Tuesday, 24 June 2014

ஓர் அதிகாலை...!!


சுற்றுச்சுவற்றினுள்
ஒட்டு திண்ணை!

அதன்மேல்
ஓர் தலையணை !

அதுதான்
எனது படுக்கை!

எழவா,!?
தொடரவா.!?

முடிவை தராதிருந்தது
மனம்!

பாதி கண்களை ஆக்கிரமித்திருந்தது
தூக்கம்!

மெல்லிய சப்தங்களில்
லயித்திருந்தது உள்ளம்!

பள்ளிவாசல் மினராவிலிருந்து
புறப்படும் 
புறாக்களின் சிறகடிக்கும 
சப்தத்தில்!

எங்கோ 
திருவிழாவில் கட்டப்பட்டிருந்த 
ஒலிப்பெருக்கியில் ஒலித்த
சோகப்பாடலில்!

மின் கம்பத்தில்
காகம் கரைவதில்!

கூட்டைத்திறந்ததும்
கோழிகள் "கெக் கெக்"என
 கத்தியதில்!

சர சரவென 
ஆட்டுக்கெடையின் நடையில் !

அக்கம்பக்கத்தில்
மழலைகள்  எழுந்திடாமல்
அழுததில்!

இத்தனைக்கும் ஊடாக
குமரிகளின் பேச்சு சப்தம் கேட்டது!

என் இடத்தை கடக்கும்வரை
அப்பேச்சுக்கள்
கொஞ்சம் தடைபட்டது!

இடத்தை
கடந்த பிறகு
ஓர் குரல் சொன்னது!

"படுத்து கிடக்கிறான் பாரு
தறுதலை"என!

உடனே சிரிப்பலை
"சல சல"வென!

அதில் ஓர் குரல் கண்டித்தது 
"அது தப்பு" என!

தறுதலை எனும் வார்த்தை 
எனக்கு சினத்தை தந்தது!

"தப்பு"என தடுத்த குரல் 
என்னை சிந்திக்க  வைத்தது!

என்ன செய்ய.!?
வாழ்வில் காயப்படுத்துகிறது
பல கத்தி முனைகள்!

மருந்திடும்
சில மயிலிறகுகளால்தான்
கத்தி முனைகள் மன்னிக்கப்படுகிறது!

 

4 comments:

  1. கண்டித்த குரல் மருந்து தான்...

    ReplyDelete
  2. சிந்திக்கவைத்த குரல் மயிலிறகு தான்..

    ReplyDelete
  3. மயிலிறகு தந்த மருந்து....

    நல்ல கவிதை.

    ReplyDelete
  4. மயிலிறகு நாம் மரந்து போன வார்த்தைகள்

    ReplyDelete