்பட்டேனே..!?
"பார்ப்போம்கா..!! மாமாக்காரரு பொண்ணுத் தர யோசிக்கிறாரு...!காசுக்காரனா நான் இருந்தால்,தருவாக !?என அலுத்துக் கொண்டான்.
ஆசிப் காதரைப் பார்த்துக் கேட்டான். "நீ ஒழுங்கா இருந்தா பொண்ணுத் தருவாங்க ..!!நீ பொறுப்பில்லாம இருந்தா .,யாரும் யோசிக்க தானே செய்வாங்க..!இதுல ஒம் மாமாவ குத்தம் சொல்லுறே...
காதர் பதில் சொல்லாமல் ,வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.அவன் மௌனத்தை புரிந்துக் கொண்ட ஆசிப் தொடர்ந்தான்.
"என்ன சத்தத்தைக் காணோம்..!?நீ மட்டும் என்ன யோக்கியனா !?னு என்னை நெனக்கிறியோ...!?
லேசான சிரிப்புடன் காதர் சொன்னான்..
"இல்லங்க..!அப்படி நெனைக்கல...!!
"அதான் ஒன் சிரிப்பே சொல்லிருச்சே...ஆமானு...நான் ஒரு நேரத்துல "ஆடினேன்".இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு உக்காந்துட்டேன்,அல்லாவோட கிருபையால ,நானும் ஒரு மனுசனா ,பொண்டாட்டி புள்ளயோட சந்தோசமாக இருக்கேன்....!திருந்த பாரு மாப்ள..!!னு ஆசிப் ஆதங்கத்தோட சொல்லி முடித்தான்.
வண்டி இராமநாதபுரத்தைத் தாண்டி, கீழக்கரை வழி ,இ சி ஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது .காதர் ,ஆசிப்பிற்கோ,ஆயிஷாவிற்கோ நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது.ஒரே ஊர்க்காரன்,அந்த வகையில் ,சிறுவயதிலிருந்தே ஆசிப்பை மச்சான் என்றே கூப்பிடுவான்.அந்த உறவு இதுவரைக்கும் நீடிக்கிறது .ஆசிப் வண்டி வாங்கியதும்,இவனுக்கு "டிரைவிங்"தெரியும் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொண்டான்.
சாலையில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது வாகனம்.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பெய்த மழையால்,சாலையோரங்களிலும், கண்மாய்களிலும் தேங்கிருந்த தண்ணீரால் ,காற்றும் குளிர்மையைத் தாங்கி வந்து தழுவிச் சென்றது."பாட்டைப் போடு மாப்ள "னு ஆசிப் சொன்னதும்,காதர் சுவிட்ச் ஐ தட்டி விட்டான்."உன் விரல்கள் வெள்ளரிப் பிஞ்சிகளோ.!?இல்லை,வெடித்தப் பருத்தி பஞ்சுகளோ..!?என "ஈரத் தாமரைப்பூவே.."பாடல் விட்டதிலிருந்து பாடியது.சிறிது நேரம்தான் கடந்திருக்கும்.ஆயிஷா கைப்பேசி அழைத்தது.பதட்டத்துடன் கைப்பேசியை எடுத்தாள்...!!
கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.
"ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக...!!
ஆசிப் மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"எடுத்துப் பேசு! ஏன் லேட்டாச்சினு திட்டுவாக, வாங்கிக்க..."னு சொன்னான்.
ஆசிப்பைச் செல்லமாக முறைத்துக் கொண்டே,அழைப்பை ஏற்றாள்.காதர் பாட்டுச் சத்தத்தைக் குறைந்தான்.
"ஹலோ..."!
"............."!
"இல்ல மாமி,இந்தா வந்துட்டோம்..அரை மணி நேரத்துல வூட்டுக்கு ,வந்துருவோம்.."
"..................."!
"இல்ல,உங்க மகன்தான் லேட் பண்ணிட்டாக..!கூட்டாளிமார்களுக்கு,சட்டை வாங்கனும்னு..."
இதைக்கேட்டதும் பிடரியில் யாரோ,அடிச்சதுப்போல் மனைவியைத் திரும்பிப்பார்த்தான் ஆசிப்.அவள் முகத்தைச் சுருக்கி ,உதட்டைச் சுழித்து கெஞ்சலாகப் பார்த்தாள்.ஆசிப் சிங்கம் அதில் சிதைந்துப் போச்சி,"பாதகத்தி"இப்படிதானே செஞ்சிறா",னு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,ஆயிசா "இந்தா,"அவுகள்ட" கொடுக்குறேன் ,பேசுங்க "னு கைப்பேசியை ஆசிப்பிடம் நீட்டினாள்.வேறு வழியில்லாமல் போனை வாங்கிப் பேசினான்.
"ஹலோ ..."
"............,..........,............,"
"எம்மா !நீம்பாட்ல திட்டாத.,கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..!மகன்காரன் மூத்தவன் என்ன செய்யிறான்..!?
"...........,"
"சரி! தூங்கட்டும், நீ சாப்பிட்டு,மாத்திரய போட்டுட்டுத் தூங்கு,நானும்,ஆயிசாவும் வீட்டுக்கு வந்து,சாப்பிட்டுட்டு சோத்துக்கு தண்ணி ஊத்திறோம்...!
"..............."
"ம்ம்...சரிம்மா வைய்யி"
பேசி முடித்து விட்டு,தன் மனைவியிடம் கைப்பேசியை நீட்டிக் கொண்டே,
"ஏம்ப்லா .!?உங்க மாமியா,மருமக சண்டயில என்னய மாட்டி விட்டே..."எனக் கேட்டான்.
"ஏங்க? மாமி ரொம்பத் திட்டுனாங்களோ...!? என தெரியாத மாதிரிக் கேட்டாள் .
"விக்டா"கீழக்கரை,மாயாகுளத்தை தாண்டி ,ஏர்வாடிக்கு செல்லுவதற்கு ,முன்னால் வரும் பெரிய வளைவு ஒன்றை ,மெதுவான வேகத்தில் வளைந்து வாகனம் செல்லுகையில் ,ஆசிப் ,காதரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
"ரோட்டோரம், யாரோ கெடக்குறாங்கப் பாரு"னு ஆசிப்பும்,காதரும் இறங்கி ,அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.நிலவு வெளிச்சத்தில் ,மயங்கி கிடந்தவனை புரட்டிப் பார்த்தார்கள்.அவன் மைதீன் தான்,ஆசிப்பின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவன் .மைதீனைப் பார்த்ததும்,இருவரும்,ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்தனர் .காதர் ஆசிப்பிடம் கேட்டான் .
"என்ன மச்சான் செய்ய...!?
"மப்புல" மயங்கி கெடக்குறான்டா..இப்படியே விட்டுட்டுப் போனா "ஒன்னுக்கெடக்க ஒன்னு"ஆகிப் போகும்டா.. வண்டியில கொண்டுப் போயி அவன் வீட்ல எறக்கி விட்ருவோம்"
இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து முன் இருக்கையில் மைதீனைத் திணித்தார்கள் .என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாத நிலையில்தான் அவன் இருந்தான்.ஆசிப் ஆயிசாவுடன் அமர்ந்துக் கொண்டான்.வண்டி கிளம்பியது .
சரி....
யார் இந்த மைதீன்....!!?????
மைதீனைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால்,"எல்லா சேட்டைகளையும் குத்தகைக்கு எடுத்தவன்".திருந்த மாட்டேங்குறானே னு வருந்தியப் பெற்றோர்கள்,கல்யாணம் முடித்து வைத்தால்,திருந்துவான் என ,நன்றாக "ஓதி" படித்த ஏழைப் பெண்ணைக் கட்டி வைத்தார்கள்.அவனோ ,செய்த பாவம் போதாது என கட்டியவளையும் ,சித்திரவதைச் செய்தான்.ஊரும் சொல்லிப் பார்த்தது,உறவும் சொல்லிப் பார்த்தது,அவன் மண்டையில்தான் ஏறாமல் போனது.
மூன்றாண்டு காலம் இப்படியே கழிந்தது.மைதின் குணமோ மாறவில்லை.அவனைக் கட்டயவள் ,இஸ்லாம் காட்டிய வழியில் ,கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துதான் வந்தாள்.ஆனால் கணவன் இவன், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறியப் போது,கலங்கித்தான் போனாள்.அவள் மார்க்கம் பெண்களுக்கு வழங்கிய,உரிமைகளையும் தெரிந்தவள்.அவ்வுரிமைகளில் ஒன்று,பெண்கள் ,கணவனை விவகாரத்துச் செய்திடும் உரிமை. இவள் எடுத்த முடிவிற்கு,யாரும் இவளை சமாதானப்படுத்த முயலவில்லை.இவள்பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அறிந்திருந்ததால்.விவாகாரத்து ஆகி அவள் பிரிந்துச் சென்று விட்டாள்.மைதீனோ,எப்போதும்போலவே.அதே நேரத்தில்....
" விக்டா" ஏர்வாடியை வந்தடைந்தது,வலதுப்புறமாக வளைந்துச் சென்றது. பந்து விளையாட்டுத் திடலை ஒட்டிய வீடுதான். மைதீன் வீடு.அவன் வீட்டிற்கு முன்னால்,வண்டி நிற்பதைப் பார்த்து ,அவனது அம்மா வெளியே எட்டிப் பார்த்தாள் .ஆசிப்பும்,காதரும் மைதீனை ,இறக்கியதைப் பார்த்ததும்,பதட்டத்துடன் ஓடி வந்து மைதீனைத் தாங்கி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.ஆசிப்பின் முகத்தை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை அந்த தாய்.இதை ஆசிப் எதிர்ப்பார்த்ததுதான்.
வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.வண்டி ஆசிப் வீட்டை நோக்கி பயணித்தது.இரண்டுத் தெரு தாண்டிப் போனால்,அவன் வீடு வந்து விடும்,சமீபத்தில் போட்ட சிமெண்ட் சாலையில் ,மெதுவாக ஊர்ந்துச் சென்றது.மைதீன் இவ்வாகனத்தில் ஏறிடும் வரை ஒரு அமைதி நிலவி இருந்தது.இப்போது வெறுமைக் குடிக் கொண்டிருந்தது .
மைதீன் வாழ்க்கையில் கிடைத்த ஏராளமான அருட்கொடைகளை அறியாதவனாகத் தொலைத்தவன்.அதிலொன்று அவன் கட்டியிருந்த மனைவியும் ஒன்று.அவன் தொலைத்த அந்த வைரம் ,இன்னொருவன் வாழ்க்கை மகுடத்தில் சேர்ந்து அழகு சேர்த்திருந்தது.மைதீன் தொலைத்த வைரத்தை ஏற்றுக் கொண்டவன்தான் ஆசிப்.அவன் தொலைத்த வைரம் தான் விக்டாவில் வந்த ஆயிஷா..!!
(முற்றும்)
முடிவு எதிர்பார்க்காதது.....
ReplyDeleteநல்ல சிறுகதை. பாராட்டுகள்.