Tuesday, 3 June 2014

காதல் கவிதை..!! {சிறு கதை}


         ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் என்பதால்,அவ்வுணவகத்தில் கொஞ்சம் கூடுதலாக கூட்டம் இருந்தது.அங்கெங்கே திட்டு திட்டாக மனித தலைகள்.அதில் ஓரமாக ஓர் நடுத்தர தம்பதி.கூரைப்போன்ற வடிவமைப்பில் இருந்த அந்த கூடத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள்.எட்டிப்பார்த்தால் தெரிந்திடும் தூரத்தில் கடல். சிறு பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.வயதானவர்கள் சிலர் நடைபயிற்சியில் இருந்தார்கள்.சிலரோ தான் நடப்பதோடு நிற்காமல் நாயையும் இழுத்துச்சென்றார்கள்.

        அந்த நடுத்தர தம்பதி  எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.விளையாடிக்கொண்டிருந்த தன் பிள்ளைகள் மேல் ஓர் பார்வை வைத்திருந்தாள்,தாயானவள்.தன்னெதிரே இருந்த கணவரை ஏறிட்டு பார்த்தவளாக கேள்வி எழுப்பினாள்.

    ''பாக்குற வேலையில ..!!நீங்க எழுதனுமாக்கும்...!! கேட்டாள் கதிஜா.

      ''எழுதுறதால வேலையை குறைக்க வேண்டியதுனு சொல்ல மாட்டியே...!! என்றான் காமில்.

    ''பிள்ளைக தலையெடுக்குது ,வேலையை  கொறச்சிட்டா ..!எப்படி வளர்க்குறதாம்...!?இது கதிஜா.

     ''சரி !என்ன சொல்ல வர்ரே..!?ஒளிச்சி மறச்சி பேசாதே !-இது காமில்.

   ''சரி!சொல்றேன்..!நீங்க காதல் கவிதை எழுதுறத பத்தி தப்பு தப்பாக பேசுறாங்க.!கல்யாண வீட்டுக்கு கூட போக முடியல..!!குசு குசுன்னு என்னைய பார்த்தே பேசுறாங்க!எனக்கு வெட்கமாக இருக்கு...!!என சொல்லியவள் கண் கலங்கி விட்டாள்.

அவள் கண்ணீருக்கு முன்னால்,இவன் சற்று தடுமாறியவனாக சொன்னான்.

    ''ம்..ம்..சரி சரி..!! விடு !எழுத மாட்டேன் போதுமா..!?இது காமில்.

     கதிஜாவிற்கு விளங்க வைக்க எத்தனையோ வழியிருந்தும்,இவன் முயலவில்லை.அவள் அழுததால் இவன் மௌனித்து விட்டான்.பதில்களையும் புதைத்து விட்டான்.

   சிறிது நேரம் கடந்தது.விளையாடிய பிள்ளைகள் பஞ்சாயத்தோடு வந்தார்கள்.''இவன்தான்'' மண்ணள்ளி போட்டான்.''இல்லை அவன்தான்''அடிச்சான் என வந்துவிட்டார்கள்.கிளம்ப நேரமானதால்,வீட்டிற்கு தம்பதியரும் கிளம்பினார்கள் .நான்கு சக்கர வாகனம் வீட்டை வந்தடைந்தது.

      சில வாரங்கள் கழிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.இதமான வெயில் இளஞ்சூடேற்றியது. படுக்கையில் புரண்டு படுத்த காமில்,இனி தூக்கம் வராது என எண்ணிக்கொண்டே எழுந்தான். கைலியை சரியாக கட்டிக்கொண்டு தன் அறையை விட்டு வெளியேறி,சமையலறை வந்தான்.அதன் பக்கத்தில்தான் குளியலறை.கதிஜா சமையலறையில் காலை உணவிற்கு தயார் செய்ய ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.அவன்
குளியலறை புகுந்தான்.

       நிமிடங்கள் கரைந்தது.குளித்து விட்டு வெளிப்பட்டான்.கீழே தாளை விரித்து இடியப்பம் சுடுவதற்காக ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தாள்.வந்தவன் அடுப்பில் இருந்த காபியை ஒரு குவளைக்குள் ஊற்றி குடித்தான்.அது தொண்டை வழியாக இறங்கி வயிற்றில் பரவியது.அச்சுகத்தை அனுபவித்தவனாக ,சிறு நாற்காலியை இழுத்து கதிஜா அருகில் போட்டுக்கொண்டு பேச தொடங்கினான்.

      ''என்ன.!?புள்ளைகளை எங்கே..!?-இது காமில்.

     ''மாமாவோட வெளியே போயிருக்காங்க..!!- இது கதிஜா.

   ''இன்னைக்குள்ள பேப்பர் வந்துச்சா..!?-இது காமில்.

   ''ம்...ம்...!!'சுரத்தே இல்லாமல் பேசியவள் ,தன்னருகில் கிடந்த தினசரி பத்திரிக்கையை
எடுத்து நீட்டினாள்.

      இன்னைக்கு ஏன் ஒரு மாதிரியாக இருக்காளே.!என நினைச்சிக்கிட்டே பத்திரிக்கையை வாங்கிப்பார்த்தான்.காரணம் தெரிந்து விட்டது.அவன் எழுதி காதல் கவிதை பத்திரிக்கையில்  வந்திருந்தது.

கவிதையானவளே..!!
--------------------
உணவக மேசை!

இருவரும் எதிரெதிர் திசை!

சூரியனை கடல் விழுங்குவதுப்போல்
காட்சி!

உன்னில் நான் மூழ்கினேன்
அதற்கு நான் மட்டுமே
சாட்சி!

முக்காட்டிற்குள்
உன் முகம்!

திண்டாட்டதிற்குள்
என் மனம்!

கடல் காற்று
உன் கூந்தல் கலைத்தது!

உன் விரல்கள்
சரி செய்தது!

எனக்கோ
காகிதத்தில் பேனாவாக
தெரிந்தது!

கவிதைகளை
விதைத்தது!

பசியிலிருப்பவன் முன்
உணவை வைத்து
உண்ண தடை விதிப்பதுப்போல்!

எரியும் அடுப்பில்
உப்பை போட்டுவிட்டு
வெடிக்கும் சப்தம் போடாதே என்பது போல்!

கவிதையானவளே!
கவிதையாக இருந்துக்கொண்டு
கவிதையெழுத தடை விதிக்கிறாயே..!!
 
                -காமில்.
பத்திரிக்கையில் வந்த கவிதையை படித்து விட்டு,தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.கதிஜா முகம் திரும்பாமலே உணர்ந்துக்கொண்டு ..

      ''இனி யாரு யாரெல்லாம், கேலி பண்ண போறாளுவளோ..!!?-என அலுத்துக்கொண்டாள்.

    ''யார் யாரெல்லாம் உன்ன கேலி செய்யிறாங்கன்னு சொல்லு.நான் பார்த்துக்குறேன்..!-காமில் கேட்டான்.

    ''ஏன்.?நான் சொன்னால் அவளுகளை பத்தி எழுதவா..!? -கதிஜா.

    ''பரவாயில்லையே..புரிஞ்சிக்கிட்டியே..!!-காமில்.

     காமில் முகத்தை நேராகப்பார்த்தாள். ''நீங்க என்ன திருந்தாத ஜென்மமா..!?-என்றாள்.

    ''இல்லை திருந்த விரும்பாத ஜென்மம்...!!என்றுச்சொல்லி 'ஹா ஹா'என இடியென சிரித்தான்.கதிஜா இடியப்பத்திற்கு வைத்திருந்த அரிசி மாவை காமில் மேல் வீசினாள்.அவன் சிரிப்பை நிறுத்தாமல் மேலும் சிரித்தான்.அச்சிரிப்பு கதிஜாவையும் தொற்றியது. அவளும் சிரித்தாள்.வெள்ளந்தியான காமில் சிரிப்பில் வெந்நீரில் கலந்தால் கரையும் வெல்லம்போல் கதிஜாவும் கலந்தாள்.கரைந்தாள்.

      என்னமோ ஏதோ என நின்றுப்பார்த்த காற்றும்,அவர்களது காதலை சுமந்து சென்றது.

2 comments:

  1. அருமையான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்ல கதை..... கவிதையும் மிக அருமை!

    ReplyDelete