Wednesday, 30 September 2015

சண்டியர்.!! (சிறுகதை ) (1)       இரவு பத்தரை மணிப்போல்,சலீமின்
கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை எடுத்து காதுக்குள் வைத்தான் சலீம்.

"ஹலோ..."

எதிர் முனையில் அமீர்....

"என்னண்ணே...!அதுக்குள்ளத் தூங்கிட்டியா ...!? பக்கத்து ஊர்ல ஒரு வம்பாயிருச்சி..கொஞ்சம் வா ,போயிட்டு வந்துருவோம்....

"டேய்...இன்னேரமா....!? என சலீம் கேட்டதும்.

"வேணும்னா ,காலையில சாப்பிட்டுட்டு போவோமா..!?எனக் எரிச்சலுடன் கேட்டான் அமீர்.

"ஷ்...ஷ்ஷ்.....சரி,ரோட்ல நில்லு வாரேன்..."என சொன்னவன்,சலிப்புடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வெளியில் நின்ற பல்சரை எழுப்ப ,சாவியை விட்டுத் திருகினான்,நான்கு தெருவைத் தாண்டிச் சென்றதும்,மெயின் ரோடு வந்தது.அங்கு ஐந்து,ஆறு வாலிபர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.இவன் பல்சரைப் பார்த்ததும்,உட்கார்ந்து இருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.உடனே எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து,"ஷேர் ஆட்டோவில்"செல்வதற்கு.பல்சரை விட்டு இறங்கியவன் கேட்டான்.

"என்னடா பிரச்சனையாம்....!?

கூட்டத்திலிருந்த அமீர் சொன்னான்,

"என்னனு சரியாத் தெரியல...."தண்ணி"யப் போட்டுட்டு பிரச்சனைப் பண்ணிருக்கான் ,மீராசா..
அவனைப் புடிச்சி வச்சிருக்கானுங்களாம்...."

"அதுக்கு நாமப் போயி பிரச்சனைப் பெருசாப் போன,நம்மள திட்டித் தீர்ந்துவாங்க..நம்ம ஊர்ல ..பெரிய ஆளு யாரையாவதுக் கூட்டிட்டுப் போவோமே...."

சலீம் சொன்னதற்கு கூட்டத்திலிருந்த இன்னொருவன் சொன்னான்..

"டேய்...பெரிய ஆளைக் கூட்டிப் போன ஊர் ஃபுல்லா தெரிஞ்சிரும்டா..நாம போயி "கமுக்கமா" பேசி,மீராசாவை கூட்டி வந்துருவோம்..."

"நீ சொல்றது சரிதான்..நாம மட்டும் போயி ,"அடிச்சிக்கிட்டா" ,அதுக்கும் நம்ம "தலய " உருட்டுவாங்களே...."

பேசிக்கிட்டு இருக்கும்போதே அமீர் போன் அடித்தது.போனில் எடுத்துப் பேசுவதற்கு முன்னால் சொன்னான்.

"கொஞ்சம் இருங்கப்பா .."அங்கே" இருந்துதான் ,போன் பண்ணுறானுங்க.."எனச் சொல்லிக் கொண்டே கைப்பேசி அழைப்பை ஏற்றான்.எதிர்முனையில் இருந்தவன் கத்திப் பேசியது ,அங்கே நின்ற எல்லோருக்குமே கேட்டது .

"ஏய்...என்னப்பா ..வேகமா வந்து,"அவனைக்" கூட்டிட்டுப் போங்க...."னு பதற்றத்துடன் சொல்லி விட்டு,போனை அணைத்து விட்டான்.

"சரி சரி ! வா கெளம்புவோம்..! என்று நின்ற அனைவரும்,ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர்.கொஞ்ச நேர பயணம்தான்,அவ்வூருக்கு வெளிப்புறத்தில் கடற்கரை செல்லும் வழியில் வளைந்து ஆட்டோ சென்றது.கொஞ்சத் தூரத்தில் "சார்ஜ் லைட்"வெளிச்சம் ஆட்டோவின் மேல் விழுந்தது. .அப்போது ஆட்டோவில் வந்தவர்கள்.வண்டியை செம்மண் சாலையில் நிறுத்தி விட்டு,இறங்கி நடந்தார்.லைட் வெளிச்சம் வந்த திசையை நோக்கி.அப்போது அமீர் சலீமிடம் கேட்டான்.

"அண்ணே..அவனுங்க எத்தனப் பேரு இருக்கானுகனு தெரியல..நாம அஞ்சாறுப் பேருதான் இருக்கோம்...என்ன செய்ய...!?"

அதற்கு சலீம் சொன்னான்....

"இல்ல !கொஞ்சப் பேருதான் இருப்பானுங்க...எல்லாப் பயலுவளும் தூங்கிருப்பானுவடா...."

இப்படியாக பேசிக்கொண்டே நடந்து,அவ்விடத்தை நெருங்கினார்கள்.பனைக் காட்டுக்குள்
தூரத்திலிருந்து பார்க்கையில் ,மூன்று அல்லது நான்கு பேர்கள் இருப்பதாகத்
தெரிந்தது.அருகில் வந்ததும் தான் சலீமிற்கு "பகீர்"என்று ஆனது.மீராசாவை பிடித்து வைத்திருப்பது ,ஐம்பது பேருக்கு மேலே இருந்தார்கள் .


             அங்கங்கே கொஞ்சம் ,கொஞ்சம் கூட்டமாக களைந்து நின்றுகொண்டிருந்தார்கள். சலீமையும்,அமீரையும் பார்த்ததும் ,அக்கூட்டத்தில் சிலர் கொஞ்சம் மரியாதையாகப் பேசினர்.

     "அண்ணே! மீராசா எப்ப பார்த்தாலும் ,எங்க பசங்கள கண்டபடிப் பேசுறான்.இவனை நாங்க அடிச்சா ,ஊர் சண்டைய இழுத்து விடுறானுங்க.."என ஆதங்கத்தோட சொன்னான் ஒருத்தன்.

    "சரி....!"இப்ப அவனை எங்கே....!?என சலீம் கேட்டான்.

"வாங்க"என முன்னாடிச் சென்றவனை பின் தொடர்ந்தார்கள்.கொஞ்சத் தூரத்தில் மீராசா நின்றான்.சுற்றி நான்கு பேர் நின்றார்கள்.நல்ல அடி விழுந்திருக்கும் போல, மீராசாவிற்கு.முகத்தில் இடம் விட்டு,இடம் "சதைப் போட்டு"இருந்தது.மீராசாவிடம் அமீர் கேட்டான்.

"என்னடா நடந்துச்சி....!?ஏன் பிரச்சனையாச்சி...!? டேய் வாயத் தொற ...!?என அமீர் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லாத மீராசாவை,சலீம் அடிக்க ஆரம்பித்தான் ,திட்டிக் கொண்டே.அப்போதும் மீராசா ஒன்றும் சொல்வதாக இல்லை.சலீம் அடித்ததைப் பார்த்து,பிடித்து வைத்திருந்தவர்கள்.கொஞ்சம் விரைப்பாக இருந்ததைக் குறைத்தார்கள்.சரி காலையில் பேசிக் கொள்வோம் என கிளம்புகையில்.பிடித்து வைத்தவர்களில் ஒருத்தன் சொன்னான்.

"இனிமே ,ஒழுங்கா அவனை இருக்கச் சொல்லுங்க..இல்லனா ,அடிபட்டுதான் சாவான்...."

"டேய் !"பொத்துங்கடா " என்ன ஒன் ஊரு னு சவுண்டு குடுக்குறீயோ..!?அவன் தப்பு பண்ணுனா ,எங்கள்ட சொல்லு,அத விட்டுட்டு ,என்ன .....க்கு அடிச்சீங்க..."சலீமுடன் வந்தவன் வார்த்தையை வீச,ஆரம்பித்தது வாக்கு வாதம்.அப்புறம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாறி மாறி அடி விழுந்தது. இரவு நேரம் என்பதால்,சண்டைச் சத்தம் ஊரை எழுப்பி,இந்த இடத்துக்கு வர வைத்து விட்டது.பெரியவர்கள் வந்து ,சண்டையை ஒடுக்கினார்கள்.

"எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்"னு சலீமுடன் மீராசாவை அனுப்பி வைத்தார்கள்.சலீமிற்கும்,கூட வந்தவர்களுக்கும் சட்டைக் கிழிந்து இருந்தது."சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு"னு வடிவேலு வசனம் பேச தான் ,அந்த இடத்தில் யாரும் தயாராக இல்லை.

       மீராசாவுடன் ஆட்டோ கிளம்பியது . அப்போதுதான் மீராசா வாயைத் திறந்தான்.நடந்ததைச் சொன்னான்.

"மூனு மாசத்துக்கு முன்னால, நரிப்பையூர்ல ,வாலிபால் மேட்ச்ல நம்ம ஊர் டீம் தோத்ததுக்கு,"அவனுங்க"நக்கல் பண்ணுறானுங்கள்ள,அதுக்கு "வாங்கி கட்டினானு"ங்கள்ள,அத மனசுல வச்சிகிட்டு இருந்துருக்கானுங்க...அது தெரியாம நான் அவனுங்க "சரக்கடிக்க "கூப்பிட்டதும்,போயிட்டேம்பா...போன எடத்துல ,என்னய அடிச்சிட்டு,நான்
தப்பா பேசினேன்னு சொல்லிட்டானுங்க... "............." என சொல்லி முடிச்சான் மீராசா.

அதற்கு சலீம் கடுப்பாகி மீராசா முகத்தில் அறைந்து விட்டு கேட்டான்.

".........."அங்கேயே சொல்ல வேண்டியதுதானே ..!?இங்க வந்து சொல்லுறே..."

"எண்ணே !சும்மா ,சும்மா கை நீட்ற வேலை வச்சுக்காதே..அங்கே சொன்னால்,பிரச்சனை பெருசாகும் னு சொல்லல" என்றான் மீராசா.

அங்கே அடிபட்டதுக்கும்,மீராசா நடந்ததை சொன்னதுக்கும்,அடிபட்ட இடத்தில் மிளகாய்ப் பொடி தடவியது போல்,இருந்தது அத்தனைப்பேருக்கும்.

"விடியட்டும் அப்போ இருக்கு அவனுங்களுக்கு...." என ஆத்திரமானார்கள்.ஆட்டோ ஊருக்கு வந்து விட்டது. அவன் ,அவன் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.சலீம் மட்டும் ரோட்டில் இறங்கி ,தன் பல்சரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றான்.

பொழுது விடிய போகிறது.....


           நேற்று இரவு நடந்த சம்பவம்.விடிவதற்குள் ஊரெல்லாம் பரவி விட்டது.காலை ஏழரை மணிப்போல மீராசாவை அடித்ததில் ஒருத்தன், ஆட்டோ சவாரி வர மீராசா கூட்டாளிகள் அவனை அடித்து விட்டார்கள்.சில பெரியவர்கள் சண்டையை ஒடுக்கி ,அப்பையனை அனுப்பி விட்டார்.இங்கிருந்து ,தன் தம்பியை பள்ளிக்கூடத்திற்கு விட போன ஒருவனை அவர்கள் அடித்துவிட்டார்கள்.இப்படி மாறி,மாறி அடி,அடி,அடி.

          ஊரில் உள்ள பெண்கள் ,"பேதியில போவானுவோ"இப்படி அடிச்சிக்கிட்டு சாவுரானுங்களே"னு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.இரண்டு ஊரிலும் பெரியவர்கள்,அடக்கினார்கள் சண்டைப் போடுபவர்களை,கேட்பதாக இல்லை .அதோடு "அடிபட்டவர்கள்",காவல் நிலையத்தில்
மாறி,மாறி புகார் அளித்தார்கள் .இரண்டு ஊரிலும் உள்ள பெரியவர்களை ,காவல் நிலையத்திற்கு அழைத்து, ஒன்றாக உட்கார வைத்துப் பேசினார்.இன்ஸ்பெக்டர் முருகன்.

"இந்தா பாருங்க,ரெண்டு பக்கமும் ,பெட்டிசன் கொடுத்துருக்காங்க,நீங்க ரெண்டு ஊருமே,சம்பந்தம் கலக்கி இருக்கீங்க ,தாயா,புள்ளயா இருக்குறீங்க,அப்படி இருக்கையில "சல்லி பயலுவ"இவனுங்கள ,ஒடுக்கி வைங்க.ரெண்டு நாள் டைம் அதுக்குள்ள ,நீங்க சமாதானமா போயிட்டா நல்லது,அப்படி இல்லனா,நாங்க எஃப் ஐ ஆர் போட்டு ,"செய்ய" வேண்டியதை செஞ்சிக்கிறோம்"என மிரட்டலாக சொல்லி அனுப்பினார் இன்ஸ்பெக்டர் .

      இரு ஊர் பெரியவர்கள் சேர்ந்து சம்பந்தபட்டவர்களை மட்டும் ,அழைத்துப் பேசினார்கள் .அப்போதும் சண்டையிட்டவர்கள்,முறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.அப்போது பழுத்த வயதான சம்சு அப்பா எழுந்துப் பேசினார்.

     "டேய் மாப்ளைங்களா..!!ஏண்டா இப்படி அடம்புடிக்கிறீங்க.,ஒங்க அக்காமார்கள,தங்கச்சிமார்கள அங்கேயும்,இங்கேயும் கட்டிக் கொடுத்து இருக்கீங்க, உங்களுக்கு நேரம் போகலைனா,அடிச்சிக்கிறீங்க.அப்புறம் பந்து வெளயாட்டுல ஒண்ணா சேர்ந்துக்கிறீங்க,இப்படிதானே நீங்களுவ பண்ணுறது.!?சரி இளந்தாரி பயலுவ "அப்படி ,இப்படி"இருப்பானுவ னு பெரிய மனுசனுங்க நாங்களும் பொறுமையா போறோம்.இல்லயினா ரெண்டு ஊரு "படுவா பயலுவ"ளயும்,உரிச்சி தொங்கப் போட்ருவோம்.,என்ன சொல்லுறீக.!?அப்பா நான் நல்லதுதான் சொல்லுறேன்.இல்லயினா சொல்லுங்க,போலிஸ் கேஸ் னு நீங்கதான் அலையப்போறீங்க..."என பேசி முடித்தார்.

              அதன் பிறகு பெரும் அமைதி ஏற்பட்டது.யாரும் எதிர்த்துப் பேசுவதாக இல்லை.இதுதான் சந்தர்ப்பம் என்று ,பெரியவர்கள் முடிவை சொன்னார்கள்.அடிபட்டவர்களின் மருத்துவச் செலவிற்கு,அடித்தவர்கள் பணம் கொடுத்து விட வேண்டும்,காவல் நிலையத்தில் கொடுத்த மனுக்களை திரும்ப பெற வேண்டும்.அடிக்கடி சண்டைக்கு காரணமான இரண்டு ஊர் இளைஞர்களுக்கும் அபராதம் போட்டார்கள்.அப்புறம் சண்டைப் போட்டவர்களை கைக்குலுக்கி கொள்ளச் சொன்னார்கள்.சுமூகமாக முடிந்தது இரு ஊரு பிரச்சனையும்,ஆனாலும் காமம் தீர்ந்த பின்னும் மிச்சமிருக்கும் காதலைப் போல்.முடிந்து விட்ட சண்டையிலும் ,இன்னும் ஒரு சண்டை மிச்சம் இருந்தது.

ஆமாம்.அந்த சம்பவத்தின்போது ஊரில் இல்லாமல்,ஒரு வாரம் சுற்றுலா சென்றிருந்த அஜீஸ் கோபத்தில் வந்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு என்ன கோபம் என்றால்,அவன் சாச்சி(சின்னம்மா) மகன் மீராசாவை,சலீம் எப்படி அடிக்கலாம் என்கிற கோபம்.

அஜீஸ் கோபக்காரன் என கூட்டாளிக்குள் ஒரு பேச்சு இருந்தது .அப்படியென்றால் சலீம் மட்டும் சாந்த சொரூபியா..!?

     (தொடரும்....)

      

1 comment: