Saturday 30 October 2021

மழைக்காலம்..4

 



        வண்ணத்துப்பூச்சிகள் சாந்தமானவைகள்.அதில் பல வண்ணங்களில் பல வகைகளில் உண்டு.எனது ஊரில்அதிகம் காணப்படுவது,கருப்பு வண்ணத்தில்,வெள்ளை கோடுகளும்,சில புள்ளிகளுமாய்காட்சியளிப்பவைகள்தான்.இரவில் நட்சத்திரங்கள் சிதறி கிடப்பதுப்போல்,அதன் இறக்கைகளிலும் சிதறிகிடக்கும் புள்ளிகளும்,கோடுகளும் .செடிகளில் உள்ள பூக்களில் தேன் குடித்துக் கொண்டிருக்கும்,சிறகுகளைமெல்லியதாய்,அசைத்துக் கொண்டு.அப்போது   குளிப்பதற்காக பயன்படுத்தப்படும்,துண்டுகளை கொண்டுபொத்தினால் போதும்.மாட்டிக் கொள்ளும்.மெல்லிய இறக்கைகள் படபடத்து விட்டு,அடங்கி விடும்.


    ஊரில் இருக்கும் பறவைகள் காக்கைகளும்,சிட்டுக்குருவிகளும்தான்.ஒடைமரக் காட்டிற்குள்போனால்,பனைமரங்களில் கிளிகளையும்,மைனாக்களையும் ,மயில்களையும் பார்க்கலாம் எப்போதுமே.ஆனால்மழைக்காலத்தில்தான்,சிட்டு,கொண்டைக்கிளாத்தி,காஸ்கிராட்டி என பெயர்களில் அழைக்கப்படும் பறவைகள்வரும்.எங்களூரில் அழைக்கப்படும் இப்பெயர்கள் மற்ற ஊர்களில் வேறுபடலாம்.இதில் காஸ்கிராட்டிஎன்றழைக்கப்படும் பறவை.மிக அழகாக இருக்கும்.மைனாவை விட ,கொஞ்சம் தடிமனாக இருக்கும்.அதன்மேலுடல்,ஊதா வண்ணத்திலும்,வால்பகுதிக்கு கீழுள்ள அடிவயிற்றுப் பகுதி சிகப்பு வண்ணத்திலும்,அதன்கண்ணோரத்தில் மையிட்டதுப்போல்,கோடொன்றும் இருக்கும்.இப்பறவைகளெல்லாம் பருவநிலைமாற்றத்தினால்,எங்களூர் பக்கம் வரும்போல.


       அப்போது வில்லடித்து வேட்டையாட ஆரம்பிப்பார்கள்.பதின்ம வயதினர்.V வடிவினாலான கவட்டையாகப்பார்த்து,கருவ மரத்தை வெட்டி.அதன் தோல் பகுதியை உரித்து,நெருப்பிலிட்டு கொஞ்சம் காயவைப்பார்கள்.கவட்டையின் இரு முனைகளிலும்.சைக்கிள் டியூப்பை கத்தரித்து.இருப்பக்கமும்கட்டி,கல்லையோ,கோலியையோ வைத்து இழுக்க,தடிமனான வார் வைத்து கட்டி விட்டால்போதும்,வேட்டைக்கு கிளம்பிடலாம்.குறவர்கள் வில்லு வாரோடு,வந்து விற்பார்கள்.அதன் வார்கள்.,இன்னும்தடிமனாக இருக்கும்,பிடித்து இழுக்கவே சிரமமாக இருக்கும்.அதையும் சிலர் வாங்கி வில்லடிக்ககிளம்பிடுவார்கள்.


(ஞாபகங்கள் தொடரும்..)

1 comment:

  1. வண்ணாத்துப் பூச்சி நினைவுகள் நன்று. ரசித்தேன்.

    ReplyDelete