Tuesday, 19 October 2021

நட்பில் தொலைதல்.!



காதலில் தொலைந்தவன்

கவிஞன்


புத்தகத்தில் தொலைந்தவன் 

வாசகன்


புரட்சியில் தொலைந்தவன்

போராளி


காமத்தில் தொலைந்தவன்

நோயாளி


கோபத்தில் தொலைந்தவன்

கொலையாளி


அன்பில் தொலைந்தவன்

அதிர்ஷ்டசாலி


ஆணவத்தில் தொலைந்தவன்

நஷ்டவாளி


இரக்கத்தில் தொலைந்தவன்

மகாத்மா


நட்பில் தொலைபவன்

நல்ல ஆத்மா.!


Monday, 18 October 2021

உன்னை விலகுவதில்லை.!



நீ செய்த தர்மம்

நீ விளைத்த கர்மம்


நீ சிந்தும் புன்னகை

நீ கொண்ட நம்பிக்கை


நீ வச்ச பாசம்

நீ போடும் வேசம்


நீ செய்த தியாகம் 

நீ புரிந்த வஞ்சகம்


நீ கற்ற கல்வி

நீ கொண்ட வேள்வி!


நீ வேண்டாமென்றாலும் அது

உன்னை விலகுவதில்லை.!

Sunday, 17 October 2021

பாடலாய்..!

 தூரத்தில் கேட்கும்

பாடலொன்றிலும்

நீயே இருக்கிறாய்..!

தற்சார்பு வாழ்வே தனி.!



பிறக்க இருவர் 

அடக்க நால்வர் 


சிந்தனைக்கு அனுபவம் 

வார்த்தைக்கு எழுத்துக்கள் 


ஓவியத்திற்கு வண்ணம் 

மழைப் பொழிய குளிர் காற்று 


பார்வைக்கு ஒளி

பயணத்திற்கு வழி


ஒன்றிற்கு துணையாக

இன்னொன்று தேவை..


வாழவும் மடியவும்.


தற்சார்பு வாழ்வு தனியல்ல

அது சனி.!




Saturday, 16 October 2021

கரங்களை தாங்கும் புத்தகங்கள்.!



புத்தகம்

ஆழ்கடல் மௌனம்

சிப்பியின் தவம்


புத்தகம்

குமரியின் முந்தாணை

குழந்தையின் குறுநகை


புத்தகம்

பசி நேர ருசி

ருசியான பசி


புத்தகம்

பிறப்பின் தாலாட்டு

இறப்பின் ஒப்பாரி


புத்தகம்

இளமை பருவம்

முதுமையின் அனுபவம்


கரங்களை தாங்கும்

புத்தகங்கள்

வாழ்வை மீட்டும்

ஸ்வரங்கள்.!

Wednesday, 13 October 2021

கொரனோ.!

ஈராயிரத்து இருபதுடன் வந்த

இலவச இணைப்பு


கொரனோ

மருத்துவர்களுக்கு

அது கிருமி

மதவாதிகளுக்கு 

அது இன்னொரு மதம்


கொரனோ

திருமணங்களை

நிறுத்திய

வில்லன்


கொரனோ

விமானத்தின் 

சிறகுகளை கத்தரித்த

கத்தரிக்கோல்


கொரனோ

மனித ஓட்டத்திற்கு

காலம் போட்ட

வேகத்தடை


கொரனோ

விடியப் போகும்

அதிகாலை.!


   

Monday, 11 October 2021

கடைசி புள்ளி..

          புள்ளியாய்

கோலமாய்

கிறுக்களாய்

கதையாய்

கவிதையாய்

காவியமாய்

எழுதிக் கொண்டிருக்கும்

பேனா அறிவதில்லை..

எந்த புள்ளி 

தனது கடைசி புள்ளி என்று...