Tuesday 26 October 2021

மழைக்காலம்…2

 


        இனிப்பு பலகாரம் சாப்பிட்டப் பிறகும்,விரல்களில் மிச்சமாய் ஒட்டியிருக்கும் இனிப்பைப்போலவே,மழைக்காலம் இலவச இணைப்பாய் குளிரையும் தந்து விடுகிறது.மதரசாவிற்கு காலையில்கிளம்பும்போது,வீட்டில் சில்லரைகளை வாங்கிச் சென்றுசேமியாக்காரப்பாவிடமும்,மோதினார் ஜப்பார்மாமாவின் மனைவியிடமும்,சேமியா வாங்கி,அதோடு அவித்த சக்கரை வள்ளிக் கிழங்கைதோலுரித்து,சேமியாவில் முக்கி,கொஞ்ச நேரம் ஊற வைத்து,சாப்பிட்டு விட்டு மதரசாவிற்கு செல்வதுண்டு.


            பள்ளிவாசல் முற்றம் மழையில் நனைந்து,குளிர்ந்திருக்கும் செருப்பில்லாத காலோடுநடக்கையில்.உள்ளங்கால் வழியேறி குளிர் உச்சிவரை இதமளிக்கும்.மதரசா விட்டதும் ,ஆடைமாற்றி,துண்டொன்றை எடுத்துச் சென்று கண்மாயில் குளிப்பதும் குதிப்பதுமாய் நேரம் ஓடும்,கண்மாய்க்குஅருகிலிருக்கும்,ஆலமரத்தில் ஏறி பல்டி அடிப்பதெல்லாம் சாகமாய் காணப்பட்ட காலமது.குளித்து குளித்துகண்ணெல்லாம் சிவந்தப்பிறகு கரையேறினால்,ஏதோ ஒரு நண்பன்,ஈர மண்ணை வீசி வம்புக்கு இழுத்த காலம்அது.


         பெரியவர்கள் குளித்து விட்டு செல்லும்வரை,உயரமான கரைமீது உட்கார்ந்து இருந்து விட்டு,அவர்கள்சென்றதும்,கரைமீது தண்ணீர் தெளித்து,வளவளப்பாக்கி,வழுக்கி வழுக்கி வந்து கண்மாயில் வந்து விழுவதும்ஒரு சுகம்.குளிக்கப் போவதற்கு முன்னாலேயே,பழனி அண்ணன் கடையில்,தோசையை வாங்கிசட்னி,சாம்பாரை ஊற்றி பிளாஸ்டிக் பையில் ஊற வைத்து,முன் பசிக்கு சாப்பிட்டு விட்டு,மறு பசி வரும்வரைகுளியல்தான்.கண்மாயோடு உரையாடல்தான்



(ஞாபகங்கள் தொடரும்..)

2 comments: