Sunday 23 April 2017

நிஸாவின் கையெழுத்து 3 (1800 வது பதிவு)



      பள்ளிக்கூடம் நாலே கால் மணிக்கு விடுவாங்க.சேக்கோட சைக்கிள்ல தான்,நானும் அவனும் போவோம்.நானும் அவனும்,நல்லா ஒடம்பு போட்டுருப்போம்,எங்கள சொமக்க முடியாம,அந்த சைக்கிளு ,முக்கி மொணங்கும்.ரோடு கொஞ்சம் நல்லாவும்,ரொம்ப மோசமாவும் இருக்கும்.மாரியூர்ல இருந்து அண்ணா நகர் வரை ,பனைமரங்களாவும்.அண்ணா நகர்ல இருந்து ,ஒப்பிலான் சித்திக் அண்ண தோப்பு வரை ஒட மரமாக இருக்கும்.காலை சுடு வெயிலும்,சாயங்கால மஞ்ச வெயிலும்,நாங்க பயணிக்கைல கூடவே கத சொல்லி வரும் .எங்களோட இந்த பயணத்துல,ராஜ்கிரண் சேந்துக்குவாப்ல.யார்ந்த ராஜ்கிரண்னா.!?சாயல்குடியில இருந்து ஐஸ் விக்க வாரவரு.அவரோட பேரு எங்களுக்கு தெரியாது.அவர பாக்கயில,"ராசாவின் மனசில" ராஜ்கிரண் மாதிரி ,மொரடா இருப்பாப்ல.அதனால நாங்களா வச்ச பேரு அது.

    சில நேரங்கள்ல ,அவரோட ஐஸ் பொட்டி மேல என்னைய ஒக்கார வச்சி சைக்கிள் மிதிப்பாப்ல.என்னமோ யான மேல வார மாதிரி இருக்கும்.இதுல சேக்கு அவர எதாவது சொல்லி உசுப்பேத்துனா,ரெண்டு கைய விட்டு பந்தா காட்டுவாப்ல,எனக்கோ பயமா இருக்கும்.நான் இருக்குற "வைட்"ல சைக்கிளோட,முன் ரோதை தூக்குச்சோ,மூஞ்சு மொகற எல்லாம் பிஞ்சிரும்.இப்படியா கொஞ்ச காலம் போயிக்கிட்டு இருக்கைல,நானும் சேக்கும் வந்த சைக்கிள் ,மாடுமேல பிரேக்கு புடிக்காம மோதி,முன் ரோதை வளஞ்சி போச்சி.அதுக்கு மேல அந்த சைக்கிள பாவிக்க முடியல.அதோட சேக்கு படிப்ப விட்டுட்டான்.இன்னும் கொஞ்ச நாள்ல ஒமரும் நின்னுட்டான்,பள்ளிக்கூடத்த விட்டு...

(தொடரும்..)


No comments:

Post a Comment