Friday, 25 September 2015

கவிதையே..!! (91-95)


உன்னால் ஏற்படும் 
சுகத்தையும்!

உன்னால் ஏற்படும்
ரணத்தையும்!

என்னால் மட்டுமே 
உணர முடியும்!

"கவிதையே"!
----------------------
கவிதையே..!! (92)
----------/---------
உனது நினைவெனும் சமுத்திரத்தில்
மிதந்திடும் காகித கப்பல் நான்!
----------------------------------
கவிதையே..!! (93)
------------------
நீ எனக்கு
குளிரும் கண்ணீர்த்துளி!

சுடும் பனித்துளி!
---------------------------
கவிதையே..!! (94
--------------------
என் கைப்பேசியும் 
கவிதைப் பேசுவது!

உன்னுடன் பேசுகையில்தான்
"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!! (95)
---------------------
புகைப்படத்தினில் 
நான் அழகாய்த் தெரிவதெல்லாம்!

உன் நினைவினில் திளைப்பதால்தான்!
----------------------------------------


Sunday, 20 September 2015

முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)


      இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.

        அதேவேளையில் நாம் ஒன்றினை நினைவு கொள்ள வேண்டும்.சந்தேகப்பட்ட அந்த ஆசிரியருக்கும்,அஹமதுவிற்கும் ,ஏதேனும் முன் பின் பகைகள் இருந்தனவா ??இல்லையே..! பிறகு ஏன் அவ்வாசிரியருக்கு அவ்வாறான எண்ணம் வர வேண்டும்,அவ்வெண்ணத்தை விதைத்தது எது.!? காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே...?அந்தச் சிறுவன் மீதும் சந்தேகப் பார்வை விழச் செய்தது.எந்தவொரு இஸ்லாமிய அடையாளமான ,தாடியோ ,தொப்பியோ இல்லாத இந்தச் சிறுவனுக்கே இந்தக் கதியென்றால்,இஸ்லாமிய அடையாளங்களோடு வாழுபவர்கள்,எதிர்கொள்ளும் சங்கடங்கள் ,சந்தேகப்பார்வைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை,பொய்ப்பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்,பரபரப்புச் செய்தி என வெளியிட்டு வயிறு வளர்ப்பவர்களும் சிந்தித்திட வேண்டும்.திருந்திட வேண்டும்.

       அப்படியென்றால் இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் இல்லையா!? என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த "கெட்டவை"களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை."அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல" குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா !?இல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளா!? எனவும்,தனிப்பட்ட  சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா !? என செய்தி வெளியிடுபவர்கள் சிந்தித்து செய்திகளை வெளியிடுங்கள்.அப்பாவிகளை குற்றவாளிகளாக்க உங்களது பேனா மையை பயன்படுத்தாதீர்கள் .செய்திகளை வெளியிடுவதற்கு முன் உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால் ,அதனையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் .

     

Thursday, 17 September 2015

கவிதையே..!!(86-90)

நீ திரும்பிப் பார்க்காத
என் முகத்தை!

இனி
புகைப்படத்திற்குக் கூட 
திரும்பிக் காட்டுவதாக இல்லை!
----------------------------------
கவிதையே..!!(87)
-------------------
உன்னைக் கரம் பிடித்தது
என் வாழ்வினை அர்த்தமாக்கிடத்தான்!

ஆனால் நீயோ
அற்புதமாக்கி விட்டாய்!
----------------------------
கவிதையே..!!(88)
------------------
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தப் பிறகு தான்!

என்னையும் கொஞ்சம்
நேசிக்க ஆரம்பித்தேன்!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!! (89)
------------------
உன்னை எழுதிவிட்டு 
அழிக்கிறேன்!

பிறகு
அழித்ததையேத் திரும்ப
எழுதுகிறேன் !

ஆச்சரியக்குறி
கேள்விக்குறியிட்டு 
உன்னை அழகும்படுத்துகிறேன்!

சிறிது நேரத்தில் 
அக்குறிகளை அழித்து தொடர்ப்புள்ளி இடுகிறேன்!

இப்படியாக 
உன்னைக் கொடுமைப்படுத்திடும்
என்னைப் பார்த்து!

எப்படிதான் சிரிக்கிறாயோ !?
ஓர் குழந்தையைப்போல !
----------------------------
கவிதையே..!! (90)
-------------------
நீ எனக்கு
விட்ட கதையா !?
தொட்ட கதையா !? தெரியவில்லை !

ஆனாலும் 
என் வாழ்வின் 
விடுகதை நீ !
------------------------

Wednesday, 16 September 2015

ஆயிஷா..! (சிறுகதை)


       ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி விட்டதால்,இராமநாதபுரம் "மதார்ஷா" ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.அந்த கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு ஆசிப் வெளியேறினான் .தன் மனைவி ஆயிசாவுடன்.ஆசிப்பிற்கு முப்பத்தி மூன்று வயதுதான் .கொஞ்சம் உடம்பு பருத்து வயதைக் கூட்டிக் காட்டும்,பார்க்க அழகாகதான் இருப்பான்.கொஞ்சம் தொந்தியைக் குறைக்க நினைச்சி,நினைச்சே "டையர்ட்"ஆகிப் போனவன்.அவன் மனைவி நல்ல களையாக இருப்பாள்.அவனுக்கு ஏற்ற ஜோடிதான்.இருவரும் வாங்கிய சாமான்களை கம்பு பைக்குள் வைத்துக் கொண்டு,தான் வந்த "விக்டா"வை நோக்கிச் சென்றார்கள் .

          அங்கே "விக்டா"பக்கத்திலிருந்த,ஒரு கல் மேலே உட்கார்ந்துக் கொண்டு டிரைவர் காதர்.கோல்ட் ப்ளாக் இழுத்துக்கொண்டு இருந்தான்."புண் பட்ட நெஞ்சைப் புகையை விட்டு ஆத்துடா"னு கூட இருந்த கூட்டாளி சொல்லி,"இழுக்க"ஆரம்பிச்சவன்,இப்போது "இழுத்து,இழுத்து" நெஞ்செல்லாம் புண்ணாக எரியுதென்று  மருந்து வாங்கி சாப்பிடுகிறான்.ஆனால் சிகரெட்டை விட முடியலை னு சொல்லிக்கொண்டே சிகரெட் பிடிப்பான்.தூரத்தில் ஆசிப் வருவதைப் பார்த்ததும் ,மிச்சமிருந்த சிகரெட்டை,இரண்டு "இழுப்பில்"காலி செய்து விட்டு,காலால் சிகரெட்டை அணைத்து விட்டு ,ஆசிப்பை நோக்கிச் சென்றான்.

        வண்டியின், பின்னால்,வாங்கியதை திணித்து விட்டு, மூவரும் ஏறி அமர "விக்டா"கிளம்பியது. காதர் பேச்சுக் கொடுத்தான் .தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிப்பைப் பார்த்து..

   "என்ன மச்சான்.!?இவ்வளவு சீக்கிரமா "ஷாப்பிங்"க முடிச்சிட்டீங்க....!!

   "ஏன்டா..!?"சீரியசா"க் கேட்கிறியா .!?இல்ல ,நக்கலா கேட்கிறியா..!?நைட் ஒம்பதரைக்கு மேலே ஆயிருச்சி ..!?ஒனக்கு இது சீக்கிரமா ..!? ஒன் அக்காகூட வந்தா,லேட் ஆகாம என்ன செய்யும்..!?

       "ஹா..ஹா...!இல்ல மச்சான் !சும்மா தான் கேட்டேன்..."என சிரித்தான்.

 நடு பக்கத்து இருக்கையில் ஆயிஷா,சிரித்துக்கொண்டே காதரிடம் கேட்டாள்.  

      "ஏன்டா காதரு .!ஒனக்கு எப்ப கல்யாணம்..!? மாமா மாவள பேசி இருக்குனு கேள்விப்பட்டேனே..!?

    "பார்ப்போம்கா..!! மாமாக்காரரு பொண்ணுத் தர யோசிக்கிறாரு...!காசுக்காரனா நான் இருந்தால்,தருவாக !?என அலுத்துக் கொண்டான்.

      ஆசிப் காதரைப் பார்த்துக் கேட்டான். "நீ ஒழுங்கா இருந்தா பொண்ணுத் தருவாங்க ..!!நீ பொறுப்பில்லாம இருந்தா .,யாரும் யோசிக்க தானே செய்வாங்க..!இதுல ஒம் மாமாவ குத்தம் சொல்லுறே...

காதர் பதில் சொல்லாமல் ,வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.அவன் மௌனத்தை புரிந்துக் கொண்ட ஆசிப் தொடர்ந்தான்.

       "என்ன சத்தத்தைக் காணோம்..!?நீ மட்டும் என்ன யோக்கியனா !?னு என்னை நெனக்கிறியோ...!?

லேசான சிரிப்புடன் காதர் சொன்னான்..

     "இல்லங்க..!அப்படி நெனைக்கல...!!

   "அதான் ஒன் சிரிப்பே சொல்லிருச்சே...ஆமானு...நான் ஒரு நேரத்துல "ஆடினேன்".இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு உக்காந்துட்டேன்,அல்லாவோட கிருபையால ,நானும் ஒரு மனுசனா ,பொண்டாட்டி புள்ளயோட சந்தோசமாக இருக்கேன்....!திருந்த பாரு மாப்ள..!!னு ஆசிப் ஆதங்கத்தோட சொல்லி முடித்தான்.

வண்டி இராமநாதபுரத்தைத் தாண்டி, கீழக்கரை வழி ,இ சி ஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது .காதர் ,ஆசிப்பிற்கோ,ஆயிஷாவிற்கோ நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது.ஒரே ஊர்க்காரன்,அந்த வகையில் ,சிறுவயதிலிருந்தே ஆசிப்பை மச்சான் என்றே கூப்பிடுவான்.அந்த உறவு இதுவரைக்கும் நீடிக்கிறது .ஆசிப் வண்டி வாங்கியதும்,இவனுக்கு "டிரைவிங்"தெரியும் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொண்டான்.

சாலையில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது வாகனம்.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பெய்த மழையால்,சாலையோரங்களிலும், கண்மாய்களிலும் தேங்கிருந்த தண்ணீரால் ,காற்றும் குளிர்மையைத் தாங்கி வந்து தழுவிச் சென்றது."பாட்டைப் போடு மாப்ள "னு ஆசிப் சொன்னதும்,காதர் சுவிட்ச் ஐ தட்டி விட்டான்."உன் விரல்கள் வெள்ளரிப் பிஞ்சிகளோ.!?இல்லை,வெடித்தப் பருத்தி பஞ்சுகளோ..!?என "ஈரத் தாமரைப்பூவே.."பாடல் விட்டதிலிருந்து பாடியது.சிறிது நேரம்தான் கடந்திருக்கும்.ஆயிஷா கைப்பேசி அழைத்தது.பதட்டத்துடன் கைப்பேசியை எடுத்தாள்...!!


     கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.

     "ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக...!!

ஆசிப் மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.

   "எடுத்துப் பேசு! ஏன் லேட்டாச்சினு திட்டுவாக, வாங்கிக்க..."னு சொன்னான்.

ஆசிப்பைச் செல்லமாக முறைத்துக் கொண்டே,அழைப்பை ஏற்றாள்.காதர் பாட்டுச் சத்தத்தைக் குறைந்தான்.

"ஹலோ..."!

"............."!

"இல்ல மாமி,இந்தா வந்துட்டோம்..அரை மணி நேரத்துல வூட்டுக்கு ,வந்துருவோம்.."

"..................."!

"இல்ல,உங்க மகன்தான் லேட் பண்ணிட்டாக..!கூட்டாளிமார்களுக்கு,சட்டை வாங்கனும்னு..."

இதைக்கேட்டதும் பிடரியில் யாரோ,அடிச்சதுப்போல் மனைவியைத் திரும்பிப்பார்த்தான் ஆசிப்.அவள் முகத்தைச் சுருக்கி ,உதட்டைச் சுழித்து கெஞ்சலாகப் பார்த்தாள்.ஆசிப் சிங்கம் அதில் சிதைந்துப் போச்சி,"பாதகத்தி"இப்படிதானே செஞ்சிறா",னு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,ஆயிசா "இந்தா,"அவுகள்ட" கொடுக்குறேன் ,பேசுங்க "னு கைப்பேசியை ஆசிப்பிடம் நீட்டினாள்.வேறு வழியில்லாமல் போனை வாங்கிப் பேசினான்.

"ஹலோ ..."

"............,..........,............,"

"எம்மா !நீம்பாட்ல திட்டாத.,கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..!மகன்காரன் மூத்தவன் என்ன செய்யிறான்..!?

"...........,"

"சரி! தூங்கட்டும், நீ சாப்பிட்டு,மாத்திரய போட்டுட்டுத் தூங்கு,நானும்,ஆயிசாவும் வீட்டுக்கு வந்து,சாப்பிட்டுட்டு சோத்துக்கு தண்ணி ஊத்திறோம்...!

"..............."

"ம்ம்...சரிம்மா வைய்யி"

பேசி முடித்து விட்டு,தன் மனைவியிடம் கைப்பேசியை நீட்டிக் கொண்டே,

"ஏம்ப்லா .!?உங்க மாமியா,மருமக சண்டயில என்னய மாட்டி விட்டே..."எனக் கேட்டான்.

"ஏங்க? மாமி ரொம்பத் திட்டுனாங்களோ...!? என தெரியாத மாதிரிக் கேட்டாள் .

"விக்டா"கீழக்கரை,மாயாகுளத்தை தாண்டி ,ஏர்வாடிக்கு செல்லுவதற்கு ,முன்னால் வரும் பெரிய வளைவு ஒன்றை ,மெதுவான வேகத்தில் வளைந்து வாகனம் செல்லுகையில் ,ஆசிப் ,காதரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

   "ரோட்டோரம், யாரோ கெடக்குறாங்கப் பாரு"னு ஆசிப்பும்,காதரும் இறங்கி ,அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.நிலவு வெளிச்சத்தில் ,மயங்கி கிடந்தவனை புரட்டிப் பார்த்தார்கள்.அவன் மைதீன் தான்,ஆசிப்பின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவன் .மைதீனைப் பார்த்ததும்,இருவரும்,ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்தனர் .காதர் ஆசிப்பிடம் கேட்டான் .

"என்ன மச்சான் செய்ய...!?

"மப்புல" மயங்கி கெடக்குறான்டா..இப்படியே விட்டுட்டுப் போனா "ஒன்னுக்கெடக்க ஒன்னு"ஆகிப் போகும்டா.. வண்டியில கொண்டுப் போயி அவன் வீட்ல எறக்கி விட்ருவோம்"

இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து முன் இருக்கையில் மைதீனைத் திணித்தார்கள் .என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாத நிலையில்தான் அவன் இருந்தான்.ஆசிப் ஆயிசாவுடன் அமர்ந்துக் கொண்டான்.வண்டி கிளம்பியது .

சரி....
யார் இந்த மைதீன்....!!?????


மைதீனைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால்,"எல்லா சேட்டைகளையும் குத்தகைக்கு எடுத்தவன்".திருந்த மாட்டேங்குறானே னு வருந்தியப் பெற்றோர்கள்,கல்யாணம் முடித்து வைத்தால்,திருந்துவான் என ,நன்றாக "ஓதி" படித்த ஏழைப் பெண்ணைக் கட்டி வைத்தார்கள்.அவனோ ,செய்த பாவம் போதாது என கட்டியவளையும் ,சித்திரவதைச் செய்தான்.ஊரும் சொல்லிப் பார்த்தது,உறவும் சொல்லிப் பார்த்தது,அவன் மண்டையில்தான் ஏறாமல் போனது.

         மூன்றாண்டு காலம் இப்படியே கழிந்தது.மைதின் குணமோ மாறவில்லை.அவனைக் கட்டயவள் ,இஸ்லாம் காட்டிய வழியில் ,கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துதான் வந்தாள்.ஆனால் கணவன் இவன், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறியப் போது,கலங்கித்தான் போனாள்.அவள் மார்க்கம் பெண்களுக்கு வழங்கிய,உரிமைகளையும் தெரிந்தவள்.அவ்வுரிமைகளில் ஒன்று,பெண்கள் ,கணவனை விவகாரத்துச் செய்திடும் உரிமை. இவள் எடுத்த முடிவிற்கு,யாரும் இவளை சமாதானப்படுத்த முயலவில்லை.இவள்பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அறிந்திருந்ததால்.விவாகாரத்து ஆகி அவள் பிரிந்துச் சென்று விட்டாள்.மைதீனோ,எப்போதும்போலவே.அதே நேரத்தில்....

        " விக்டா" ஏர்வாடியை வந்தடைந்தது,வலதுப்புறமாக வளைந்துச் சென்றது. பந்து விளையாட்டுத் திடலை ஒட்டிய வீடுதான். மைதீன் வீடு.அவன் வீட்டிற்கு முன்னால்,வண்டி நிற்பதைப் பார்த்து ,அவனது அம்மா வெளியே எட்டிப் பார்த்தாள் .ஆசிப்பும்,காதரும் மைதீனை ,இறக்கியதைப் பார்த்ததும்,பதட்டத்துடன் ஓடி வந்து மைதீனைத் தாங்கி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.ஆசிப்பின் முகத்தை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை அந்த தாய்.இதை ஆசிப் எதிர்ப்பார்த்ததுதான்.

          வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.வண்டி ஆசிப் வீட்டை நோக்கி பயணித்தது.இரண்டுத் தெரு தாண்டிப் போனால்,அவன் வீடு வந்து விடும்,சமீபத்தில் போட்ட சிமெண்ட் சாலையில் ,மெதுவாக ஊர்ந்துச் சென்றது.மைதீன் இவ்வாகனத்தில் ஏறிடும் வரை ஒரு அமைதி நிலவி இருந்தது.இப்போது வெறுமைக் குடிக் கொண்டிருந்தது .

          மைதீன் வாழ்க்கையில் கிடைத்த ஏராளமான அருட்கொடைகளை அறியாதவனாகத் தொலைத்தவன்.அதிலொன்று அவன் கட்டியிருந்த மனைவியும் ஒன்று.அவன் தொலைத்த அந்த வைரம் ,இன்னொருவன் வாழ்க்கை மகுடத்தில் சேர்ந்து அழகு சேர்த்திருந்தது.மைதீன் தொலைத்த வைரத்தை ஏற்றுக் கொண்டவன்தான் ஆசிப்.அவன் தொலைத்த வைரம் தான் விக்டாவில் வந்த ஆயிஷா..!!

(முற்றும்)

  

Saturday, 12 September 2015

கவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்!

அதிகாலை இளங்காற்று முகம் தழுவிச்
செல்லுதலைப் போல்!

குளிக்கத் துவங்குகையில்
உச்சந்தலையில் முதல் துளி விழுதலைப் போல்!

காதல் பேச ஆயிரம் வார்த்தைகளிருந்தும் பேசிட முடியாமல் 
பிரியமானவளின் கைதனை இறுகப் பிடிப்பதைப் போல்!

பச்சிளம் குழந்தை முகத்தில் மீசை குத்திடாமல் முத்தம் பதிப்பதுப் போல்!

சீலாக் கருவாட்டு ஆனத்தில் மொச்சைப் பயறின் ருசியைப் போல்!

தொட்டில் குழந்தை தூக்கத்தில் சிரிப்பதனைப் பார்த்ததுப் போல்!

துள்ளிச் செல்லும் நதி நீரில் 
உள்ளங்கால்களை நனைப்பதுப் போல்!

எத்தனை எத்தனையோ
சுகம்தனை அனுபவிக்கிறேன்!

கவிதைகளை 
வாசிக்கையில்
எழுதுகையில்!

கவிதைகள் வரிகளினூடாக
வாழ்ந்துக்கொண்டும்
லயித்துக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் பயணிக்கிறேன்!

"ஒரு மாதிரியாக" என்னைப் பார்க்கும்
இவ்வுலகத்தினை கண்டு கொள்ளாமல் !

      

Thursday, 10 September 2015

கருத்து வேறுபாடு...!!


   இன்றைய சூழலில் ,இயக்கங்களாயினும்,கட்சிகளாயினும்,ஏன் குடும்பங்களாயினும்,கருத்து வேறுபாடுகளென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.கருத்து வேறுபாடுகளென்பது வரமா !?சாபமா!? என்பதைச் சிந்திப்பதை விட்டுட்டு ,எதார்தமானது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

      ஏனென்றால் ஒரே தாய் ,தந்தைக்குப் பிறந்து வளர்ந்தாலும் வெவ்வேறு சிந்தனைக் கொண்டவர்களாகவே நாம் உள்ளோம்.அப்படி இருக்கையில் வெவ்வேறு குடும்பங்களாக ,வெவ்வேறு சமூகச் சூழலாக வாழ்ந்த,வாழுபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் எப்படி இல்லாமல் போகும்.ஒவ்வொருவரின் கைரேகைப் போலவே,ஒவ்வொருவரின் எண்ணங்களும் வெவ்வேறானவைகள்.கீ.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் .இவ்வாறாக "கருத்து வேறுபாடு என்பது வேறு.கருத்து முரண்பாடு "என்பது வேறென்று.ஆம் ,வேறுபாட்டையும் ,முரண்பாட்டையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஊருக்கு நாம் செல்ல வேண்டும்,அதற்கு நாம் பேருந்தில் போக முடிவெடுக்கிறோமென்றால்,கூட வருபவர் ரயிலில் போவோமென்றால் ,இதுதான் கருத்து வேறுபாடு இருவரும்,அவ்வூருக்குப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருவருக்கும் இல்லை,ஆனால் எதில் போகனும் என்பதில் தான் கருத்து வேறுபாடு.அவ்வூருக்கு போகவே கூடாதென்றால் அதுதான் கருத்து முரண்பாடு.

       சரி !கருத்து வேறுபாட்டினை எப்படிக் களையலாம்!?தான் கொண்ட கருத்து தான் சிறந்தது என்று எண்ணும் எண்ணத்தினை மாற்றிட வேண்டும்.எதிரணியின் கருத்தினையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.அக்கருத்தினில் உண்மை இருக்குமானால் ,மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் நம்மிடையே வேண்டும்.ஏனென்றால் சிறுவயதில் நிலா நம்முடன் வருவதாக எண்ணி குதூகலித்த காலமும் உண்டு.பின்னாளில்தான் நாம் உணர்ந்தோம்,நிலாவைப் பார்த்துக் கொண்டேதான் நாம் நடந்தோம் என்பதை.சில காலம் கழித்து நாம் உணரலாம்,மாற்றுக் கருத்துடையவரின் கருத்து சரிதான் என்று.இலையில் தேங்கி இருக்கும் ஓர் துளியினை ஒருவர் 
மழைத்துளி எனலாம் ,மற்றவர் பனித்துளி எனலாம்.மழையா !?பனியா !?என இருவரும் சண்டையிடாமல்,"துளி" என்று இருவரும் கொண்ட ஒத்தக் கருத்தில் ஒன்றிணையலாமே.....!!!

      

Tuesday, 8 September 2015

என் ஆசைகள் ..!!


மயிலிறகாகி கவிதைப் புத்தகத்தினுள்  ஒளிந்திட !

தாய்ப்பாலாகி குழந்தை முகத்தில்  வாசமாகிட!

ரத்தத்துளியாகி தாய் நாட்டிற்காகப் போராடும் போராளியின் உடலில் ஓடிட!

மழைத்துளியாகி மல்லிகை மொட்டினுள் தங்கிட!

தாவணிமுனையாகி பிரியமானவளின் முக்காடாக மாறிட !

பேனாவின் மைத்துளியாகி,புரட்சியாளனின் எழுத்தினில் ஓர் புள்ளியாகிட!

வாழ்வை அர்த்தமாக்கி,மரணத்திடும்போதும் புன்னகைத்திட !